தமிழ் சினிமா 2019: வசூலை அள்ளிக் குவித்த படங்கள்!

2019-ம் வருடத்தின் ஆரம்பமும் முடிவும் தமிழ் சினிமாவுக்கு அற்புதமாக அமைந்துவிட்டன... 
தமிழ் சினிமா 2019: வசூலை அள்ளிக் குவித்த படங்கள்!

2019-ம் வருடத்தின் ஆரம்பமும் முடிவும் தமிழ் சினிமாவுக்கு அற்புதமாக அமைந்துவிட்டன. இந்த வருடம் பெரிய ஏமாற்றங்கள் இன்றி ஏராளமான படங்கள் பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளன. அவற்றில் 9 தமிழ்ப் படங்கள் சூப்பர் ஹிட் என்கிற அந்தஸ்தை அடைந்துள்ளன. 

1. பிகில்

விஜய் ரசிகர்களுக்கு இந்த வருடம் கொண்டாட்டமான தீபாவளியாக அமைந்துவிட்டது.

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இது. சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய பாடல்கள் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை உருவாக்கின. 

இந்த வருடம் வெளியான படங்களில் அதிக வசூலை எட்டிய தமிழ்ப் படம் பிகில் என்று கூறப்படுகிறது. பாகுபலி 2 படத்தை விடவும் தமிழ்நாட்டில் விநியோகஸ்தர்களுக்கு அதிக ஷேர் அளித்த படம் என்கிற பெருமையையும் பிகில் எட்டியுள்ளது. விஜய்யின் புகழை மேலும் ஒரு படி உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ள படம் இது. இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் விஜய் - அட்லி கூட்டணி ஹாட்ரிக் வெற்றியை அடைந்துள்ளது.

2. பேட்ட

ரஜினியை முதல் முதலாக இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினி படம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற பாராட்டுகளை ரசிகர்களிடமிருந்து பெற்றார். கபாலி, கதை போன்ற தீவிரமான கதைகளாக இல்லாமல் ரஜினி ரசிகர்களுக்கு ஏற்றவாறு கதையமைத்து வெற்றி கண்டார் கார்த்திக் சுப்புராஜ். அஜித்தின் விஸ்வாசத்தோடு பொங்கலுக்கு வெளியான பேட்ட,  தமிழ்நாட்டில் விஸ்வாசத்தை விடவும் சற்று குறைவான வசூலைப் பெற்றாலும் உலகளவில் அதிக வசூல் பெற்று ரஜினியின் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டியது. 

3. விஸ்வாசம்

ஒரே நாளில் இரு பெரிய படங்களா எனப் பலரும் பயந்தார்கள். ஆனால் பேட்ட, விஸ்வாசம் என இரண்டுமே வெற்றி பெற்று தமிழ்த் திரையுலகுக்கு மகிழ்ச்சியை அளித்தன. குடும்பப் பாங்கான படம் என்பதால் குடும்பங்கள் கூட்டம் கூட்டமாகத் திரையரங்குக்கு வந்தன. இமானின் கண்ணான கண்ணே பாடல் படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. இந்தப் படத்தின் மெகா வெற்றி தான் இயக்குநர் சிவாவுக்கு அடுத்ததாக ரஜினியை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. 

4. நேர்கொண்ட பார்வை

பிங்க் படத்தின் தமிழ் ரீமேக். அமிதாப் கதாபாத்திரத்தில் அஜித் எப்படி பொருத்தமாக இருப்பார் என்கிற கேள்வி உருவானது. ஆனால் இயக்குநர் வினோத், அஜித்துக்கு ஏற்ப சண்டைக்காட்சிகளை வைத்து சரியாகச் சமாளித்துவிட்டார். இதுபோன்ற ஒரு கதையில் அஜித் போன்ற பெரிய நடிகர் நடிப்பது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று பலரும் பாராட்டும் விதத்தில் படத்துக்கு வெற்றி கிடைத்தது. அஜித் திரையுலக வரலாற்றில் ஒரு கெளரவமான வெற்றி என்று இப்படத்தைச் சொல்லலாம்.

5. காஞ்சனா 3

முனி கதை வரிசையின் நான்காவது பாகம் இது. காஞ்சனாவின் 3-வது பாகம். வழக்கம்போல நடித்து இயக்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். ஆரம்பத்தில் விமரிசனங்கள் சாதகமாக அமையாவிட்டாலும் வசூலில் ரூ. 100 கோடியைத் தொட்டது காஞ்சனா 3. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை வெளியிட்டதால் நல்ல கவனமும் கிடைத்தது. 

