சுடச்சுட

  

  ஜெயம் ரவி-யின் ‘டிக் டிக் டிக்’ - சினிமா விமரிசனம்

  By சுரேஷ் கண்ணன்  |   Published on : 23rd June 2018 11:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tik_tik_12

   

  நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் ஆகிய மூன்று ‘வித்தியாசமான’ திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்குத் தந்த இயக்குநர் சக்தி செளந்தர்ராஜனின் நான்காவது திரைப்படம் ‘டிக் டிக் டிக்’. ஹாலிவுட் திரைப்படங்களை இறக்குமதி செய்து ‘தமிழ் வடிவத்திற்கேற்ப’ மாற்றுவதில் வல்லவர் என்று தெரிகிறது. அந்த வரிசையில், 1998-ல் வெளிவந்த Armageddon என்கிற ஹாலிவுட் திரைப்படத்தின் சாயலையொட்டி ‘டிக் டிக் டிக்’ படத்தை உருவாக்கியுள்ளார்.

  ‘India's first space film’ என்கிற தற்பெருமையை இத்திரைப்படம் பறைசாற்றிக் கொள்கிறது. பிரமிக்க வைக்கும் பல அயல்நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இந்த அறிவிப்பு நெருடலையும் புன்னகையையும் ஏற்படுத்தக்கூடும் என்றாலும், தமிழில் இப்படியொரு வகைமையைத் தீவிரமான தொனியில் முயன்ற இயக்குநருக்கும் இதன் பின்னணியில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் முதலில் பாராட்டைச் சொல்லியாக வேண்டும். வெளிநாட்டு நிபுணர்களைச் சார்ந்திருக்காமல், இதன் VFX பணிகள் முழுமையும் சென்னையில் நடைபெற்றதாகச் சொல்கிறார்கள். அதற்காகவும் பிரத்யேகப் பாராட்டு.


  *

  சென்னை, எண்ணுரில் உள்ள சுனாமி குப்பத்தில் ஒரு விண்கல் வந்து விழுவதில் பலத்த சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதை விடவும் பிரம்மாண்டமான விண்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், இன்னமும் ஏழு நாள்களில் வந்து மோதப் போகும் அந்த விண்கல்லால் தமிழகம், ஆந்திரா, இலங்கை உள்ளிட்ட பிரதேசங்கள் சுனாமி அலையில் காணாமல் போகும் என்றும் ராணுவ விண்வெளிப் பாதுகாப்பு மையம் கண்டுபிடிக்கிறது. ஏறத்தாழ நான்கு கோடி மக்களை காவு வாங்கப் போகும் இந்தப் பேரழிவை எப்படியேனும் தடுத்தாக வேண்டும். பொதுமக்களிடம் பதற்றம் ஏற்படக்கூடாது என்பதற்காக இதை வெளியில் அறிவிக்காமல் ரகசியமாகவும் இயங்கவேண்டும்.

  200 டன் நியூக்ளியர் ஆயுதம் கொண்ட ஏவுகணையைச் செலுத்துவதின் மூலம் விண்கல்லை உடைத்து பூமியைக் காப்பாற்றலாம் என்று தெரிய வருகிறது. ஆனால் அணுஆயுத ஒப்பந்தத்தின்படி இத்தனை பெரிய அளவிற்கான அணுஆயுதத்தை எந்தவொரு நாடும் தயாரிக்கக்கூடாது. அப்படி எந்த நாடாவது ரகசியமாக தயாரித்தாலும் சில காரணங்களால் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாத சிக்கலும் இருக்கிறது. ஆனால், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று, இந்த அளவிற்கான ஆயுதம் அடங்கிய ஏவுகணையை விண்வெளியில் ரகசியமாக வைத்திருப்பது தெரிகிறது.

  நமது நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரர்களை ராக்கெட்டில் அனுப்பி அந்த ஏவுகணையை திருடி எடுத்து வந்து விண்கல்லை அழித்து இந்தப் பேரழிவைத் தடுக்கலாம் என்று திட்டமிடப்படுகிறது. ஆனால் பலத்த பாதுகாப்புடன் இருக்கும் ஏவுகணையை நெருங்குவது அத்தனை சுலபமானதில்லை. எனவே சாமர்த்தியமானதொரு திருடனை இதற்காக உபயோகிக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள்.

