Enable Javscript for better performance
மரணத்திற்கு பின்பாகவே கலைஞர்கள் பெரும்புகழ் அடைகிறார்கள்! இயக்குநர் ஆக்னஸ் வார்தா பேட்டி!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  மரணத்திற்கு பின்பாகவே கலைஞர்கள் பெரும்புகழ் அடைகிறார்கள்! இயக்குநர் ஆக்னஸ் வார்தா பேட்டி!

  By   |   Published On : 15th May 2019 05:53 PM  |   Last Updated : 15th May 2019 06:15 PM  |  அ+அ அ-  |  

  download

   

  சர்வதேச திரைப்பட வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கும் பிரெஞ்சு புதிய அலை இயக்கத்தின் ஆளுமைகளில் ஒருவரான ஆக்னஸ் வார்தா தனது முதல் திரைப்படத்தை 1955ல் உருவாக்கியதற்கும், இன்றைய காலத்திற்கும் இடையில் அறுபது வருடங்கள் கடந்திருக்கின்றன. எனினும், மரணம் வரையிலும் யதார்த்தத்தை முதன்மைபடுத்தும் தனது திரைப்பட முயற்சிகளில் இருந்து அவர் பின்வாங்கவே இல்லை. படைப்பூக்கத்துடனும், புத்துணர்வோடும் இறுதி வரையிலும் படங்களை தொடர்ந்து இயக்கிக்கொண்டே இருந்தார். “நான் யதார்த்த மனிதர்களை படமாக்கவே விரும்புகிறேன். நாம் அறிந்திருக்காத எளிய மனிதர்களுடன் எனது திரைப்படங்களின் மூலமாக தொடர்பேற்படுத்திக்கொள்ளவே முயலுகிறேன்” என்பது தனது திரைப்படங்கள் குறித்து ஆக்னஸ் அளிக்கும் விளக்கமாகும். Cleo மற்றும் Vagabond அவரது திரைப்படங்களில் வெகுவாக கவனிக்கப்பட்டவை. அவரது கடைசி இரண்டு ஆவணப்படங்களான Faces and Places மற்றும் The Beaches of Agnes இரண்டிலும் ஒரு முதிய குழந்தையாக அவரது செய்கைகள் பார்வைக்கு நெகிழ்வூட்டுவதாக இருந்தது. “புது புது முகங்களை தேடி அலைவது இவ்வயதில் எனக்கு சுவாரஸ்யமான செயலாக இருக்கிறது” என்று இந்த ஆவணப்படங்களில் அவர் குறிப்பிடுகிறார்.  பொதுவாக சுதந்திர உணர்வை போற்றும் வகையிலும், பெண்ணிய கருத்தாக்கங்களை முன்வைப்பதாயும், சமூக அவலங்களை பேசுபொருளாக கொண்டதாகவும் அவரது திரைப்படங்கள் இருந்திருக்கின்றன. எல்லோராலும் நேசிக்கப்பட்ட எப்போதைக்குமான இளமை உணர்வுடன் வாழ்ந்த ஆக்னஸ் வார்தா கேன்ஸர் நோயினால், தனது 90வது வயதில் கடந்த மார்ச் மாதத்தில் இவ்வுலகம் நீங்கியதற்கு முன்னதாக The Gaurdian இதழுக்கு அவர் அளித்த நேர்காணலின் தமிழாக்கம் இது.     

  உங்கள் குழந்தைப் பருவத்தின் ஆழமிக்க நினைவுகளை பகிர்ந்து கொள்ள முடியுமா?

  எனது பெற்றோர் எனக்கு ஆர்லெட்டி (Arlette) எனப் பெயர் சூட்டினார்கள். ஆனால், வளரும் பருவத்தில் நானாக எனது பெயரை ஆக்னஸ் என மாற்றிக் கொண்டேன். எனது முந்தைய பெயர் எனக்கு பிடிக்கவில்லை. ஏனெனில், ’லெட்டி’ (lette) என்று முடிவுறும் பெயர்களின் மீது ஏதோவொரு ஒவ்வாமை எனக்கு இருக்கிறது. லெட்டி என்பது சிறுவர்களுக்கு சூட்டும் பெயர் போலவே இருக்கிறது. குதித்துக்கொண்டும், விளையாட்டுத்தனமாகவும் இருக்கும் பெண்ணியல்பை அது தோற்றுவிக்கிறது. அப்படியிருப்பதை நான் விரும்பவில்லை. அதனால் ஆக்னஸ் (Agnes) என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டேன்.

  1950-களில் இருந்து நீங்கள் ஒரே வசிப்பிடத்தில்தான் குடியிருக்கிறீர்கள். இப்போது அது எவ்வாறு மாற்றமடைந்திருக்கிறது?

  இங்கு குடியேறியபோது, இவ்வீடு மிகவும் அருவருப்பூட்டுவதாய் இருந்தது. எதுவும் ஒழுங்கு நிறைந்ததாக, புனிதத்தன்மை மிக்கதாக இல்லை. குளியலறையில் ஷவர் வசதிக்கூட இல்லை. சிறுக சிறுக நான் அதனை மாற்றி வடிவமைத்தேன். அதன்பிறகு, ஜாக்வஸ் (Jacques - ஆக்னஸ் வர்தாவின் கணவர்) என்னுடன் வசிக்கத் துவங்கியதற்கு பின்னர், மேலும் இவ்வீட்டினை மெருகூட்டினோம். இப்போது இந்த வீட்டிற்கென பிரத்யேகமான தோட்டம் ஒன்று இருக்கிறது. மூன்று பூனைகளை வளர்த்து வருகிறேன். பேரற்புதமான அரண்மனையைப்போல என் வீடு காலங்களில் மாறியிருக்கிறது.

  படைப்புச் செயல்பாட்டுக்கான உந்துதலை எது உங்களுக்கு கொடுக்கிறது?

  பெரும்பாலும், யதார்த்த நிகழ்வுகள்தான் எனக்கான உந்துதலை கொடுக்கிறது. எளிய மனிதர்களுடன் சேர்ந்துதான் எனது அதிகளவிலான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனது முதல் திரைப்படத்தில் ஒரு மீனவருடன்தான் வேலை செய்தேன். Gleaners and I என்கின்ற திரைப்படத்தை உருவாக்கியபோது, நமது சமூகம் வெளியிடுகின்ற மிகுதியான அளவு கழிவுகளை பதிவு செய்ய வேண்டிய தேவை இருந்தது. நம்ப முடியாத அளவிலான கழிவுகள்.

  புதிய அலையின் முன்னோடிகளில் ஒருவராக உங்களை குறிப்பிடும்போதும், எப்படி உணர்கிறீர்கள்?

  'புதிய அலையின் மூதாட்டி!' எனக்கு இது நகைப்பூட்டுகிறது. ஏனெனில், அப்போது எனது வயது 30. த்ரூபா தனது 400 Blows திரைப்படத்தையும் கொதார்த் Breathless திரைப்படத்தையும் உருவாக்கினார்கள். ஆனால், இவர்களுக்கெல்லாம் முன்னதாக ஐந்தாண்டுகளுக்கு முன்பாக நான் எனது முதல் திரைப்படத்தை இயக்கிவிட்டேன். எனது இளம் வயதுகளில் புதிய வகையிலான எழுத்துமுறையை பலரும் கையாண்டுக் கொண்டிருந்தார்கள். ஜேம்ஸ் ஜாய்ஸ், ஹெம்மிங்வே, ஃபாக்னர். அதனால், நான் திரைப்படத்துக்கென்று ஒரு புதிய வடிவத்தை கண்டடைய வேண்டும் என்று கருதினேன். திரைப்பட கலையில் தீவிரமான அணுமுறையை உருவாக்க கடுமையாக போராடினேன். எனது வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருக்கிறேன். 

  பெண் மைய கதைகளை சொல்ல வேண்டியது உங்களுக்கு முக்கியமானதாக இருந்ததா?

  ம்ம்ம். Cleo ஒரு பெண். ஆனால், பெண்களுக்கான உரிமைகளை வேண்டி பல பெண்களுடனேயே நான் சண்டையிட வேண்டியிருந்தது. 1976ல் பெண் உரிமைகளை பேசும் வகையில், One sings and the other doesn’t  என்ற திரைப்படத்தை இயக்கினேன். ஆனால் நம்மால், “நாங்கள் வென்றுவிட்டோம். அவ்வளவுதான்” என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில், பெண்களுக்கான உரிமை போராட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இன்றைய காலத்தில் ஓரளவுக்கு பரவாயில்லை. திரைப்பட விழாக்களில் இப்போது, “தேர்வு குழுவில் ஆண்களும், பெண்களும் சரிபாதி அங்கம் வகிக்க வேண்டும்” என்கிறார்கள். ஏன், எப்போதும் ஆண்கள் மட்டுமே படங்களை தேர்வு செய்ய வேண்டும்?

  Cleo திரைப்படத்தை மடோனா மீண்டும் மீளுருவாக்கம் செய்ய விரும்பியதாக கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை?

  மடோனாவை Cleo திரைப்படத்தின் கதை வெகுவாக கவர்ந்துவிட்டது. அதனால், அதன் திரைக்கதையை வேறொரு பெண்ணை வைத்து மறுகட்டமைப்பு செய்ய அவர் அணுகியிருந்தார். எனக்கும் அதில் சம்மதமே. ஆனால், Cleo திரைப்படத்தில் வருவதைப் போலவே, மடோனாவின் தாயாருக்கும் புற்றுநோய் உருவாகி, அவர் அந்த நோய்மையின் காரணமாகவே, மரமெய்திவிட்டார். அந்த தருணத்தில், அந்த கதையை அமெரிக்காவில் நான் உருவாக்குவதாக இருந்திருந்தால், Cleoவை எய்ட்ஸ் நோய் குறித்த அச்ச உணர்வுடன் இருக்கும் கறுப்பின பெண்ணாகவே வடிவமைத்திருப்பேன். ஏனெனில், எய்ட்ஸ் அக்காலத்தில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. விட்னி ஹவுஸ்டனை (Whitney Houston) வைத்து அதனை இயக்க நான் விரும்பியிருப்பேன்.

  ஜிம் மோரிசன் (Jim Morrison) உங்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

  அவர் என்னை வெகுவாக தாக்கத்திற்குள்ளாக்கியவர். ஜாக்வஸும் நானும் அவரை 60களில் லாஸ் ஏஞ்சல்ஸில் சந்தித்தோம். மெல்ல மெல்ல அவர் ஒரு நட்சத்திரமாக உருவாகியதை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர் திரைப்படங்களைப் பற்றி கற்றுக்கொண்டிருந்தார். எங்கள் திரைப்படங்களைப் பற்றிய புரிதல் அவரிடம் இருந்தது. பாரீஸில் நடைபெற்ற அவரது இறுதி சடங்கின்போது நாங்கள் நான்கு பேர் அங்கிருந்தோம். மிக விரைவாக மரணம் எய்தும் கலைஞர்கள், அதன்பிறகே பெரும் புகழ் அடைகிறார்கள்.

  உங்களது திரைப்பட உருவாக்க பாணியின் மீது இன்றைய தொழில்நுட்பம் செலுத்தும் தாக்கம் எவ்வகையிலானது?

  ஒரு நூற்றாண்டின் முடிவாக கருதப்படுகின்ற 2000-க்கு பிறகு, எனது வாழ்க்கையும் பல்வேறு விதங்களில் மாறுதல்களை சந்தித்திருக்கிறது. கையடக்க கேமிராக்கள் எனக்கு அறிமுகமாயின. அவற்றைக் கொண்டு தனியொருத்தியாக என்னால் திரைப்படங்களை உருவாக்க முடியுமென்பதை புரிந்து கொண்டேன். அப்படித்தான் Gleaners and I திரைப்படத்தை என்னால் உருவாக்க முடிந்தது. தெருக்களில் கிடக்கும் கழிவுகளை உண்ணும் மனிதர்களை நீங்கள் அணுகும் போது, உங்களால் ஒரு பெரிய குழுவினருடன் சேர்ந்து இயங்க முடியாது. அவர்களை நான் அச்சுறுத்த விரும்பவில்லை. கூருணர்வுமிக்க தெளிவான பெண்தான் நான் என்றாலும், சமயங்களில் கிறுக்குத்தனமாகவும் எனது செயல்கள் இருக்கின்றன. 2003-ல் நடைபெற்ற வெனீஸ் திரைப்பட விழாவின் துவக்க நிகழ்வின்போது பிசின்களால் வேயப்பட்ட பெரிய அளவிலான உருளைக்கிழங்கு வடிவ உடையை அணிந்து கொண்டு சென்றேன். அப்போது நான் கவனிக்கப்பட வேண்டுமென்று விரும்பினேன். இப்போது எனது வித்தியாசமான சிகை அலங்காரத்தைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அது வெண்ணிறத்தில் இருந்திருக்க வேண்டியது. ஆனால், அதோடு சேர்த்து வேறொரு நிறத்தையும் பூசி சற்றே கற்பனைப்பூர்வமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். அதனால்தான் எனக்கு Punk என்றொரு பெயர் கிடைத்திருக்கிறது. எனது பேரக்குழந்தைகள் சிறுவர்களாக இருக்கும்போது என்னை, “Mamita Punk” என்று அழைத்தார்கள். சில சமயங்களில், எது சரியான பாதை என வழக்கத்தில் இருக்கிறதோ அதனை நான் மறுதலிக்கவும் செய்கிறேன். எனக்கான பாதையை நானே துணிவுடன் உருவாக்கிக் கொள்கிறேன்.  

