ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்!

திரையில் ரயில் வருவதை பார்த்து விட்டு பயந்து போய் ரசிகர்கள் திரையரங்கை விட்டு தலைதெறிக்க ஓடிய ரசமான சம்பவத்திலிருந்து தொடங்குகின்றது
ரயிலே, ரயிலே ஒரு நிமிடம்! ரீலைக் கலக்கிய ரயில் பாடல்கள்!
Published on
Updated on
3 min read

திரையில் ரயில் வருவதை பார்த்து விட்டு பயந்து போய் ரசிகர்கள் திரையரங்கை விட்டு தலைதெறிக்க ஓடிய ரசமான சம்பவத்திலிருந்து தொடங்குகின்றது திரைப்படங்களில் ரயில் வண்டிகளின் வருகை. பல திரைப் படங்களில் ரயில் வண்டிகள் மற்றும் ரயில் நிலையங்களில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தின் ரயில் நிலையம் மற்றும் ரயில் வண்டி நகைச்சுவைக் காட்சிகள் மிகச் சிறப்பானவை. இந்திப் படத்தின் தழுவலான நாளை நமதேயின் ரயில் காட்சிகள் பரபரப்பை உண்டாக்கின. நீலகிரி எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ரயிலில் நடைபெறும் கொலையை வைத்துத் தான் மர்மக்கதை எழுதியிருப்பார் சோ.ராமசாமி. சிறந்த மாநிலத் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற ராமன் எத்தனை ராமனடி படத்தில் சிவாஜி கே.ஆர்.விஜயா இணையில் சித்திரை மாதம் பவுர்ணமி நேரம் பாடலை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ரயில்வண்டியின் புறப்படும் வேகத்தோடு இசையைத் தொடங்கி மயக்கியிருப்பார்.

வெறும் புது முக நடிகர்களை வைத்து கல்லூரியைக் கதைக் களமாக்கி பாடல்களால் தமிழகத்தையே ஆட வைத்த ஒரு தலை ராகம் படத்தில் ரயில் வண்டி ஒரு கதாபாத்திரமாகவே வந்தது. இது போலவே கிளிஞ்சல்கள் படத்திலும் ரயில் காட்சிகள் ரசமானவை. முரட்டுக்காளை படத்தில் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் திரையில் இடம்பெறும் ஓடும் ரயில்வண்டி சண்டைக்காட்சி வித்தியாசமான கேமிராக் கோணங்களில் ரசிகர்களை பதைபதைக்க வைத்தது.

திரை மேதை பாலுமகேந்திராவின் மூன்றாம் பிறையில் கதையெங்கும் வந்து போகும் ஊட்டி மலை ரயில் கிளைமாக்ஸ் காட்சியில் கலங்க வைக்கும் காட்சிக்களமாகி  மனதைக் கனக்க வைக்கும். இதே போல பன்னீர்  புஷ்பங்கள் படத்திலும் தான். இயக்குனர் மணிரத்தினம் ரயில் காட்சிகளில் மாறாத காதல் கொண்டவர். அக்கினி நட்சத்திரம் படத்தில் ரயில் நிலையத்தில் அதிரடியான பாடல் காட்சியை அமைத்த அவர் உயிரே படத்தில் ஒரு முழு நீளப் பாடலையும் ஓடும் மலை ரயிலின் மேலே நடனக் காட்சி அமைத்து அசத்தியிருப்பார். தளபதி படத்தில் சரக்கு ரயிலை சோகச் சின்னமாக்கியிருப்பார் அலைபாயுதே மின்சார ரயில் காதல் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.

இயக்குனர் இமயம் பாரதிராஜா ஒரு திரைப்படத்திற்கே கிழக்கே போகும் ரயில் என்று பெயர் வைத்து படம் முழுவதும் ரயில் வண்டியை ரசனை பொங்கப் பயன்படுத்தியிருப்பார் இணைந்த கைகள் மற்றும் காதல் கோட்டை ரயில் கிளைமாக்ஸ்கள் மறக்க முடியாதவை. நடிகர் விஜயகாந்த் பல படங்களில் ரயில் ஸ்டண்ட் காட்சிகளில் மிரட்டியிருப்பார் செந்தூர பூவே படத்தில் கலங்கவும் வைத்திருப்பார்.

ரயில் வண்டி சம்பந்தப்பட்ட பாடல்களைப் பொறுத்த வரையில் மெல்லிசை மன்னரின் இசையில் டி.எம் சௌந்தர்ராஜனின் கம்பீரக் குரலில் பச்சை விளக்கு திரைப்படத்தில் இடம் பெற்ற ‘கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று’ என்ற கவியரசர் கண்ணதாசனின் காலத்தால் அழியாத பாடல் இன்றும் திசையெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.

‘ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ, அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ, என்றொரு காலம் ஏங்கியதுண்டு இன்று கிடைத்தது பதில் ஒன்று, இன்று எவனும் பேதம் சொன்னால் இரண்டு வருடம் ஜெயில் உண்டு’ என்ற அற்புதமான வரிகள் கொண்ட பாடல் அது.

அக்கினி நட்சத்திரம் படத்தில் இசைஞானி இளையராஜா புதுமையான கணினி தாள இசையில் பாடல் முழுதும் மேற்கத்திய இசையின் பார்ட்ஸ் எனப்படும் இசையிலக்கணம் பயன்படுத்தி ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ என்ற பாடல் மூலம் தமிழகத்தையே துள்ள வைத்தார். பி.சி.ஸ்ரீராமின் கேமிரா மற்றும் வித்தியாசமான ஒளியமைப்பு பிரமிக்க வைத்தது நடன இயக்குனர் சுந்தரத்தின் வேகம் தெறிக்கும் அசைவுகளுக்கு நடிகர் கார்த்திக் அசத்தலாக ஆடி இளைஞர்களின் ஐகான் ஆனார்.

ஜென்டில்மேன் திரைப்படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர்  கற்பனையில் விரிந்த சிக்கு புக்கு ரயிலே பாடல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஏ.ஆர். ரகுமானின் மிகச் சிறப்பான மேற்கத்திய நவீனகால இசை பாணி தமிழுக்கு புதிய வரவானது. ஒரு மனித ஸ்பிரிங் போல பிரபுதேவாவின் மைக்கேல் ஜாக்சன் நடன அசைவுகள் தமிழக ஆச்சரியங்களில் ஒன்றாகப் பதிவானது. பாடலில் இடம் கிராபிக்ஸ் மற்றும் ராஜு சுந்தரம் பிரபுதேவா போட்டி நடனம் என்று தமிழ்த் திரையிசை வரலாற்றில் மறக்கமுடியாத பக்கமானது இந்தப் பாடல்.

- டெஸ்லா கணேஷ், இசை ஆராய்ச்சியாளர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com