திகில் படங்களென்றால் கண்டிப்பாக மென்மையான ஆபாசம் இருந்தே தீர வேண்டுமா?

சமீபத்தில் தமிழில் வெளிவந்த திகில் (Horror) படங்களாக எடுத்துக் கொண்டு அவற்றை ஆராய்ந்து பாருங்கள்; உங்களுக்கே புரியும் அதிலுள்ள ஆபாசம் என்னவென்பது?!
திகில் படங்களென்றால் கண்டிப்பாக மென்மையான ஆபாசம் இருந்தே தீர வேண்டுமா?

தமிழில் விட்டலாச்சார்யாவின் ‘ஜெகன் மோகினி’ காலம் தொடங்கி ‘மை டியர் லிஷா’, ‘யார்?’, ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘13 ஆம் நம்பர் வீடு’, ‘வா அருகில் வா’ என அனைத்துப் படங்களிலுமே மென்மையான ஆபாசம் இருக்கும். இது கதைப் போக்கில் கண்டு கொள்ளப் படாவிட்டாலும் சில திரைப்படங்களுக்கு A சான்றிதழ் வழங்கப் பட்ட வகையில் அவற்றிலுள்ள ஆபாசத் தன்மையையும், வன்முறையையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

சமீபத்தில் தமிழில் வெளிவந்த திகில் (Horror) படங்களாக எடுத்துக் கொண்டு அவற்றை ஆராய்ந்து பாருங்கள்; உங்களுக்கே புரியும் அதிலுள்ள ஆபாசம் என்னவென்பது?!

உதாரணத்திற்கு; அரண்மணை 1&2 சீரிஸ், முனி பார்ட் 1&2, காஞ்சனா 1&2, சிவலிங்கா, டார்லிங், டோரா, தேவி, ஜாக்ஸன் துரை இவை அனைத்துமே ஹாரெக்ஸ் (ஹாரர்+செக்ஸ்) ஜேனரில் அமைந்த படங்கள் என்பது படத்தைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.  துளியும் ஆபாசமில்லாமல் வெளிவந்து வெற்றி பெற்ற தமிழ் திகில் திரைப்படங்களுக்கான சமீபத்திய உதாரணங்களாக நயன் தாராவின் ‘மாயா’, அருள்நிதி நடிப்பில் வெளிவந்த ‘டிமாண்டி காலணி’ உள்ளிட்ட படங்களைக் கூறலாம். ஆனால் பெரும்பாலும் இயக்குனர்கள் தூய ஹாரர் திரைப்படங்களைக் காட்டிலும் ஹாரெக்ஸ் வகைத் திகில் படங்களை இயக்குவதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

இம்மாதிரியான போக்கு இந்தியப் படங்களில் 1980, 90 ஆம் வருடங்களில் இந்தியாவுக்குள் நுழைந்ததாக பாலிவுட் இயக்குனர் பிரவல் ராமன் கூறுகிறார். இவர் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குனராக இருந்து தற்போது தனியாகப் படங்களை இயக்கி வருகிறார். அவரது கூற்றுப்படி திகில் படங்கள் என்றாலே அதில் கொஞ்சம் காமம் கலந்த ஆபாசம் இருந்தால் தான் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்பதாக ஒருகருத்து வெளிப்படுகிறது. அப்படிப் பார்த்தால் ஆபாசமே கொஞ்சமும் கலக்காமல் எடுக்கப் பட்ட திரைப்படங்கள் தோல்வி கண்டிருக்க வேண்டுமே?! ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை... குழந்தைகளுக்கான திகில் படமாக வெளிவந்த ‘மை டியர் குட்டிச் சாத்தானில்’ ஆபாசம் ஏதுமில்லை. ஆனால் அந்தப் படம் காலங்கள் கடந்து இன்றும் குழந்தைகளிடத்தில் பெரு வரவேற்பு பெற்ற திரைப்படமாகவே விளங்குகிறது. எனவே இப்படி ஒரு ஜேனரில் படங்களை இயக்குவது என்பது ஆபாசப் படம் பார்க்கும் ஆசை இருப்பவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற கையாளப் படும் ஒரு உத்தியாகவே கருத வேண்டியதாகிறது.

எனவே வெளிவரவிருக்கும் தனது புதிய திரைப்படமான “Dobaara: see your evil" திரைப்படத்தில் துளியும் ஆபாசம் கலக்காமல் முற்றிலும் திகில் அனுபவத்துக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து தான் இயக்கி இருப்பதாகக் கூறுகிறார். அவரது கூற்றுப் படி திகில் படங்கள் வலிமையான கதையம்சத்துடன் இருந்தால் அதில் மென்மையான அல்லது கடுமையான ஆபாசம் என எதையும் சேர்த்தாக வேண்டிய கட்டாயம் இயக்குனர்களுக்கு இல்லவே இல்லை என்கிறார்.

ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளிவந்து சக்கைப் போடு போட்ட திகில் படங்களான “Razz" "Ragini MMS" franchises, "1920", "Haunted"- 3D" "Alone"  என அனைத்துப் படங்களுமே 'Horrex'  ஜேனரில் அமைந்தவை தான். ஹாரெக்ஸ் என்றால் ஹாரர்+ செக்ஸ் என்று அர்த்தம். அதாவது மேலே சொன்ன திகில் படங்கள் அனைத்துமே மென்மையான ஆபாசம் கலந்த படங்களே என்பது அந்தப் படங்களைப் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கக் கூடும்.

சமீபத்தில் இதே ஜேனரில் வெளிவந்த திரைப்படங்களான தர்ணா மானா ஹை, கயாப், தர்ணா ஜரூரி ஹை, 404 எரர் நாட் ஃபவுண்ட் போன்றவை குறைந்த பட்ஜட்டில் எடுக்கப் பட்ட ‘ஹோரெக்ஸ்’ வகைப் படங்கள். அதாவது படத்தின் மூலதனம் குறைவு ஆனால் அது ஈட்டித் தந்த லாபமோ முதலீட்டை விட பலமடங்கு அதிகம். இந்த வித்யாசம் தான் இயக்குனர்களை இப்படியான ஜேனரில் திகில் படங்களை எடுக்கத் தூண்டுகின்றன. இவற்றின் ஒரே நோக்கம் இளைஞர்களை குறிப்பாக பள்ளி முடித்து கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் டீன் ஏஜ் ரசிகர்களைக் கவர்வதே!

உண்மையைச் சொல்வதென்றால் சர்வ தேச அளவிலோ அல்லது இந்திய அளவிலோ பெரு வெற்றி பெற்ற திகில் படங்கள் எல்லாம் இந்த ஜேனரில் எடுக்கப் பட்டவை அல்ல. உதாரணமாக ‘தி எக்ஸார்சிஸ்ட்’, ரோஸ்மேரி’ஸ் பேபி, ‘மஹால்’ தொடங்கி விகாஸ் தேசாயின் 'Gehrayee' ராம் கோபால் வர்மாவின் ‘Raat'  மற்றும் என்னுடைய ஆரம்ப காலப் படங்கள் அனைத்துமே சுத்தமான திகில் படங்கள் அவற்றில் ஆபாசம்  இருக்காது. ஆனால் அவை பெருவாரியான திகில்பட ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு வசூலிலும் பெருவெற்றி அடைந்தவை என்கிறார் ராமன்.

இம்மாதிரியான படங்கள் தோன்றக் காரணமே 80 மற்றும் 90 களில் காமம் என்பது பெருயவர்களுக்கானது மட்டுமே அதை திரைப்படங்களில் காணும் உரிமை கூட பெரியவர்களுக்கு மட்டுமே எனும் கருத்தாக்கம் இருந்தது. அதனால் விடலைப் பருவத்து இளைஞர்களைக் கவரும் பொருட்டும், வசூல் ரீதியான வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளவுமாக இவ்வகை ‘ஹோரெக்ஸ்’ ஜேனரில் திகில் படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன. படங்கள் வெற்றி பெற்றாலும் அவற்றுக்கான சான்றிதழில் தெளிவாக A என்றே தணிக்கையிடப் பட்டிருக்கும். ஒருவேளை இந்தியர்களைத் திருப்திப் படுத்துவதற்காக என்றே இம்மாதிரியான குறைந்த பட்ஜெட் ஹோரெக்ஸ் படங்கள் உருவானதோ என்று கூட எனக்குப் பலமுறை தோன்றி இருக்கிறது. ஏனெனில் பெரும்பாலும் இந்தியர்களான நமது ரசனை அப்படித்தான் இருக்கிறது குறைந்த செலவில் அதிக திரில் அனுபவங்கள் தரும் படங்களை இந்தியர்கள் விரும்புகிறார்கள் எனும் பொதுவான கருத்தை இதன் மூலம் உருவாக்கப் பார்க்கிறார்கள்.

ஆனால் அந்த பொதுக் கருத்தாக்கத்தை நமது இந்திய இயக்குனர்கள் முன்பே; மஹால், ராத், 404 உள்ளிட்ட ஆபாசம் கலக்காத தூய திகில் படங்களின் வெற்றிகள் வாயிலாக உடைத்து எறிந்திருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் தான் வெளிவரவிருக்கும் எனது புதிய திரைப்படமான “Dobaara: see your evil" ஐ உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படம் வாயிலாக உலகத் தரமான திகில் கான்செப்ட்டை இந்திய ரசிகர்களுக்கு அதன் ஒரிஜினாலிட்டி கெடாது தூய திகில் பட வடிவத்டில் அளிக்க முயற்சி செய்திருக்கிறேன். இந்தப் படத்தை உருவாக்குவதற்கு முன்பே என் மனதில் நான் வலிந்து திணித்துக் கொண்ட ஒரு விசயம்; இது திகில் படம் தான், ஆனால் இதில் மருந்துக்கும் துளி ஆபாசம் கூட இருக்கக் கூடாது. இது சுத்தமான அக்மார்க் திகில் படமாக மட்டுமே அமைய வேண்டும். இதன் மீது படிய வேண்டிய முத்திரை Horror  ஜேனர்  என்பது மட்டுமே. “ஹாரெக்ஸ்” அல்ல! என்றூ முடிவு செய்து கொண்டு படத்தை இயக்கியதால் என் கனவு சாத்தியமாகி இருக்கிறது.

2013 ஆம் ஆண்டில் வெளிவந்த ஹாலிவுட் திகில் படமான “oculus" ன் அதிகார பூர்வ இந்தி ரீமேக் தான் “Dobaaraa" சூப்பர் நேச்சுரல் சைக்கலாஜிகல் திகில் பட வரிசையில் அமைந்த இந்தப் படத்தின் இயக்குனர் மைக் ஃபாங்கன். படத்தின் மையம்... தனது குடும்பம் அனுபவித்து வரும் கஷ்டங்களுக்கும், துர்மரணங்களுக்கும், தன் வீட்டிலுள்ள புராதனக் கண்ணாடி தான் காரனம் என நம்பும் ஒரு இளம்பெண்ணைச் சுற்றிப் புனையப் பட்டிருக்கும். இந்திக்காக அந்த இளம்பெண் வேடத்துக்கு ராமன் டிக் அடித்தது ஹியூமா குரேஸியை. இவர் தான் ரஜினியின் அடுத்த படமான ‘காலா’ விலும் ஹீரோயின் என ஒரு பேச்சிருக்கிறது. 

Dobaaraa ஒரு தழுவல் படமாக இருபப்தில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஏனெனில் ஒரு படம் வெளிவந்து  சில வருடங்களுக்குப் பின் அது ரீமேக் செய்யப் படும் போது நிச்சயம் அதில் நிறைய மாற்றங்களுடன் தான் உருவாகும். ஒரிஜினல் படத்தில் இருந்து இது வித்யாசப்படும் வகையில் இயக்குனரின் ரசனைக்கேற்ப இதில் ஏதாவதொரு வகையில் மாற்றம் இருக்கும். மூலப் படத்தை இயற்றிய மைக் ஃபாங்கன் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. என்றாலும் நான் இயக்கும் போது அந்தப் படத்தில் எனது ரசனைக்கேற்ப சில மாற்றங்களைச் செய்திருக்கிறேன். என்கிறார் ராமன்.

இந்தப் படத்தில் ஹுயூமா குரேஸி தவிர லிஷா ரே, அடில் ஹுசைன் உள்ளிட்ட பிரபல நடிகர்களும் உள்ளனராம். இது போன்ற டார்க் ஃபேண்டஸி வகைத் திரைப்படங்களை இயக்குவதற்கான உந்துதல் என்ன? என்ற கேள்விக்கு ராமன் அளித்த பதில்; ரசிகர்களின் ஆழ்மனதோடு விளையாடும் இவ்வகைத் திரைப்படங்களை இயக்குவது எனது விருப்பம் சார்ந்து அமைந்து விட்டது. ஆனால் எனது அடுத்த படம் அப்படிப் பட்டதல்ல; பாகிஸ்தானை எதிர்த்துப் போராடிய பலுசிஸ்தானிய சுதந்திரப் போராட்ட வீரங்கனையான Naela qyadri Baloch' ன் வாழ்க்கையை திரைப்படமாக்கவிருக்கிறேன். என்கிறார்.

 திகில் படங்களைப் பொறுத்தவரை இயக்குனரின் கருத்து வரவேற்கத் தக்கதே! ஏனெனில் திகில் திரைப்படங்கள் என்றாலே ஆபாசமும், வன்முறையும் மித மிஞ்சி இருந்தால் தான் வெற்றி பெறும் எனும் தவறானை மாயை உருவாகி அதே ரீதியிலான படங்கள் பெருவாரியாக வெளிவரத் தொடங்கினால் ரசிகர்களின் கதி அதோ கதி தன்! நாம் எதைப் பார்க்கிறோம்? எப்படிப் பார்க்கிறோம் என்பதை ரசிகர்களான நாம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆபாசத்தை ரசித்தால் ஆபாசம் தான் மேலும் மேலுமென வந்து விழக்கூடும். கொஞ்சம் தரத்தையும் எதிர்பார்க்கப் பழகினோமென்றால் நல்ல திரைப்படங்களுக்கான உருவாக்கத்தில் நமது பங்கும் இருக்கிறது என்று நம்மை நாமே மெச்சிக் கொள்ளலாம்.

இல்லா விட்டால் ‘காஞ்சனா’ டைப் படங்கள் தாண்டி தற்போது சின்னத்திரையையும் விட்டு வைக்காத நாகினி, நந்தினி உள்ளிட்ட ஹாரெக்ஸ் ஜேனர் தொடர்களிலும் சிக்கிக் கொண்டு மாய வதைபட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com