Enable Javscript for better performance
Game of Thrones- Dinamani

சுடச்சுட

  

  கேம் ஆஃப் த்ரோன்ஸ் -  சின்னத்திரையில் ஒரு பெரிய சாகசம்! 

  By சுரேஷ் கண்ணன்  |   Published on : 31st May 2019 12:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Game_of_Thrones1xx

   

  ‘இவ்வுலகத்து மனிதர்களை இரு பிரிவுகளாக பிரிக்கலாம். GOT பார்த்தவர்கள் ஒரு பிரிவு. பார்க்கப் போகிறவர்கள் இன்னொரு பிரிவு’, என்று இந்தத் தொலைக்காட்சித் தொடரைப் பற்றி சொல்கிறார்கள்.  

  இது மிகையான, சுயபெருமிதம் சார்ந்த அறிக்கையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு வகையில் உண்மையே என்று தோன்றுகிறது. ‘Films You Must See Before You Die’ என்று ‘அவசியம் பார்த்தே தீர வேண்டிய திரைப்படங்களைப்’ பற்றி ஒரு பட்டியல் போடுவார்கள். இந்த வரிசையில் GOT என்கிற இந்தத் தொலைக்காட்சித் தொடரை சந்தேகமில்லாமல் இணைக்கலாம்.

  இந்தக் கட்டுரை குறிப்பாக இரண்டாவது பிரிவினருக்கானது. அதாவது தொடரைப் பார்க்கவிருப்பவர்களுக்கானது. எனவே இந்தத் தொடரைப் பற்றிய அறிமுகமாக இது அமையும். (எச்சரிக்கை: ஸ்பாய்லர்கள் உண்டு).

  *

  ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ என்கிற தொலைக்காட்சித் தொடரைத்தான் சுருக்கமாக GOT என்கிறார்கள். தொலைக்காட்சித் தொடர் என்றவுடன் நம்மூர் ‘அழுவாச்சி’ தொடர்களை நினைத்துக்கொள்ளாதீர்கள். இது முற்றிலும் வேறு சமாச்சாரம்.

  மேற்கத்திய நாடுகளில் தொலைக்காட்சித் தொடர்களுக்கென பிரத்யேகமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். மிகப்பெரிய வணிகச் சந்தை அது. இதற்காக விருதுகள் வழங்கப்படுகின்றன. அதிகப் பொருட்செலவில் உருவாகும் பிரமாண்டமான திரைப்படங்களுக்கு நிகரான உள்ளடக்கத்தில் இந்தத் தொடர்கள் உருவாக்கப்படுகின்றன. க்ரைம், த்ரில்லர், சஸ்பென்ஸ், அரசியல், சமூகம், அறிபுனைவு என்று திரைப்படங்களில் என்னென்ன வகைமைகள் உண்டோ, அவை அத்தனையும் இந்தத் தொடர்களிலும் உண்டு.

  ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ அப்படியொரு பிரம்மாண்டமான வரலாற்று ஃபேண்டஸி தொடர். கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி இந்தத் தொடரின் முதல் பாகம் துவங்கியது. ஏறத்தாழ ஒவ்வொரு பாகத்திலும் பத்து பகுதிகள் இருக்கும். ஒவ்வொரு சீஸன் முடிந்ததும் சிறிது  இடைவெளி இருக்கும்.  அப்படியாக மொத்தம் எட்டு சீஸன்களில் உள்ள எழுபத்தி மூன்று எபிஸோடுகளைக் கடந்து சமீபத்தில்தான் (மே 19ந்தேதி) இந்தத் தொடர் நிறைவுற்றது. (ஒவ்வொரு எபிஸோடும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு இருக்கும்).

