சுடச்சுட

  

  படையப்பாவுக்கு இரண்டு இண்டர்வெல் வேண்டாம்: ரஜினியை கன்வின்ஸ் செய்த கமல்! 

  By கார்த்திகேயன் வெங்கட்ராமன்  |   Published on : 11th April 2019 05:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  padayapa_main

   

  நடிகர் ரஜினிகாந்தின் திரையுலகப் பயணத்தில் மைல்கல் வெற்றிகளில் ஒன்றாக அமைந்த  படம் 'படையப்பா'.  அந்த படம் வெளியாகி புதன்கிழமையோடு (10.04.2019) இருபது ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் படம் குறித்த சில நினைவுப் பகிர்வுகள் உங்களுக்காக!  

  இன்றிலிருந்து சரியாக இருபது ஆண்டுகளுக்கு முன்பாக, சரியாக 09.04.1999 அன்று  "படையப்பா" படம் வெளியாகிறது. அதற்கு முன்பு 1995-ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான "பாட்ஷா" ரஜினி கேரியரில் ஒரு மகத்தான வெற்றி படம். ரஜினியே ஒரு கூட்டத்தில் சொன்னது போல அது ஒரு 'அன்ரீபிட்டபிள் மேஜிக்'. ரஜினிகாந்த் ஒரு ஸ்பெஷல் நடிகர் என்பதில் இருந்து மாற்றி அவரை ஒரு முழுமையான சூப்பர் ஸ்டாராக மாற்றிய படம் அது.

  பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அப்போதைய அரசியல் சூழல் சூடுபிடிக்கிறது. குறிப்பாக 'பாட்ஷா' படத்தின் வெற்றி விழாவில்,படத் தயாரிப்பாளரும் அன்றைய அதிமுக அரசின் அறநிலையத்துறை அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனை மேடையில் வைத்துக் கொண்டே  'தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது' என்ற ரஜினியின் பேச்சு பல சர்ச்சைகளை கிளப்பியது.    

  அதிலிருந்து ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய ஹேஷ்யங்கள் அதிகரிக்கிறது. அத்துடன் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ரஜினிக்கு எதிராக நிறுத்தி ரஜினியின் படங்களில் வசனங்கள் இடம்பெறத் துவங்கின. அப்போது முத்து, அருணாசலம் என அடுத்தடுத்த படங்கள் வெளியானது. பின்னர் மீண்டும் சிறிய இடைவேளைக்குப் பின் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் ரஜினி கைகோர்த்து வெளியான படம்தான் "படையப்பா".

  படம் வெளியாகி அதற்கு முன்பிருந்த பல தமிழ் சினிமாவின் வசூல் சாதனைகளை எல்லாம் அடித்து நொறுக்கியது. திரை அரங்குகளில் பெண்கள் கூட்டம் அலைமோதி படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கினர்.  

  இருபது ஆண்டுகளைக் கடந்து விட்ட படையப்பா பற்றி இருபது தகவல்கள் உங்களுக்காக! :-)

  * தனக்கு மிகவும் பிடித்த 'பொன்னியின் செல்வன்' நாவலின் நந்தினி கதாபாத்திரத்தின் அடிப்படையில் வலுவான பெண் கதாபாத்திரத்துடன் படையப்பா படத்திற்கான ஒன்லைனை உருவாக்கியவர் ரஜினி.

   

  * நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு முதலில் பரிசீலனை செய்யப்பட்ட பெயர்கள் மீனா & நக்மா. ஆனால் கடைசியில் இருவரும் தேர்வு செய்யப்படவில்லை. 

   

  * கதை விவாதத்தின் போது திடீரென்று தோன்றிய பெயர் ரம்யா கிருஷ்ணன். அதை ரஜினி & கே.எஸ்.ஆர் (கே.எஸ்.ரவிக்குமார்) இருவரும் உடனடியாக ஒகே செய்தனர்.

   

  * ரஜினியின் தந்தை கதாபாத்திரத்திற்கு முதலில் விஜயகுமாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்து பின் கைவிட்டு விட்டார்கள். சிவாஜியை நடிக்க வைக்கலாம் என்று முதலில் யோசித்தவர் கே.எஸ்.ஆர் தான்.

