தங்கக் கரடி விருது பெற்ற துருக்கிய திரைப்படம் 'ஹனி' 

இனி ஒருபோதும் தன் வாழ்நாளில் சந்தித்துவிட வாய்ப்பில்லாத தன் தந்தையை
தங்கக் கரடி விருது பெற்ற துருக்கிய திரைப்படம் 'ஹனி' 
Published on
Updated on
2 min read

இனி ஒருபோதும் தன் வாழ்நாளில் சந்தித்துவிட வாய்ப்பில்லாத தன் தந்தையை நினைத்தபடி, இருள் கவிழ்ந்த அடர் வனத்தின் மரமொன்றில் தலை சாய்த்து யூசஃப் தனிமையில் படுத்திருக்கிறான். அவனது ப்ரியங்கள், நம்பிக்கைகள், ஆசைகள், தந்தையுடனான அவனது தினங்கள் யாவும் அக்கணத்திலிருந்து வெறும் நினைவு திரட்டுகளாக மட்டுமே அவனிடம் எஞ்சுகின்றன. தந்தையின் மூலமாக பெறப்பட்ட இயற்கையின் மீதான அலாதியான நேசமும், காதலும் இனி அவனது மிச்ச வாழ்நாளினை வழிநடத்தும் துணைகளாக அவன் முன்னால் விரிகின்றன. யூசஃப் இயற்கையிடமிருந்து பிரிக்கவியலாத, அதன் பிரமாண்டத்தின் சிறு கூறாக அக்கணத்திலேயே உருக்கொள்கிறான். பின்னாளில், பெரும் கவிஞனாக அறியப்படப்போகும் யூசஃபின் வாழ்க்கையில் தான் பிரியம் கொண்ட ஒரே மனிதரான அவனது தந்தையின் மரணத்தோடு முதலும், முழுமையானதுமான ஒரு பகுதி முடிவடைகின்றது.

துருக்கிய நாட்டு இயக்குனரான ஸெமிஹ் கப்லாநோக்லு (Semih Kaplanoğlu) இயக்கியுள்ள 'யூசஃப் வரிசை திரைப்படங்களில்' மூன்றாவதான Honey, காடுகளில் தேன் சேகரித்து தொழில்புரியும் ஒருவரது மகனின் சிறு வயது வாழ்க்கையை பற்றியது.

யூசஃப் முழுவதுமாக சாகச வாழ்வினை மேற்கொள்ளும் தனது தந்தையின் கட்டுப்பாட்டிலும், அவர் மீதான பிரியத்துடனுமே வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனது ஆசைகள் முழுவதும் தந்தையைப் போன்று பயணங்களின் மீதே இருக்கின்றது. நடைமுறை வாழ்க்கையின் சிக்கல்களோடும், கட்டுப்பாடுகளுடனும் உழலும் அவனது தாய்கூட அவனுக்கு அந்நியமானவளாகவே தெரிகிறாள். பள்ளிக்கல்வியை ஒருவித சோதனையாக கடந்திடும் யூசஃப் தன் தந்தை அவரது வட்டார வழக்கில் சொல்லித் தருகின்ற பாடங்களை எளிதாக உள்வாங்கிக் கொள்கிறான். ஆந்தையும், காட்டு மரங்களும், குதிரை கொட்டகையும், நீர் நிலைகளுமே அவனது விருப்பங்களாக இருக்கின்றன.

'நாங்கள் இழந்துவிட்ட பழமையின் வசீகரத்தை நினைவூட்டவே இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறேன்’ என்று சொல்லும் ஸெமிஹ் கப்லாநோக்லு Honey திரைப்படத்தில் யூசஃபின் சிறு பிராயத்து நினைவுகளையும், யூசஃப்புக்கு உண்டாகின்ற முதலாவது மீளா துயரையும் முதன்மையாக கொண்டு தனது திரைக்கதையை அமைத்திருக்கிறார். காட்டின் இரைச்சலும், பறவைகளின் சலசலப்பும் படம் நெடுகிலும் நமக்கு வழித்துணையாகின்றன. படம் நெடுகிலும் இயற்கை ஒலிகளே பின்னணி இசையாக திரைப்படத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. தந்தையை ஒரு வழிகாட்டுதலாகவே கருதும் யூசஃபினது வாழ்க்கை, தேன் சேகரிக்கச் செல்லும் ஒரு தருணத்தில் விபத்துக்குள்ளாகி அவர் மரணத்தை தழுவிய பின் என்னவிதமாக அமையப்போகின்றது எனும் கேள்வியுடன் திரைப்படம் முடிவடைகிறது.

பெர்லினில் நடைபெற்ற 60-வது உலகத் திரைப்பட விழாவில் தங்க கரடி விருதினை பெற்ற Honey, நமக்கு உண்டாக்குகின்ற பார்வை அனுபவம் அலாதியானது. துருக்கிய மலைப்பிரதேசத்தின் கரடுமுரடான வாழ்க்கையின் சிக்கல்களை முன்னிறுத்தும் வகையில் Honey முக்கியமான திரைப்படமாகவும் உள்ளது. இயற்கையோடு போரிட்டு யாருமே வெற்றிக்கொள்ள முடியாது. இயற்கை நமக்களிக்கும் வெளியினுள்ளாக நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே சீரான வாழும் முறை. இயற்கை பிரம்மாண்டமானது என்று உணரச் செய்யும் இத்திரைப்படம் கூடடையும் தேனீயைப்போல நாமும் இயற்கையை சீண்டாமல் அதனோடு இயைந்து வாழுதல் வேண்டும் என்பதை உணர்த்துகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com