இர்பான் கான் நினைவு தினம்: பாலிவுட்டையும் ஹாலிவுட்டையும் வென்ற கலைஞன்

வேலையில் காட்டிய முனைப்பும் அவருடைய புன்னகையையும் என்னால் மறக்க முடியாது...
இர்பான் கான் நினைவு தினம்: பாலிவுட்டையும் ஹாலிவுட்டையும் வென்ற கலைஞன்

பாலிவுட்டில் நடிகராக இருந்தும் கான் என்று பெயர் வைத்துக்கொண்டபோதும் பணம், புகழுக்கு அடிமையாகாமல் நல்ல படங்களைத் தேடித் தேடி நடித்த பெருமை இர்பான் கானுக்கு உண்டு. பாலிவுட்டையும் ஹாலிவுட்டையும் வென்ற இந்திய நடிகர் என்கிற அடையாளம் எப்போதும் இவருக்கு உண்டு.

2020-ம் வருடம் இதே நாளில் மறைந்தார் இர்பான் கான். இந்திய சினிமாவின் மகத்தான நடிகரான இர்பான் கானின் மறைவு இந்தியத் திரையுலகை அசைத்துப் பார்த்துள்ளது. நடிப்புத் திறமை கொண்ட ஒரு நடிகரை முழுமையாக இழப்பதை விடவும் ஒரு திரையுலகுக்கு வேறொரு பேரிழப்பு இருக்க முடியாது.

1967-ல் ராஜஸ்தானில் உள்ள கிராமம் ஒன்றில் பிறந்தவர் இர்பான் கான். பணக்காரக் குடும்பத்தில் பிறந்த இர்பானுக்கு சிறுவயது முதலே நடிகராக வேண்டும் என்கிற எண்ணம் வந்துவிட்டது. தந்தை இறந்தபோது அவருடைய தொழிலான டயர் வியாபாரத்தில் இர்பானும் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடிப்பு தான் என் தொழில் என்று வீட்டில் கூறிவிட்டார். தில்லியில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா கல்லூரியில் நடிப்புப் பயிற்சி உள்ளது என்பதை அறிந்தவுடன் விண்ணப்பப் படிவத்தில் தான் நாடகங்களில் நடித்துவருவதாகப் பொய்யாகக் குறிப்பிட்டுள்ளார். முயற்சிக்குப் பலன் கிடைத்தது. 1984-ல் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்தது. அங்குதான் தான் வருங்கால மனைவி சுதாபா சிக்தரைக் கண்டுகொண்டார். 1995-ல் காதல் திருமணம் செய்துகொண்டார்கள். பிறகு இரு மகன்கள் பிறந்தார்கள்.

மீரா நாயரின் சலாம் பாம்பே படம் மூலமாக 1988-ல் நடிகராக அறிமுகமானார். 1990களின் ஆரம்பத்தில் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார் இர்பான். 2000 வரை பெரிய திருப்புமுனை எதுவும் பாலிவுட்டில் ஏற்படவில்லை. சில வாய்ப்புகள் வரும். நடித்துப் பார்ப்பார். ஆனால் நல்ல கதாபாத்திரம், பேர், புகழ் உடனே அவருக்குக் கிடைக்கவில்லை. டிவி தொடர்களிலேயே எத்தனை காலம் தான் நடிப்பது? சிலசமயங்களில் நடிப்பு சரியில்லை என்று சொன்ன சம்பளத்தையும் தராமல் இருந்துள்ளார்கள். இதனால் தனக்கு மிகவும் பிடித்த நடிப்புத் தொழிலையே விட்டுச் சென்றுவிடலாம் என்றுகூட எண்ணியுள்ளார்.

மில்லினியம் பிறந்தது. நல்ல காலம் பிறந்தது.

2001-ல் வெளியான தி வாரியர் என்கிற படம் என் வாழ்க்கையை மாற்றியமைத்தது என்றார் இர்பான். இந்தப் படத்தில் தான் உடல்மொழி, கண்களைக் கொண்டு நடிப்பை எப்படி வெவ்வேறு விதமாக வெளிப்படுத்தலாம் என்பதைக் கற்றுக்கொண்டார். இமயமலை மற்றும் ராஜஸ்தான் பாலைவனங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இங்கிலாந்து தயாரிப்பான இந்தப் படம், இங்கிலாந்து சார்பாக ஆஸ்கருக்கும் முதலில் பரிந்துரைக்கப்பட்டது. (ஹிந்திப் படம் என்பதால் பிறகு இதன் தேர்வு ரத்து செய்யப்பட்டது)

தி வாரியர் படத்தின் வெற்றியால் அடுத்த இருபது வருடங்களில் வருடத்துக்கு ஐந்தாறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார் இர்பான் கான். அந்த வகையில் தி வாரியர் படத்தின் இர்பானின் வாழ்கையை திருப்பிப் போட்டது எனலாம்.

இனி தடைகளேதும் கிடையாது என்பது போல நல்ல படங்களும் நல்ல கதாபாத்திரங்களும் வரிசையாக இர்பானுக்குக் கிடைக்க ஆரம்பித்தன. 2003, 2004-ல் Haasil, Maqbool ஆகிய படங்களில் அற்புதமான கதாபாத்திரங்கள் கிடைத்தன. Maqbool படத்தைப் பார்த்த பாலிவுட்டின் கண்களுக்கு இர்பான் கான் தனியாகத் தெரிந்தார். இனிமேலும் நிராகரிக்கப்பட வேண்டியவர் கிடையாது என்கிற முடிவுக்கு வந்தது. அதேசமயம் இர்பானும் பாலிவுட்டை நம்பி தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து ஆங்கிலப் படங்களிலும் நடித்து தனது எல்லையை விரிவுபடுத்திக்கொண்டார்.

2006-ல் வெளியான மீரா நாயரின் தி நேம்சேக் என்கிற ஆங்கிலப் படம், இர்பான் கானின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியது. 2008-ல் ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் நடித்தார். இந்த இரு படங்களும் உலக சினிமா ரசிகர்களிடம் இர்பானைக் கொண்டு சென்றன.

அனில் கபூர், ஐஸ்வர்யா ராய்க்கு முன்பே ஹாலிவிட்டில் கால் பதித்து தனக்கென்று அடையாளம் தேடிக்கொண்டார் இர்பான் கான். A Mighty Heart, Jurassic World, The Amazing Spider-Man, Life of Pi போன்ற ஆங்கிலப் படங்களின் மூலம் சர்வதேசக் கவனம் கிடைத்தது. இதனால் தான் இர்பான் கானின் மறைவுச் செய்தியைச் சர்வதேச ஊடகங்களும் வெளியிட்டன. இர்பான் கானின் மறைவுக்கு ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலி இரங்கல் தெரிவித்தார். எ மைட்டி ஹார்ட் படத்தில் இர்பானுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நடிகராகப் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டதால் அவருடன் எந்தவொரு காட்சியிலும் இணைந்து நடிப்பது சுலபமாக இருந்தது. வேலையில் காட்டிய முனைப்பும் அவருடைய புன்னகையையும் என்னால் மறக்க முடியாது. அவரின் குடும்பத்தினருக்கும் நண்பா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தன்னை முன்னிறுத்திக் கொள்வதில் எப்போது தயக்கம் இருந்திருக்கிறது. இவருடைய பேட்டிகளைப் படித்தால் இதெல்லாம் நிஜமாகவே ஒரு திரைப்பட நடிகர் கூறியதா என்கிற யோசனை ஏற்படும்.

மக்கள் தொடர்புப் பணி மூலமாகப் படங்கள் கிடைக்கவேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. உங்களை மார்க்கெட் செய்துகொள்ளவேண்டும் என்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் இந்தச் செயல் என்னை வெறுப்பேற்றுகிறது. என் ரசிகர்களைத் திசைதிருப்ப விரும்பவில்லை. என்னுடைய நடிப்புத் திறமைக்காக எனக்குப் படங்கள் கிடைக்கின்றன. விளம்பர வேலைகளில் சிறப்பாக இருப்பதால் அல்ல. என்னை விளம்பரப்படுத்துவதில் நான் நேரத்தைச் செலவிட்டால் என் வேலையில் கவனம் செலுத்தவில்லை என்று அர்த்தம். என்னுடைய விளம்பரப் பணிகளைப் பார்த்து அமேஸிங் ஸ்பைடர்மேன் இயக்குநர் என்னை அழைக்கவில்லை என்று ஒரு பேட்டியில் வெளிப்படையாகப் பேசினார் இர்பான்.

முதலில் தனது பெயரிலிருந்து குடும்பப் பெயரை விடுவித்த இர்பான் பிறகு பெயரில் இருந்த கானையும் விடுவித்துக்கொண்டார். படங்களில் தனது பெயர் இர்பான் என்று மட்டும் இடம்பெறுமாறு பார்த்துக்கொண்டார்.