  Vagabond கலாச்சார புனிதப்படுத்தல்களுக்கு எதிரான திரைப்படம்…

  இல்லை. அது அப்படியானதல்ல. சாலைகளில் வாழும் மனிதர்களைப் பற்றியது அந்த திரைப்படம். அந்த திரைப்படத்தின் மைய நாயகியான ஸாண்ட்ரின் போனெய்ராவுக்கு (Sandrine Bonnaire) அப்போது 18 வயதுக் கூட நிறைவுற்றிருக்கவில்லை. ஆனால் ஸாண்ட்ரின் அதீத திறன் மிகுந்தவராகவும், ஆசீர்வதிக்கப்பட்ட அதே சமயத்தில் கலக பண்பு மிகுந்தவளாகவும் இருந்தார். நான் அந்தத் திரைப்படத்தால் மன நிறைவு பெற்றேன். ஏனெனில், அந்த திரைப்படத்தில், 'நம் கையில் ஒன்றுமே இல்லாதபோது நாம் எப்படி செயல்படுவோம்? எப்படி பயணப்படுவோம்? நமது கோபத்தை எப்படி கையாளுவோம்?' போன்ற கேள்விகள் குறித்த யதார்த்த சூழலை முதன்மைப்படுத்தியிருந்தது. Vagabond நிறைய பணத்தையும் சம்பாதித்து கொடுத்தது. ஆனால், எனது வேறு எந்த திரைப்படமும் ஒருபோதும் பணம் உண்டாக்கியதில்லை.

  அதைப் பற்றி எப்படி உணருகிறீர்கள்?

  என்னை மன்னியுங்கள். நான் இவ்வகையில்தான் திரைப்படங்களை இயக்க வேண்டியிருக்கிறது. ஒரு போதும் புகழ்பெற்ற நாவல்களை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் நான் ஈடுபட்டதில்லை. எப்போதாவதுதான் பிரபலமான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன். ஒருமுறை கேத்தரீன் டேனியூவாவை (Catherine Deneuve) வைத்து ஒரு திரைப்படம் இயக்கினேன். ஆனால், அதுதான் எனது வாழ்க்கையில் மிகப் பெரிய தோல்விப்படமாக அமைந்தது! அதனால், வெற்றிக் குறித்து என்னை எப்போதும் தொடர்புபடுத்தி பார்ப்பதில்லை. திரைப்பட உருவாக்கத்துடன் மட்டுமே என்னை பிணைத்து சிந்தித்துப் பார்ப்பேன். 2017ம் வருடத்தில் மிகுந்த தன்னடக்கத்துடனும், பெருமிதத்துடனும் எனக்கான மரியாதை நிமித்தத்திலான ஆஸ்கார் விருதைப் பெற்றுக்கொண்டேன். அது உண்மையிலேயே ஆச்சரியமான உணர்தலாக இருந்தது. ஒரேயொரு வெற்றிப் படத்தைக்கூட நான் அங்கு உருவாக்கியிருக்கவில்லை என்றாலும், அந்த நாட்டில் ஒரு திரைப்பட படைப்பாளியாக எனக்கொரு இடம் அளிக்கப்பட்டிருந்தது.

  உங்களுக்கு வழங்கப்பட்ட மிகச் சிறந்த அறிவுரை எது என்று நினைக்கிறீர்கள்?

  புகைப்படக் கலைஞர் பிரேசாயை (Brassai) சந்தித்த தருணத்தை நினைத்துக்கொள்கிறேன். அப்போது  நான் மிக இளம் வயதுடைய புகைப்படக் கலைஞராக இருந்தேன். அவர் என்னிடத்தில், “உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்தையும் கவனியுங்கள். மிகக் கூர்மையாக கவனியுங்கள்” என்றார். அது எனக்கு பிடித்திருந்தது. ஒவ்வொருமுறை படம் எடுக்கும்போதும் இதுதான் எனது நினைவில் வந்துப்போகும்.

  நீங்கள் எவ்விதமாக நினைவுக்கூறப்பட விரும்புகிறீர்கள்?

  வாழ்க்கையை ரொம்பவும் ரசித்து வாழ்ந்த, சில காயங்களையும் அனுபவத்திருக்கின்ற ஒரு திரைப்படப் படைப்பாளியாக நினைக்கூறப்படவே விரும்புகிறேன். இது கொடூரமான உலகம்தான் என்றாலும், ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யங்கங்கள் மிகுந்தது என்கின்ற எண்ணத்தை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். எனது தினசரிகளை எது ஆக்கிரமித்திருக்கிறது – வேலை செய்வது, மனிதர்களை சந்திப்பது, அவர்கள் சொல்வதை கேட்பது – உயிருடன் வாழ்வதற்கு இந்த செயல்களே தகுதியுடையவைதான் என்று உறுதியாக நம்புகிறேன்.  

  தமிழில்: ராம் முரளி


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp