ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் - பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இசை - விஷால் & ஷேகர்.
2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து வெளியாகியுள்ள படம் - பதான். இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 270 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.
பதான் படம் ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
உலகம் முழுவதும் பிப்.3ஆம் தேதி வரை பதான் திரைப்படம் ரூ.696 கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் அறிவித்திருக்கிறது. இந்தியாவில் ரூ.436 கோடியும், வெளிநாடுகளில் ரூ.260 கோடியும் வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷாருக்கானிடம் ட்விட்டர் கேள்வியில் ரசிகர் ஒருவர், “பதான் திரைப்படத்தின் உண்மையான வசூல் எவ்வளவு?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஷாருக்கான், “5000 கோடி அன்பே.3000 கோடி பாராட்டுகள். 3250 கோடி அரவணைப்பு... 200 கோடி சிரிப்புகள். இன்னுமும் எண்ணிக்கொண்டு இருக்கிறேன். உங்களது அக்கவுண்டட் என்ன சொல்கிறார்?”என பதிலளித்தார். இந்தப் பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.