சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’: சினிமா விமரிசனம்

சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’: சினிமா விமரிசனம்

கீர்த்தி சுரேஷிடம் சிவகார்த்திகேயன் காதலை வெளிப்படுத்தும் ஒரு காட்சி இருக்கிறதே...

சுவாரசியமான காட்சிகளுடன் அழுத்தமான, உணர்வுபூர்வமான காட்சிகள் நிறைய கொண்டிருக்கும் ஒரு படம் அப்படியே நம்மைக் கட்டிப்போட்டுவிடும். அதேசமயம், அதற்குச் சம்பந்தமேயில்லாமல் நாலு மொக்கைக் காட்சிகளும் படத்தில் இருந்து தொலைக்கும். இங்கு அந்தப் படத்தின் இயக்குநரை நறுக்கென்று நாலு கேள்வி கேட்கமுடியும். ஒரு நல்ல படத்தைப் பாழாக்கிவிட்டீர்களே என்று! தமிழில் அப்படிப்பட்ட படங்கள் நிறைய உண்டு.

ரெமோவில் அதற்கெல்லாம் வேலையேயில்லை. மொத்தப் படத்திலும் சுத்தமாக லாஜிக்கே இல்லை என்பதுடன் திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களின் அமைப்பிலும் பொறுப்புணர்வுடன் செயல்படவில்லை. இயக்குநர் உள்ளிட்ட ரெமோ படக்குழுவே எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை எனும்போது நாமும் அக்குறைகளைப் பட்டியலிடுவதில் என்ன அர்த்தம் இருக்கமுடியும்? 

நடிகராக ஆசைப்படும் சிவகார்த்திகேயன், அந்த வாய்ப்பும் சரியாகக் கிடைக்காமல் வேலைவெட்டியின்றி உள்ளவர். ஒருநாள் அழகான பெண்ணைப் பார்க்கிறார். உடனே காதலில் விழுந்து, உடனே கையில் ரோஜாக்களுடன் காதலை வெளிப்படுத்த அவர் வீட்டுக்கே செல்கிறார் (அம்மாவிடம் சொல்லிவிட்டே போகிறார்). ஆனால் அங்குப் பார்த்தால், கதாநாயகிக்கு நிச்சயதார்த்தம் நடந்துகொண்டிருக்கிறது ( ஒரு பணக்காரப் பெண்ணுக்கு வீட்டு மொட்டை மாடியில்தான் நிச்சயதார்த்தம் நடக்குமா என்ன?) உடனே காதல் மன்னனின் இதயம் சுக்குநூறாகிவிடுகிறது. (நல்லவேளையாக இந்த இடத்தில் ஒரு சோகப்பாடல் இல்லை. அதற்கென்று இன்னொரு டெம்ப்ளேட் இடம் படத்தின் பின்பகுதியில் வசதியாக அமைந்துள்ளதால்).

சரி பொழப்பைப் பார்ப்போம் என்று கதாநாயகன், பட வாய்ப்புக்காக பெண் வேடமிட்டு (நர்ஸ்) கேஎஸ் ரவிக்குமாரைச் சந்திக்கிறார். அதே நர்ஸ் வேடத்தில் வீடு திரும்பும்போது பேருந்தில் கதாநாயகியைப் பார்க்கிறார். அவரே சிவகார்த்திகேயனின் அருகில் வந்து அமர்ந்து, தான் வேலை பார்க்கும் மருத்துவமனையில் நர்ஸ் வேலையும் வாங்கித் தருவதாகச் சொல்கிறார். அங்கு ஆரம்பிக்கிறது ரெமோவின் திருவிளையாடல்கள். ஒரு தோழியாக கதாநாயகியுடன் நெருக்கமாகி அவளுடைய மனத்தை மாற்றி (கூடவே மாப்பிள்ளையையும்), எவ்வாறு இறுதியில் கதாநாயகியின் கரம் பிடித்து மூக்கோடு மூக்கு உரசுகிறார் என்பதே ரெமோ.

சிவகார்த்திகேயன் படு ஸ்டைலாகத் தோற்றமளிக்கிறார். அவருடைய கதாபாத்திரத்துக்கும் அதற்கும் கொஞ்சம் பொருத்தமில்லை என்றாலும். அதிலும் தேவைப்படும்போதெல்லாம் நொடியில் பெண் வேடமிட்டு வருகிறார். படம் முழுக்க இப்படிப்பட்ட அபத்தமான மாயாஜாலங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே இப்படித்தான் இல்லையா? படக்குழுவில் பிசி ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி இருந்தாலும் இதற்கு மேல் என்ன எதிர்பார்த்துவிடமுடியும்?

வழக்கமாகத் தமிழ்ப் படங்களில் கதாநாயகிகள்தான் லூசாக வருவார்கள். ஆனால் இதில் கதாநாயகனே பல காட்சிகளில் அப்படித்தான் இருக்கிறார். போலி டாக்டரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் போலி நர்ஸைக் கேள்விப்பட்டதுண்டா? அது சாத்தியமா? அதுதான் ரெமோவின் மையக்கதை. (டாக்டராக நடித்துள்ள கீர்த்தி சுரேஷே ஒரு போலி டாக்டர் போல்தான் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளார் என்பது வேறு விஷயம்!). ஆனாலும் நர்ஸ் வேடத்துக்காக சிவகார்த்திகேயன் மெனக்கெட்டதன் பலன் திரையில் தெரிகிறது. படத்தின் ஆதாரமே அந்த வேடம்தானே! ஆனால், அவர் பெண்ணுமல்ல, நர்ஸுமல்ல என்பதை யாராலுமே கண்டுபிடிக்கமுடிவதில்லை. அப்படிப்பட்ட விநோத மனிதர்கள்தான் படம் முழுக்க உலவுகிறார்கள்.  

