விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் பிடிக்கும்! இணைந்து நடிக்க ஆசை!

ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார்.
விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் பிடிக்கும்! இணைந்து நடிக்க ஆசை!
Published on
Updated on
2 min read

ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா படங்கள் இயக்குவதில் கவனம் செலுத்தி வந்தார். "3', "வை ராஜா வை' படங்களை இயக்கினார். அடுத்தப் படம் இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தவர் திடீரென்று தொழில் அதிபர் ஆகும் எண்ணத்திற்கு மாறியிருக்கிறார். ஏற்கெனவே டென்னிஸ் அணி ஒன்றில் முதலீடு செய்தவர் தற்போது யோகாவில் முதலீடு செய்திருக்கிறார். இப்படியொரு எண்ணம் வந்ததற்கு என்ன காரணம் என்றதற்கு, 'ஆரோக்கியத்துடன தொடர்புடைய பணிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதன் விளைவுதான் டென்னிஸையடுத்துத் தற்போது யோகாவில் பங்கேற்றிருக்கிறேன். நினைவாற்றல் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு நினைவூட்ட வேண்டும் என்பது தற்போது நான் பங்கேற்றிருக்கும் யோகாவின் குறிக்கோள். அதனால்தான் இதில் முதலீடு செய்திருக்கிறேன்' என்றார் ஐஸ்வர்யா.

எதிர் வினையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் 'இருளன்'. ஸ்ரீகாந்த், பிரபு, அர்த்திஃப், ரோஹன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சூர்யா பிரபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். ஹர்ஷ வர்தனா இசையமைத்து, ஒளிப்பதிவு செய்கிறார். ஏகலைவன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படம் குறித்து இயக்குநர் பேசும் போது...'வாழ்க்கையின் நீட்சிதான் சினிமா. வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரியாக இல்லை. ஒவ்வாரு நாளும் காட்சிகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. மார்க்வஸ் 'வாழ்க்கையே பெரும் கனவு' என்கிறார். ஷேக்ஸ்பியர் "வாழ்வே ஒரு நாடகம், நாமெல்லாம் நடிகர்கள் என்று சொல்கிறார். அந்த வகையில் பார்த்தால், ஒவ்வொரு மனிதருக்கும் தான் செய்த பாவத்திற்கு நிச்சயம் தண்டனை உண்டு. இக்கால இளைஞர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவதாக அமையும் படமே இது. நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பாவத்தைச் செய்து விட, செய்தவர்களுக்கு ஒரே தண்டனைதான், அது மரணம் என்ற வலிமையான கருத்தை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.

தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்த 'நோட்டா' படத்தில் நடித்தவர், விஜய் தேவரகொண்டா. தெலுங்கு சினிமாவில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இவர், தற்போது நடித்துள்ள படம் 'டியர் காம்ரேட்'. கடந்த வாரம் வெளியாகியுள்ள இப்படம் குறித்து அவர் பேசும் போது.... 'நோட்டா' படம் வெளியான பிறகு தமிழிலும் எனக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். எனவே, தொடர்ந்து தமிழில் நடிக்க விரும்புகிறேன். ஆனால், தமிழில் சரளமாகப் பேச முடியாமல் அவதிப்படுவதால், உடனே தமிழ் கற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறேன். நோட்டா படத்தில் நடிக்கும்போது, அடுத்த நாள் படப்பிடிப்பில் எந்தெந்த காட்சி படமாக்கப்படுகிறதோ, அதற்கான வசனங்களை வாங்கிச் சென்று படித்து மனப்பாடம் செய்து கொள்வேன். இப்போது முக்கியமான சில தமிழ் படங்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளேன். விஜய் சேதுபதியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் இணைந்து நடிக்க ஆசை' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com