எஸ்.பி.பி.க்காக உருகியது முதல் பிரசாத் ஸ்டூடியோ சர்ச்சை வரை: 2020-ல் இளையராஜா என்ன செய்தார்?

2020 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான இந்த ஒரு வருட காலக்கட்டத்தில் இளையராஜாவின் வாழ்வில்...
எஸ்.பி.பி.க்காக உருகியது முதல் பிரசாத் ஸ்டூடியோ சர்ச்சை வரை: 2020-ல் இளையராஜா என்ன செய்தார்?

2020 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான இந்த ஒரு வருட காலக்கட்டத்தில் இளையராஜாவின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு:

ஜனவரி 15, 2020: இளையராஜாவுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கேரள அரசு கௌரவிப்பு

இசைக் கலைஞா்களுக்கு கேரள அரசு சாா்பில் வழங்கப்படும் ‘ஹரிவராசனம்’ விருது, இந்த ஆண்டு இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.

சபரிமலை சந்நிதான வளாகத்தில் காலையில் நடைபெற்ற விழாவில் இவ்விருதினை இளையராஜாவுக்குக் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வழங்கினார். விருதுடன் ரூ. 1 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

காலையில் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்த இளையராஜா, விழாவில் தாம் இசையமைத்த இரு ஐயப்பன் பாடல்களையும் பாடினார்.

இசைக் கலைஞா்களை கௌரவிக்கும் நோக்கில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ‘ஹரிவராசனம்’ விருதை கேரள அரசு வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருது, 2018-ல் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2019-ஆம் ஆண்டுக்கான விருது புகழ்பெற்ற இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகருமான இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளதாக கேரள அரசு அறிவித்தது.

‘ஹரிவராசனம்’ விருதை முதல் முறையாக பின்னணிப் பாடகா் கே.ஜே.யேசுதாஸ் பெற்றாா். அவருக்குப் பிறகு, பின்னணிப் பாடகா்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எம்.ஜி.ஸ்ரீகுமாா், கங்கை அமரன், கே.எஸ்.சித்ரா உள்ளிட்டோா் இவ்விருதைப் பெற்றுள்ளார்கள்.

பிப்ரவரி 28: இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ இடையிலான பிரச்னையை 2 வாரங்களில் உரிமையியல் நீதிமன்றம்  முடிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். பிரசாத் ஸ்டுடியோவில் கடந்த 42 ஆண்டுகளாக சுமார் 6000 பாடல்கள் இசையமைத்துள்ளேன். வாடகை கொடுக்கத் தயாராக உள்ளேன். இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையிலான வழக்கு ஏற்கனவே 17வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இட உரிமை தொடர்பாகப் போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்தும் சிட்டி சிவில் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும். பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை காலி செய்ய தடை விதிக்கவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டார்.

இதையடுத்து, இளையராஜா தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இளையராஜா - பிரசாத் ஸ்டூடியோ இடையிலான பிரச்னையை 2 வாரங்களில் உரிமையியல் நீதிமன்றம்  முடிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 6: இசை எனக்கு கடவுள் கொடுத்த பரிசு என இளையராஜா பெருமிதம்!

மார்ச் 14 -ஆம் தேதி மலேசியா சுற்றுலாத் துறை சாா்பில் மலேசிய சா்வதேச வா்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் இசையமைப்பாளா் இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெறுவதற்காக சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளா்கள் சந்திப்பில் இளையராஜா பேசியதாவது:

என்னுடைய இசை உங்களுக்கெல்லாம் கிடைத்தது பரிசு என சொல்கிறீர்கள். என்னுடைய இசை எனக்கு கிடைத்ததே பரிசு. இந்த உடல் எப்படி வந்தது என நமக்குத் தெரியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு தேகத்தோடு இந்த உலகத்துக்கு வருகிறோம். ஒவ்வொரு துறையில் நுணுக்கம் பெற்றவர்களாக ஆகிறோம். இப்படி இறைவன் எல்லா விஷயங்களையும் கொடுத்திருக்கிறான் என்பது அதிசயம். அந்த வகையில் இறைவன் எனக்கு இசையை கொடுத்தது எவ்வளவு பெரிய பரிசு. ஒரு பாடலை நீங்கள் கேட்கிறீர்கள். நான் இசையமைக்கவில்லை என்றால் அப்பாடலே இல்லை. அதுதான் இங்கே முக்கியம். என்னுடைய இசை நிகழ்ச்சி மலேசியா சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்பதை நினைக்கும்போது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

மார்ச் 13: இளையராஜா இசையில் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குகிறார்: அதிகாரபூர்வ அறிவிப்பு

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகவுள்ள துப்பறிவாளன் 2 படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். துப்பறிவாளன் படத்தில் நடித்த பிரசன்னாவும் இதில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு லண்டனில் தொடங்கியது. எனினும் சமீபகாலமாக மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. படத்தின் பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின் - விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார். இதையடுத்து படத்தைத் தானே இயக்க முடிவெடுத்துள்ளார் விஷால்.

இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் துப்பறிவாளன் 2 படத்தை விஷால் இயக்குகிறார்.

மே 5: லிடியனைப் பாராட்டிய இளையராஜா: தந்தை குஷி!

இளம் இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவருடைய சகோதரியைப் பிரபல இசையமைப்பாளர் இளையராஜா பாராட்டியுள்ளதாக அவருடைய தந்தை குறிப்பிட்டுள்ளார்.

சிபிஎஸ் தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பான தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்கிற இசை நிகழ்ச்சியில் தன்னுடைய பியானோ திறமையை வெளிப்படுத்தி உலகளவில் கவனம் ஈர்த்தார் சென்னையைச் சேர்ந்த 13 வயது லிடியன் நாதஸ்வரம். அந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் லிடியன் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ. 6 கோடியே 96 லட்சம் பரிசுத்தொகையை வென்றார்.

2 வயது முதல் டிரம்ஸ் வாசிக்கத் தொடங்கிய லிடியன், தற்போது மொசார்ட், பீதோவன் ஆகியோரின் இசைக்குறிப்புகளை பியானோவில்  நன்கு வாசிக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரால் தற்போது 14 இசைக்கருவிகளை வாசிக்கமுடியும். பல  நாடுகளில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்தச் சிறுவயதில் பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். நேரடியாகப் பள்ளிக்குச் செல்லாமல் 1-ம் வகுப்பு முதல் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் வழியாகக் கல்வி கற்று வருகிறார். இவருடைய அக்கா அமிர்த் வர்ஷினியும் இசைக்கலைஞர். அவரும் பள்ளிக்குச் செல்லாமல் ஓபன் ஸ்கூலிங் வழியாகக் கல்வியைப் பயின்று வருகிறார். லிடியனின் தந்தை வர்ஷன் சதீஷ் இசையமைப்பாளராக உள்ளார்.

அடுத்ததாக, இசையமைப்பாளராகவும் ஆகியுள்ளார் லிடியன். பிரபல மலையாள நடிகர் மோகன் லால் இயக்கும் Barroz என்கிற 3டி படத்துக்கு இசையமைக்கிறார் லிடியன்.

இந்நிலையில் லிடியன் மற்றும் அவருடைய சகோதரியைத் தொலைப்பேசி வழியாக இளையராஜா பாராட்டியுள்ளதாக லிடியனின் தந்தை சதீஷ் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

கடந்த 25 ஆண்டுகளாக என் இசை வாழ்க்கையை இளையராஜாவுக்கு அர்ப்பணிப்பு செய்து வருகிறேன். வாழ்வின் ஒவ்வொரு தருணமும் அவருடைய இசையைப் பழகியும் பாடல்களைப் பாடியும் வருகிறேன்.

25 ஆண்டு கால தவத்தின் பயனை ஒரு தொலைப்பேசி அழைப்பில் அடைந்தேன். இசைஞானியிடமிருந்து வந்த விடியோ அழைப்பு இன்பத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.

என் குழந்தைகளின் திறமையைப் பாராட்டவே அவர் அழைத்தார். அதற்காக எங்களை நேரடியாக அவர் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. ஆனால் அழைத்தாரே! இசை விடியோக்கள், பதிவுகளைப் பார்த்து அழைத்துள்ளார். இன்னும் பெரிய அளவில் உயர வேண்டும் என அவர் வாழ்த்தினார். அந்த அழைப்பில் தாய் போன்ற பாசத்தையும் குழந்தை போன்ற சிரிப்பையும் கண்டேன். தரிசனம் கிடைத்தது, பயனும் கிடைத்தது என்று கூறியுள்ளார்.

மே 19: இளையராஜாவின் ஆஸ்தான இசைக்கலைஞர் புருஷோத்தமன் காலமானார்

இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளி முதல் அவருடன் இணைந்து பணியாற்றிய இசைக்கலைஞர் புருஷோத்தமன் இன்று காலமானார். அவருக்கு வயது 70.

இரத்தப் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த புருஷோத்தமன், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு இரு மகன்கள் உள்ளார்கள். இளையராஜாவின் இசைக்குழுவில் டிரம்மராகவும் இசை மேற்பார்வையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜி.கே. வெங்கடேஷுடன் இணைந்து பணியாற்றியபோது இளையராஜாவுக்கு அறிமுகமான புருஷோத்தமன், அன்னக்கிளி படம் முதல் ராஜாவுடன் இணைந்து பணியாற்றி, ராஜாவின் ஆஸ்தான கலைஞர் என்று பெயர் பெற்றவர். இளையராஜாவுடன் இணைவதற்கு முன்பு திவாகர், கே.வி. மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன், சங்கர் - கணேஷ் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். நிழல்கள் படத்தில் மடை திறந்து பாடலில் டிரம்மராக நடித்துள்ளார் புருஷோத்தமன்.