  முதல் ஏழு சீஸன்களைப் போல இறுதி சீஸன் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அவ்வளவாக பூர்த்தி செய்யாவிட்டாலும் இதன் பார்வையாளர்கள் இந்தத் தொடருக்கு நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை தந்தனர். ஹெச்பிஓ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களிலேயே இந்தத் தொடர்தான் வியக்க வைக்கும் எண்ணிக்கையில், அதிக பார்வையாளர்களைப் பெற்றிருந்த தொடராக கூறப்படுகிறது. இறுதி சீஸனின் முதல் எபிஸோட் ஒளிபரப்பான அன்று, சுமார் 12 மில்லியன் நபர்கள் இந்தத் தொடரைக் கண்டு மகிழ்ந்துள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.

  அமெரிக்க நாவலாசிரியரான ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின், ‘A Song of Ice and Fire’ என்கிற தலைப்பில் ஃபேண்டஸி வகைமையிலான நாவல்களை எழுதத் துவங்கினார். முதலில் முத்தொடராக (trilogy) இதை எழுதத் திட்டமிட்டார். ஆனால் அது மூன்று பாகங்களில் அடங்காமல் நீண்டு கொண்டே சென்றது. இந்த வரிசையில் அவர் இப்போது எழுதிக் கொண்டிருப்பது ஆறாவது நாவலான ‘The Winds of Winter’.

  ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ இந்த நாவல் வரிசைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. கதை மற்றும் கதாபாத்திரங்களின் அடிப்படை, அதன் ஆதாரமான வரைபடம்  போன்றவற்றை இந்தத் தொடர் விசுவாசமாகப் பின்பற்றினாலும் சமயங்களில் அவற்றிலிருந்து விலகி சுயமான பாணியிலும் பயணித்தது. David Benioff மற்றும் D. B. Weiss  ஆகியோர்  இதன் பிரதான உருவாக்குநர்களாக இருந்தார்கள்.  47 எம்மி விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை இந்தத் தொடர் பெற்றுள்ளது.

  ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடர் எதைப் பற்றியது? ராஜ்ஜியங்களுக்குள் நிகழும் அதிகாரப் போட்டிதான் இதன் அடிப்படை. ‘நாங்கள் பார்க்காத ராஜா ராணி கதையா?’ என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. இது வழக்கமான மன்னர் காலத்துக் கதையில்லை. இதில் எண்ணற்ற பாத்திரங்கள் இருந்தாலும் ஒவ்வொரு பாத்திரத்தின் பின்னணியும் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு பார்வையாளர்களின் கவனத்தைக் கவருமாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நன்றாக வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு பிரதான பாத்திரம், ஓர் எதிர்பாராத கணத்தில் அதிர்ச்சிகரமான மரணத்தைத் தழுவும். ஒரு சிறுகதையின் அற்புதமான திருப்பம் போல ஒவ்வொரு எபிஸோடின் முடிவும் அமைக்கப்பட்டிருந்தது. இதுவே இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பையும் வசீகரத்தையும் கூட்டியது. 

  தோராயமாக 15-ம் நூற்றாண்டில் நிகழ்வதாக கூறப்படும் இந்தத் தொர், வெஸ்டரோஸ் மற்றும் எஸ்ஸோஸ் என்னும் இரு பெரும் கற்பனையான நிலப்பரப்புகளில் நிகழ்கிறது. வெஸ்டரோஸின் தலைநகரம் கிங்ஸ் லேண்டிங். ஏழு பேரரசுகளுக்கும் மையம் இதுதான். ஒரு காலத்தில் இந்த நிலப்பரப்பை டார்கேரியன் என்னும் வம்சத்தினர் ஆண்டு வந்தனர். ஒரு திருமணத்தின் மூலம் நிகழும் சிக்கல் மற்றும் பகை காரணமாக ராபர்ட் பராத்தியன் என்பவர் தன் நண்பனான நெட் ஸ்டார்க்கின் உதவியோடு இவர்களிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார். டார்கேரியனின் கடைசி வாரிசுகள் அங்கிருந்து தப்பிச் செல்கிறார்கள்.

  ராபர்ட் பராத்தியனின் ஆலோசராக  இருந்த ஜான் ஏர்ரினின் மரணத்தோடு இந்தத் தொடர் துவங்குகிறது. அந்த மரணத்தில் ஏதோவொரு மர்மப் பின்னணி இருக்கிறது. தன்னுடைய ஆலோசகரின் மரணம் காரணமாக, வடக்குப் பகுதியை ஆண்டு கொண்டிருக்கும் நெட் ஸ்டார்க்கை தலைநகருக்கு வரச் சொல்கிறார் ராபர்ட் பராத்தியன். தன்னுடைய மகனை அவருடைய மகளுக்கு திருமணம் செய்ய உத்தேசிப்பது அவருடைய நோக்கம். ஆனால் ராபர்ட்டின் வாரிசுகள் குறித்த சில ரகசியமான விஷயங்களை நெட் ஸ்டார்க் அறிய நேர்கிறது. பன்றி வேட்டையின் போது ராபர்ட் இறந்து விட, நெட் ஸ்டார்க்கும் அநியாயமாக குற்றம் சுமத்தப்பட்டு பலியிடப்படுகிறார். நெட் ஸ்டார்க்கின் வாரிசுகள் மூலைக்கு ஒருவராகப் பிரிந்து செல்கிறார்கள்.

  கிங்ஸ் லேண்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட டார்கேரியன் வாரிசான டெனேரியஸ் பல சிரமங்களுக்குப் பிறகு இழந்த ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக படையைத் திரட்டிக் கொண்டு முன்னகர்ந்து வருகிறாள். இவளிடமிருக்கும் மூன்று டிராகன் பறவைகளும் அடிமைகளைக் கொண்ட ராணுவமும் இவளின் பெரும் பலமாகக் கருதப்படுகிறது.

  இன்னொரு புறம் ராபர்ட்டின் சகோதரர்கள் உள்ளிட்ட இதர பிரதேசங்களில் உள்ள குறுநில மன்னர்களும் ‘Iron Throne’ எனப்படும் தலைமை பீடத்தைக் கைப்பற்றத் துடிக்கிறார்கள்.

  இப்படிப் பல முனைகளிலிருந்து அதிகாரத்தின் உச்சியை அடைவதற்காக நிகழும் சண்டை, சதி, துரோகம், காதல், வன்முறை, வன்மம், வீரம் போன்றவற்றின் தொகுப்புதான் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’.

  *

  இந்தத் தொடரில் எண்ணற்ற பாத்திரங்கள் இருந்தாலும் பிரதானமாக சில பாத்திரங்கள் நம்மை வெகுவாகக் கவர்கின்றன. என்னளவில் இதில் முதல் இடத்தைப் பிடிப்பவராக ஜான் ஸ்நோவைச் சொல்வேன். நெட் ஸ்டார்க்கின் மகனாக இவர் அறியப்பட்டாலும் இவரின் தாய் யார் என்பதை அறியாததால் ‘முறையற்ற வழியில் பிறந்தவர்’ (Bastard) என்னும் அவமானத்தைத் தொடர்ந்து சுமக்கிறார். மகாபாரதத்தில் வரும் கர்ணனை இந்தப் பாத்திரம் நினைவுப்படுத்துகிறது. மிகுந்த வீரமும் விவேகமும் கொண்ட பாத்திரம்.

  இதற்கு அடுத்தப் பாத்திரமாக டிரியன் லேனிஸ்டரைச் சொல்லலாம். உயரம் குறைந்தவரான இவர், ராஜ வம்சத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதற்குரிய அதிகார மமதையோ, அதிகார விருப்பமோ இல்லாதவர். இவர் பேசும் புத்திசாலித்தனமான வசனங்கள், கூர்மையான நையாண்டிகள் இந்தத் தொடருக்கு பிரத்யேகமான சுவையைச் சேர்க்கிறது. இவரும் பல இன்னல்களைச் சந்திக்கிறார்.