இன்னொன்று, இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷிடம் சிவகார்த்திகேயன் காதலை வெளிப்படுத்தும் ஒரு காட்சி இருக்கிறதே, அதை அம்பானி மகன் நினைத்தால்கூட அவ்வளவு சுலபமாகச் செய்துவிடமுடியாது. ஆனால், வேலைவெட்டி இன்றி, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சிவகார்த்திகேயன், போகிற போக்கில் அதைச் செய்து, காதலியின் மனத்தில் இடம்பிடிக்கிறார். ஹோய், லாஜிக் மீறல்களுக்கு ஓர் அளவு இல்லையா என்றுதான் படம் முழுக்கத் தோன்றிக்கொண்டே இருக்கிறது. 

மேலும், ஓர் அழகானப் பெண்ணைக் காதலிக்க, அவளுடன் பழகி மனத்தைப் புரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை. அவள் சம்மதம் அவசியமில்லை. என்ன தகிடுதத்தங்கள் வேண்டுமானாலும் செய்து அவளை ஏமாற்றி, காதலிக்க முயற்சி செய்யலாம் என்கிற எண்ணத்தைவேறு இந்தப் படம் உருவாக்குகிறது. பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத தமிழ்ப்படங்களின் பட்டியலில் ரெமோவுக்கும் ஓர் இடம் உண்டு. படம் முழுக்க ஏமாற்றுவது சிவகார்த்திகேயன். ஆனால் வசனங்களில் எல்லாத் திட்டுகளும் கீர்த்தி சுரேஷுக்கே விழுகிறது. இதனால் படத்தில் உண்மையான காதல் உணர்வுகளுக்கு வேலையே இல்லாமல் போய்விடுகிறது. சிவகார்த்திகேயன் காதலுக்கு நிகராக இருக்கிறது கீர்த்தியின் காதல்! யார் என்ன என்றே தெரியாமல் அந்நியன் ரெமோ போல சீன் போடும் ஓர் இளைஞனை நம்பி தன் திருமணத்தை உதறுகிறார். அதிலும் கீர்த்தி சுரேஷுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை, சிவகார்த்திகேயனுக்குத் தோதாக வில்லனாக மாறுவதெல்லாம் அபத்தம்! இந்த இடத்தில் அவ்வை சண்முகி படத்தின் அருமை புரிகிறது. புத்திசாலித்தனமான வசனங்கள், உணர்வுபூர்வமான காட்சிகள் என்று நகைச்சுவையையும் தாண்டி பல விஷயங்களுக்காக அந்தப் படத்தில் மெனக்கெட்டிருந்தார்கள்.

படத்தில் இளமை ததும்ப அழகான கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய காரணம். ஒரு மருத்துவருக்கான எந்த உடல்மொழியும் இன்றி கல்லூரி மாணவி போல ஜாலியாக நடித்துள்ளார். பி.சி. ஸ்ரீராமின் கேமரா அவரை இன்னும் அழகாகக் காண்பித்துள்ளது. அனிருத்தின் பரபர பாடல்கள் தேவைப்படும் நேரத்தில் வந்து செல்கின்றன. இசை பெரிய பலமும் இல்லை, பலவீனமும் இல்லை.   

மாப்பிள்ளை புகைப்படத்தை வைத்து கீர்த்தியை சிவகார்த்திகேயன் குழப்புகிற காட்சிகள், குழந்தைக்கு மேஜிக் செய்யும் அந்தக் கடைசிக் காட்சி, நர்ஸைக் காதலிக்க முயற்சி செய்யும் யோகி பாபு தொடர்புடைய காட்சிகள் (அவர் வருகிற காட்சிகளில் ரசிகர்கள் ஒரு குதூகலத்துக்குத் தயாராகிவிடுகிறார்கள்!), ஆங்காங்கே வெடிச்சிரிப்பை ஏற்படுத்தும் சில வசனங்களும் காட்சிகளும் என படத்தில் ரசிக்கக்கூடிய தருணங்கள் இல்லாமல் இல்லை (வழக்கமாக ஒரு விமரிசனத்தின் கடைசிப் பகுதியைக் குறைகளைப் பட்டியலிடுவதற்குதான் பயன்படுத்துவார்கள். ஆனால் இதிலோ ரசித்ததைச் சொல்கிற இடமாக மாறியுள்ளது!) ஆனால், நம்பகத்தன்மை கொண்ட காட்சிகள், உயிர்ப்பான காதல், சிறப்பான வசனங்கள் என உண்மையான மெனக்கெடல் திரைக்கதையில் சாத்தியமாகியிருந்தால் இந்தப் படத்தை முழுவதுமாக ரசித்திருக்கமுடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com