
நடிகர் கமல்ஹாசன் பிரபல மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு நெகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 மொழிகளில் 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார் எஸ்.பி.பி. தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் முத்திரை பதித்து ஆச்சர்யப்படுத்தியவர். 2020ஆம் ஆண்டு கரோனா பாதிப்பினால் பாதிக்கப்பட்டு பின்னர் இதய நோயினால் உயிரிழந்தார். இருப்பினும் அவரது பாடல்கள் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களின் மனதில் சாகாவரம் கொண்டு வாழ்கிறது.
இன்று எஸ்பிபி பிறந்தநாளினை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் நெகிழ்ச்சியாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
இருந்தும் இல்லாமல் இரு என்று மெய்யியல் சொற்றொடர் ஒன்று உண்டு. இல்லாமற் போயும் இருந்துகொண்டே இருப்பவர் என் அன்னய்யா எஸ்பி பாலசுப்ரமணியம். இனிய குரலாக, இளைக்காத நகைச்சுவையாக, எண்ணும்தோறும் பண்பாக நம்மோடு இருந்துகொண்டே இருக்கும் பாலு அன்னய்யா பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்து.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...