ரூ. 30 ஆயிரம் கோடி மோசடி... யார் இந்த தெல்கி? ஸ்கேம் 2003 - திரைத் தொடர் விமர்சனம்

நாட்டையே உலுக்கிய போலி முத்திரைத் தாள் மோசடியின் மூலப்புள்ளியான அப்துல் கரீம் தெல்கியின் வாழ்க்கையைத் தழுவி உருவாகியிருக்கிறது ஸ்கேம் 2003 திரைத் தொடர்.
ரூ. 30 ஆயிரம் கோடி மோசடி... யார் இந்த தெல்கி? ஸ்கேம் 2003 - திரைத் தொடர் விமர்சனம்

உலகம் முழுவதும் பல்லாயிரம் மோசடியாளர்கள் பல வழிகளில் பணத்தைக் குவித்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், எவ்வளவு பெரிய புத்திசாலியாக இருந்தாலும் ஒருநாள் மாட்டிக்கொள்வதுதான் விதி.

நினைத்துப்பார்க்க முடியாத மலைகளைக் குடைந்து வந்த பல ‘தில்லுமுல்லு’ ஆசாமிகள் எல்லாம் சாதாரண பொறிகளில் சிக்கி தாங்கள் உருவாக்கி வைத்திருந்த சாம்ராஜ்யங்களை இழந்து வேடிக்கையாக மாறுவார்கள். அப்படி இந்திய அரசையே திணறவைத்த ஒரு வேடிக்கையாளரின் கதைதான் ஸ்கேம் 2003!

அது 2000 ஆம் ஆண்டு. மும்பை கிராண்ட் சாலையில் அமைந்திருந்த பிரபல மதுபானக் கூடத்தில் பெரிய பணக்காரர்களெல்லாம் குடித்துக்கொண்டு, நடன மங்கைகளுடன் நடனமாடிக்கொண்டிருந்த இரவு. அப்போது, அக்கூடத்திலேயே மிக அழகான நடன மங்கையை ஒருவர் உற்று கவனிக்கிறார். அப்பெண்ணை அந்த நபர் பல ஆண்டுகளாக கவனித்து வருபவர். அவள், அவர் அருகே நெருங்கி வர, கையில் வைத்திருந்த ரூபாய் தாள்களை அப்பெண் மேல் அள்ளி வீசுகிறார்.

எதிரே உட்கார்ந்திருந்த மற்றொரு தொழிலதிபர் ஒருவருக்கு கோபம் வருகிறது. தன்னிடம் இருந்த பணத்தை அப்பெண் மேல் கொட்டி ‘உன்னை விட நான் பெரிய பணக்காரன்’ என்பதைக் காட்டுகிறார். உடனே, ஆத்திரம் அடைந்த அந்த நபர்  அப்பெண்ணைத் தவிர மற்ற நடன மங்கைகளை ஒதுங்கச் சொல்லி, மழை பொழிவதைப்போல் ரூபாய்த் தாள்களை அள்ளி அள்ளி சம்பந்தப்பட்ட பெண் மேல் வீசுகிறார்.

பார் ஊழியர்கள் கொட்டப்பட்ட பணத்தை எண்ணுகிறார்கள். மொத்தம் எவ்வளவு தெரியுமா? ரூ. 93 லட்சம்! (இன்றைய மதிப்பில் ரூ. 12 கோடி) இத்தனை பணத்தையும் அப்பெண் மேல் கொட்டியது இந்தியாவின் முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கி! அடுத்த நாள் காலையிலிருந்து மும்பையின் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், செல்வந்தவர்கள் மத்தியில் பேசுபொருளானார் அப்துல்.

அப்துல் கரீம் தெல்கி
அப்துல் கரீம் தெல்கி

யார் இவர்? 1961 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் கானாபூரில் பிறந்த அப்துல் கரீம் தெல்கி, கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைகிடைக்காமல் இரயில் நிலையத்தில் பழ வியாபாரியாக வாழ்க்கையைத் துவங்குகிறார். அந்த நேரத்தில், மும்பையில் ஒரு வேலை கிடைக்கிறது. அப்பணியை சாமர்த்தியமாக செய்து முதலாளியிடம் நல்ல பெயரையும் பெறுகிறார். ஆனால், தெல்கிக்கு இது போதவில்லை. திருமணம் செய்துகொண்ட பின் துபையில் 7 ஆண்டுகள் வேலைசெய்கிறார்.

ஒருகட்டத்தில் அங்கும் வேலையிழப்பு ஏற்படுகிறது. திரும்பி இந்தியா வந்தவர் போலி சான்றிதழ்கள் தயாரித்து அமீரக நாடுகளுக்கு வேலைக்காக ஆள்களை அனுப்புகிறார். சில மாதத்திலேயே காவல்துறையிடம் சிக்கி அத்தொழிலையும் விட வேண்டிய நிலை. வெளியே வந்து அரசு முத்திரைத் தாள்களின் மீது கவனம் செலுத்துகிறார். அதாவது, அரசு அச்சடிக்கும் முத்திரைத் தாள்களை நாமே அச்சடித்து புழக்கத்தில் விட்டால் என்ன? என்கிற முடிவுக்கு வந்து அதற்காக பணிகளில் ஈடுபடுகிறார். அதன் பின்புதான், தெல்கியின் வாழ்க்கை ராக்கெட் வேகம் எடுக்கிறது.

ஒரு சாதாரண கிராமத்திலிருந்து ரூ.10 கூட இல்லாமல் மும்பைக்கு வந்த ஒருவன் ரூ.30,000 கோடி மோசடியில் ஈடுப்பட்ட  கதைதான் இது. போலி முத்திரைத் தாள் மோசடியில் ஈடுபட்ட தெல்கி எப்படியெல்லாம் அதிகாரத்தில் உள்ளவர்களை தன் பக்கம் இழுத்தார்? நாடு முழுவதும் முத்திரைத் தாள் தட்டுப்பாட்டை தனி ஒருவனால் எப்படி உருவாக்க முடிந்தது? இவ்வளவு பெரிய மோசடியில் ஈடுபட்ட தெல்கிக்கு இறுதியாக என்ன நடந்தது? என்கிற பரபரப்பான திருப்பங்களுடன் உருவாகியிருக்கிறது ஸ்கேம் 2003.

சோனி லைவ் தயாரிப்பில் வெளியான, பங்குச்சந்தை மோசடியாளர் ஹர்ஷத் மேத்தாவின் கதையான ‘ஸ்கேம் 1992’ தொடரை இயக்கிய ஹன்சல் மேத்தாவின் மேற்பார்வையிலேயே ‘ஸ்கேம் 2003’ தொடரும் உருவாகியுள்ளது. 

பத்திரிகையாளர் சஞ்சய் சிங் எழுதிய, ‘ஏக் ரிப்போர்டர் கி டைரி’ என்கிற நூலை அடிப்படையாக வைத்தே இத்தொடரை துஷார் ஹிராநந்தினி இயக்கியுள்ளார். இதில், அப்துல் கரீம் இவ்வளவு பெரிய உயரத்தை சொற்ப அண்டுகளிலேயே அடைந்ததற்கு துணையாக இருந்த ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என பலரைச் சுற்றியும் தெல்கியின் வாழ்க்கை சுழல்கிறது. 

இத்தொடரின் மிகப்பெரிய பலமாக இருப்பது தெல்கியாக நடித்த ககன் தேவ் ரியர். ஒரு மோசடியாளனின் உடல்மொழியை கச்சிதமாக திரைக்குக் கடத்தி ஆச்சரியப்படுத்துகிறார். மேலும், தொடரின் திரைக்கதை மற்றும் உருவாக்கம் இரண்டும் இதன் தரத்தைக் கூட்டியுள்ளன. 1990-களின் காலத்தை சிதறடிக்காத கலை இயக்குநரின் பணி பாராட்டத்தக்கது.

ஸ்கேம் 1992-க்கு பெரிய பங்களிப்பாற்றிய அதே பின்னணி இசை தெல்கி கதைக்கும் பயன்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. முக்கியமாக, ஹர்ஷத் மேத்தாவோ தெல்கியோ இருவரும் தவறான வழியில் முன்னேறிச் சென்றவர்கள் என்பதை காட்சிக்குக் காட்சி இயக்குநர் வெளிப்படுத்துவது பாராட்டத்தக்கது. குறிப்பாக, மிக நேர்த்தியாக எழுதப்பட்ட வசனங்கள். கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வும் கச்சிதம். 

ஆனால், திரைக்கதையில் லஞ்சம் வாங்காத அரசு அதிகாரிகளே இல்லை என்றே தொடர் முழுவதும் காட்டுகிறார்கள். மேலும், சில காட்சிகள் ஊகிக்கக் கூடியதாகவே இருக்கிறது. 

நாட்டையே அதிரவைத்த அப்துல் கரீம் தெல்கி, நடன மங்கைக்கு பணத்தை அள்ளி வீசி அரசுப் பார்வையில் சிக்கிய வரை 5 எபிசோடுகளாக இத்தொடர் வெளியாகியுள்ளது. அதன்பின், அவர் என்ன ஆனார்? என்கிற கேள்விகளுக்கு விரைவில் ஒளிபரப்பாக உள்ள மீதமுள்ள எபிசோடுகளில் பதில் கிடைக்கும்.

நிஜ வாழ்வில் போலி முத்திரைத் தாள் மோசடியில் கைதான தெல்கி தான் செய்த மோசடிக்களுக்காக அடுத்த 13 ஆண்டுகளை சிறையில் கழித்தார். 2017 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். அவர் இறந்தபோது, தோராயமாக கணக்கிடப்பட்ட இந்த மோசடியின் மதிப்பு ரூ.30,000 கோடி! அதற்கும் மேல்தான் இந்த மோசடி இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

இவ்வளவு பணத்தை மோசடி வழியால் ஈட்டிய தெல்கிக்கு ஒரே ஆசைதானாம். அது, பணத்தை சம்பாதிப்பதல்ல.. அதை உருவாக்குவது!

ஸ்கேம் 2003 - தி தெல்கி ஸ்டோரி (தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு) வெளியீடு: சோனி லைவ் ஓடிடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com