மனதின் வெளிச்சமே மானிட வெளிச்சம்! இது வித்யாசமான சினிமா!

'பச்சை என்கிற காத்து' உள்ளிட்ட படங்களை இயக்கிய கீரா அடுத்து இயக்கி வரும் படம்
மனதின் வெளிச்சமே மானிட வெளிச்சம்! இது வித்யாசமான சினிமா!
Published on
Updated on
2 min read

'பச்சை என்கிற காத்து' உள்ளிட்ட படங்களை இயக்கிய கீரா அடுத்து இயக்கி வரும் படம் 'பற.' சமுத்திரக்கனி, நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் நடிக்கின்றனர். சிபின் சிவன் ஒளிப்பதிவில் ஜார்ஜ் வி.ஜாய் இசையமைக்கிறார். பெவின்ஸ் பால், ராமச்சந்திரன், ரிஷி கணேஷ் தயாரிக்கின்றனர். கீரா படம் பற்றிப் பேசும் போது... 'இந்தக் கதையின் எல்லாக் காட்சிகளும் போய் முடிவது மனிதத்தின் வாசலில்தான். ஒவ்வொரு மனிதனுக்குமான அன்பும் வன்மமும் மாறி மாறி கண்ணீரிலும் புன்னகையிலும்தான் போய் முடியும். திலீபன்- அனிதா என்று ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒரு ஜோடி. நிலமற்ற இன்னொரு காதல் ஜோடி ஸ்ரீபன் - ஆராயி, தங்களின் அங்கீகாரத்துக்காகத் திருமணம் செய்ய முயல்கிறார்கள். வயதாகி துணையில்லாத முத்துக்குமரன்- ஆயிஷா எனும் முதிய ஜோடிக்கும் திருமணம். அந்தப் பகுதி ரவுடியான பட்டாக்கத்தி, வழக்கறிஞர் அம்பேத்கர் இந்த ஐந்து புள்ளிகளும் சந்திக்கும் இடம் ஒரு பதிவு அலுவலகம். அங்கு அவர்களுக்கு நேர்ந்தது என்ன, அதிலுள்ள சுவாரஸ்யம் என்ன என்பதே திரைக்கதை. ஒட்டு மொத்தமாக எல்லோருக்கும் சமூக விடுதலை என்பது தேவையாக இருக்கிறது. அழகு, நிறம், பணம் என்று அன்றாட அத்தனை அபத்தங்களையும் அடித்து நொறுக்கி, அன்பையும் அக்கறையையும் மட்டுமே முன் வைக்கிற இடம் அது. மனதின் வெளிச்சமே மானிட வெளிச்சம் என்று உணர்கிற இடங்கள் ஆங்காங்கே வரும். அதுதான் இந்தக் கதையின் பலம் என்று நினைக்கிறேன்' என்றார் கீரா.

**

வாராகி இயக்கி, தயாரித்து, நடித்து வரும் படம் 'அகம்பாவம்.' திருமணத்துக்குப் பின் நமீதா முக்கியக் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். அப்புக்குட்டி, மனோபாலா, மாரிமுத்து உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீப அரசியல், சமூக சூழல்களை மையமாகக் கொண்டு படத்தின் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மற்றொரு கதாநாயகியாக நடிப்பவர் சமீராசாய். இவர் தன் திரைப் பயணம் பற்றி பேசும் போது.... "தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதிதான் எனக்கு சொந்த ஊர். இஸ்லாமிய குடும்பத்துப் பெண் என்பதால் சினிமாவில் நடிப்பதற்கு தடை இருந்தது. அதுவும் கிராமப் பகுதியில் இருந்து வருவதால், ஊர் கட்டுப்பாட்டையெல்லாம் கடந்து வர வேண்டி இருந்தது. ஆனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அம்மா துணைக்கு நின்றார். 'வஜ்ரம்', 'வென்று வருவான்' படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இருந்தாலும் பெரும் வெளிச்சம் இல்லை. அப்போதுதான் வாராகியின் நட்பு கிடைத்தது. அவர் இயக்கவிருந்த கதையைச் சொன்னார். பிடித்திருந்தது. நடித்தேன். எதிர்பார்த்துக் காத்திருந்த படம் போல் வந்து சேர்ந்திருக்கிறது. வாய்ப்புக் கொடுத்த வாராகிக்கு நன்றி. பட வாய்ப்புகள் அதிகமாக வருகின்றன. இருந்தாலும், ஒரு ஹிட் படத்தோடு வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டும் என காத்திருக்கிறேன். 'அகம்பாவம்' படம் வெளியான பின்பு தான் அடுத்தப் படங்களை ஒப்புக் கொள்வேன்'' என்றார் சமீராசாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com