‘முத்துக்கு முத்தாக’ வெளிவந்து 9 வருடங்கள்: பொக்கிஷத்தைத் தொலைப்பது எப்படி?

அவர்கள் போன பிறகு போய்விட்டார்களே என அழுவதை விட, வாழும் காலத்தில் அவர்களைப் பொக்கிஷமாகப் பார்த்துக்கொள்வது...
‘முத்துக்கு முத்தாக’ வெளிவந்து 9 வருடங்கள்: பொக்கிஷத்தைத் தொலைப்பது எப்படி?

சகோதரப் பாசம், பங்காளிச் சண்டை, பாகப்பிரிவினை எனப் பழைய தமிழ் சினிமாப் பாணியை மீண்டும் மில்லினிய யுகத்தில் கொண்டுவந்து ஜெயித்துக்காட்டியவர் இயக்குநர் இராசு மதுரவன். 

தமிழர் கலாசாரம், பண்பாடு, நாகரிகம் போன்றவை இளைய தலைமுறைக்குத் தெரியவேண்டும் என்பதால் குடும்பக் கதைகளைத் தொடர்ந்து படமாக்கி தனக்கென தனி பாணியை உருவாக்கினார். உண்மையில் இவர் தமிழ் சினிமாவில் அறுந்துகிடந்த குடும்பச் சங்கிலியை மீண்டும் இணைத்து புதிய தடத்தை உருவாக்கியவர் என்று கூறலாம்.

பாசமலர், பாவ மன்னிப்பு, பாலும் பழமும், பாகப்பிரிவினை, பந்த பாசம் என்று குடும்ப உறவுகளைப் பற்றி எடுத்த பீம்சிங்கையும் சித்தி, பணமா பாசமா என பெண்களை மையப்படுத்திய குடும்பப் படங்களை எடுத்த கே.எஸ்.கோபால கிருஷ்ணனையும் சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி என 80களிலும் விடாமல் குடும்பப் படங்கள் மூலம் ரசிகர்களை உணர்ச்சிக்குள்ளாகிய விசுவையும் நினைவுபடுத்தி, அக்கதைகளை எக்காலத்திலும் ரசிகர்களால் உருகிப் போக முடியும் என்று நிரூபித்தவர் இராசு மதுரவன். 2013-ல் அவர் இறந்தபிறகு அந்தக் குடும்பச் சங்கிலி அறுபட்டுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். 

இராசு மதுரவனின் பின்புலமும் அவருடைய படங்களுக்கான ஒரு காரணம். 

திண்டுக்கல் மாவட்டம் பேரணை அருகே எஸ். மேட்டுப்பட்டியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் இராசு மதுரவன். உசிலம்பட்டி அரசுப் பள்ளியில் படித்தார். திண்டுக்கல் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் விவசாயப் படிப்பை ஓர் ஆண்டு மட்டும் படித்துவிட்டு சினிமா ஆசையில் 1987-ல் சென்னைக்கு வந்துவிட்டார். ஜெயராம், மீனா நடிப்பில் மணமகன் தேவை என்கிற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் பாதியில் நின்றுபோனது. அஜித் கதாநாயகனாக நடிக்க, நம்ம வீட்டு கல்யாணம் என்கிற படத்தையும் ஆரம்பித்து அதுவும் பாதியில் நின்றிருக்கிறது. பிறகு சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் பூ மகள் ஊர்வலம் படத்தை இயக்கினார். பிரசாத், ரம்பா நடித்த அந்தப் படம், மலரே ஒரு வார்த்தை பேசு பாடலால் பிரபலமானது. கருப்பையா என்கிற இயற்பெயரை சினிமாவுக்கு மதுரவன் என மாற்றினார். இனிஷியலை ஏன் மறந்துவிட்டாய் எனத் தந்தை இராசு கேட்க, இராசு மதுரவன் ஆக மாறினார். வடிவேலுவுடன் இணைந்து போக்கிரி, திமிரு போன்ற 100 படங்களுக்கும் மேல் காமெடி டிராக் எழுதியுள்ளார். 2008-ல் லாரன்ஸ், சினேகா நடித்த பாண்டி படத்தை இயக்கினார். 