   

  * சிவாஜியிடம் கதை சொல்லி கே.எஸ்.ஆர் ஓகே செய்தபின், சிவாஜி சம்பளம் கூடுதலாக எதிர்பார்ப்பது போல கே.எஸ்.ஆருக்குத் தோன்ற, ரஜினியிடம் போய் சொல்கிறார். அவர் எவ்வளவு விரும்பினாலும் கொடுத்து விடுங்கள் என அழுத்தமாக சொல்லி உறுதி செய்தார் ரஜினி.

   

  * சிவாஜி - ரஜினி காம்பினேஷனில் வெளிவந்த கடைசிப் படம் 'படையப்பா'.

   

  * படத்தின் முக்கியமான மூன்று பஞ்ச் டயலாக்குகள் ரஜினி அவராகவே உருவாக்கியதுதான்.

   

  * படத்தின் ஹைலைட்டான 'ஊஞ்சல் சீன்' ஒரிஜினல் ஸ்கிரிப்ட்டில் இல்லை. ரஜினியை அவமானாப்படுத்துவதற்காக ரம்யா கிருஷ்ணன் ஓரிடத்தில் மறைத்து வைத்திருக்கும் நாற்காலி ஒன்றை ரஜினி தன் ஸ்டைலில் காலால் இழுப்பதுதான் சீன். ஷூட்டிங் நடைபெற்றது அண்ணா நகரிலுள்ள ஒரு பங்களாவில். அங்கு இருந்த பெரிய ஊஞ்சலை பார்த்தவுடன் அந்த இடத்தில உதித்த ஐடியாதான் அந்த மாஸ் காட்சி. இறுதியில் அந்த சீனில் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரமாதமான பின்னணி இசையும் சேர்ந்து கொள்ள, அது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத ஒருகாட்சியாக மாறி விட்டது.   

   

  * படத்திற்கு நீலாம்பரி எனப் பெயர் வைக்கலாமா என ஆலோசித்தனர். ஆனால் ஜெயலலிதாவை நேரடியாக விமர்சிப்பதாக கருதி அரசியல் பிரச்னைகள் வரலாம் என்பதால் படையப்பாவே பைனலானது.

   

  * படத்தில் இடம்பெற்ற "மின்சாரப் பூவே" பாடலை ஷூட் செய்ய வேண்டிய அவசரம். எனவே ரஹ்மானிடம் கேட்ட போது முதலில் பாடகர் ஸ்ரீனிவாஸ் பாடிய 'ட்ராக்' ஒன்றை அவசரத்திற்கு அனுப்பியுள்ளார். பின்னர் பிரபல பாடகர் ஹரிஹரன் பாட பாடல் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

   

  * ஆனால் ஸ்ரீனிவாஸ் பாடிய வெர்ஷனைத்தான் ரஜினியும் கே.எஸ்.ஆரும் ஓகே செய்யவே, ஹரிஹரனிடம் 'ஸாரி' கேட்டு ரஹ்மான் விஷயத்தை செட்டில் செய்தார்.

   

  * அந்த சமயத்தில் ரஜினி தொடர்ந்து உடற்பயிற்சி செய்யக் கூடியவர். அவுட்டோர் ஷூட்டிங் ஒன்றில் ரஜினியின் 'ஸ்லிம்'  ஆன உடம்பை பார்த்து வியந்த கே.எஸ்.ஆர் ரஜினியிடம் ஆலோசித்து, அதன் பின்னரே கிளைமாக்ஸில் ரஜினி உடலைக் காட்டி சண்டைபோடும் காட்சி இடம்பெற்றது.

   

  * மொத்தமாக எடுத்து முடிக்கப்பட்ட படம் மொத்தமாக 19 ரீல் இருந்தது. எனவே ரஜினி படத்திற்கு இரண்டு இண்டர்வெல் விடலாம் என முதலில் முடிவு செய்துள்ளார்.

   

  * அந்த சமயத்தில் நடிகர் கமலுக்கு ரஜினியின் ஆலோசனையின் பேரில் படம் போட்டுக் காட்டப்பட்டது. படம் சரியாகப் போகும் எனவே தேவை இல்லாமல் இரண்டு இடைவேளை வேண்டாம் என ரஜினியை ஒப்புக் கொள்ளச் செய்தவர் கமல்தான்!

   

  * பின்னர் ரஜினியும் கே.எஸ்.ஆரும் உட்கார்ந்து பேசி படம் 14 ரீல்களாக குறைக்கப்பட்டது. அத்துடன் படத்தின் எடிட்டர் தணிகாசலத்தின் ஆலோசனையில் இன்னும் ட்ரிம் செய்யப்பட்டதே இப்போது நாம் பார்க்கும் 'பைனல் வெர்ஷன்'. ஆனாலும் படத்தின் 'ரன்னிங் டைம்' 192 நிமிடங்கள். அதாவது 3 மணி நேரம் 12 நிமிடங்கள்!!!   

   

  * படத்தின் ஒரிஜினல் ப்ளான் பட்ஜெட் நான்கரைக் கோடி. ஆனால் கோலிவுட்டில் எப்போதும் 'தயாரிப்பாளர்களின் கஷ்டம் உணர்ந்து வேலை செய்யும் இயக்குநரான’ கே.எஸ்.ஆர் சரியாக நாலு கோடி செலவில் படத்தை முடித்தார்.

   

  * ரம்யா கிருஷ்ணனின் அறிமுக காட்சியில் வரும் கார் Toyota cera. அந்த கார் உண்மையில் கே.எஸ்.ஆருடையதுதான். ரஜினிக்கு அந்த கார் மிகவும் பிடித்து விட, அதை படத்தில் பயன்படுத்தலாம் என்று ஐடியா கொடுத்தவர் ரஜினியேதான்!

   

  * அந்த காருக்கு ரஜினி வைத்த பட்டப்பெயர் "றெக்கை வச்ச காரு"

   

  * இன்றைக்கு மீம் க்ரியேட்டர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சிவாஜியின் மரணக் காட்சி, அதாவது தனது வீட்டை கடைசி தடவையாக தொட்டுப் பார்த்து விட்டு சிவாஜி அங்கே சாய்ந்து மரணமடையும் காட்சி. அந்த சீனுக்கான கட்டட வெளிப்பகுதி என்பது முழுக்க மைசூரில் உள்ள ஒரு பழைய அரசு நூலகமாகும்.

   

  * நான்கு கோடியில் தயாரிக்கப்பட்ட அப்படம் கிட்டத்தட்ட பத்து மடங்கு வசூல் செய்தது. அதாவது நாற்பது கோடிக்கு மேல். அதன் இன்றைய மதிப்பு ஏறக்குறைய 300 கோடி!

   

  கே.பாலசந்தரின் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். அந்த படம் 1975 ஆம் ஆண்டு வெளியானது. எனவே திரையுலகில் ரஜினியின் வெள்ளி விழா ஆண்டின் துவக்கத்தில் வெளியான படம் படையப்பா. இதைப்பற்றி முதலில் படக்குழுவில் யாருக்கும் தகவல் சொல்லவில்லை. படம் வெளியாகி 25 வாரங்கள் ஓடி மாபெரும் வெற்றி அடைந்த பின்னர் ரஜினி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

  அதில் "எனது வெள்ளி விழா ஆண்டில் வெளியான படத்தை வெள்ளி விழா கொண்டாடச் செய்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி' என்று தெரிவித்திருந்தார்.

  பாட்ஷாவுக்குப்  பிறகு ரஜினியை தமிழ் சினிமாவின் மாபெரும் வசூல் சக்கரவர்த்தி என்று அழுத்தமாக பதிய வைத்த படம் என்றால் அது படையப்பாதான் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை! 

  (தகவல்களுக்காக நன்றி: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பேட்டியினை அடிப்படையாக வைத்து, 10.04.19 ஆம் தேதியிட்ட 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழின் இணைப்பிதழான 'சென்னை டைம்ஸில்' வெளிவந்த கட்டுரை

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai