தாயாக உள்ளம் கொள்ளைகொண்ட நயன்தாரா - ஓ2 (ஆக்ஸிஜன்)!

சினிமா என்றாலே அதில் முக்கியமாக ஹீரோக்கள் மட்டும்தான் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஏற்று நடிப்பார்கள். 
தாயாக உள்ளம் கொள்ளைகொண்ட நயன்தாரா - ஓ2 (ஆக்ஸிஜன்)!

சினிமா என்றாலே அதில் முக்கியமாக ஹீரோக்கள் மட்டும்தான் மிக முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிப்பார்கள். ஹீரோவுக்கும் வில்லனுக்கும் உள்ள பகைமையை மையமாக வைத்துதான் படத்தின் கதை நகரும். படத்தில் ஹீரோயின்கள் ஹீரோக்களை காதலிப்பவர்களாகவோ அல்லது ஹீரோக்களின் நண்பர்களாகவோ படத்தில் நடிப்பதையே பல படங்களில் பார்க்க முடிகிறது.

ஹீரோயினை மையமாக வைத்து படத்தின் கதை அமைவது போன்று எடுக்கப்படும் படங்கள் மிகக் குறைவு. அப்படி ஹீரோயினை மையமாக வைத்து கதை நகரும் படங்களில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்தவர் நயன்தாரா. கோலமாவு கோகிலா, நெற்றிக்கண், இமைக்கா நொடிகள், ஐரா, அறம், ஓ2 (ஆக்ஸிஜன்) போன்ற படங்களில் தனது நேர்த்தியான நடிப்பினால் தமிழ் சினிமாவின் பார்வையினைத் தன்பக்கம் திருப்பியிருப்பார்.

அறிமுக இயக்குநர் ஜி.எஸ். விக்னேஷ், ஓ2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சிஸ்டிக் ஃபைபராஸிஸ் எனும் ஒரு வகை நுரையீரல் பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனின் தாயாக (பார்வதி) தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நயன்தாரா.

படம் தொடங்கும் போதே தாவரங்கள் குறித்தும் இயற்கைச் சுற்றுச் சூழல் குறித்தும் காணொலியில் வகுப்பெடுக்கிறார் நயன்தாரா. எந்த ஒரு தாயும் தனது குழந்தைக்கு ஒன்னுனா பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டா, அது இயற்கைக்கும் பொருந்தும்னு சொல்லும்போது தன்னோட பையன் வீராவுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் தீர்ந்து சுவாசிக்க கஷ்டப்படுறத பார்த்து ஒரு தாயாக துடித்து போய்விடுகிறார். படத்தோட கதை இங்கிருந்தே தொடங்குகிறது. தன்னோட பையன் வீராவை நினைத்துக் கவலைப்பட ஆரம்பிக்கிறாங்க. கேரளால இருக்குற தன்னோட தம்பிகிட்ட வீராவுக்கான ஆபரேஷன் சம்பந்தமா நயன்தாரா ஏற்கனவே பேசியிருக்காங்க. மகனின் அறுவை சிகிச்சைக்காக தனியார் பேருந்துநிறுவனத்தின் ஆம்னி பேருந்தில் கொச்சியை நோக்கி கிளம்புகிறார்கள்.

நயன்தாரா தன்னோட பையனோட ஆபரேஷனுக்காக கொச்சி செல்லும் அதே பேருந்து... சிறையில் விடுதலையாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயிடம் தான் ஒரு நிரபராதி என தெரியப்படுத்த செல்லும் மகன், தன் காதலியின் தந்தைக்கு தெரியாமல் அவளை அழைத்துச்செல்ல திட்டமிடும் காதலன், போதைப்பொருளை கடத்திச் செல்லும் காவலர், இழந்த செல்வாக்கை மீட்கச் செல்லும் ஒரு அரசியல்வாதி உட்பட பலரையும் ஏற்றிக்கொண்டு, கோவையிலிருந்து கேரளா புறப்படுகிறது. கேரளாவில் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஆம்னி பேருந்து பாலக்காடு செல்பவர்களுக்கு மட்டும் மாற்று பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை இறக்கி விடுகிறது. பின்னர், பேருந்து மாற்று வழியில் கொச்சினுக்கு புறப்படுகிறது. வழியில் எதிர்பாராத விதமாக ஏற்படும் நிலச்சரிவில் சாலை துண்டிக்கப்பட்டு மண்ணுக்குள் ஆம்னி பேருந்து சிக்கிக் கொள்கிறது. கொச்சினுக்கு செல்லும் அனைவரும் நிலச்சரிவினால் மூடப்பட்ட பேருந்துக்குள் மாட்டிக் கொள்கிறார்கள். 

பேருந்து நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட பிறகு அனைவரது செல்லிடபேசியின் சிக்னல்களும் துண்டிக்கப்படுகின்றன. இதனால், பயணிகளுடன் கொச்சி சென்ற பேருந்தின் நிலை என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆம்னி பேருந்தின் உரிமையாளர் ஒருபுறம் என்ன நடக்கிறது என்று புரியாமலும், பார்வதியின் (நயன்தாரா) தம்பி கொச்சினில் தனது அக்காவின் வருகைக்காக காத்திருப்பதும் தொடர்கிறது. பலமுறை தனது அக்காவின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டும் அவருக்கு சிக்னல் கிடைக்கவில்லை. இதனால், ஆம்னி பேருந்து எங்கு இருக்கிறது என்ற சந்தேகம் அதிகமாகிறது. ஒரு கட்டத்தில் அக்காவின் கைப்பேசிக்கு சிக்னல் கிடைக்கிறது. அதன்பின்னரே பேருந்து நிலச்சரிவில் சிக்கிப் புதைந்திருப்பது அனைவருக்கும் தெரிய வருகிறது. மீட்புக் குழு உடனடியாக அனுப்பப்படுகிறது. இந்தக் காட்சிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக போக பேருந்துக்குள் இனி ஒரு தாய் தன்னோட குழந்தையை காப்பாற்றுவதற்காக எப்படி சாதுரியமாவும், திறமையாவும் செயல்படுறார் என்பதை  இயக்குநர் காட்டியிருப்பார்.

நிலச்சரிவில் சிக்கியிருக்கும் பேருந்தினுள் இருப்பவர்கள் தங்களுக்குள் சண்டையிட நயன்தாரா அவர்களிடம் கோபமாக பேசும் காட்சிகள் சிறப்பு. அதிலும், நாம இங்க இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் கழுத்துல ஒரு பிளாஸ்டிக் கவர கட்டிகிட்டு இருக்குற மாதிரி, அதுல நீங்க வேற ஏன் இப்படி சண்ட போடுறீங்கனு கோவப்படுகிற காட்சிகளில் உணர்ச்சிகளை அள்ளித் தெளித்திருக்கிறார் என்றே சொல்லலாம். மகன் வீராவின் ஆக்ஸிஜன் சிலிண்டரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதை உணரும் நயன்தாரா சாதுரியமாக நிலச்சரிவில் சிக்கியிருக்கும் பேருந்தில் பயணிகள் தங்களது பொருட்களை வைக்கும் இடத்திலிருந்து தனது பையில் வைத்திருக்கும் கூடுதல் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் இருப்பவர்களை வைத்தே எடுக்க வைப்பதில் அவரது சாதுரியமும், சமயோஜித அறிவும் மேலோங்கி நிற்கிறது. காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பரத் நீலகண்டன், நயன்தாரா தனது குழந்தைக்காக பொருட்களை எடுக்க வைத்ததை அறிந்து அவரிடம் நடந்து கொள்ளும் விதமும் அதற்கு பயந்து நடுங்கும் காட்சிகளில் நயன்தாராவின் நடிப்பும் அபாரம்.

காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பரத் நீலகண்டன், நயன்தாராவிடம் கூடுதல் ஆக்ஸிஜன் சிலிண்டர் இருக்கா எனக் கேட்க அவரின் எண்ணத்தினை புரிந்துகொண்ட நயன்தாரா கையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்தும் இல்லை எனக் கூறும் காட்சியும், அதன்பின் தன் மகன் வீராவை தைரியமாக இருக்க சொல்லும் காட்சியும் மகன் மீதான தாயின் அன்பினையும், உண்மை தெரிந்தால் என்ன ஆகும் என்ற பயத்தினையும் தனது நேர்த்தியான நடிப்பில் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார். பேருந்துக்குள் மின்சாரம் செயலிழக்க ஒரு சிறிய துவாரத்தின் வழியாக வீராவை டிரைவர் சீட்டிற்கு அனுப்ப அனைவரும் கூறுகின்றனர். முடியவே முடியாது என  நயன்தாரா மறுக்க வீரா நயன்தாராவுக்கு தைரியம் கூறி டிரைவர்  சீட்டிற்கு செல்லும் காட்சிகள் நம்மை பாசப்போராட்டத்தில் தாயும்-மகனும் கட்டிப் போடுகின்றனர். 

