மக்களைக் காப்பாற்றினாரா சூப்பர் ஹீரோ?: ’மின்னல் முரளி’- திரை விமர்சனம்

சூப்பர் ஹீரோக்கள் என்றாலே ஸ்பைடர்மேன் , பேட்மேன் போன்ற படங்கள் உடனடியாக நினைவிற்கு வருவதைப் போல இனி இந்திய சினிமாவில், இயக்குநர் பாசில் ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தின் மு
மக்களைக் காப்பாற்றினாரா சூப்பர் ஹீரோ?: ’மின்னல் முரளி’- திரை விமர்சனம்
மக்களைக் காப்பாற்றினாரா சூப்பர் ஹீரோ?: ’மின்னல் முரளி’- திரை விமர்சனம்

ஒரு சிறிய கிராமத்தில் இருந்தாலும் வேலைக்காக அமெரிக்கா செல்ல போராடிக் கொண்டிருக்கும் ஜெய்சனுக்கும் (டோவினோ தாமஸ்) உள்ளூரில் யாரும் மதிக்காத ஷிபுக்கும் (குரு சோமசுந்தரம்) ஒருநாள் மின்னல் தாக்குகிறது. இதனால் இருவருக்கும் ஒரு ‘சூப்பர் பவர்’ கிடைக்கிறது. இதை வைத்துக்கொண்டு யார் என்ன செய்கிறார்கள் என்பதே ‘நெட்பிளிக்ஸ்’ தளத்தில் வெளியாகியிருக்கும் ‘மின்னல் முரளி’-யின் கதை.

தொடர்ந்து தான் நடிக்கும் திரைப்படங்களின் கதையை கவனமாகக் தேர்ந்தெடுக்கும் டோவினோ தாமஸ் இப்படத்திலும் ஒரு புதிய முயற்சியை எடுத்து அதில் வெற்றி பெற்றிருக்கிறார். குறிப்பாக டோவினோ கதாப்பாத்திரம் பெரிய நாயக பிம்பத்தால் கட்டமைக்கப்படாததும் , சூப்பர் ஹீரோவாக மாறிய பின்பும் பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு பெற்றவனாக காட்டாததும் கதையில்  ஒன்றச் செய்கின்றன.

மேலும் , படம் முழுவதும் 90-களில் நடப்பதால் அந்தக் காலகட்டத்தை சரியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். எந்த இடத்திலும் விலகாத திரைக்கதையின் நேர்த்தியும் அழகான ஒளிப்பதிவும் படத்தின் பெரிய பலங்கள் . குறிப்பாக , ஆரம்பத்தில் வரும் நாடகக் காட்சி, குரு சோமசுந்தரத்தின் காதல் காட்சிகள்,  இறுதி சண்டைக் காட்சிகள் அனைத்தும் சமீர் எஸ்.தாகீரின் தரமான ஒளிப்பதிவால் மனதில் நிற்கிறது.

மின்னல் முரளிகளான டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரத்தை மையமாக வைத்து கதை உருவாகியிருந்தாலும் படத்தில் வருகிற மற்ற கதாப்பாத்திரங்களும் நினைவில் நிற்கிறார்கள். முக்கியமாக, படம் முழுவதும் வரும் சிறுவன்  ஜோஸ்மோன் (வஷிஷ்த் உமேஷ்) நடிப்பு சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

சில நகைச்சுவைகள் சிரிக்க வைக்கவும் , இன்னும் சிலது அதற்காக முயற்சி செய்வதுமாக இருக்கின்றன.

ஒரே ஊரில் இருக்கும் டோவினோக்கு அவன் தந்தை யாரென தெரியாதது, தேவை இல்லாத காதல் காட்சிகள்,  சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைவு போன்றவற்றால் சோர்வு ஏற்படுகிறது. இருப்பினும், தொய்வான காட்சிகளில் குரு சோமசுந்தரத்தின் மிகையில்லாத நடிப்பும் , அவருக்கே உரித்தான உடல் மொழியும் ரசிக்க வைக்கிறது.

சூப்பர் ஹீரோக்கள் என்றாலே ஸ்பைடர்மேன் , பேட்மேன் போன்ற படங்கள் உடனடியாக நினைவிற்கு வருவதைப் போல இனி இந்திய சினிமாவில், இயக்குநர் பாசில் ஜோசஃப் இயக்கத்தில் மலையாளத்தின் முதல் சூப்பர் ஹீரோ திரைப்படமாக உருவாகியிருக்கும் மின்னல் முரளி-யும் நினைக்கப்படும் என்பது உறுதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com