
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நிகழ்வில் கலந்துகொள்வது நம் கடமை என மக்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்விடுத்துள்ளார்.
நடிகர் சூர்யா பேசும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ''சிறந்த பள்ளிகள்தான் சிறந்த மனிதர்களை உருவாக்க முடியும். பள்ளிக்கூடம் என்பது வெறும் கட்டிடமல்ல. அங்கு நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்கிறது தமிழக அரசு. மாணவர்களின் நலனில் அக்கறையுள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல தரப்பினர் இந்தக் குழுவில் இருக்கப்போகிறார்கள்.
பள்ளியை சுற்றியுள்ள எல்லா பிள்ளைகளையும் படிக்கவைப்பது, படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவைப்பதும் இந்தக் குழுவின் முக்கியமான வேலை. அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான சூழலும் வசதியும் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்வார்கள்.
பள்ளிக்கூடத்திற்கான கட்டிட வசதி, மதிய உணவுத்திட்டம், மாணவர்களுக்கு அரசு தருகின்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை சரியாக வந்துசேருகின்றதா என்பதையும் இதே குழு கவனித்துக்கொள்வார்கள்.
நம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி சூழலும், வசதியும் கிடைக்க வேண்டுமென்றால் எல்லா அரசுப் பள்ளிகளில் நடக்கவிருக்கும் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வில் கலந்துகொள்வது மிக அவசியம். சிறந்த கல்வியும், சிறந்த பள்ளியும் மாணவர்களின் உரிமை. அதற்கு துணை நிற்பதும் அதற்கு உதவி செய்வதும் நம் கடமை'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.