‘சப்டைட்டில்' பிக் பாஸ்!

Hey Bala, Come Kick me and go... பாலா வந்து உதைச்சிட்டு போ...
‘சப்டைட்டில்' பிக் பாஸ்!

Hey Bala, Come Kick me and go...

பாலா வந்து உதைச்சிட்டு போ...

இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல சமயங்களில் இப்படித்தான். ஏதோ அயல்நாட்டுப் படத்தைப் பார்ப்பது போல தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை சப் டைட்டிலுடன் பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டார்கள் போட்டியாளர்களும் விஜய் தொலைக்காட்சியும்.

ஆரம்ப சீசன்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் பேசினாலே தண்டனை உண்டு. இதற்காக நீச்சல் குளத்தில் போட்டியாளர்களைத் தள்ளும் காட்சிகளையெல்லாம் ரசிகர்கள் பார்த்துள்ளார்கள். இதனால் போட்டியாளர்களும் கவனமாக ஆங்கிலத்தில் உரையாடாமல் தமிழில் உரையாட மெனக்கெடுவார்கள். 

ஆனால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை சப்டைட்டிலுடன் பார்க்கவைத்து விட்டார்கள். பாலா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, அர்ச்சனா, கேப்ரியலா, சுசித்ரா எனப் பலரும் சக போட்டியாளர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடுவதையே விரும்புகிறார்கள். இதனால் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியில் தமிழில் சப்டைட்டில் போடும் அவலம் உருவாகியுள்ளது. அதிலும் நேற்று சப்டைட்டில் மிக அதிகம். 

பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கிராமங்களிலும், ஆங்கிலம் தெரியாதவர்களும் பார்க்கிறார்கள் என்பது கமலுக்கும் பிக் பாஸ் குழுவுக்கும் விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்துக்கும் தெரியாதா? ஒரு போட்டியாளர் சற்று கண் அசந்தாலே நாய் குறைக்கும் சப்தத்தை எழுப்புவர்கள் ஒரு முழு வாக்கியம் மட்டுமல்லாமல் சில நிமிட உரையாடல் முழுவதும் ஆங்கிலத்தில் நிகழும்போதும் கண்டும் காணாமல் இருப்பது நியாயமா? 

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மராத்தியில் பேசாதே, எரிச்சலாக உள்ளது என்று பிரபல பாடகர் குமார் சானுவின் மகன் பேசியதற்கே அரசியல் கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்தன. குமார் சானு, அவருடைய மகன், குடும்பம், தொலைக்காட்சி நிர்வாகம் எனப் பலரும் இச்சம்பவத்துக்கு வருத்தமும் விளக்கமும் அளித்தார்கள். அந்தளவுக்கு மொழி குறித்த நெருக்கடியும் அக்கறையும் மற்ற பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் உள்ளது. ஆனால் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் உரையாடும் போட்டியாளர்களுக்கு எவ்வித தண்டனையோ எச்சரிக்கையோ தரப்படுவதில்லை. இதனால் போட்டியாளர்களும் தமிழில் பேசுவதைத் தவிர்த்துவிட்டு ஆங்கிலத்தில் அதிகமாகப் பேச ஆரம்பித்து விட்டார்கள். பிக் பாஸ் நிர்வாகமும் பார்வையாளர்களுக்கு அக்கறை காண்பிப்பது போல அதற்கு சப்டைட்டில் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு வாரமும் ஒரு நூலை அறிமுகப்படுத்துகிறார் பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் ஹாசன். ஆனால் நிகழ்ச்சியிலேயே தமிழ்த் தட்டுப்பாடு இருக்கும்போது ஒரு நாள் மட்டும் இலக்கியச் சேவை புரிந்து என்ன பயன்?

தமிழ் நிகழ்ச்சியில் தமிழ் சப்டைட்டில் போடும் அவலம் இனிமேலாவது இருக்கக்கூடாது. வார இறுதியில் தமிழுக்காகக் குரல் கொடுக்கும் கமல், இதைக் கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com