  ‘Magician’ மற்றும் ‘Escape Artist’ ஆக இருக்கும் ‘ஜெயம் ரவி’யை இந்த விஷயத்திற்காக அணுகுகிறார்கள். நல்ல நோக்கத்திற்காக அவர் செய்த திருட்டு ஒன்றினால் கடுப்பாகும் காவல்துறை, கடுமையான பொய் வழக்கு போடுவதால் சிறையில் இருக்கிறார் ஜெயம் ரவி. தன்னுடைய மகனின் மீது உயிரையே வைத்திருக்கும் ஜெயம் ரவியின் பாசவுணர்வைப் பயன்படுத்தி, இந்த திட்டத்திற்கு அவரைச் சம்மதிக்க வைக்கிறார்கள். இதன் மூலம் அவர் மீதுள்ள வழக்கு களையப்பட்டு சிறையிலிருந்து வெளியே வர முடியும்.

  விண்வெளிக்குச் செல்லும் பயிற்சிகளை முடித்துக் கிளம்பும் ஜெயம் ரவிக்கு ஓர் அநாமதேய நபரிடமிருந்து மிரட்டல் வருகிறது. ‘உன் மகனைக் கடத்தி வைத்திருக்கிறோம். நீ ஏவுகணையைத் திருடிய பிறகு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால்…”  

  நான்கு கோடி மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒருபுறம், கடுமையான பாதுகாப்புகளுக்கு இடையில் இருக்கும் ஏவுகணையைச் சாமர்த்தியமாகத் திருட வேண்டிய சவால் மற்றொரு புறம், இதற்கிடையில் கடத்தப்பட்ட தன் மகனை மீட்கவேண்டிய பதற்றம். ஆக, இத்தனை விஷயங்களுக்கு மத்தியில் ஜெயம் ரவி இந்தச் சவால்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பரபரப்பான காட்சிகளின் மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

  முன்பே குறிப்பிட்டபடி தமிழில் இதுவரை வெளிவந்திருக்காத வகைமையைத் தேர்ந்தெடுத்தற்காகவே இயக்குநருக்குப் பாராட்டைச் சொல்லிவிட வேண்டும். விண்வெளிப் பாதுகாப்பு மைய அதிகாரியான ‘நிவேதா பெத்துராஜிற்கும்’ ஜெயம் ரவிக்கும் சில உரசல்கள் நேர்ந்தாலும் அவர்களுக்குள் காதல் மலர்ந்து ‘டூயட்’ பாடும் அபத்தங்களையெல்லாம் இயக்குநர் செய்யாமலிருந்த கருணைக்காகவே பிரத்யேகப் பாராட்டு.

  விண்வெளி தொடர்பான திரைப்படம் என்றாலும் நுட்பம் சார்ந்த சிக்கலான விஷயங்களை எளிய வரைகலையின் மூலம் முதலிலேயே திறமையாகச் சொல்லி விடுகிறார்கள். ‘நியூக்ளியர், மிஸைல், ஆஸ்ட்ராய்ட்’ போன்ற விஷயங்கள் ஒருவருக்குப் புரியவில்லையென்றாலும் பரவாயில்லை. ‘நம் நாட்டிற்கு ஆபத்து, அது ஏழு நாட்களுக்குள் தடுக்கப்பட்டாக வேண்டும்’ என்கிற ஆதாரமான சிக்கலை பாமரருக்கும் புரியும்படி எளிமையாக விவரித்த விதத்திற்குப் பாராட்டு.

  ஜெயம் ரவி தன்னுடைய பங்கைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். பாசமுள்ள தகப்பனாக மகனின் மீது பாசத்தைக் கொட்டும் அதே சமயத்தில், சண்டைக்காட்சி உள்ளிட்ட இதரக் காட்சிகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தும்படி நடித்திருக்கிறார். மார்ஷியல் ஆர்ட்ஸ் பயின்ற காரணத்தினாலேயே இந்தத் திரைப்படத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிவேதா பெத்துராஜூம் கவர்கிறார். ராணுவத் தலைமை அதிகாரியாக ஜெயப்பிரகாஷ், அடுத்த நிலை அதிகாரியாக வின்சென்ட் அசோகன் போன்றோர் அவரவர்களின் பங்கைச் சரியாகவே நிறைவேற்றியிருக்கிறார்கள். ஜெயம் ரவியின் நண்பர்களாக வரும் ரமேஷ் திலக்கும், அர்ஜூனனும் நகைச்சுவைக்குப் பயன்பட்டிருக்கிறார்கள். சிங்கப்பூர் நடிகரான Aaron Aziz வில்லன் பாத்திரத்தின் மூலம் இந்தியத் திரைக்கு அறிமுகமாகிறார்.

