Enable Javscript for better performance
Bhakyaraj sharing memories regards Goundamani's turning point in tamil cinima!- Dinamani

சுடச்சுட

  

  நடுச்சாமத்தில் கற்பூரம் கொளுத்தி வாழ்க்கைப்பாதையை ஒளிமயமாக்கிக் கொண்ட கவுண்டமணி!

  By சரோஜினி  |   Published on : 26th August 2019 04:42 PM  |   அ+அ அ-   |  

  goundamani

   

  யூ டியூபில் ‘டூரிங் டாக்கீஸ்’ என்றொரு சானல் அதில் ‘சாய் வித் சித்ரா’ என்றொரு நிகழ்ச்சியை தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் நடத்தி வருகிறார். நிகழ்ச்சியில் அவர் பல திரை பிரபலங்களுடன் உரையாடுகிறார். உரையாடல் சுவாரஸ்யமாக இருக்கிறது. அவரது விருந்தினர்கள் அனைவருமே சித்ராவை நன்கறிந்தவர்கள் என்பதால் அவர்களிடம் சித்ரா கேட்கும் கேள்விகளும் ஒளிவு மறைவின்றி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் விதமாக... விருந்தினர் குறித்து என்னவெல்லாம் பார்வையாளர்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்களோ அத்தனையும் கேட்டு விடுகிறார். அதற்கான சுதந்திரம் அவருக்கு கிடைத்திருக்கிறது.

  சமீபத்தில் சித்ரா, பாக்யராஜை நேர்காணல் செய்திருந்தார். பாக்யராஜ், இப்போதும் கூட தமிழ் ரசிகர்களின் குறிப்பாக 80 களின் சினிமா ரசிகர்களின் டார்லிங் இயக்குனர் கம் நடிகர். அவருடன் நேர்காணல் என்றால் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமென்ன? நேர்காணல் நன்றாகவே இருந்தது. அத்துடன் அதில் பாக்யராஜ், நடிகர் கவுண்டமணி குறித்துப் பகிர்ந்து கொண்ட தகவல் உருக்கமானதாகவும் இருந்தது.

  கிழக்கே போகும் ரயில் திரைப்படம் கவுண்டமணியின் திரைவாழ்வில் முக்கியமானதொரு படம். அதில் வில்லன் கதாபாத்திரம் என்ற போதும் கவுண்டமணி அந்தக் கதாபாத்திரத்தில் ஏனைய வில்லன்களைப் போல சும்மா வந்து போகாமல் உயிரூட்டியிருப்பார். அதுவரையிலான பிற திரைப்படங்களில் வழுக்கைத் தலையுடன் கூட நடித்துக் கொண்டிருந்த கவுண்டமணி இந்தப் படத்தில் நடித்த பிறகு தான் விக் வைக்கத் தொடங்கினார் போல. இந்தப் படத்தில் கவுண்டமணி அத்தை சீக்கிரமாக இடம் பிடித்து விடவில்லை. அதற்கு தொடர்ச்சியான சிபாரிசு தேவைப்பட்டிருக்கிறது.

  பாரதிராஜாவிடம் முதலில் கவுண்டமணியை சிபாரிசு செய்தது பாக்யராஜ் தான். ஆனால், பாரதிராஜா... கவுண்டமணிக்கு சான்ஸ் தர உடனே ஒப்புக் கொள்ளவில்லை.

  '‘அட, அந்த ஆளைப் போய் சொல்ற, அவருக்கு வழுக்கைத் தலை, அவரெல்லாம் வேண்டாம், சரிப்படாது’ என்றிருக்கிறார்.

