
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அலென்சியர் லே லோபஸ். தொண்டிமுதலும் த்ரிஷாக்சியும், மகேஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
அப்பன் திரைப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதாகப் பேசப்பட்டது. இப்படத்திற்காக, கேரள அரசின் மாநில திரைப்பட விருதும் அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில், திருவனந்தபுரத்தில் கேரள அரசின் மாநில திரைப்பட விருது வழங்கும் விழா, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, நடுவர்களின் சிறப்பு பரிந்துரையின் பேரில் நடிகர் அலென்சியர் லே லோபஸ், பினராயி விஜயனிடமிருந்து விருதையும் (பெண் சிலை) சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.
இதையும் படிக்க: தெலுங்கில் வெளியாகும் மண்டேலா ரீமேக்!
பின், விருது குறித்துப் பேசியபோது, “பெண் சிலைகளைக் கொடுத்து எங்கள் உணர்ச்சிகளைத் தூண்ட வேண்டாம். நான் எந்த பெண் சிலையைப் பார்த்தும் மயங்குவதில்லை” எனக் கிண்டலாகக் கூறினார்.

சமூக வலைதளங்களில் அலென்சியரின் பேச்சு வைரலானதைத் தொடர்ந்து, “மாநில அரசால் தரப்படும் விருதை பாலியல் ரீதியாக கிண்டலடிப்பது எந்த விதத்திலும் சரியல்ல. இது அரசு கொடுக்கிற கௌரவத்தை அவமரியாதை செய்வதுபோல் உள்ளது” என அவர் மீது ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதனால், கடும் சர்ச்சையில் அலென்சியர் சிக்கினார்.
மேலும், விருது பேச்சு குறித்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் அலேன்சியரிடம் கேள்வி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அலேன்சியர் அப்பெண்ணின் மனம் புண்படும் படி, தகாத வார்த்தையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தைக் கண்டித்து, கேரள மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து அலேன்சியர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...