  ஜெயம் ரவியின் உண்மையான மகனே இதில் நடித்திருக்கிறார். இவர்கள் சம்பந்தப்பட்ட பழைய புகைப்படங்களை பாடல் காட்சியில் பயன்படுத்தியிருப்பது சிறப்பு.

  காட்சிகளுக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துவற்காக அட்டகாசமாக உழைத்திருக்கும் கிராஃபிக்ஸ் குழு, விண்வெளிக் கப்பல் இறங்குமிடம், அதன் உள் அரங்கம் பூமியை நோக்கி நகரும் விண்கல் போன்றவற்றைச் சிறப்பாக உருவாக்கியிருக்கும் கலை இயக்கக் குழு, ஒலி வடிவமைப்பு குழு உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களைப் பாராட்டியாக வேண்டும். தமிழ் சினிமாவிற்கான பட்ஜெட்டிற்குள் இயன்றவரையிலான நம்பகத்தன்மையை உருவாக்கியது நிச்சயம் சவாலானதொரு விஷயம்.

  பாராட்டப்பட வேண்டிய இந்த விஷயங்களைத் தாண்டி, இந்தத் திரைப்படத்தில் சில குறைகளும் இருக்கின்றன. ஜெயம் ரவியின் நண்பர்கள் அசந்தர்ப்பமான நேரங்களில் செய்யும் அபத்தமான நகைச்சுவைகள், அனுபவமும் திறமையும் உள்ள ராணுவக்குழுவால் முடியாத காரியத்தை ஒரு திருடன் அநாயசமாக செய்யும் முரண், ஏவுகணையை பென்சில் மாதிரி தூக்கிக் கொண்டு ஜெயம்ரவி செல்வது, அவர் விண்வெளிக்  கப்பலின் மேல் செய்யும் சாகசம் போன்று பல விஷயங்கள் சிரிப்பையும் நெருடலையும் ஏற்படுத்துகின்றன. தமிழ் சினிமா ரசிகர்களுக்காகச் செய்யப்பட்ட பல சமரசங்கள் காட்சிகளின் நம்பகத்தன்மையைப் பின்னுக்கு இழுக்கின்றன.

  ஜெயம் ரவிக்கு அத்தனை பெரிய அறிமுகத்தைத் தந்துவிட்டு அது சார்ந்த காட்சிகளைப் பிறகு சாதாரணமாக உருவாக்கியிருப்பதின் மூலம் சுவாரசியத்தைத் தவற விட்டு விட்டார்கள். இத்தனை பெரிய பேரழிவு நிகழப் போகிறது என்பதைத் துவக்க காட்சிகளில் வலுவாக நிறுவிவிட்டு அந்தப் பரபரப்பை அடுத்தடுத்த காட்சிகளில் தக்க வைப்பதையும் சிறப்பாகக் கையாளவில்லை. அணுஆயுதம் வைத்திருக்கும் அண்டை நாடு எது என்கிற விஷயம் தணிக்கையில் கத்தரிக்கப்பட்டிருந்தாலும் மிக எளிதாக யூகிக்க முடிகிறது.

  டி. இமானின் நூறாவது திரைப்படம். தந்தை மகன் பாசத்தை விளக்கும் ‘குறும்பாய்’ என்கிற பாடலும், வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பாடலும் சிறப்பாக இருக்கிறது. காட்சிகளின் பரபரப்பிற்கு இமான் அளித்திருக்கும் பரபரப்பான இசை பெரும் உறுதுணையாக நின்றிருக்கிறது.

  ‘இன்டர்ஸ்டெல்லார்’, ‘கிராவிட்டி’ போன்ற, விண்வெளிப் பின்னணியில் உருவான அறிபுனைவுத் திரைப்படங்களோடு ‘டிக் டிக் டிக்’-கை ஒப்பிடுவதைத் தவிர்க்க முடியவில்லை. என்றாலும், தமிழில் இப்படியொரு திரைப்படம் இருக்க வேண்டும் என்கிற இயக்குநரின் திட்டத்தையும் அதற்காக உழைத்திருக்கும் மெனக்கிடலையும் பாராட்ட வேண்டியிருக்கிறது. தமிழ் சினிமாவிற்கென செய்யப்பட்ட சமரசங்களைக் குறைத்து, மேலும் நம்பகத்தன்மையைக் கூட்டியிருந்தால் ‘டிக் டிக் டிக்’ உண்மையாகவே ஓர் அட்டகாசமான திரில்லராக மாறியிருக்கும். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai