'செல்லம்மா' தொடரிலிருந்து விலகுவதற்கான காரணம் குறித்து நடிகை திவ்யா கணேஷ் மனம் திறந்துள்ளார். இவர் தற்போது 'பாக்கியலட்சுமி' தொடரில் நடித்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர் 'பாக்கியலட்சுமி'. இந்த தொடர் ஒளிபரப்பான ஆரம்பம் முதலே டிஆர்பியில் முதன்மை இடத்தை வகித்து வருகிறது. இந்த தொடரில் ஜெனிபர் கதாபாத்திரத்தில் நடிகை திவ்யா கணேஷ் நடித்து வருகிறார்.
இவர் 'லட்சுமி வந்தாச்சு', 'சுமங்கலி' போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கேளடி கண்மணி' தொடர் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமானார். தற்போது 'பாக்கியலட்சுமி' தொடர் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார்.
நடிகை திவ்யா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செல்லம்மா' என்ற தொடரிலும் மேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடரிலிருந்து சமீபத்தில் திவ்யா விலகினார்.
அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 'செல்லம்மா' தொடரிலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இதனிடையே இதற்கு மறுப்பு தெரிவித்து விடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார் நடிகை திவ்யா.
அதில், என்னுடைய சொந்த பிரச்சனையால் நான் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி சொல்ல மாட்டேன். என்னுடைய சொந்த விஷயத்தினால் நான் வெளியேறவில்லை. என்னை அங்கே சிலர் வேலை செய்ய விடாமல் சிலர் தொந்தரவு செய்வதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.