Enable Javscript for better performance
ஹிட்ச்காக்கின் நாயகன் அந்தோணி பெர்கின்ஸ்- Dinamani

சுடச்சுட

  
  anthony-perkins---real-life-psycho

  சாபத்தினால் கூண்டிலிருந்து விலக்கப்பட்ட பறவை அதனைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பதைப்போல் உள்ளது எனது நிலை - காஃப்கா

  பல புகழ்பெற்ற திரைப்படங்கள் அதன் கதாப்பாத்திரங்களின் உறுதியான முழுமையான பாத்திர வடிவமைப்பினால், காலத்தில் எஞ்சி நிற்கிறது. அவ்வகையில், பல திரைப்படங்கள் தமது அழுத்தமான திரைக்கதையினையும் மீறி மைய கதாப்பாத்திரத்தின் வழியாகவே இன்றளவும் நினைவுக் கூறப்படுகின்றன. காட்ஃபாதர் வரிசை திரைப்படங்கள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். நடிகர்கள் ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்தில் மிகப்பெரிய அளவில் பங்காற்றுகிறார்கள். பல தருணங்களில், இயக்குனரையும் தாண்டி நடிகர்கள் திரைப்படத்தின் உருவாக்கத்தில் தமது ஆளுமையை செலுத்திவிடுகின்றனர்.

  அந்தோணி பெர்கின்ஸ் (Anthony Perkins) அப்படிப்பட்ட நடிகர்களில் ஒருவர் என நான் கருதுகிறேன். ஹிட்ச்காக்கினது புகழ்பெற்ற திரைப்படமான சைக்கோவில், பெர்கின்ஸ் ஏற்று நடித்திருந்த நார்மன் பேட்ஸ் கதாபாத்திரத்தின் வழியேதான் பெர்கின்சை நான் அறிந்துக்கொண்டேன். சைக்கோ திரைப்படம் ஹிட்ச்காக்கால், அவரது திரையுலக வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என கருதப்பட்ட நிலையில் உருவாக்கப்பட்டது. அதனால், பலவகையிலும் தமது ஆளுமையை இப்படத்தில் அழுத்தமாக ஹிட்ச்காக் நிரூபித்திருப்பார்.

  இப்படத்தில், அந்தோணி பெர்கின்ஸின் கதாப்பாத்திரம் எவராலும் எளிதில் மறக்க முடியாதது. இறந்துவிட்ட தமது தாயின் மீதான அதீத அன்பினால், அவரை தனது வாழ்வின் தொடர்ச்சியாகவும், தனக்குள் தாயாரை ஜனிக்க செய்து அவர்களின் வாழ்வில் குறிக்கிடுகிறவர்களை கொன்றுவிடுகின்ற மன நோயாளி கதாபாத்திரத்தில் அந்தோணி பெர்கின்ஸ் நடித்திருப்பார். படத்தின் இறுதியில், அவரது முகத்தில் படரும் குரூர புன்னகையை நினைக்கும்போதே முதுகு சில்லிட்டுப் போகும். சைக்கோவில் அந்தோணி பெர்கின்ஸின் கதாப்பாத்திரம் அதிக புதிர் நிறைந்தவராகவும், குழப்பமானவராகவும் ஒருவித மிஸ்டிக் தன்மையில் உருவாக்கப்பட்டிருக்கும்.

  சஸ்பென்ஸ் திரைப்படங்களின் மன்னன் என கருதப்படும் ஹிட்ச்காக்கின் மாஸ்டர் பீஸ் என்று சைக்கோவைதான் விமரிசகர்களும், திரைப்பட ரசிகர்களும் வகைப்படுத்துகின்றனர். சைக்கோ திரைப்படம் அடைந்திருக்கும் பெரும் புகழுக்கு அந்தோணி பெர்கின்ஸின் நடிப்பும் மிகப்பெரிய அளவில் பங்காற்றியுள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. படத்தில், பெர்கின்ஸ் சொல்லுகின்ற வசனங்களில் ஒன்று, ‘We all go a little mad sometimes’

  சைக்கோ திரைப்படத்திற்கு பின்பாக, அவரை அணுகிய பெரும்பான்மையான இயக்குனர்களும் அதே வகையைச் சேர்ந்த உள்ளார்ந்த சிதைவுக்குள்ளான கதாப்பாத்திரத்தில் நடிக்கவே அவரை நெருங்கியிருக்கிறார்கள். ஒரே சமயத்தில், சைக்கோ அவரது பெயரை திரைப்பட ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்ததோடு, அவரையும் அவ்வகையிலான மனிதராகவே கருதவும் வழிவகை செய்திருக்கிறது. வுட்டி ஆலன் ஒரு நேர்காணலில், தம்மை எல்லோரும் நிஜ வாழ்க்கையிலும் கோமாளியைப் போலப் பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார். சாப்ளினின் திரைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு சீரியஸான மனிதரென்பதை நம்ப மாட்டார்கள். அந்தோணி பெர்கின்ஸின் வாழ்வும் இதேபோன்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது.