2009-ல் இயக்கிய மாயாண்டி குடும்பத்தார் படம் தான் இராசு மதுரவனுக்கு ஓர் அடையாளத்தை அளித்தது. குடும்பக் கதைக்குத் தமிழ் சினிமாவில் மார்க்கெட் இன்னமும் உள்ளது என்பதை நிரூபித்த படம் அது. 

மாயாண்டி குடும்பத்தார் படத்தில் 10 இயக்குநர்கள் நடித்திருந்தார்கள். கிராமத்துக் கதை என்பதால் பெரிய நடிகர்கள் இப்படத்தில் நடிக்கத் தயங்கியதால், மண் பாசம் கொண்ட இயக்குநர்களிடம் கதை சொல்லி அவர்களை நடிக்க வைத்துள்ளார். 

இதற்கு அடுத்ததாக கோரிப்பாளையம் படத்தை இயக்கினார். ஆனால் அந்த அளவுக்குக் கவனம் பெறவில்லை. பிறகு ஐந்து மகன்களைப் பெற்ற பெற்றோரின் வாழ்க்கையைச் சொல்லும் விதமாக முத்துக்கு முத்தாக படம் எடுத்து தன் திறமையை மீண்டும் நிரூபித்துக் காண்பித்தார் இராசு மதுரவன். முத்துக்கு முத்தாக, 2011 மார்ச் 18-ல் வெளியானது. 

‘திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டியில் உள்ள தவசி - பேச்சியம்மாளைப் பத்திதான் நாம பார்க்கப் போறோம். ஐஞ்சு பொம்பளைப் பிள்ளையைப் பெத்து அரசனும் ஆண்டி ஆவான்னு சொல்வாங்க. ஆனா தவசியும் பேச்சியும் சிங்கம் மாதிரி ஐஞ்சு ஆம்பளைப் பிள்ளைகளைப் பெத்து வைச்சிருக்காங்க. அவங்க எப்படி வாழ்ந்தாங்க, வாழப்போறாங்க என்பதைத்தான் பார்க்கப்போறோம்’ என்று படத்தின் டைட்டில் கார்டிலே கதையைக் குறிப்பிட்டு விடுகிறார் இயக்குநர். 

நட்ராஜ், விக்ராந்த், ஹரிஷ், வீரசமர், பிரகாஷ் என 5 பேரும் மகன்கள். இளவரசுவும் சரண்யாவும் அவர்களுடைய பெற்றோர். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் சகோதரர்களின் பாசத்தை மையமாகக் கொண்டு படமெடுத்த இராசு மதுரவன், இந்தப் படத்தில் திருமணமான மகன்களால் பெற்றோர் படும் அவஸ்தையை வெளிப்படுத்தியிருக்கிறார். 

முதல் காட்சியிலேயே ஐந்து மகன்களைப் பெற்றால் ஒரு தந்தைக்கு எவ்வளவு வசதி என்பது உணர்த்தப்படுகிறது.

தங்களுடைய அப்பா இளவரசைப் பேருந்து ஏறும்போது அவமரியாதையாகப் பேசிவிடுகிறான் ஒருவன். விஷயம் தெரிந்து அவனை முதலில் வெளுத்துக்கட்டுகிறார்கள் இரு மகன்களும். அடி வாங்கியவன், மருத்துவரிடம் கையில் கட்டுப் போட்டு வரும்போது மீதமுள்ள 3 மகன்களும் தங்கள் பங்குக்கு அவனைச் சாத்துகிறார்கள். அடேங்கப்பா, 5 மகன்கள் இருந்தால் பீமபலம் போல என்று பார்வையாளர்களை உணரவைத்த காட்சி இது. ஆனால் படத்தின் இறுதிக்கட்டத்தில் வருகிற ஒரு வசனம் - ஐஞ்சு புள்ளைங்க இருந்தும் உனக்கு ஒரு வாய் சோறு போட யாரும் இல்லையேப்பா...

காட்சிகள் தலைகீழாக மாறியது எப்படி?

மூத்த மகன் நட்ராஜுக்கு வேலை கிடைக்கிறது. தகவலைக் கொண்டு தபால்காரரை விரட்டிப் பிடித்து அவருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிந்தும் அவருக்கு அனைவரும் இனிப்பு ஊட்டி விடுகிறார்கள். முதலில் இரு மகன்களுக்குத் திருமணம் நடக்கிறது. இதுவரை சந்தோஷமான வாழ்க்கை. நமக்கும் அந்தச் சந்தோஷம் தொற்றிக்கொண்டாலும் குடும்பத்தில் புதிய உறவுகள் உள்ளே நுழையும்போது எதிர்பார்க்கப்படும் பூசல்கள் இங்கும் நிகழ்கின்றன. காட்சிகள் தடம்மாறுகின்றன.

பல குடும்பங்களில் நிகழும் சண்டைச் சச்சரவு மற்றும் மன உளைச்சல்களுக்குக் காரணமே திருமணம் தான் என்பது அடுத்து வரும் காட்சிகளில் உணர்த்தப்படுகின்றன. மேலும் அப்பா, அம்மாவை விட்டுக்கொடுக்காமல் மனைவிகளிடம் மகன்கள் படும் கஷ்டங்களை பூடகமாக இல்லாமல் வெளிப்படையாகவே சொல்லிவிடுகிறார் இயக்குநர். புதிதாகத் திருமணம் செய்து வரும் பெண்கள், அம்மா பாசத்தை வெளிப்படுத்தும் கணவனை இம்சை செய்வதாலும் மாமியார் மாமனாரை உதாசீனம் செய்து அவமானப்படுத்துவதாலும் ஏற்படும் விளைவுகள் தான் படத்தின் இறுதி நிமிடங்களைத் தீர்மானிக்கின்றன. 

வெறும் கையோடு வீட்டுக்கு வரும் அப்பா, அம்மாவிடம் ஆட்டுக்கறி வாங்கிக்கொடுத்துத் தன் வீட்டுக்கு அனுப்புவார் மூத்த மகன் நட்ராஜ். ஆனால் இந்த உண்மையை அம்மா, தன் மனைவியிடம் சொன்னது தெரியாமல், ‘கறி நல்லாருக்கே, யார் வாங்கிட்டு வந்தது?’ என்று கேட்டு மாட்டிக்கொள்வார். இதுபோல எத்தனைமுறை என்னை ஏமாத்தியிருக்க என்று இரவில் கணவனிடம் சண்டை போடுவார் மனைவி. இத்தனை மகன்கள் இருக்கும்போது இங்கு ஏன் வருகிறார்கள் என்று இளவரசு, சரண்யாவுக்குக் கேட்கும்படிப் பேசுகிறார் நட்ராஜின் மனைவி. அடுத்த நாள் காலையில் பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார்கள் இளவரசும் சரண்யாவும். சாப்பிடும்போது அவமானப்படுத்தும் மாமனார், மாமியாரிடம் கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் இருக்கும் பிரகாஷ், அம்மாவிடம் வந்து பழைய சோறு உண்ணும் காட்சி என 2010களிலும் அந்தக் கால சினிமாவைப் பார்க்கும் உணர்வு வந்துவிடுகிறது. அடுத்த ஜென்மத்திலேயாவது நீ ஆம்பளையா பொறக்கணும்டி... அப்பதான் ஒரு ஆம்பளையோட வலி தெரியும் என்று நட்ராஜ் தன் மனைவியிடம் பேசும் வசனத்துக்கு எல்லாத் திரையரங்குகளிலும் கைத்தட்டல்கள் கிடைத்தன. 

குடும்பக் காட்சிகளாகச் சென்றுகொண்டிருக்கும் படத்தில் விக்ராந்த் - மோனிகா காதல் புதிய காற்று. குடும்பப் படங்களில் காதல் காட்சிகளின் நீளத்தையும் அதிகரிக்கலாம் என்று எண்ணவைத்தன. 

ஐந்து மகன்களுக்கும் கிளைக்கதைகள் உண்டு. ஐந்து மகன்களின் கதைகளும் கடைசியில் அவர்களுடைய பெற்றோரின் வாழ்க்கையில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று சோகம் பிழியப் பிழிய சொல்லப்பட்டுள்ளது. 

சரண்யாவுக்குக் காச நோய் என்று தெரிந்து தன் குழந்தைகளை அருகில் விடாத மருமகள், வீட்டோட மாப்பிளையான மகன் அம்மாவிடம் வந்து சாப்பிடுவது என கண்கலங்க வைக்கும் காட்சிகள் படத்தில் வரிசையாக வருகின்றன. ஒரு மருமகள் கூட நல்லவராக இருப்பதில்லை இப்படத்தில். எல்லோருமே கணவனிடம் சண்டை போட்டு, மாமியார் மாமனாரை அவமரியாதை செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு என்ன என்பதுதான் கடைசிக்காட்சி. 

எப்போதுமே குடும்பப் படங்களுக்கு வசனங்கள் தான் பலமாக அமையும். இந்தப் படத்துக்கும் அந்தப் பலம் உண்டு. இத்தனை வருஷம் என் கூட வாழ்ந்ததில கொஞ்சமாவது சந்தோஷமாய் வைத்திருந்தேனா என்று இளவரசு சரண்யாவிடம் கடைசியில் கேட்கும் வசனம் தான் படத்தின் முத்திரை வசனம். 

எம்.பி.பி.எஸ். படிச்சுட்டு நான் இந்தக் கிராமத்துக்கு டாக்டரா வந்தேன்? இங்கே ஜாதிச்சண்டை அதிகம். நிறைய பேர் வெட்டிக்குவாங்க. அடிச்சுக்குவாங்க. நாலு காசு சம்பாதிக்கலாம்னுதான்.

- வீட்டோட மாப்பிளையா? இது சரியா வருமா?

நம்ம பசங்க எப்படி வாழ்றாங்கனு பார்க்கணும். எங்க வாழ்றாங்கனு பார்க்கக் கூடாது.

- என்னதான் ஏசி ரூம்ல சாப்பிட்டாலும் அம்மா கையால சாப்பிட்ட மாதிரி வருமா?

- அடுத்த ஜென்மன்னு இருந்தா நீ ஆம்பளையா தான் பொறப்ப.

பத்து மாசம் சுமந்து பெத்தா தான் அந்த வலி தெரியும். 

உன்னை மாதிரி பொம்பளைக்கு 10 மாசம் தாண்டி. ஆனால் கட்டைல போற வரைக்கும் இந்த சுமை எங்களுக்குத்தான். அடுத்த ஜென்மத்துல நான் உனக்கு பொண்டாட்டியா இருந்து உன்னைப் பழிவாங்காம விடமாட்டேன். 

ஓஹோ, சாபம் குடுக்கறீங்களா?

கையாலாகாத ஆம்பளைங்களால சாபம்தான்டி கொடுக்க முடியும். 


இளவரசு - சரண்யா ஜோடி, மகன் மருமகள்களால் நிம்மதி இழந்த பல பெற்றோர்களின் வாழ்க்கையைக் கண் முன் நிறுத்துகிறார்கள். பெட்டிக்கடைகளுக்கு முறுக்கு, அதிரசம் சுட்டு விற்பனை செய்து, அதன்மூலமாகப் பையன்களை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தாலும் மகன்களின் திருமணத்தால் அவர்களுடைய வாழ்க்கை திசைமாறுவதையும் அதனால் இவர்கள் படும் அவஸ்தைகளையும் இருவரும் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவந்துவிடுகிறார்கள். 

அரளி விதையைக் குடிச்சுட்டுச் சாகவேண்டியதுதானே என்று ஏசுகிறாள் மருமகள். சரி, அப்படியே செய்துவிடுகிறோம் என்று அவர் சொன்னதை அப்படியே நிறைவேற்றி விடுகிறார்கள் இளவரசுவும் சரண்யாவும். பார்க்கும் நமக்குத்தான் கதிகலங்கிப் போய்விடுகிறது.

குழம்பில் அரளி விதையைக் கலந்துவிடுகிறார் சரண்யா. சாப்பிடும்போது அதை அறிந்துகொள்ளும் இளவரசு, என்னைக்கு இல்லாமல் குழம்பு இன்னைக்கு ருசியா இருக்கு. இன்னும் கொஞ்சம் ஊத்து என்று கேட்கிறார். பயந்தபடி இன்னும் கொஞ்சம் உணவு பரிமாறுகிறார் சரண்யா. அழுதுகொண்டே சரண்யா சாப்பிடுகிறார். உண்மையைத் தெரிந்துகொண்டு அமைதியாகச் சாப்பிடுகிறார் இளவரசு. இருவருமே எதுவும் பேசிக்கொள்ளாமல் முழு உணவையும் உண்டு முடிக்கிறார்கள். பார்க்கும் நமக்கு பக்கென்று இருக்கிறது. சாப்பிட்டு முடித்து கணவனுக்கு வெத்தலை மடித்துக்கொடுக்கிறார் சரண்யா. சாக இன்னமும் சில நிமிடங்களே உள்ளன என்பதை அறிந்த இளவரசு, சரண்யாவிடம் கேட்கிறார். உன்னை நான் சந்தோஷமா வைச்சிருந்தனா? 

சாமி... என்று இதற்கு அழுகும் சரண்யா, அப்போதுதான் எதற்காக விஷம் கலந்தேன் என்று சொல்கிறார். நாக்குல மேல பல்லு போட்டு பேசும்போது பாதி உசுரு போயிருச்சு. நான் மட்டும்தான் சாகணும்னு நினைச்சேன். இவளுக கிட்ட உங்களை அநாதையா விட்டுட்டு போக மனசில்லை. அதான், கூடவே கூட்டிட்டு போகலாம்னு முடிவு பண்ணிடேன். 

புரியுது. யாருக்கும் பாரமா இருக்கக் கூடாதுனு முடிவு பண்ணிட்ட என்கிறார் இளவரசு. தலையில் அடித்து அழுகிறார் சரண்யா. கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்துல நீ சொல்லி எதை நான் மீறி இருக்கேன். பேச்சி, வா போவோம் என்கிறார் இளவரசு. அப்படியே இளவரசு அமர்ந்த நிலையில் இருக்க, அவர் மடியில் தலை வைத்து சரண்யா இருக்க, அதே நிலையில் இருவரும் உயிர் துறக்கிறார்கள். இக்காட்சிக்கு அழாத கண்களே இருக்கமுடியாது. 

அப்பா, அம்மாவைப் பார்க்க வரும் ஐந்து மகன்களும் அவர்கள் இருவரும் உட்காந்த நிலையில் இறந்திருப்பதைக் கண்டு பதறுகிறார்கள். தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார்கள். ஐந்து பிள்ளைகளையும் பெற்றுக்கொண்டு அநாதையாகப் போயிட்டீங்களே என்று கதறுகிறார் நட்ராஜ். 

குற்ற உணர்ச்சி அனைவரையும் வாட்டுகிறது. அப்பா, அம்மா நினைவுகளால் சோகம் குறையாமல் இருக்கிறார்கள் மகன்கள். அவர்கள் வாழ்ந்த வீடு இனிமேல் எங்களுக்குக் கோயில் என்கிறார்கள். 

நம்மைப் படைத்தது சாமி என்று சொல்கிறார்கள். ஆனால், நம்மைப் படைத்த உண்மையான சாமி அப்பனும் ஆத்தாளும் தான். அவர்கள் போன பிறகு போய்விட்டார்களே என அழுவதை விட, வாழும் காலத்தில் அவர்களைப் பொக்கிஷமாகப் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமை என்று கடைசியில் வாய்ஸ் ஓவரில் அறிவுரை சொல்லப்படுகிறது. பாரமான மனதுடன் தான் படத்தைப் பார்த்து முடிக்க முடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com