2011-ல் பான் சிங் தோமர் என்கிற தடகள மற்றும் இந்திய ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தார் இர்பான். சிறந்த படம் என்கிற தேசிய விருதை மட்டுமல்லாமல் இர்பானுக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. 90களில் நல்ல வாய்ப்புகளுக்காகத் தவித்த இர்பான், பொறுமையைக் கையாண்டதால் கிடைத்த பரிசு இது. 2011-ல் இர்பானுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது மத்திய அரசு.

2013-ல் லஞ்ச் பாக்ஸ் என்கிற ஹிந்திப் படம், இர்பானுக்கு மேலும் புகழைச் சேர்த்தது. பல சர்வதேச விருதுகளை வென்ற இந்தப் படம் வசூலிலும் சாதனை செய்தது. நிதானமாக நடித்து கதாபாத்திரத்தின் மனநிலையை உணர்த்துவது எப்படி என்பதை அழகாக உணர்த்திருப்பார். 2017-ல் இர்பான் நடித்து வெளியான ஹிந்தி மீடியம், இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் வசூல் மழை பொழிந்தது. சாகேத் செளத்ரி இயக்கிய இப்படத்தில் இர்பான், சபா ஓமர், திஷிதா போன்றோர் நடித்திருந்தார்கள். இர்பான் நடித்த ஹிந்திப் படங்களில் அதிகம் வசூலித்தது, ஹிந்தி மீடியம் தான்.

ஏழு தேசிய விருதுகளைப் பெற்ற இயக்குநர் விஷால் பரத்வாஜ், இர்பானைப் பற்றி கூறும்போது, படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் எவ்வளவு நேரம்  என்பதையெல்லாம் பொருட்படுத்த மாட்டார். படமும் கதாபாத்திரமும் தான் அவருக்கு முக்கியம். அதன் நீளம் அல்ல. ஒரு கதையை முழுவதுமாகப் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி தன்னுடைய கதாபாத்திரத்தை வெளிப்படுத்துவார். நிறைய பயிற்சி எடுத்துக்கொள்வார். ஆனால் நடிப்பில் அது மிகவும் இயல்பாகத் தெரியும் என்கிறார். பரத்வாஜ் இயக்கிய மெக்பூல் தான் இர்பான் கானுக்கு பாலிவுட்டில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 2014-ல் வெளியான ஹைதர் படத்தில் ரூஹ்தார் என்கிற சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். எப்படி தசாவதாரம் படத்தில் பல்ராம் நாயுடு கதாபாத்திரம் படம் முழுக்க வந்திருக்கலாம் என்கிற ஆதங்கம் நம் ரசிகர்களுக்கு ஏற்பட்டதோ அதுபோல ரூஹ்தார் கதாபாத்திரம் இன்னும் நீண்டிருக்கலாம் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டார்கள்.

லைப் ஆஃப் பை இயக்குநர் ஆங் லீ, இர்பான் பற்றி கூறியதாவது: மிகத்திறமையான நடிகர் என்பதை அறிந்துகொண்டேன். வேறு யார் இப்படி நடிக்க முடியும் என்றார்.

இர்பான் கடைசியாக நடித்த படம்- Angrezi Medium. இப்படத்தின் படப்பிடிப்பின்போதுதான் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. லண்டனில் சிகிச்சை எடுத்துக்கொண்ட இர்பான், இந்தியாவுக்கு மீண்டும் திரும்பியபோது படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அறிந்துகொண்டார்.

‘நியூரோஎன்டோக்ரைன் டியூமா்’ எனப்படும் அரிய வகை புற்றுநோயால் இா்ஃபான் பாதிக்கப்பட்டது கடந்த 2018-ம் ஆண்டு தெரியவந்தது. இது, குடல் உள்பட உடலின் பல்வேறு பகுதிகளை தாக்கக் கூடிய புற்றுநோயாகும். கடந்த வருடம் ஏப்ரல் 25 அன்று தாயை இழந்தார் இர்பான். ஜெய்ப்பூரில் நடைபெற்ற இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு ஊரடங்கு காரணமாக அவரால் கலந்துகொள்ள முடியாமல் போனது. மூன்று நாள்கள் கழித்து உடல்நிலை மோசமாகி, மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இர்பான் கானின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தார்கள். பிரதமர் மோடி, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com