விக்ரமா ? துருவா ? வெல்வது யார் ? 'மகான்' - திரை விமர்சனம்

விக்ரம் மற்றும் துருவ் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்பட விமர்சனம் 
விக்ரமா ? துருவா ? வெல்வது யார் ? 'மகான்' - திரை விமர்சனம்
Published on
Updated on
2 min read

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள படம் மகான். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

சுதந்திர போராட்ட குடும்பத்தில் பிறக்கும் காந்தி மகான், சிறு வயதிலிருந்தே மதுவுக்கு எதிரான தீமைகளை சொல்லி வளர்க்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் மது விற்பனை செய்யும் சூழலுக்கு ஆளாகிறார். அவருக்கு அவரது மகன் தாதாபாய் நௌரோஜி மூலம் பிரச்னை வருகிறது. தனது மகனை காந்தி மகான் எப்படி சமாளித்தார் என்பதே மகான் படத்தின் கதை. 

தவறு செய்ய அனுமதிக்காத சுதந்திரம், சுதந்திரமே அல்ல என்ற காந்தியின் வசனத்துடன்தான் படம் துவங்குகிறது. அப்பா - மகனுக்கு இடையேயான போட்டியில் வெல்லப்போவது யார் என்ற சுவாரசியமான ஒரு வரி கதையை வைத்து மூன்று மணி நேர திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். வழக்கமான கார்த்திக் சுப்புராஜ் பட பாணியில்தான் இந்தப் படமும் நகர்கிறது. 

1960, 96, 2003, 2016 பல்வேறு காலகட்டங்களில் நகரும் கதை. ஒவ்வொரு கால கட்டத்தையும் நேர்த்தியாக திரையில் கொண்டு வந்தததில் கலை இயக்குநரின் பங்கு பாராட்டுக்குரியது.

காந்தி மகானாக விக்ரம், தாதா பாய் நௌரோஜியாக துருவ், சத்யவானாக பாபி சிம்ஹா, நாச்சியாராக சிம்ரன், ராக்கியாக சனந்த் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட எந்த குறையும் இல்லாமல் செய்திருக்கிறார்கள். நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரமுக்கு நடிப்பதற்கு கனமான வேடம். விக்ரமை விமர்சிப்பவர்கள் அவர் தனது தோற்றத்தை ஒப்பனை மூலம் மாற்றிக்கொண்டு வருகிறாரே தவிர நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஒரு ருத்ர தாண்டவமே ஆடியிருக்கிறார். படத்தை நாம் 3 மணி நேரம் பார்ப்பதற்கு முக்கிய காரணம் விக்ரம் மட்டுமே. அவருக்கு அடுத்து பாபி சிம்ஹாவின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. 

துருவ்வும் நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால் ஐபிஎஸ் அதிகாரி வேடம் அவருக்கு பொருந்தவில்லை. மிக இளைஞராக தெரிவதால் ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் அவர் நம்பும்படி இல்லை. 

முதல் பாதி முழுக்க மது வியாபாரத்தில் விக்ரம் மற்றும் பாபி சிம்ஹா எப்படி  உச்சத்தை அடைகிறார்கள் என்பது காட்டப்படுகிறது. ஆங்காங்கே சுவாரசியமான காட்சிகள் இருக்கின்றன. இருவரும் தமிழ் நாட்டளவில் மது வியாபாரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள் என்பதை இவ்வளவு விவரமாக சொல்லியிருக்கத் தேவையில்லை. காரணம் அந்த காட்சிகள் யதார்த்தமாக இல்லாமல், அதீதமாக, கதாநாயக பிம்பத்தை கட்டமைக்கும் காட்சிகளாகவே இருக்கின்றன. மேலும் அந்தக் காட்சிகளில் நம்பகத் தன்மையும் குறைவு. 

இரண்டாம் பாதியில் துருவ்வும் விக்ரமும் மோதிக்கொள்ளும் காட்சிகளில் சுவாரசியம் குறைவு. நடிகர் விக்ரம் தனது சிறப்பான நடிப்பால் துருவ்வை காணாமல் செய்துவிடுகிறார். மகனின் மீது கொஞ்சம் இரக்கம் காட்டியிருக்கலாம். இரண்டாம் பாதியில் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நன்றாக இருக்கின்றன. உதாரணமாக இரண்டாம் பாதியில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சந்தித்துகொள்ளும் விக்ரமுக்கும் சிம்ரனுக்கும் இடையிலான உரையாடல்கள்,  இறுதியில் பாபி சிம்ஹாவுக்கும் விக்ரமுக்குமான காட்சி  ஆகியவை சுவாரசியமாக இருக்கின்றன. கொள்கைவாதம் குறித்த உரையாடல்கள் மிக முக்கியமானது. 

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை. உணர்வுப்பூர்வமான காட்சிகளில் அவரது பின்னணி இசை கைகொடுத்திருக்கிறது. ரயில் கடக்கும் போது அதிர்வுகளைக் காட்ட, கேமராவை அசைப்பது என ஆங்காங்கே தனது ஒளிப்பதிவின் மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. அவரது ஒளிப்பதிவின் மூலம் சிறப்பான காட்சி அனுபவத்தை தந்திருக்கிறார். 

ஜகமே தந்திரம் படத்தின் மூலம் சறுக்கிய கார்த்திக் சுப்புராஜ் மகான் மூலம் மீண்டிருக்கிறார் என்று சொல்லலாம். மது வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு கேடு என படத்தின் தலைப்பில் போட வேண்டியதை 3 மணி நேர படமாக எடுத்திருக்கிறார்கள் என்பதாக சொல்லலாம். அந்த அளவுக்கு மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை படம் பேசியிருக்கிறது. திரையரங்கில் பார்த்து ரசிக்கக் கூடிய காட்சிகள் நிறைய படத்தில் இருக்கின்றன. இந்த மகான் படத்தை நிச்சயம் ஒருமுறை ரசிக்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com