ஆங்கில பட இயக்குநருக்கே முன்மாதிரியாக அமைந்த ஆளவந்தான் !

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த ஆளவந்தான் படம் குறித்து ஒரு பார்வை 
ஆங்கில பட இயக்குநருக்கே முன்மாதிரியாக அமைந்த ஆளவந்தான் !

இன்றைய மதிப்பில் ரூ.400 கோடி செலவிலும், இப்போதைய நடைமுறையான அதிக தியேட்டர்களில் குறைந்தநாளில் அதிக வசூல் என்ற யுத்தியை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, தமிழ் சினிமா வரலாற்றிலேயே 610 திரையரங்குகளில் வெளியானது 'ஆளவந்தான்'.

இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே அதிகளவு (610) பிரிண்ட் செய்யப்பட்ட படமும் 'ஆளவந்தான்' மட்டுமே. 2001ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இந்தப் படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.

வெளியே மிருகம், உள்ளே கடவுள், விளங்க முடியாத கவிதை நான் என்ற கமல்ஹாசனின் வரிகளுக்கேற்ப அவரும் விளங்க முடியாத படைப்பாளியாகவே இன்றளவும் தொடர்கிறார். கமல் படங்கள் பெரும்பாலும் ரிலீஸாகும் நேரங்களில், முதலில் புரிந்துகொள்வது கடினம் தான். ரிலீஸாகும் போது ரசிக்காத ரசிகன் தொடங்கி சினமா பார்வையாளன் பலரும் பல ஆண்டுகளுக்குப் பிறகே கமல் படங்களை கொண்டாட ஆரம்பிக்கிறான்.

ஒவ்வொரு படத்திலும் ஒரு சோதனை முயற்சியை வழக்கமாக கொண்டிருப்பவர் கமல்ஹாசன். வெற்றிப் படமாக இருந்தாலும், தொடர் தோல்வி என்றாலும், ரசிகன் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், இல்லையென்றாலும் பரிசோதனை முயற்சிகளில் துளியளவும் மனம் தளராதவர். அந்த வரிசையில் பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தி இன்று வந்திருந்தால் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்ற பெருமைக்கு உரித்ததாக அமைந்ததுதான் 'ஆளவந்தான்' திரைப்படம்.

கமல்ஹாசன் படங்களிலேயே அவரது ரசிகர்களால் நேசிக்கக்கூடிய படமாகவும், ரசிகர்கள் மட்டுமின்றி உலக சினிமாவின் மீது ஆர்வம் மிக்கவர்களால் கொண்டாடப்படமாக இருப்பது ஆளவந்தான் என்பதை மறுப்பதற்கில்லை. 

அமெரிக்காவின் பென்டாஸ்டிக் பெஸ்ட் திரைப்பட விழாவில், 'ஆளவந்தானின் ஹிந்தி பதிப்பு (அபய்) 2016இல் திரையிடப்பட்டதே இதற்கு சான்று. இதுமட்டுமல்லாது,  பிரபல ஆங்கில பட இயக்குநரான குவெண்டின் டொரான்டினோ தனது 'கில் பில்' படத்துக்கு ஆளவந்தானில் வந்த அனிமேஷன் காட்சிகளை பார்த்து அதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது மற்றொரு சான்று. படத்தில் பல புதுமைகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தியிருந்தார் கமல்ஹாசன்.

1983-ல் இதயம் பேசுகிறது இதழில், 'தாயம்' என்ற பெயரில் தொடராக வெளிவந்த கதைதான் ஆளவந்தானாக மாறியது. தனது குருநாதர் (பாலசந்தர்) இயக்க வேண்டும் என்று எழுதிய கதையை, அவரது சிஷ்யனுக்கு (சுரேஷ் கிருஷ்ணா) இயக்க வாய்ப்பு அளித்தார். தமிழில் ஆளவந்தான் என்றும், ஹிந்தி திரைப்படத்தில் அபய் என்றும் தலைப்பு சூட்டப்பட்டது. இதுமட்டுமல்லாது தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

மனப்பிறழ்வு நோய்க்கு ஆளானவரின் நடவடிக்கைகளை வித்தியாசமாக வடிவமைத்து இந்த கதையை எழுதியிருந்தார். படம் முழுக்க மருத்துவர் இந்த கதையை விவரிப்பதைப் போன்றே நகர்த்தப்பட்டிருக்கும். குடும்பத்தில் நடைபெறும் சின்னச் சின்ன தவறுகளின் விளைவு, குழந்தைகளை எப்படி பாதிக்கும் என்ற ஒற்றை வரியுடன் கதையை சுருக்கினாலும் இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த பல புதுமைகள் விவரிக்க முடியாதவை. இரட்டை சகோதர்களில் ஒருவர் நாட்டை காக்கும் ராணு வீரர் விஜய்குமார் (விஜய்), மற்றொருவர் மனப்பிறழ்வு நோயாளி நந்தகுமார் (நந்து).

இந்த இரண்டு கதா பாத்திரங்களையும் கமல்ஹாசனே ஏற்று நடித்திருந்தாலும் இருவரிடையே பல வித்தியாசங்களை வெளிப்படுத்தியிருந்தார். விஜய் கதாபாத்திரத்துக்காக ராணுவ அகாதெமிக்கும், நந்து கதாபாத்திரத்துக்காக மனநோயாளிகள் மருத்துவமனைக்கும் நேரில் சென்று பல நாள்கள் தங்கி, உற்று நோக்கி அதன்படியே பாத்திரங்களுக்கு உயிர்கொடுத்திருந்தார்.  உடல் மொழி, வசன உச்சரிப்பு, பார்வை என அனைத்திலும் அசத்தியிருந்தார் கமல்.

குறிப்பாக நந்துவின் கதாபாத்திரத்துக்காக தன்னை வருத்திக் கொண்டார். உடல் எடையை அதிகரித்து, தலை முடியை திறந்து (மொட்டையடித்து), இடது கண்ணை விட வலது கண் சிறியதாக உருமாற்றி தன்னையை இந்தப் படத்துக்காக சிதைத்துக் கொண்டவர். அதனால்தான், தமிழ் சினிமாவின் அழிக்க முடியாத சிற்பியாக இன்றும் உயர்ந்து நிற்கிறார்.

நானே கதாநாயகன், நானே வில்லன், நானே பாடலாசிரியர், நானே வசன கர்த்தா, நானே திரைக்கதையாசிரியர் என பன்முகத்தை வெளிப்படுத்தியிருந்தார். முதலில் ரூ.7 கோடிக்கு திட்டமிடப்பட்டு பின்னர்,  மும்முடங்கு செலவு உயர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மும்மொழியில் வெளியானது.

ஆசியாவிலேயே, முதன்முறையாக மோஷன் கிராஃபிக்ஸ் கேமிராவை  பயன்படுத்தியது ஆளவந்தான் (2001) திரைப்படத்தில் தான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com