  பாரதிராஜாவின் மனதில் அந்தக் கதாபாத்திரத்துக்காக முதலில் ஊன்றிக் கொண்டவர் நடிகர் டெல்லி கணேஷ். ஆனால், டெல்லி கணேஷ் படித்தவர், அவரைப் போய் பக்கா கிராமத்து கதாபாத்திரத்தில் அதிலும் வில்லனாக நடிக்கச் சொன்னால் சரிப்படுமா? நன்றாகவே இருக்காது என்று பாக்யராஜ், பாரதிராஜாவின் கூற்றை மறுத்திருக்கிறார்.

  இங்கே குரு, சிஷ்யனுக்குள் விவாதம் இப்படிச் சென்று கொண்டிருந்த வேளையில், கவுண்டமணி எல்டாம்ஸ் சாலையில் இருக்கும் ஒரு கடையில் தினமும் பாக்யராஜைப் பார்த்துப் பேச வருவது வழக்கம். ஒருநாள் இடைவெளியின்றி தினமும் வந்து கவுண்டமணி, பாக்யராஜிடம் சான்ஸுக்காகப் பேசப் பேச அவருக்கு ‘கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலியின் அக்கா கணவராக நடிக்க வாய்ப்பை வாங்கித் தந்தே தீருவது’ என பாக்யராஜ் முயன்றிருக்கிறார்.

  ஒருமுறை கவுண்டமணியை அழைத்துச் சென்று ‘விக்’ எல்லாம் வைத்து மேக் அப் டெஸ்ட் எடுத்துப் பார்த்திருக்கிறார்கள். படக்குழுவில் பலருக்கும் கவுண்டமணியின் லுக் பிடித்துப் போகவே அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் கதையாக ஒருவழியாக பாரதிராஜாவும், படத்தில் கவுண்டமணிக்கு சான்ஸ் தர ஒப்புக் கொண்டிருக்கிறார்.

  இந்த நல்ல செய்தியை சொல்வோம் என்று கவுண்டமணியைத் தேடிச் சென்றிருக்கிறார் பாக்யராஜ். ஆனால் அன்று பார்த்து கவுண்டமணியைக் காணவில்லை. அங்கிருப்பவர்களிடம் விசாரித்ததில். நேரம் நடுச்சாமம் ஆகிவிட்டதால் இங்கே எல்லோரும் தூங்கி விட்டார்கள் என்று எல்டாம்ஸ் சாலையில் சென்று யாரிடமே பேசிக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி என்றிருக்கிறார்கள். பாக்யராஜ் நேராக கவுண்டமணியைத் தேடிக் கொண்டு அங்கேயே சென்று விட, அந்த நேரத்தில் பாக்யராஜைக் கண்ட கவுண்டமணி வேகமாக ஓடி வந்து விசாரித்திருக்கிறார். அந்த நடுச்சாமத்தில் அருகிலிருந்த ஒரு கடையில் கற்பூரம் வாங்கி கவுண்டமணியை பூட்டியிருந்த ஒரு கோயிலின் முன் கொளுத்தச் சொல்லி தான் சுமந்து வந்த நல்ல செய்தியை பாக்யராஜ் சொன்னது தான் தாமதம்...

  கவுண்டமணி தன் வாழ்வில் வந்து விட்ட டர்னிங் பாயிண்ட்டை எண்ணி நெக்குருகிக் கரைந்து அழுது நன்றி சொல்லியிருக்கிறார்.

  இதை சாய் வித் சித்ராவில் பாக்யராஜ் பகிர்ந்து கொள்ளும் போது அவரது உடல் மட்டுமே அங்கே இருந்தது. மனம் கவுண்டமணிக்கு நல்ல சேதி சொன்ன அந்த நாளுக்கே பறந்து சென்று விட்டதை அவரது கண்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது.

  வாழ்வில் திருப்பு முனைகள் எங்கே வரும்? எப்போது வரும்? என்று யாருக்குமே தெரியாது, நம்மால் ஆனது முயன்று கொண்டே இருக்க வேண்டியது மாத்திரமே.

  Concept Courtesy:  Chai With Chithra - 6, Touring talkies You tube channel
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai