தேவையற்ற சொற்களை திரைக்கதையில் சேர்ப்பதில்லை! 

ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத ஆறு குறுங்கதைகள்.
Damian Szifron
Damian Szifron

ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத ஆறு குறுங்கதைகள். சில நிமிட நேரத்தில் விரிகின்ற கதைகளின் போக்கில் பார்வையாளர்களை வசீகரிக்கும் தன்மையில் பெரு வெற்றி அடைந்திருக்கிறது. அர்த்தமற்ற குரோதத்தையும், பழிவாங்கும் உணர்ச்சியையும் மிகத் தீவிர நிலையில் வைத்து அணுகுகிறது. மனிதனின் சமநிலை சோதனைக்குள்ளாகும் போது, அவனது மனம் செயல்படுத்துகின்ற விசித்திரங்களை சுற்றியே கதைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அர்ஜெண்டினாவை சேர்ந்த டேமியன் ஸ்ஸிப்ரான் இயக்கிய Wild Tales அதன் விநோதத்தன்மைக்காகவே உலகளாவிய பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. பல்வேறு விருதுகளும் Wild Tales திரைப்படத்துக்கு கிடைத்திருக்கிறது. கோலிடோர் இதழுக்கு டேமியன் ஸ்ஸிப்ரான் மேற்கொண்ட நேர்காணலின் தமிழ் மொழியாக்கம் இது.    

இந்தத் திரைப்படத்தின் துவக்க நிலை பணிகள் எப்படி துவங்கப்பட்டன?

இது விருப்ப உணர்வுடன் துவங்கப்பட்ட படம் அல்ல. நான் வேறு சில முழு நீளத் திரைப்படங்களை உருவாக்க திட்டமிட்டிருந்தேன். ஒரே சமயத்தில், அறிவியல் புனைவு திரைக்கதைகளையும், வெஸ்டர்ன் வகை கதை ஒன்றையும், அதோடு, நகைச்சுவையான காதல் கதை ஒன்றையும் எழுதிக் கொண்டிருந்தேன். அக்காலக்கட்டம் எனக்கு மிகுந்த படைப்பூக்கம் அளிக்கின்ற தருணமாக இருந்தது. அதனால், புதிது புதிதாக முளைவிடுகின்ற மற்றைய எண்ணங்களை பெரும் திரைக்கதைகளாக வளரவிடாமல், குறுகிய வடிவம் கொண்ட கதைகளாக மாற்றி எழுதினேன். ஏனெனில், நான் வேலை செய்து கொண்டிருந்த திரைக்கதைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும் என்பதால்,இவைகளை சிறு வடிவத்தில் நிலைக்க செய்வது சரியாக இருக்கும் என்று நினைத்தேன். 

இறுதியில், எனக்கு இந்த வீரியமிக்க சிறுகதைகள் கிடைத்திருந்தன. முதலில் அவைகளை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை என்பதால், தொடர்ச்சியாக அக்கதைகளை செழுமைப்படுத்தியபடியே இருந்தேன். நீண்ட காலம் எனக்குள் இக்கதைகள் வளர்ந்து கொண்டிருந்தன. ஒரு திரைப்பட படைப்பாளியாக சமயங்களில் சில கதாப்பாத்திரங்களுடனும், சூழல்களுடனும் பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் வரையிலும் கூட நீங்கள் வாழ வேண்டியிருக்கும். ஒரு நாளின் விடியலில் எழுந்து தங்களது படைப்பை வடிவமைத்து நிறைவு செய்துவிடுகின்ற ஓவியர்களையோ அல்லது இசை அமைப்பாளர்களையோ பார்த்து நாம் பொறாமைப்படவும் வாய்ப்பிருக்கிறது. இந்த கதைகளின் வளர்ச்சி நிலையின்போது நான் அதனை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். 

ஒரு கதையை நான் நள்ளிரவில் எழுதுவேன். மற்றொன்றை மதிய நேரத்தில் எழுதுவேன். மூன்றாவது அல்லது நான்காவது கதைகளை எழுதும்போது, இந்த கதைகள் அனைத்திற்கும் ஒரு ஒற்றுமை தன்னியல்பாக உருவெடுத்திருப்பதை என்னால் உணர முடிந்தது. இவை ஒரே உலகத்தைச் சேர்ந்த ஒரே டிஎன்ஏ-வில் இருந்து உயிர்ப்பு கொண்டிருந்தன. ஒவ்வொரு கதையிலும், நான் எண்ணியிருந்ததை விடவும் பெரிதளவில் எனக்கு கிடைத்திருப்பதாக உணர்ந்து கொண்டேன். இவை அனைத்தும் ஒரே ஆல்பத்தை சேர்ந்தவைகளாக இருந்தன. ராக் அல்லது ஜாஸ் இசைத் தொகுப்புகளை பார்க்கும் போது, அவற்றில் ஒரு இசைத் துணுக்கு ஏழு நிமிடத்தில் உருவாகியிருக்கும். பிறிதொன்று 25 நிமிட நீளத்தில் உருவாகியிருக்கும். எனினும், இவை அனைத்தும் ஒரே இசை கருவிகளின் மூலமாக, ஒரே கருப்பொருளைதான் அடிப்படையாக கொண்டு உருவாகின்றன. எனது உணர்தல் இல்லாமலேயே, என் கையில் ஒரு முழு நீள திரைப்படத்துக்கான திரைக்கதை கிடைத்திருந்தது. எனது தயாரிப்பாளர்களான கேஎன்எஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஹுகோ சிக்மேன் மற்றும் மாத்தியாஸ் மோஸ்த்ரீன் இருவரிடமும் இந்த திரைக்கதையை நான் கையளித்ததும் உடனடியாக அவர்கள், “இல்லை. இல்லை. நீ இதனை உடனடியாக செய்தாக வேண்டும். இவை வீரியம் மிகுந்ததாகவும், அழகானதாகவும் அதோடு படைப்பு சுதந்திரத்தின் முன்மாதிரியான கதைவெளியாகவும் இருக்கிறது” என்றார்கள். அதனால், “அப்படியென்றால் நான் இந்த பணிகளை துவங்குகிறேன்” என்றேன்.

ஒற்றை மையத்தால் பிணைக்கப்பட்டிருக்கும் ஆறு குறுங்கதைகளை எழுதி இயக்குவது ஒரு திரைப்பட படைப்பாளியாக சுவாரஸ்யம் மிகுந்த செயலாக இருந்ததா?

ஆமாம். எனக்கு தனிப்பட்ட வகையில் இந்த திரைப்படம் நான் செய்ய நினைத்த பல்வேறு செயல்களின் ஒருங்கிணைந்த வடிவமாகப்பட்டது. சோனி பிக்சர்ஸ் கிளாசிக்ஸ் நிறுவன பட விநியோகஸ்தரான மைக்கேல் பார்க்கர் உடன் பேசிக் கொண்டிருக்கும்போது, “இது நன்கு பரிமாறப்பட்ட உணவு போல இருக்கிறது. துவக்க நிலை உணவு, இரண்டாம் நிலை உணவு, அடுத்து பிரதான உணவு, பிறகு ஜீரண பதார்த்தம், இறுதியில் காபி என அடங்கியிருக்கிறது” என்றார். இதே வகையிலான உணர்வை இந்த கதைகளை எழுதும் போதும், இயக்கும் போதும் நானும் உணர்ந்திருக்கிறேன்.

பழிவாங்கும் உணர்ச்சியை வைத்து இத்தகைய குறுங்கதைகள் எழுத வேண்டும் என்கின்ற உந்துதல் எப்படி உருவானது?

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்தக் கதையை எழுதிய போது, அத்தகைய கருப்பொருளை எல்லாம் திட்டமிட்டு உருவாக்கவில்லை. திரைக்கதையை எழுதி நிறைவு செய்ததற்கு பிறகுதான், பழிவாங்கும் உணர்வு அனைத்தும் கதைகளிலும் அடிநாதமாக இருந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். இவை அனைத்தும் சுயவாழ்வின் அனுபவங்களில் இருந்து உருவானவை என்றுதான் என்னால் சொல்ல முடியும். ஒவ்வொரு கதையின் துவக்கத்தையும், எனது வாழ்வில் நான் எதிர்கொண்ட சம்பவங்களில் இருந்துதான் உருவாக்கினேன். அதாவது உண்மை சம்பவத்தின் ஒரு பிம்பத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் மீது எனது புனைவாக்கத்தை நிகழ்த்தினேன்.

உதாரணத்திற்கு, நான் சென்றிருந்த திருமண நிகழ்வொன்றில், மணமகன் அல்லது மணமகள் இருவரில் ஒருவருக்கு தெரியாத சிலவற்றை அங்கிருந்து ஏனைய அனைவரும் தெரிந்து வைத்திருந்தார்கள். அது போல, சிறு வயது முதலே நான் ஒருவரை தெரிந்து வைத்திருந்தேன். வன்மம் மிகுந்த தனிமையில் வாழ்ந்து வந்த அவர் நள்ளிரவுகளில் எனது தந்தைக்கு பல்வேறு விதமான தொந்திரவுகளையும், மிரட்டல்களையும் போன் கால் மூலமாக விடுத்திருக்கிறார். இரவு நேரத்தில் உணவு விடுதிக்குள் வருகின்ற அரசியல்வாதியின் கதையை எழுதும் போது இந்த மனிதரை நான் நினைத்துக் கொண்டேன்.

சாலையில் நிறுத்தியிருந்த எனது கார் ஒன்றை போக்குவரத்து காவலர்கள் தூக்கிச் சென்ற நிகழ்வை வைத்து மற்றொரு கதையை எழுதினேன். அவர்கள் வெறுமனே, “பார்க்கிங் தடை செய்யப்பட்ட பகுதியில் உங்கள் கார் நின்றிருந்தது” என்றார்கள். அதனால், அந்த அமைப்பு எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொண்டேன். அதோடு, பார்க்கிங் டிக்கெட் வாங்கச் செல்லும் போது, ஏராளமான வரிசைகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. இதெல்லாம் என்னை பாதித்த நிகழ்வுகள்.

அந்த அதிகாரத்துவ அடுக்கு மிக துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதுவொரு விபத்துக்கூட இல்லை. ஆனால், நீங்கள் இவர்களை அணுக செல்கின்றபோது அது மிகுந்த சோர்வூட்டும் செயலாக அமைந்துவிடுகிறது. நம்மிடம் இருந்து பணத்தை மட்டும் சரியாக பெற்றுக்கொள்ளும் அவ்வமைப்பு, நமது புகார்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. மற்றொரு சம்பவம், சாலையில் காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, எனக்கு வேறொரு காரோட்டியுடன் வாக்குவாதம் ஒருமுறை ஏற்பட்டது. பழைய காரில் பயணித்த அந்த மனிதன் நான்தான். அவர் என்னை மிக கேவலமாக அவமானப்படுத்திவிட்டு, தனது ஆடி காரில் பறந்துவிட்டார். அதனால், புனைவில் இவர்களை எல்லாம் பழிதீர்க்க முடிவு செய்தேன். அப்படித்தான் இக்கதைகள் பிறப்பெடுத்தன. காரில் பயணித்தபடியே நினைத்துக்கொண்டேன். ”என்னை அவமானப்படுத்திய மனிதர் சில அடி துரத்தில், தனது காரின் பின் சக்கரம் பஞ்சர் ஆகி நிற்கதியாக நின்றிருந்தால் எப்படி இருக்கும்?”. எனக்கு பதிலாக, ஒரு பலம் பொருந்திய மனிதர் இவ்விடத்தில் இருந்திருந்தால், அவர் பழி தீர்க்க விரும்பினால் என்னவாகும்? என நினைத்தேன். உடனடியாக, “ஆஹா, இது மிக அற்புதமான எண்ணமாக இருக்கிறது” என்று எனக்குள்ளாக நினைத்துக்கொண்டேன். எனது பயணத்தை இடையிலேயே நிறுத்திவிட்டு, இந்த கதையை எழுதத் துவங்கினேன். நான் என்ன செய்தேன் என்றால், நிஜ வாழ்க்கையில் எனக்கு நேர்ந்த அனுபவங்களை தொகுத்து, அதனை புனைவால் மாற்றி உருவாக்கினேன்.

திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் புனைவின் சாத்தியங்களை கொண்டாடுவதாக நீங்கள் உணருகிறீர்கள். யதார்த்த உலகின் நாடகீய தருணங்களாக அல்லாமல், ’ஹிட்ச்காக் வழக்கும்’ எனும் தொலைக்காட்சி தொடரின் மேம்பட்ட ஒரு அத்தியாயமாகவோ அல்லது டிவைலைட் ஸோனின் ஒரு பகுதியாகவோ அல்லது அமேஸிங் ஸ்டோரீஸின் ஒரு அங்கமாகவோ பார்க்கிறீர்கள். இது மிக புதியதாக இருக்கிறது. படத்தில் மிகச் சிறந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதனை எப்படி சாத்தியப்படுத்தினீர்கள்?

இவர்கள் அனைவருமே அர்ஜெண்டினாவின் மிக சிறந்த நடிகர்கள். இவர்கள் எல்லோரையும் ஒரே திரைப்படத்தில் இதுவரையில் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பேயில்லை. ஏனெனில், ஒவ்வொருவரும் அவரவர் நடிக்கும் திரைப்படங்களில் மைய கதாப்பாத்திரமாக நடிப்பவர்கள். ஆனால், இந்த திரைப்படத்தின் தன்மை இவர்கள் எல்லோரையும் அணுகும் வாய்ப்பை எனக்கு உருவாக்கிக் கொடுத்தது. அவர்கள் இந்த திரைக்கதையை முழுமையாக உள்வாங்கிக் கொண்டார்கள். எனினும், எனக்கு அவர்கள் ஒவ்வொருவரும் பத்து தினங்களுக்கு மட்டுமே தேவையாய் இருந்தார்கள். இவை குறுங்கதைகளாக இருந்ததால், மாதக்கணக்கில் அவர்களின் தேவை இருக்கவில்லை. அதனால், அவர்களை எல்லோரையும் நாங்கள் அணுகினோம்.

ஒவ்வொருவருமே தனித்துவம் மிகுந்த நடிகர்கள். பலரும் மேடை நாடகத்துறையில் இருந்து வந்தவர்கள்.மிகுதியான திறன்கொண்ட மனிதர்களுடன் இணைந்து வேலை செய்யவே நான் விரும்பினேன். நடிகர்கள் மட்டும் அல்லாமல், எனது திரைப்படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எனக்கு கிடைத்த தயாரிப்பாளர்கள் என அனைவருமே மேம்பட்ட கலைஞர்கள். அதனால், ஒரு கூட்டு உழைப்பாக உருவான இத்திரைப்படத்தின் இயக்குனராக நான் இருந்திருக்கிறேன் என்பதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி உருவானது.

உங்களது படைப்பாக்க குழுவினர் பற்றியும், அவர்களது பங்களிப்பு பற்றியும் பகிர்ந்து கொள்ள முடியுமா?

ஒளிப்பதிவாளர் ஜேவியர் ஜூலியா, தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் க்ளாரா நோடாரி, இசையமைப்பாளர் குஸ்டோவா சாண்டோலோலா. இவர்கள் அனைவருமே மிகுதியான திறமைசாலிகள். இதுவொரு கனவைப் போலதான் இருக்கிறது. நாம் வியக்கின்ற கலைஞர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சங்கமிக்க செய்யும்போது, திரைப்படம் வடிவரீதியில் வேறொரு தளத்திற்கு நகர்ந்துவிடுகிறது. இவர்களுடன் எனது படைப்பாக்க செயல்பாட்டை பகிர்ந்து உழைத்திருக்கிறேன் என்பது என் வாழ்நாள் பெருமையாகும். இதுவொரு கணவன் – மனைவி போன்ற கூட்டணி. இருவருக்குமிடையில் ஒருமித்த உணர்வு உருவாகின்றபோது, வாழ்க்கை மேலும் மேன்மை அடைகிறது. உதாரணத்திற்கு, குஸ்டோவாவை எடுத்துக்கொள்ளுங்கள். பேபல் மற்றும் புரோக்பேக் மவுண்டன் திரைப்படங்களுக்காக இருமுறை சிறந்த இசையமைப்புக்காக ஆஸ்கர் விருதுபெற்றவர் அவர். குஸ்டோவா அர்ஜெண்டினாவை சேர்ந்தவர் என்றாலும், இதில்தான் முதல்முறையாக ஒரு அர்ஜெண்டேனிய இசையை அவர் வடிவமைத்திருக்கிறார். அவர் எனது திரைப்படத்தில் இருக்கிறார் என்கின்ற உணர்வே அலாதியானது. பெரும் இசைப் படைப்பாளியான அவர் மிகச் சிறந்த பண்புகளை கொண்ட மனிதரும்கூட. ஒவ்வொருவரும் தனது பணியினை நேசிப்புடன் அணுகும்போது, அந்த கூட்டுழைப்பு படத்தினை செறிவுப்படுத்தும்போது பார்வையாளர்களும் அதனை உணர்ந்து அனுபவிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

படப்பிடிப்பு காலம் எவ்வளவு?

ஒட்டுமொத்த திரைப்படமும் எட்டு வார காலத்தில் படம் பிடிக்கப்பட்டது.

முழுமையடைந்த திரைப்படத்தின் முதல் வெட்டு (First Cut) எவ்வளவு நீளம் கொண்டது?

நான் என்ன செய்கிறேன் என்றால், படத்தொகுப்பு அறையில்தான் அதிக வேலை செய்கிறேன். படத்தொகுப்பு அறையில் மாதக்கணக்கில் இருந்திருக்கிறேன். படத்தொகுப்பு கருவியை எனது அறைக்கு கொண்டு வந்து, அதனுடன் ஆறேழு மாதங்கள் வாழ்ந்திருக்கிறேன். எனக்கு திருப்தி உருவாத வரையில், எவரொருவருக்கும் எனது படத்தை காண்பிக்கும் வழக்கம் எனக்கு இல்லை. தொடர்ந்து படத்தொகுப்பில் வேலை செய்து கொண்டிருக்கவே விரும்புகிறேன். ஓரளவுக்கு மனநிறைவு உருவான பிறகுதான், மற்றவர்களிடம் காண்பிப்பேன். இப்படி காண்பிக்கப்படும் திரைப்பிரதி, முதல் வெட்டு அல்ல. தயாரிப்பு குழுவினரிடம் காண்பித்து, அவர்களது கருத்துக்களை தொகுத்துக் கொண்டு, மீண்டும் படத்தொகுப்பு செய்ய ஆரம்பித்துவிடுவேன். திரைக்கதை எழுத்தும் இவ்வகையில்தான் என்னளவில் செயலாற்றுகிறது. பகுதி அளவில் எழுதிய திரைக்கதையை காண்பித்து, “இதனை நான் எழுதி இருக்கிறேன்” என்றெல்லாம் சொல்லும் வழக்கம் எனக்கு கிடையாது. தயாராகிவிட்டதாக முழு நிறைவுடன்
நான் நம்பிய பிறகுதான், மற்றவர்களிடம் காண்பிக்க ஆரம்பிப்பேன். என்னை பொருத்தவரையில், படத் தயாரிப்பாளர்தான் முதல் பார்வையாளர்கள். அதனால், அவர்களை நான் திருப்திப்படுத்தியாக வேண்டும். அதனால், முதல் வெட்டு மூன்று மணி நேரம் ஓடக்கூடிய அளவில் தயார் செய்திருக்கிறேன் என்று சொல்வதற்கெல்லாம் இடமே இல்லை. இது அசலான சதையை போன்றது. அதில் தேவையற்ற கொழுப்புக்கு எல்லாம் இடமில்லை. திரைக்கதை எழுதும்போது, எதுவெல்லாம் தேவை இல்லையோ அதனையெல்லாம், அப்போதே தவிர்த்துவிடுவேன். இதனை நான் மிகத் தெளிவாக, பொருளாதாரரீதியில் பிசகில்லாத படைப்பாக உருவாக்கவே விரும்புகிறேன்.

இந்த எண்ணத்தின் மீதான திரைக்கதை எழுத்து முயற்சியில் நான் நிறைய பயின்றிருக்கிறேன். அதனால், தேவையற்ற சொற்களை திரைக்கதையில் சேர்ப்பதில்லை. உங்களிடம் ஒரேயொரு விரிவான சம்பவ தொடர்ச்சிதான் இருக்கிறது. அதனால், அதனை மூன்று மணி நேரமெல்லாம் தொகுத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. சில சமயங்களில் நான் இப்படி செய்திருக்கிறேன் என்றாலும், பெரும்பாலான நேரங்களில் கச்சிதமான படத்தொகுப்பைதான் செய்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்யும்போது, இதனை நான் கவனத்தில் வைத்திருக்கிறேன். ஹிட்ச்காக் ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார். இரண்டு நபர்கள் ஒரு மருத்துவமனையில் சண்டையிட்டு கொள்கிறார்கள் என்றால், அவ்விடத்தில் துப்பாக்கியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அந்த சூழலில் என்ன பொருள் கிடைக்குமோ அதை மட்டும் பயன்படுத்தினால் போதுமானது. காரில் இதுப்போல ஒரு சம்பவம் நிகழ்கிறதென்றால், காருக்குள் என்ன பொருள் கிடைக்குமோ அதுதான் ஆயுதமாக பயன்படுத்தப்பட வேண்டும். எனக்கு இது பிடித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தின் உருவாக்கத்தின் போது, உங்களை பற்றி என்ன தெரிந்து கொண்டீர்கள்?

ஆஹா. நிறைய கற்றிருக்கிறேன். இந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கு முன்பு, இதன் உருவாக்கத்திற்கு தேவையான உபகரணங்களை நான் வைத்திருக்கவில்லை. இந்த பட உருவாக்கத்தின் போதுதான் அவைகளை வடிவமைத்து பயன்படுத்தி கொண்டேன். Wild Tales-க்கு முன்னதாக நான்கு செயல்களை செய்திருக்கிறேன். இரண்டு முழு நீள திரைப்படங்களும், இரண்டு தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி இருக்கிறேன். ஒரே சமயத்தில், எழுத்து பணியையும், படம்பிடிப்பு பணியையும், படத்தொகுப்பு பணியை மாற்றி மாற்றி செய்துக் கொண்டிருந்தேன். இது ஒருவகையிலான பயிற்சி முறைதான் என்றாலும், நாள்போக்கில் ஒரு இயக்குனருக்கு அவரது படைப்பாக்க செயல்பாட்டில் இது மிகப்பெரிய இடர்பாட்டை உருவாக்குகிறது என்பதை உணர்ந்துகொண்டேன். படப்பிடிப்பை நன்கு திட்டமிட்டு முன் ஆயத்த பணிகளை படப்பிடிப்பு துவங்கும் முன்னதாகவே நான் மேற்கொண்டிருக்க வேண்டும் என்று விரும்பினேன். இந்த திரைப்படத்தின் உருவாக்க பணிகள் துவங்கியபோது, படப்பிடிப்பு தளத்திலேயே என் முழு நேரத்தையும் செலவிடத் துவங்கிவிட்டேன். அவ்விடத்திலேயே உறங்கவும் ஆரம்பித்துவிட்டேன். கதை உணர்வை உள்ளும் புறமுமாக உள்வாங்கிக்கொள்வதற்காக, ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் பல்வேறு வகையில் குறுக்கீடுகளை நிகழ்த்தி புரிந்து கொள்ள முயற்சித்தேன். இந்த திரைப்படம் முழுக்கவும் இது போல ஏதோவொன்று நிகழ்ந்துக கொண்டுதான் இருந்தது. உதாரணத்திற்கு, திரைப்படத்தின் ஒரு பகுதியில், காரின் உட்புறத்தில் இருந்து வெளிபுறத்துக்கு நகர்கையில், ஒட்டுமொத்த செய்கையின் முட்டாள்தனத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மறுபடியும் நீங்கள் காருக்குள் நுழைந்துவிடும்போது, நீங்கள் தப்பிக்கவும், உங்களை தற்காத்துக் கொள்ளவும் முயற்சிக்கிறீர்கள். இது அபாயகரமானதாகவும், அதே நேரத்தில் கேளிக்கையான நிகழ்வைப் போலவும் இருந்தது.

Agustin Almodovar and Pedro Almodovar
Agustin Almodovar and Pedro Almodovar

பெத்ரோ அல்மோதவர் மற்றும் அகஸ்டின் அல்மோதவர் தயாரிப்பாளர்களாக என்ன வகையிலான பங்களிப்பை இந்த படத்துக்கு செய்திருக்கிறார்கள்?

உண்மையில், நான் அவர்களை முன்னதாகவே சந்தித்திருக்கிறேன். 2006ல் வெளியான எனது முந்தைய திரைப்படத்தை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அந்த படத்தின் பெயர் On Probation. அர்ஜெண்டினிய திரைப்படமான அதனை ஒரு திரையரங்கத்தில் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அந்த திரைப்படம் இருவரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அதனால், என்னை சந்திக்க வரும்படி அழைத்தார்கள். என்னிடம் படத்தைப் பற்றி புகழ்ந்துப் பேசினார்கள். அதன்பிறகு, அகஸ்டின் அர்ஜெண்டினாவுக்கு வந்தபோது, இருவரும் சேர்ந்து இரவு உணவை ஒன்றாக சாப்பிட்டோம். அப்போது எனது அடுத்த திரைப்பட முயற்சிப் பற்றி விசாரித்த அகஸ்டின், தானும் பெத்ரோவும் இணைந்து எனது அடுத்த திரைப்படத்தை தயாரிக்க விரும்புவதாக தெரிவித்தார்கள். ஆமாம். அது என்னை பெரிளவில் நெகிழ்வு கொள்ள செய்தது. அந்த தருணத்தில் பெருமையாக உணர்ந்தேன். இந்த திரைப்படத்தை உருவாக்கலாம் என்று முடிவு செய்த உடன், அர்ஜெண்டினாவில் எனது தயாரிப்பாளராக இருந்த ஹுகோ சிக்மேனும் நானும், திரைக்கதையை பெத்ரோ மற்றும் அகஸ்டின் அல்மோதவருக்கு அனுப்பி வைத்தோம். அவர்களும் உடனடியாக ஆர்வத்துடன் இதில் இணைந்து கொண்டார்கள்.

பெத்ரோ தனக்கென தனித்த படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கிறார். சுதந்திரமான சூழலில் படைப்பாளி இயங்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில் நம்பிக்கை கொண்டவர் அவர். அவருக்கு எப்போது தோன்றுகிறதோ, அல்லது எப்போது தேவை ஏற்படுகிறதோ அப்போதுதான் படப்பிடிப்புக்கு செல்கிறார். அதனால், அவர் திரைப்படங்களை தயாரிக்கின்ற போதும், அதே வகையிலான் சூழலை மற்றைய இயக்குனர்களுக்கும் உருவாக்கி கொடுக்க விரும்புகிறார். அவர் என்னிடம், “திரைக்கதை அற்புதமாக இருக்கிறது. இதிலிருந்து ஒரு நிறுத்தல் குறியைக்கூட மாற்ற வேண்டாம். உனக்கு மட்டும்தான் இதனை எப்படி படமாக்க வேண்டும் என்று தெரியும். அதனால், மற்ற எவரைப் பற்றியும் நீ கவலைப்பட தேவையில்லை. அதனால், உனது கலையை உன் விருப்பம்போல செய்” என்று ஊக்கமளித்தார். அவ்வளவுதான். பிறகு, நிறைவடைந்த படத்தை நான் அவரிடத்தில் காண்பித்தேன். இருவரும் திரைப்படத்தைப் பற்றி உரையாடினோம். அவர் உலகம் முழுக்க அறியப்பட்ட இயக்குனர். அதனால், எனது திரைப்படத்துக்கு வெளியுலக கவனிப்பு தேவைப்பட்டதால், கேன்ஸ் திரைப்பட விழா போன்ற இடங்களில் எனது திரைப்படம் கலந்து கொள்ள அவரே முதல்நிலையில் நின்று விளம்பர தூதராக செயல்பட்டார். கேன்ஸில் ஊடக நேர்காணலிலும் கலந்து கொண்டார். பல்வேறு நாடுகளுக்கு படத்தை எடுத்துச் சென்று பலரையும் பேச வைத்தார். எனது திரைப்படம் பெரும் புகழ்பெற்றதற்கு அவரே காரணம். கிட்டதட்ட இப்படத்தின் பெரும் பாதுகாவலராகவும், பொறுப்பாளரும் செயல்பட்டார்.   

நன்றி - அம்ருதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com