  சைக்கோ திரைப்படத்திற்கு பின்பாக, அந்தோணி பெர்கின்சை நான் பார்த்தது, காஃப்காவின் புதினமான  விசாரணையை தழுவி புகழ்பெற்ற அமெரிக்க இயக்குனரான ஆர்சன் வெல்லஸ் அதே பெயரில் இயக்கிய திரைப்படத்தில் தான். இந்தப் படத்தைதான் தமது மிகச்சிறந்த படைப்பு என வெல்லஸ் கருதியிருக்கிறார். ஆனால், விமரிசகர்கள் அவரது சிட்டிசன் கேன் திரைப்படம்தான் மாஸ்டர் பீஸ் என மீண்டும் மீண்டும் எழுதுகின்றனர்.

  மிஸ்டர் கே. என்கின்ற சிக்கலான குழப்பங்கள் நிறைந்த கதாபாத்திரத்தில் அந்தோணி பெர்கின்ஸ் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். நாவலில் உள்ளதைப் போலவே லேசான மன நடுக்கமும், புதிர்தன்மையும் நிறைந்த மனிதராக அந்தோணி பெர்கின்ஸின் நடிப்பைப் பார்த்து சிலிர்த்திருக்கிறேன். நீண்ட காட்சிகளைக் கொண்ட இத்திரைப்படத்தில் யார் எங்கிருந்து எப்போது வருவார்கள் என்பதே தெரியாது. திடீர் திடீரென்று தோன்றும் பாத்திரங்களை பெர்கின்ஸ் எதிர்கொள்கின்ற தருணங்களில் வெளிப்படுத்துகின்ற நடிப்பு நுண்ணுணர்வுமிக்கது. நிச்சயமாக, மிஸ்டர் கே. கதாபாத்திரத்தில் வேறு எந்தவொரு நடிகராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்று சொல்லிவிட முடியும்.

  பெர்கின்ஸ் நடித்திருக்கும் திரைப்பட பட்டியலை பார்க்கும்போது, அவர் தமது முதல் திரைப்படமான The Actress (1953) க்காக கோல்டன் குளோப் விருது பெற்றிருக்கிறார். அதன்பின்பாக, 1961ல் Goodbye Again திரைப்படத்தில் நடித்ததற்காக கான்ஸ் விருது பெற்றிருக்கிறார். அந்தோணி பெர்கின்ஸ் பல வருடங்களுக்கு பிறகு, சைக்கோவின் இரண்டாம் பாகத்தில் நடித்ததோடு மூன்றாவது பாகத்தை தாமே இயக்கவும் செய்திருக்கிறார்.  அவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும்போதும், நம்முடைய கவனத்திற்கு வந்திருக்கும் படங்கள் சைக்கோவும், விசாரணையும் மட்டும்தான்.

  அந்தோணி பெர்கின்ஸின் தனிப்பட்ட வாழ்க்கை, நிரம்பிய துயரங்களாலும் நோய்மையாலும் நிறைந்திருக்கிறது. நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்திருந்த ஒஸ்குட் பெர்கின்ஸுக்கு மகனாக பிறந்த அந்தோணி பெர்கின்ஸ் சிறு வயதில், தந்தை நடிப்புத் தொழிலில் அதிக முனைப்போடு ஈடுபட்டு வந்ததால், தனது தாயுடனும் பெரும்பாலும் தனிமையிலும் தனது தினங்களை கழித்திருக்கிறார். அவருக்கும் அவரது தாயாருக்கும் எப்போதும் ஒத்துப் போனதில்லை. கரடுமுரடான உறவு முறையே இருவருக்குமிடையில் நிலவியிருக்கிறது. அதோடு, பெர்கின்ஸின் ஐந்தாவது வயதிலேயே அவரது தந்தை மரணத்தை தழுவியிருக்கிறார்.

  ‘நமக்கு விருப்பமானவர்களின் இறப்பைக்கூட சமயத்தில் நாம் விழைவதுண்டு’ என்று நினைக்கும் காம்யுவின் அந்நியன் கதாப்பாத்திரத்தைப் போலவே தானும் அவ்வயதில் தனது தந்தையின் இறப்பை வேண்டியதாக ஒரு நேர்காணலில் பெர்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னர், தாயாருடனான அவரது உறவு மேலும் மேலும் சிக்கல் நிறைந்ததாக மாறியிருக்கிறது. தனது தந்தையைப் போலவே பதினைந்து வயதிற்கு பிற்பாடு நாடகங்களில் நடிக்க பெர்கின்ஸ் துவங்கியிருக்கிறார். அதன் வழியே, The Actress (1953) திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று, திரையுலகில் நுழைந்திருக்கிறார்.

  பெர்கின்ஸ் பற்றி அதிகம் வெளிவராத விஷயங்களில் ஒன்று, அவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது. தமது நாற்பதாவது வயதிற்கு பிறகே திருமணம் செய்து கொண்ட பெர்கின்ஸ் பெண்களை எதிர்கொள்ளும் போது, அசட்டுத்தனமாகவும் அசெளகர்யமாகவும் உணர்ந்திருக்கிறார். இதனால், அதிக கூச்சம் நிரம்பியவரான பெர்கின்ஸ் ஓரினச் சேர்க்கையாளராக இருந்திருக்கிறார். தனிமையும், தாயின் மீதான வெறுப்புணர்வும் அவரை ஓரினச் சேர்க்கையாளராக மாற்றியிருக்கிறது. இதன் விளைவாக, தனது இறுதி காலங்களில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்த நிலையில் தமது அறுபதாவது வயதில் மரணத்தை தழுவிவிட்டார்.


  தம்முடைய உணர்வுகளை எப்போதும் வெளிக்காட்டிக் கொள்ளாத மனிதராகவே வாழ்ந்த அந்தோணி பெர்கின்ஸ் தமது நோய்மை குறித்தும், எவரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. எப்போதிலிருந்து அவர் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டார் என்பது இன்றளவும் புதிராகவே உள்ளது. தமது எய்ட்ஸ் நோய் பற்றி வெளியே தகவல் கசிந்தால், திரையுலக வாழ்வு முடிவுக்கு வந்துவிடும் என்று அஞ்சிய பெர்கின்ஸ் இறக்கும் தருணத்திற்கு முன்பாகவே அதனை தனது மகன்களிடம் சொல்லி எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். இறுதி தினங்களில், ஹாலிவுட்டிலிருந்து அழைப்புகள் வருமென்று எதிர்பார்த்து தொலைபேசியின் அருகிலேயே பெர்கின்ஸ் அமர்ந்திருந்ததாக அவரது மனைவி குறிப்பிடுகிறார். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டபோதும் அவரது மனைவியின் அரவணைப்பும் அன்பும் அவரை தன்னம்பிக்கையுடன் வாழ அனுமதித்திருக்கிறது. அவரது மனைவியான பெர்ரி பெரன்சன் 9/11 வர்த்தக மைய தாக்குதலில் உயிரிழந்தார்.

  மனிதன் எப்போதுமே தனது சக மனிதனிடம் நூறு சதவிகித நேர்மையையும், நெறித் தவறாமையையும் எதிர்பார்க்கிறான். ஆனால், நம்மில் ஒருவர் கூட முழுமையான நேர்மையாளர்கள் கிடையாது. சந்தர்ப்பமும், நாம் வாழும் சூழலையுமே நமக்கான நெறியை வகுக்கின்றது. ‘We all go a little mad sometimes’ சிறந்த நடிகராக வளம் வந்துக் கொண்டிருந்தபோதும், அன்புக்கான ஏக்கம் அவரை அலைக்கழித்திருக்கிறது. ‘என் வாழ்வை முழுமையாக நான் அர்ப்பணித்திருந்த திரையுலகில் எனக்கு அறிமுகமானவர்களை விடவும் நான் அன்பையும், சக மனித நேசிப்பையும், சுயநலமின்மையையும் எய்ட்ஸ் நோயோடு கடுமையாக போராடிக் கொண்டிருந்த காலத்தில் சந்தித்த மனிதர்களின் மூலமாக உணர்ந்துக்கொண்டேன்’ என்கிறார்.

  திரைப்பட வரலாற்றில் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் மிக முக்கியமான திரைப்படங்களில் நடித்திருந்த போதும், அந்தோணி பெர்கின்ஸ் தனது வாழ்நாள் முழுவதிலும் எண்ணற்ற சிக்கல்களை எதிர் கொண்டவராகவும், ஒடுங்கிய மனம் கொண்டவராகவும், நோய்மையுடன் கடுமையாக போராடிக் கொண்டிருந்தவராகவுமே இருந்திருக்கிறார். நோய் ஒரு மனிதரின் உயிரையும் உடலையும் மட்டும்தான் அழித்தொழிக்க முடியும். அவரது அடையாளத்தையும், ஆன்மாவையும் அல்ல!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai