ரசிகர்கள் பாவமில்லையா? சந்திரமுகி 2: திரை விமர்சனம்

18 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வசூல்ரீதியாக ஹிட் கொடுத்த திரைப்படமான சந்திரமுகியின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது சந்திரமுகி 2.
ரசிகர்கள் பாவமில்லையா? சந்திரமுகி 2: திரை விமர்சனம்
ரசிகர்கள் பாவமில்லையா? சந்திரமுகி 2: திரை விமர்சனம்

18 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வசூல்ரீதியாக ஹிட் கொடுத்த திரைப்படமான சந்திரமுகியின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருக்கிறது சந்திரமுகி 2. நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் ஹிட் கொடுத்த ஒரு திரைப்படத்தின் கதையைச் சார்ந்து வந்திருக்கும் சந்திரமுகி 2 திரைப்படம் எப்படி இருக்கிறது? 

ராதிகா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன. குல தெய்வ வழிபாட்டை நடத்தாததே இந்த அசம்பாவித சம்பவங்களுக்குக் காரணம் என ஒரு சாமியார் சொல்ல, மொத்தக் குடும்பமும் குல தெய்வ வழிபாட்டைச் செய்வதற்காக செல்கிறது. அவர்களது குடும்பத்திலிருந்து பிரிந்த ராதிகாவின் மகளின் குழந்தைகளும், அக்குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் ராகவா லாரன்ஸும் இவர்களுடன் சேர்ந்து கொள்கின்றனர். சென்ற இடத்தில் குலதெய்வ கோவிலே சிதிலமடைந்த நிலையில் இருப்பதைக் கண்ட ராதிகா குடும்பத்தினர் அதை சரி செய்பவர்கள் அடுத்தடுத்து இறப்பதைக் கண்டு அதிர்கின்றனர். குலதெய்வ வழிபாட்டில் ஏற்படும் தடங்கலுக்கு சந்திரமுகி காரணமாக அமைவதை அறிந்த ராதிகா குடும்பத்தினர் அந்த வழிபாட்டைச் செய்தனரா? சந்திரமுகி என்ன ஆனார்? என்பதே திரைப்படத்தின் கதை. 

சந்திரமுகி திரைப்படத்தின் கதையின் தொடர்ச்சி என சொல்லப்பட்டாலும் கொஞ்சம்கூட அச்சுப் பிசகாமல் தனது பழைய கதையையே காப்பியடித்திருக்கிறார் இயக்குநர் வாசு. ரஜினியாக ராகவா லாரன்ஸ், ஜோதிகாவாக லட்சுமி மேனன், நயன்தாராவாக மஹிமா நம்பியார், சாமியாராக ராவ் ரமேஷ் என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. குழந்தைகளை ரெளடிகளிடமிருந்து காப்பாற்றும் நடிகர் ராகவா லாரன்ஸின் அறிமுகக் காட்சியே நமக்கு படத்தின் மீதான பதற்றத்தை அதிகரிக்கச் செய்துவிடுகிறது. அதுபோக கங்கனா ரணாவத்தைக் கருஞ்சிறுத்தையிடமிருந்து ஒரே அடியில் காப்பாற்றுகிறார். இந்த ஹரப்பா கால அறிமுகக் காட்சிகளை எல்லாம் இன்னுமா ரசிகர்கள் நம்புகிறார்கள்? 

நடிகர்களின் நடிப்பும் செயற்கைத்தன்மையாக இருப்பது படத்தை சறுக்கலுக்கு இட்டுச் செல்கிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் முதல்பாதி முழுக்க ஆர்வக்கோளாறால் அவதிப்படுபவரைப் போல நடந்துகொள்கிறார். “எங்கள் அண்ணனுக்கு நான்தான் செய்வேன்” எனும் பிரபலமான வாசகத்தைப் போல ரஜினியாக செய்கிறேன் என ரசிகர்களை செதுக்கிவிடுகிறார். அவருடன் போட்டி போட்டு ரசிகர்களைப் பந்தாடியுள்ளனர் சக நடிகர்கள். லட்சுமி மேனன் நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழ்த் திரையில் தெரிந்தாலும் அவரது நடிப்பும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

கிளைமேக்ஸ் காட்சிகளில் வரும் பாடலில் அவர் மூச்சுவாங்கி ஆடும்போது இயல்பாக பதற்றத்தில் இருக்க வேண்டிய பார்வையாளர்களோ கைதட்டி ஆரவாரிக்கின்றனர். ராதிகா, மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி தாங்கே, ரவி மரியா, சுரேஷ் சந்திர மேனன், விக்னேஷ் என பலரும் எதற்காக படத்தில் இருக்கின்றனர் என்பதே தெரியாதவாறு நடித்திருக்கின்றனர். வேட்டையன் மற்றும் சந்திரமுகியிடம் பேசுவதாக வரும் ஒரு காட்சியைத் தவிர நடிகர் வடிவேலுவின் நடிப்பு ரசிக்கும்படியாக இல்லை. அதிலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் திருமணம் கடந்த உறவு குறித்த அவரது வசனம் எல்லாம் இயக்குநர் இன்னும் எந்தக் காலத்தில் இருக்கிறார் எனக் கேட்கத் தோன்றுகிறது.  

இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் கங்கனா ரணாவத் தமிழ் புரியாமல் நடித்திருப்பாரோ எனத் தோன்றும்வண்ணம் நடித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் ஒரு வசனம் பேச அதற்கு சம்பந்தமில்லாத முகபாவனைகளால் தவிக்க விடுகிறார் கங்கனா. முதல்பகுதியில் ஏற்கெனவே வேட்டையனைக் கொன்ற சந்திரமுகி எதற்காக மீண்டும் வேட்டையனைக் கொல்ல வருகிறார் என லாஜிக் கேள்விகள் எழக் கூடாது. இம்மாதிரியான கமர்ஷியல் படத்தில் லாஜிக் இல்லையென்றால் ஏதாவது மேஜிக்காவது இருந்திருக்க வேண்டும்.

முதல்பாதியில் வரும் குழந்தைகளுக்கான சென்டிமென்ட் காட்சிகள், வேட்டையனைக் கொல்லும் செங்கோட்டையனின் காட்சிகள் என தேவையற்ற காட்சிகளால் நிறைந்திருக்கிறது சந்திரமுகி 2 திரைப்படம். ஆங்கிலத்தில் நன்றாக ஓடிய திரைப்படங்களை கிண்டல் செய்யும் விதமாக அதே திரைப்படத்தின் கிண்டல் வடிவத்தை வேறு ஒரு இயக்குநர் இயக்கி வெளியிடுவார், ஆனால் நன்றாக ஓடிய சந்திரமுகியின் கிண்டல் வடிவத்தை அதே இயக்குநர் சந்திரமுகி 2 என வெளியிட்டிருப்பார் போல எனத் தோன்றுகிறது. 

ஸ்வகதாஞ்சலி பாடலைத் தவிர மற்ற அனைத்துப் பாடல்களும் சம்பந்தமற்றவையாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் போதும் போதும் என வரும் ஒரு பாடலின்போது ரசிகர்களின் மனநிலையைப் பிரதிபலித்த உணர்வு ஏற்பட்டது. 

மோசமான கிராபிக்ஸ் காட்சிகள், எழுத்தே இல்லாத திரைக்கதை, காப்பியடிக்கப்பட்ட கதை என சந்திரமுகியை கூட்டி வந்து கோமாளியாக்கியிருக்கின்றார் இயக்குநர். 

சந்திரமுகி என்ன ஆனார் என்பதை அறியச் செல்லும் ரசிகர்களின் நிலையை  கொஞ்சம் யோசித்திருந்தால் இரண்டாம் சந்திரமுகியும்  கொஞ்சம் கரையேறியிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com