  மூன்றாவது நாம் ஏற்கெனவே பார்த்த டெனேரியஸ். மிக வலிமையான பெண் பாத்திரம். ஒவ்வொரு பிரதேசத்திலும் அடைபட்டிருக்கும் அடிமைகளை விடுவித்து விருப்பப்பட்டவர்களை தன்னுடைய படையில் இணைத்துக் கொள்ளும் மதியூகமும் வீரமும் கொண்டவள். இந்தத் தொடர் முழுவதும் நம்மைக் கவரும் பாத்திரங்களுள் முக்கியமானது இது. ஏறத்தாழ எட்டாவது சீஸன் வரை இவரே எனக்கு மிக பிடித்தமான பாத்திரமாக இருந்தார். ஆனால் கடைசி சீஸனில் இவர் செய்யும் ஒரு விஷயம்தான் மதிப்பிழக்கக் காரணமாக அமைந்து விடுகிறது.

  டெனேரியஸுக்கு நேர் எதிரான பாத்திரம் செர்ஸி. ராபர்ட் பராத்தியனின் மனைவி. அதிகாரத்தின் இருப்பை தக்க வைத்துக்கொள்ள, தன் ரகசியங்களைக் காத்துக்கொள்ள இவள் செய்யும் துரோகங்களும் கீழ்மைகளும் வெறுப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் இன்னொரு புறம் தன்னுடைய வாரிசுகளின் மீது நிறைய அன்பைச் செலுத்தும் பாத்திரமாகவும் இவள் இருக்கிறாள்.

  செர்ஸி மட்டுமல்ல, இந்தத் தொடரில் வரும் நிறைய பாத்திரங்களை கருப்பு - வெள்ளையாக பிரித்தறிய முடியாது. ஒருவரின் கீழ்மைகள் வெளிப்படும் அதே சமயத்தில் இன்னொரு கோணத்தில் அவர் மகத்தான மனிதராக இருப்பார் அல்லது உருமாறுவார். இதற்கு சிறந்த உதாரணமாக ஜெய்மி லானிஸ்டரைச் சொல்லலாம். தன் சகோதரி செர்ஸியுடன் தகாத உறவு வைத்திருப்பவர். இந்தக் காதலணுர்வு காரணமாக செர்ஸியின் கீழ்மைகளுக்கு இறுதி வரை துணை போகிறவராக இருக்கிறார். ஆனால் ஒரு நிலையில் இவர் ஏறத்தாழ நேர்மையானவராக உருமாறுவது சிறப்பானது.

  இந்தத் தொடரை பார்த்து முடிக்கும் போது இதன் அனைத்து பிரதான பாத்திரங்களையும் உங்களால் நினைவு வைத்திருக்க முடியும். அந்தளவிற்கு ஒவ்வொரு பாத்திரமும்  தனித்தன்மையோடும் சுவாரசியத்தோடும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு புனைவாசிரியராக மார்ட்டினின் சாதனை என்று கூட இதைச் சொல்லலாம்.

  இவர்களைத் தவிர பல்லாண்டுகளுக்கு முன்பு அழிந்து போனதாக நம்பப்படும் ‘White Walkers’ என்கிற ஜோம்பிக்களின் மிரட்டலும் ஒட்டுமொத்த நிலப்பரப்பிற்கும் ஆபத்தாக இருக்கிறது. வெஸ்டரோஸ் நிலப்பரப்பைச் சுற்றி இருக்கும் பிரம்மாண்டமான சுவரைத் தாண்டி இவர்களால் வர முடியாது என்று நம்புகின்றனர். இதைப் போலவே wildlings என்று கேலியாக அழைக்கப்படும் நாட்டுப்புற மனிதர்களும் இந்தச் சுவற்றைத் தாண்டி வந்து விட முடியாது என்று கருதப்படுகிறது. இவர்களைக் கண்காணிக்க சுவற்றைச் சுற்றி ‘Night Watch’ என்கிற படைக்குழுவும் இருக்கிறது.

  திரைக்கதையின் வசீகரம் ஒருபுறமிருக்க இதன் உருவாக்கம் பிரம்மாண்டமாகவும் பிரமிப்பூட்டும் வகையிலும் அமைந்துள்ளது. ஒவ்வொரு பிரதேசத்தின் பின்னணியும் அதன் வித்தியாசங்களும் கச்சிதமாகத் திட்டமிடப்பட்டுள்ளன. அரண்மனைகளின் உட்புறங்கள், மக்கள் புழங்கும் தெருக்கள், பனிப்பிரதேசங்கள், டோத்ராக்கி என்கிற பழங்குடி இனம் வசிக்கும் இடங்கள் (இதற்கான பிரத்யேக மொழியும் படக்குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது) போன்றவற்றின் அரங்க அமைப்புகள் மிகுந்த பொருட்செலவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் மேக்கிங் வீடியோக்களை தேடிப் பார்த்தால் மூச்சை அடைக்கிறது. ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு தொழில்நுட்ப ராணுவப்படையே பின்னணியில் வேலை செய்துள்ளது. 

  போலவே இதன் போர்க்களக்காட்சிகளும் அட்டகாசமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆறாவது சீஸனில், ஜான் ஸ்னோவிற்கும் ராம்சன் போல்ட்டனிற்கும் இடையில் நிகழும் உக்கிரமான போர் (The battle of bastards)  அபாரமான முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதுவரை உருவான மிகச்சிறந்த போர்க்காட்சிகளில் ஒன்றாக சந்தேகமின்றி இதைச் சேர்க்கலாம்.

  இதன் ஒளிப்பதிவும் அபாரமானது. மெழுகுவர்த்திகளின் வெளிச்சம், நெருப்பின் ஒளி போன்றவற்றின் பின்னணிகளில் உள்ளதைப் போன்ற பாவனையும் இரவுக்காட்சிகளும் திறமையாகத் திட்டமிடப்பட்டிருக்கின்றன. இதன் தீம் இசையும் பின்னணி இசையும் வசீகரமாக அமைக்கப்பட்டுள்ளன.

  இந்தத் தொடரை பார்க்க விரும்பினால் அடிப்படையான அறிமுகத்தோடு துவங்குவது நல்லது. இல்லையென்றாலும் பிரச்சினையில்லை. முதலில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தாலும் முதல் இரண்டு, மூன்று எபிஸோடுகளைக் கடந்தவுடன் நீங்களே தன்னிச்சையாக உள்ளே சென்று விடுவீர்கள். முதலில் விழிக்க வைத்த காடு உங்களை அப்படியே உள்ளே இழுத்துக் கொள்ளும். எட்டாவது சீஸனையும் (அதாவது 73 எபிஸொடுகள்) முடிக்காமல் உங்களால் வெளியே வர முடியாது.

  எச்சரிக்கை: கொடூரமான வன்முறைக்காட்சிகள், அப்பட்டமான பாலியல் காட்சிகள் போன்றவை நிறைந்திருப்பதால் இந்தத் தொடர், சிறார்கள் பார்க்கத் தகுதியானது அல்ல.

  இயக்குநர் சத்யஜித்ரேவின் ‘பதேர் பாஞ்சாலி’ திரைப்படத்தைப் பற்றி எழுதும் போது சுஜாதா இவ்வாறு சொன்னார். ‘இந்த திரைப்படத்தைப் பார்க்கத் தவறியவர்கள், தங்கள் வாழ்வில் முக்கியமானதொரு விஷயத்தை இழந்தவர்களாவார்கள்’. ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரை, நானும் இதே முறையில் பரிந்துரை செய்கிறேன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai