சுடச்சுட

  
  kadhir9

  'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து 'டிக் டிக் டிக்', 'திமிரு புடிச்சவன்' என மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தவர், தற்போது ஒரே பாய்ச்சலாக ஹாலிவுட்டுக்குத் தாவி விட்டார். பாலிவுட்டிலிருந்து பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், ராதிகா ஆப்தே போன்றவர்கள் ஹாலிவுட்டில் கால்பதித்து விட்டனர். கோலிவுட் ஹீரோயின்கள் இதுவரை பாலிவுட் வரை மட்டுமே சென்று  கொண்டிருந்தனர். அந்த எல்லையை உடைத்து ஹாலிவுட் செல்வது பற்றி நிவேதா பேசும் போது..'பொன் மாணிக்கவேல், ஜக ஜால கில்லாடி, பார்ட்டி படங்களில் நடித்திருக்கிறேன். அந்தப் படங்கள் யாவும் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றன. தமிழ் படங்களில் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. அடுத்து ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். பெரிய ஆசைதான். ஆனால் அது நிறைவேறியிருக்கிறது. வரும் ஜூன் மாதம் ஹாலிவுட் படத்தில் நடிக்க அமெரிக்கா செல்கிறேன். இந்த விஷயத்தில் எனக்கு ரோல்மாடல் பிரியங்கா சோப்ராதான். இப்போதுள்ள தமிழ் ஹீரோயின்களில் ஹாலிவுட்டில் நடிப்பது நான் மட்டுமே என்பதில் மகிழ்ச்சி'  என்றார்.

  **

  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினி கூட்டணியின் படம் தொடங்கிவிட்டது. கடந்த 10-ஆம் தேதி மும்பையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.  அப்போதே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் 'கொடி பறக்குது' படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அந்த படம் 1988-ஆம் ஆண்டு வெளியானது. 30 ஆண்டு கழித்து மீண்டும் இப்போது அவர் போலீஸ் அதிகாரி வேடத்தில்  நடிக்கிறார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இதில் முக்கிய வேடத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார். இவர் 'பாபநாசம்' படத்தில் கமல் மகளாகவும் 'ஜில்லா' படத்தில் விஜய் தங்கையாகவும் நடித்தவர். இந்த படத்தில் இவர் ரஜினியின் மகளாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். அனிரூத் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. 

  **

  மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற 'பிரேமம்' படத்தில் சாய்பல்லவி, அனுபாமா பரமேஸ்வரன் அறிமுகமாகினர். இருவருமே தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கின்றனர். இதில் சாய் பல்லவிக்கு படங்கள் குவிந்த வண்ணமிருக்கிறது. 'மாரி 2' படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்தது போல் 'கொடி' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார் அனுபமா. ஆனால் சாய் பல்லவி அளவுக்கு தமிழில் அனுபாமாவுக்கு படங்கள் இல்லை. இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலை யில்,  தெலுங்கில் நடித்த 4 படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியதில் விரக்திக்கு தள்ளப்பட்டார்.   விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் அனுபாமாவிடம், 'உங்கள் உடல் தோற்றம் குண்டாக இருப்பதால்தான் வாய்ப்பு வரவில்லை' என தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜிம்மிற்கு செல்லத் தொடங்கிய அனுபாமா சாப்பாடு, தண்ணீர் இல்லாமல்  தினமும் 6 மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறார். தமிழில் எப்படியாவது முன்னணி இடத்துக்கு வந்து விட வேண்டும் என்பதை விட, குறைந்தது 4 படங்களிலாவது இந்த ஆண்டு நடித்து விட வேண்டும் என்பதுதான் அவரது திட்டமாம்.  

  **

  இண்டஸ் எண்டர்ப்ரைசஸ் -  ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் பிரபல ஸ்ட்ரீமிங் தளமான டெண்ட்கொட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் "வெள்ளை பூக்கள்'. க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படம் வரும் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது.  விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விவேக் இளங்கோவன் எழுதி இயக்குகிறார்.  இந்த நிலையில்  நடிகர் விவேக்கின் அடுத்த பட தகவல் வெளியாகியுள்ளது. தற்போது  விஜய் நடித்து வரும் "தளபதி 63' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் விவேக். இதையடுத்து நடிகர் விவேக் படம் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும் போது... 'விரைவில் ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளேன். இந்த செய்தி முழுக்க முழுக்க உண்மையானது.  அது நம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நகைச்சுவைப் படமாக இருக்கும். இதில் நடிப்பதற்காக முன்னணி ஹீரோ ஒருவரிடம் பேசி வருகிறேன். அவர் ஒப்புதல் தந்த பின் படத்தை பற்றிய முழு செய்திகள் வெளிவரும். இந்த செய்தி முழுமையடைந்தால் இயக்குநராக வேண்டும் என்கிற என் பல நாள் கனவு இதன் மூலம் நிறைவடையும். "தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் இது பற்றி விரிவாக பேசுவேன்' என்றார் . 

  **

  நீண்ட காலங்களுக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற வித்யாபாலனின் கனவு நிறைவேறுகிறது. ஆம்... தமிழில் முதல் முறையாக நடிக்க உள்ளார் வித்யாபாலன். பலமுறை அவரை தமிழில் நடிக்க அழைத்தும் மறுத்து வந்தார். இந்நிலையில் அஜித் ஜோடியாக "நேர்கொண்ட பார்வை' படத்தில் அவர் நடிக்கிறார். திருமணத்துக்கு பிறகு உடல் எடை கூடி குண்டாக காணப்பட்ட வித்யா பாலன், இதனால் பல பட வாய்ப்புகளை இழந்தார். கடும் உடற்பயிற்சி, மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு சிறிது எடை குறைத்தார். ஆனாலும் அவரது பருமனான உடல் அமைப்பு காரணமாக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தார். இந்தநிலையில் தொடர் முயற்சிகளுக்கு பிறகு இப்போது அவர் 10 கிலோ எடை குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். புதிய தோற்றத்துடன் "நேர்கொண்ட பார்வை' படத்தில் அவர் நடிக்கிறார். கதைப்படி பிளாஷ்பேக்கில் அஜித் மனைவியாக அவர் நடிக்கிறார். படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

  - ஜி.அசோக்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai