ஒரு சினிமா ரசிகனின் வேண்டுகோள்!

சினிமா எனும் மாயக் கலையில் மயங்காதவர்கள் அதிகர் பேர் இருக்க முடியாது.
ஒரு சினிமா ரசிகனின் வேண்டுகோள்!

சினிமா எனும் மாயக் கலையில் மயங்காதவர்கள் அதிகர் பேர் இருக்க முடியாது. எதார்த்த வாழ்க்கையிலிருந்து நம்மை வலுக்கட்டாயமாக சில மணித்துளிகளேனும் பிரித்தெடுத்துச் செல்ல வைப்பது திரைப்படங்கள் தான். அது கலைப்படைப்பாக இருந்தாலும் சரி, சராசரி படமாக இருந்தாலும் சரி, பிரமாண்டமான அரங்குகளில் ஒரு பிரத்யேகத் தனிமையை ஏற்படுத்தித் தரவல்லது சினிமா.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகை ரசிகர்கள் திரைப்படங்களின் வளர்ச்சியில் பங்கேற்பார்கள். ஒட்டுமொத்த ரசிக மனங்களின் வெளிப்பாடுகளையொத்து அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளி வருதை நாமும் பார்த்திருப்போம். குடும்பப் படங்களாக வெளி வந்து கொண்டிருந்த காலகட்டம் மாறி, நகைச்சுவை படங்கள் வெளிவந்தன. அதன் பின் திகில் படங்கள். இப்படி வெவ்வேறு வகைமைகளில் படங்கள் வெளிவரத் துவங்கி ரசிகர்களின் ஆர்வத்திற்கு பெருந்தீனி போட்டு வந்தன.

தங்கள் ஆளுமையால் தமிழ்த் திரை உலகைக் கட்டுக்குள் வைத்திருந்த இயக்குநர்களும் நடிகர்களும் இந்த நூற்றாண்டு கால திரையுலகில் இருந்தே வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு தலைமுறையிலும் அந்தந்த ரசிகர்களின் ரசனை மடைமாற்றம் எவ்வாறு நிகழ்கிறது என்பது ஆச்சரியமானதுதான். பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நாடக பாணியிலான பழைய கருப்பு வெள்ளைப் படங்களை விரும்பி பார்த்தனர் நம் முப்பாட்டன்மார்கள். இசைக்கும், பக்திக்கும் முக்கியத்துவம் கொடுத்த படங்கள் அதிகம் வெளிவந்தன. அதன் பின் நீதி நெறிகளை எடுத்தியம்பும் வகையிலான திரைப்படங்கள் வெளிவந்தன. சமூகப் படங்களின் முக்கியத்துவத்தை தமிழ் திரை உணரத் தொடங்கியது பராசக்தி படத்திற்குப் பிறகு எனலாம். புதிய அலையாக நடிகர்கள் பலரும், இயக்குநர்களும் கதையம்சம் பொருந்திய படங்களை, உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை எடுத்தனர். எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரண்டு துருவங்கள் திரைக்கு வந்த பின் தமிழ்ப் படங்கள் வேறொரு தளத்தில் பயணிக்கத் தொடங்கியது. தனி மனித ஆராதனை, நடிகரை பின்பற்றுவது, போன்ற செயல்களில் பெரும்வாரியான ரசிகர்கள் இறங்கியது அதற்குப் பின்புதான் எனலாம். அடுத்த தலைமுறை முற்றிலும் வேறானது.

கமல்ஹாசன் ரஜினிகாந்தின் இருவரின் வருகை. இவர்கள் திரைப்படங்கள் வெளிவரும் சமயத்தில் திரை அரங்குகளில் சாமானிய ரசிகர்கள் படம் பார்க்க முடியாது. வசனங்கள் எதுவும் காதில் விழாது. அந்தளவுக்கு சீழ்க்கை ஒலியும், கைதட்டலும் அரங்கினை அதிர வைத்துவிடும். இவர்களின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து மகிழ்ந்தனர் அத்தலைமுறை ரசிகர்கள். இன்றளவும் அவர்களுக்கு அதே மனப்பான்மையுடைய ரசிகர்கள் உள்ளனர் என்பது சிறப்பு. 

இந்த நாயக பிம்பத்தின் அடுத்த காலக்கட்டம் அஜித், விஜய். அவர்களைத் தொடர்ந்து வலுவாக ஒரு எதிரெதிர் நிலையில் உள்ள நாயகர்களை சொல்ல முடியாது எனினும், சிம்பு தனுஷ் என்றும், சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மக்கள் திலகம் எம்ஜியாரில் துவங்கி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வரை ரசிகர்களின் மனோபாவங்கள் மாறி வருகிறது. நல்லொழுக்கங்களைப் பற்றி பத்தி பத்தியாக வசனம் பேசி வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட நடிகர்களின் காலகட்டத்துக்கும் ரவுடித்தனத்தை நாயக பிம்பமாக மாற்றி வரும் இந்தக் காலகட்டத்துக்கும் தூரம் அதிகமில்லை. ஆனால் இடைப்பட்ட நேரத்தில் என்ன நேர்ந்தது? இப்படி நீர்த்துப் போகும் அளவிற்கு தமிழ் சினிமாவில் தலைப்பிலிருந்தே எல்லாவற்றுக்கும் பஞ்சம் எப்படி ஏற்பட்டது. ராம், மிஷ்கின், சமுத்தரகனி உள்ளிட்ட சில இயக்குநர்கள் சில படங்களை தரத்துடன் இயக்கி வந்தாலும், நவீன தமிழ்த் திரை மாற்றங்கள் அதிகமில்லாமல் இன்றுவரை நொண்டிக் கொண்டுதான் இருக்கிறது. அதற்குக் காரணம் தங்களது நாயகர்களின் பிம்பத்தை ரசிகர்கள் ஒருபோதும் கொண்டாடுவதை நிறுத்துவதேயில்லை. கதைக்கு முக்கியத்துவமுள்ள படங்கள் அவ்வப்போது வெளி வந்தாலும், அது தொடர் நிகழ்வாக இருப்பதில்லை. இந்தியில், மராத்தியில், வங்காள மொழியில், மலையாளத்தில் என பல நல்ல கலையாக்கங்கள் திரையில் நிகழ்ந்து கொண்டிருக்க, இன்னும் தெலுங்கும் தமிழும் திசை தப்பிப்தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. 

அயல் சினிமாவை நகல் எடுக்கும் போலித்தனங்களற்ற அசல் சினிமாவைத் தமிழ் திரையில் காணவே ஆசையுடன் காத்திருக்கிறான் ஒரு தேர்ந்த ரசிகன். கொள்வார் இங்கு உண்டு, கொடுப்போர் தான் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com