விஜய்யின் அரசியல் வருகை... ரத்தான லியோ இசைவெளியீட்டு விழா.. என்ன நடக்கிறது?

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விஜய்யின் அரசியல் வருகை... ரத்தான லியோ இசைவெளியீட்டு விழா.. என்ன நடக்கிறது?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக, இசைவெளியீட்டு விழா மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.

அதற்காக,  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று தகவல்கள் பரவி வந்தன.

அரங்கத்திற்குள் தேவையான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்துள்ளது.

இதற்குக் காரணமாக, அதிக டிக்கெட் கோரிக்கை மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு இசை வெளியீட்டு விழா நடத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாகவும் இதற்கு அரசியல் அழுத்தமோ அல்லது வேறு எந்தக் காரணமும் இல்லை என்றும் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அப்படி பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்தால் அதே அரங்கில் நடந்த வாரிசு இசை வெளியீட்டு விழாவில் எவ்விதக் குளறுபடிகளும் நடைபெறவில்லையே? என்கிற கேள்வியும் எழுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு டிக்கெட் மூலமே ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். அதுவும் பால்கனியில் அமரும் வகையில் இருப்பதால் விருப்பப்பட்ட இடங்களில் அமர்ந்துகொள்ளலாம் என்கிற விதத்திலேயே நிரந்தர இருக்கைகளும் அமைக்கப்பட்டிருக்கும்.

ரசிகர்கள் அதிகளவில் வருவார்கள் என்கிற கேள்விக்கு இடமில்லாத வகையில், எத்தனை இருக்கைகள் ரசிகர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறதோ அந்த எண்ணிக்கையில்தான் டிக்கெட்களை அச்சடித்திருப்பார்கள். நிகழ்ச்சி நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கில் அதிகபட்சம் 7 ஆயிரம் பேர் அமரலாம் என்கிறார்கள். மேலும், இசைவெளியீட்டு விழா என்பதால் டிக்கெட்களை இணையத்தில் விற்பனை செய்யாமல் ரசிகர் மன்றம் மூலமே ரசிகர்களை சென்றடையும். நிலைமை இப்படி இருக்க தயாரிப்பு நிறுவனம் ரசிகர்கள் அதிக டிக்கெட்களை கேட்கிறார்கள் எனக் காரணம் கூறியிருக்கிறது. 

ரசிகர்களைக் கேட்டு எந்த நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்படாதபோது  ரத்து செய்ய காரணமாக ஏன் ரசிகர்களைக் கைகாட்ட வேண்டும்? இங்குதான் உண்மையில் வேறு பிரச்னைகள் இருக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது

விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற முயற்சி செய்தது. ஆனால், விஜய் தரப்பிலிருந்து செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்திற்கே அந்த உரிமையை வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதை படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, ரெட் ஜெயண்ட்டிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அந்த நேரத்தில் துணிவு திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை வைத்திருந்த உதயநிதி, வாரிசுக்கு அதிக திரையரங்குகளை ஒதுக்காமல் இருந்ததால் விஜய் தரப்பிற்கு பிரச்னை ஆரம்பித்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் வாரிசு படத்தின் சென்னை, செங்கல்பட்டு உரிமைகளைப் பெற்ற பின்பே ரெட் ஜெயண்ட் நிறுவனம் தன் பிடியைத் தளர்த்தியது. 

தற்போது, லியோ படத்திற்கும் அதேபோல் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கேட்டு வருவதாகவும் அதற்கு லியோ தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அதனாலேயே, இசை வெளியீட்டு விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப். 30 ஆம் தேதி நடத்த  இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்கிற சர்ச்சையும் எழுந்தது. உடனடியாக, லியோ தயாரிப்பாளர் இந்த செய்தியில் உண்மையில்லை எனக் கூறிக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

தொடர்ந்து, இசை வெளியீட்டு விழா ஒருங்கிணைப்பாளர்கள் அரங்கத்தில் செட் அமைக்கும் பணிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை வரை ஈடுபட்டு வந்திருக்கின்றனர். பார்கோட் வகை டிக்கெட்களும் அச்சடிக்கப்பட்டு விநியோகத்திற்கு தயாராக இருந்திருக்கிறது. ஆனால், அனைத்துப் பணிகளும் நடந்துகொண்டிருக்க திடீரென தயாரிப்பு நிறுவனம் இசைவெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக அறிவித்து புதிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. 

பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக லியோ தயாரிப்பாளர் கூறினாலும் எதற்காக இத்தனை நாள் இசைவெளியீட்டு பணிகளை செய்திருக்க வேண்டும்? ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்னை லியோவுக்கும் விஜய்க்கும் வரக் கூடாது என கவனத்தில் வைத்திருந்தாலும் ஏன் கடைசி வரை நேரு உள்விளையாட்டு அரங்கில் செட் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தனர்? இரண்டு நாள்களுக்கு முன் உதயநிதி ஸ்டாலின் லியோவுக்கு இடையூறாக இருக்கிறார் என்பதாக ஒரு செய்தி பரவியது. அதற்கு செவன் ஸ்கிரிீன் நிறுவனம் மறுப்பு தெரிவித்திருந்தது.

தற்போது, விழா ரத்து செய்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இயக்குநரும் லியோ படத்தின் வசன எழுத்தாளருமான ரத்ன குமார் தன் எக்ஸ் தளத்தில் விஜய் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘நதி போயிட்டே இருக்கும்’ என்கிற விஜய் வசனத்தைப் பதிவிட்டுள்ளார்.  பாதுகாப்புக்காக ரத்து செய்யப்பட்டதற்கு எதற்காக இந்த வரிகள்?

இந்தக் குழப்பங்கள் ஒருபுறம் இருக்க விஜய்யின் திரைப்படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான லியோ, வசூலில் பல சாதனைகளைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் மிகப் பெரிய புரமோஷன் பணியான இசைவெளியீட்டு விழாவைத் தவிர்த்ததுதான் சந்தேகங்களைக் கிளப்புகிறது. 

முன்பு இருந்த நடிகர் விஜய் அல்ல இப்போது இருக்கும் விஜய். தன் ரசிகர் மன்றத்தை மிகத் தீவீரமாக கட்டமைத்து வருகிறார். அடிக்கடி தன் மக்கள் இயக்க   நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார். அதாவது, அவர் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதி எனப்படுகிறது. இந்த நிலையில், இம்மாதிரி நிகழ்வுகளால் குளறுபடிகள் ஏற்பட்டுத் தன் பெயருக்கு களங்கம் வந்துவிடக் கூடாது எனக் கருதுகிறாரா, இல்லை உண்மையில் அரசியல் தலையீடுகள் ஏதாவது உண்டா என்பது ஊகங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தாலும் லியோ படக்குழு தங்கள் புரமோஷனை சர்ச்சைகளில்  ஆரம்பித்திருக்கின்றனர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com