6. அசுரன்

வடசென்னை படத்துக்கு அடுத்ததாக அசுரன் என்கிற படத்தில் தனுஷ் - வெற்றிமாறன் இணைந்தார்கள். இப்படத்தை தாணு தயாரித்தார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அக்டோபர் 4 அன்று வெளியான அசுரன் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலைத் தழுவி இந்தப் படத்தை எடுத்துள்ளார் வெற்றி மாறன். சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணி, 1982-ல் இந்த நாவலை எழுதினார். 

அசுரன் படத்தை முன்வைத்து வெக்கை நாவல் குறித்த விவாதங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக இருந்தன. இதனால் அந்த நாவலைப் படிக்கும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அமேஸான் தளத்தில், இந்திய அளவில் அதிகம் விற்பனையான கிண்டில் இ புத்தகங்களின் பட்டியலில் பூமணியின் வெக்கை நாவல் முதல் இடத்தைப் பிடித்தது. அசுரன் படத்தால் வெக்கை நாவலுக்கு ஏராளமான புதிய வாசகர்களும் அதிகக் கவனமும் தற்போது கிடைத்துள்ளன. 

இப்படம் வசூலில் அசத்தியதால் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் அடுத்தப் படத்தையும் தாணுவே தயாரிக்கிறார்.

7. கைதி

பிகில் படத்துக்குப் போட்டியாக தீபாவளி சமயத்தில் வெளியான கைதி படம் ரூ. 100 கோடி வசூலை எட்டி சாதனை படைத்தது.

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள கைதி படத்தை இயக்கியுள்ளார். இசை - சாம் சிஎஸ். பாடல்களும் இல்லாமல் கதாநாயகி என்கிற கதாபாத்திரமும் இல்லாமல் எனவே துளிக் காதல் காட்சிகளும் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு தமிழ்ப் படம் வசூலில் ரூ. 100 கோடி வசூலை அடைந்தது பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மற்றும் கார்த்தி ஆகியோரைப் போல இதர தமிழ்த் திரைக் கலைஞர்களும் இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளை அதிகம் மேற்கொள்ளவேண்டும் என்கிற செய்தியை இந்த வசூல் நிலவரம் வழியாக உணர்த்தியுள்ளார்கள் தமிழ் ரசிகர்கள். அந்த விருப்பத்தை தமிழ் சினிமா நிறைவேற்றுமா?

8. நம்ம வீட்டுப் பிள்ளை

கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் - நம்ம வீட்டுப் பிள்ளை. சிவகார்த்திகேயன் நடித்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்தார். ஒளிப்பதிவு - நிரவ் ஷா, படத்தொகுப்பு - ஆண்டனி ரூபன். இசை - இமான்.

இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு முன்பு, தன்னுடைய மார்க்கெட்டை, அந்தஸ்த்தை மீண்டும் நிரூபிக்கவேண்டிய நிலைமையில் இருந்தார் சிவகார்த்திகேயன். சமீபத்திய அவருடைய படங்களான வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்கள் வசூலில் எவ்வித ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தவில்லை. சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படங்களைப் பெரும்பாலான ரசிகர்கள் விரும்பவில்லை. இந்த விதத்தில் இவ்விரு படங்களும் சிவகார்த்திகேயனைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. 2016-ல் வெளியான ரஜினி முருகன், ரெமோ ஆகிய இரு படங்களையும் ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள். இதனால் வசூலிலும் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டார் சிவகார்த்திகேயன். ஆனால் கடைசி மூன்று படங்களில் அவ்வித ஏற்றம் அவருக்கு அமையவில்லை. இந்நிலையில் இந்த வருடம் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படம், சிவகார்த்திகேயனை மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்க வைத்தது. பாண்டிராஜின் கதையும் காட்சிகளும் ரசிகர்களைக் கவர்ந்ததால் இந்த வருட ஹிட் படங்களில் நம்ம வீட்டுப் பிள்ளையும் இடம்பெற்று விட்டது. 

9. கோமாளி

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோமாளி. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியால் படத்தின் டிரெய்லர் அதிகக் கவனத்துக்கு ஆளானது. படம் வெளியான முதல் நாளிலிருந்து கோமாளி படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளார். சூப்பர் ஹிட் படத்தை இயக்கி, பெரிய லாபத்தை அளித்ததால் கோமாளி படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹோண்டா சிட்டி காரைப் பரிசாக அளித்தார். முதல்வர் தலைமையில் வெற்றி விழாவையும் நடத்தி அசத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com