பிரபல தெலுங்கு நடிகர் நானியின் 30வது படமான ‘ஹாய் நான்னா’ படத்தினை அறிமுக இயக்குநர் ஷௌர்யுவ் இயக்கியுள்ளார். வைரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சீதா ராமம் புகழ் மிருணாள் தாக்குர் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹீஷம் அப்துல் வாஹாப் இசையமைக்க நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படத்துக்கு யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. டிச.7ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடனம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் ஹாய் நான்னா படத்தினை பாராட்டி பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது:
ஹாய் நான்னா படக்குழுவுக்கு வாழ்த்துகள். என்ன அருமையான படம். உண்மையாகவே நெஞ்சினை தொட்டுவிட்டது. சகோதரர் நானி அலட்டல் இல்லாத நடிப்பு. இந்த மாதிரியான கதைகளுக்கு ஓக்கே சொல்லி திரைக்கு கொண்டு வருவதற்கு நானி மீது மிக்க மரியாதை ஏற்படுகிறது. டியர் மிருணாள் தாக்குர் உங்களது இனிமை திரையினை ஆட்கொள்கிறது.
குழந்தை நட்சத்திரம் பேபி கியாரா! மை டார்லிங்... உனது க்யூட்னஸால் எங்களது இதயத்தை உருகவைத்தாய். போதும்! தற்போது பள்ளிக்குச் செல். (சிரிப்பு எமோஜியுடன்)
சிறப்பாக நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் வாழ்த்துகள். குறிப்பாக ஒளிப்பதிவாளர் வர்கீஸ், இசையமைப்பாளர் அப்துல் வஹாப்க்கு பாராட்டுகள். இயக்குநர் ஷௌர்யுவ் உங்களது முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்துவிட்டீர்கள். இதயத்தை தொடும், கண்ணீரை வரவழைக்கும் பல கணங்களை உருவாக்கியுள்ளீர்கள். வண்ணமயமாக படத்தினை எடுத்துள்ளீர்கள். மேலும் ஒளிர்க. ரசிகர்களுக்கு இந்தப் படத்தினை கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. தந்தைகளை மட்டுமின்றி குடும்பத்திலுள்ள அனைவரது இதயத்தையும் ஹாய் நான்னா தொடும் எனக் கூறியுள்ளார்.