மீட்புக் குழுவினர் தங்களால் இயன்ற முயற்சிகளை செய்து நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கப் போராடுகின்றனர். பேருந்தினுள் இருப்பவர்களுக்கான ஆக்ஸிஜன் குறைந்து வருவது ஒருபுறமிருக்க, நிலச்சரிவில் பேருந்து சிக்கியதில் உயிருக்குப் போராடும் கைதியினை சுட்டு  இரக்கற்ற வில்லனாக பேருந்தினுள் இருக்கும் அனைவரையும் கதிகலங்கச் செய்கிறார் பரத் நீலகண்டன். ஆக்ஸிஜன்  சிலிண்டருக்காக வீராவை மிரட்டும் பரத் நீலகண்டனிடம் கெஞ்சி அழும் நயன்தாராவின் நடிப்பை விளக்க வார்த்தைகளே இல்லை. தனக்கு  ஆக்ஸிஜன் வேண்டும் என்பதற்காக பேருந்தில் உள்ள எவரையும் கொல்லத் தயங்காத வில்லன். கெஞ்சி ஒன்றும் ஆகப்  போவதில்லை என்பதை உணர்ந்து வில்லனைத் தைரியமாக தாக்கி கட்டிப் போடும் காட்சியில் நயன்தாரா நடிப்பில் மிரட்டுகிறார் என்றே கூறலாம்.

ஒருபுறம் மீட்புக் குழுவினர் பேருந்து புதைந்திருக்கும் இடத்தை தீவிரமாகத் தேட, பேருந்தின் உள்ளே உள்ளவர்கள் தப்பிப்பதற்கு முயற்சி செய்து சந்திக்கும் துன்பங்கள்  பின்னணி இசையுடன் சேர்ந்து நமது இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. அனைவரும் பேருந்திலிருந்து வெளியேறும்  முயற்சியில் கவனம் செலுத்த பரத் நீலகண்டன் தன் கைகளை கட்டியதிலிருந்து விடுபட்டு கூடுதல் ஆக்ஸிஜன் சிலிண்டர்  இருப்பதை கண்டுபிடிப்பது திரைக்கதையின் வேகத்தைக் கூட்டுகிறது. நயன்தாரா தனது குழந்தைக்காக ஆக்ஸிஜன் சிலிண்டர்  இருப்பதை மறைத்தது அனைவருக்கும் தெரிந்துவிட தனது குழந்தையின் நிலைமை குறித்து கண்ணீருடன் விளக்கும் நயன்தாரா குழந்தைக்காகப் போராடும் தாயாக நம்மை கண்கலங்கச் செய்கிறார்.

வீராவின் ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்துக் கொண்டு அனைவரையும் நயன்தாராவைக் கொல்ல திசை திருப்பும் பரத் நீலகண்டன் சொல்லும் ரயில் தண்டவாளக் கதையினை கேட்கும்போது நமது மனதுக்குள் ரயில் தாறுமாறாக ஓடும். நோயாளிக் குழந்தை ஒருவனின் உயிர் பெரிதா அல்லது நம்ம 5 பேரோட உயிர் பெரியதா என பரத் நீலகண்டன் கேட்க நயன்தாராவைக் கொல்ல அவர்கள் அனைவரும் தயாராவது சுயநலத்தின் உச்சம். 

ஒரு தாயாகத் தனது மகனைக் காப்பாற்ற நயன்தாரா அனைவரையும் எதிர்த்து சண்டையிடுவதில் ஆக்‌ஷன் குயினாக கலக்குகிறார். ஆம்னி பேருந்தின் டிரைவராக நடித்துள்ள ஆடுகளம் முருகதாஸ், சின்னப் பிஞ்சுக் குழந்தையின் முகத்தைப் பார்த்து மனம் வருந்தி அந்தக் குழந்தையைக் காப்பாற்ற நினைக்கும் காட்சியை வைத்தன் மூலம் தங்கள் உயிருக்கு ஆபத்தான சூழலிலும் மனித நேயம் உள்ளவர்கள் உதவி செய்ய இருக்கிறார்கள் எனக் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ்.

பேருந்தில் ஆக்ஸிஜன் அளவுக் குறைந்து அனைவரும் மயக்க நிலைக்குச் செல்லும்போது நயன்தாரா மகன் வீராவை ’ விசில் வீரா’ பயப்படக் கூடாது என்பதும், அம்மா வா வீட்டுக்கு போலாம் என  வீரா கதறுவதும் நம்மை உணர்ச்சிவசப்பட செய்து கண்களில் நீர் கசியச் செய்யும் என்பதில் ஐயமில்லை. அத்துனை எதார்த்தமாக நடித்திருக்கிறார் நயன்தாரா. வீராவும் தான். மீட்புப் பணிகள் தொய்வடையும்போது காவல்துறை பெண் அதிகாரியாக வருபவர் கண் கலங்குவதும், மருத்துவமனையில் இருந்து அழைப்பு வரும்போது தங்களது நிலைமையைக் கூற முடியாமல் கண்டிப்பாக வந்துவிடுவோம் என நயன்தாராவின் தம்பி கூறுவதும் அவர்கள் தங்கள் கதாப்பாத்திரத்தை எப்படி உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதை தெளிவாக காணமுடிகிறது. 

ஒருகட்டத்தில் மீட்புக் குழு வைஃபை வசதியைக் கொண்டு பேருந்தின் உள்ளே சிக்கியிருப்பவர்களின் தொலைபேசியின் சிக்னலை இணைக்கும் கடைசி முயற்சியில் இறங்குகிறது. அதற்குள் பேருந்தினுள் உள்ள அனைவரும் ஆக்ஸிஜனின்றி உயிருக்குப் போராடுகின்றனர். அம்மா (நயன்தாரா) மயக்க நிலைக்கு சென்றதைக் கண்டு கதறும் வீராவின் குரல் எப்படிப்பட்ட இறுக்கமான மனம் கொண்டவர்களையும் கலங்கச் செய்துவிடும். அம்மா எழவில்லை என்றவுடன் அந்தப் பிஞ்சுக் குழந்தை என்னை மன்னிச்சிடுமானு சொல்லிட்டு ஆக்ஸிஜன் சிலிண்டரை திறந்து தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள முற்படும் காட்சி உள்ளுக்குள் ஏதோ செய்கிறது. மகனின் மீது தாய்க்கும், தாயின் மீது மகனுக்கும் உள்ள அளவுகடந்த அன்பை இந்தக் காட்சியில் இயக்குநர் அருமையாகப்  படமாக்கியிருக்கிறார்.

இயற்கையை வைத்து படம் தொடங்குவது போலவே படத்தின் முடிவினையும் இயற்கையே முடிவு செய்கிறது. வீரா பேருந்தில் தன்னுடன் வைத்திருந்த செடியில் இருந்து விழும் இலை பட்டு தொலைபேசியின் வைஃபை, மீட்புக் குழுவுடன் இணைக்கப்படுகிறது.  சிக்னல் கிடைத்தவுடன் மீட்புக் குழு துரிதமாக செயல்பட்டு பேருந்தில் ஆக்ஸிஜனின்றி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவதாக படம் முடிகிறது.

ஐயாவில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி ஒவ்வொரு படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இன்று அவர்கள் மனதில் லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார் நயன்தாரா. ஒரு காலத்தில் மாஸ் ஹீரோ, ஆடல், பாடல்,  சண்டைக்காட்சிகள் மற்றும் காதல் இருந்தால்தான் படம் வெற்றிபெறும் என்ற நிலையை மாற்றி நல்ல கதை இருந்தால் ஒரு நடிகை படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாக இருந்து அந்தப் படத்தினை வெற்றி பெற செய்ய முடியும் என  கோலமாவு கோகிலா, நெற்றிக்கண், இமைக்கா நொடிகள், ஐரா, அறம் போன்ற படங்களின் மூலம்   நிரூபித்திருக்கிறார் நயன்தாரா. அந்த வரிசையில் ஓ2(ஆக்ஸிஜன்) அவரது திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல் என்பதில் சந்தேகமில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com