இளையராஜாவின் இசைக்குழுவில் புல்லாங்குழல் இசைக் கலைஞராக உள்ளவரும் பாடகருமான அருண்மொழி, புருஷோத்தமனின் மறைவு குறித்து கூறியதாவது:

தாங்கள் மறைந்துபோனாலும் தங்களின் இதயத் துடிப்பைத் தாளங்களாக்கி எத்தனை எத்தனை விதங்களில், கிட்டத்தட்ட இசைஞானியின் எல்லாப் பாடல்களிலும் முத்திரை பதித்துவிட்டே இறையடி பயணித்திருக்கிறீர்கள்.

ஒரு முறை துபாயில் நடந்த இசை நிகழ்ச்சியில் இசைஞானி தங்களை அறிமுகம் செய்கையில் தாங்கள் அன்னக்கிளி தொடங்கி இன்றுவரை உடன் பயணித்துக்கொண்டிருப்பவர் என்பதைச் சொல்லி, தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து கடினமாய் உழைப்பவர் என்று சிலாகித்ததை நினைவு கொள்கிறேன். எனக்குத் தெரிந்து வேறு யாரையும் இது போல இசைஞானி சொன்னதில்லை என்று நினைக்கிறேன்.

தாங்கள் மறைந்தாலும் உலகம் உள்ளவரை தங்கள் நாதம் எங்கோ ஓரிடத்தில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று எழுதியுள்ளார்.


மே 23: ஒருமுறை, என் மனைவியை புரு என அழைத்து விட்டேன்: இசைக்கலைஞர் புருஷோத்தமன் மறைவுக்கு இளையராஜா வேதனை (விடியோ)

இசைக்கலைஞர் புருஷோத்தமனின் மறைவுக்கு இளையராஜா விடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்னுடன் வாழ்நாளிலே என் அருகிலே அதிக நாள் இருந்து, மற்றவர்கள் எல்லோரையும் விட, எங்களுடைய குடும்பத்தாருடன் இருந்ததை விட நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்த நேரம் தான் அதிகம். நேரம் என்றால் நேரம் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு நாளும் எங்களுக்கு இசையிலேயே கழிந்த நேரம் அத்தனையும் நாங்கள் ஒன்றாக இருந்ததுதான்.

எந்த நேரம் அழைத்தாலும் அந்த நேரம் என் அருகில் அமர்ந்து அல்லது அவர் அருகிலே நான் அமர்ந்து இசையமைக்கின்ற நிகழ்வுகள் ஏராளமாக நடந்துள்ளன. என் வாழ்க்கையில் என் குடும்பத்தாருடன் கூட அவ்வளவு நேரம் இருந்தது கிடையாது. வீட்டில் ஒருமுறை என் மனைவியை அவர் பெயரைச் சொல்லி அழைப்பதற்குப் பதிலாக புரு என்று சொல்லி அழைத்துவிட்டேன். அவ்வளவு தூரம் நெருக்கமாக இருந்த புருஷோத்தமன் காலமானது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இந்த நிகழ்வை இவ்வளவு சீக்கிரம் நான் எதிர்பார்க்கவில்லை. இறைவன் விரைவாகவே அவரை அழைத்துக்கொண்டுவிட்டான். சகோதரர் சந்திரசேகர் உள்ளிட்ட அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என்று கூறியுள்ளார்.

மே 29: கரோனா கள வீரா்களை பாராட்டி இளையராஜா பாடல்

கரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருந்து வரும் நிலையில், களத்தில் நின்று போராடுபவா்களைப் பாராட்டி இளையராஜா பாடல் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளாா்.

கரோனா அச்சுறுத்தலால் அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. மருத்துவா்கள், செவிலியா்கள், காவல்துறையினா், ஊடகத்தினா் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் ஆகியோா் மட்டுமே அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்களின் சேவையைப் போற்றுவது, அவா்களுக்கு உதவுவது என பலரும் முன் வருகின்றனா். கரோனா களவீரா்களுக்காக பல்வேறு இசையமைப்பாளா்கள், பாடகா்கள் பாடல்களை உருவாக்கி வெளியிட்டுள்ளனா். தற்போது இளையராஜாவும் கரோனா போா் வீரா்களுக்காக பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளாா்.

இந்தப் பாடலுக்கு இசையமைத்தது மட்டுமன்றி பாடல் வரிகளையும் இளையராஜாவே எழுதியுள்ளாா். இப்பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளாா். பியானோ, கீ போா்டு உள்ளிட்ட வாத்தியங்களின் இசையை இளையராஜாவின் மேற்பாா்வையில் லிடியன் செய்துள்ளாா். அவருடைய தந்தை பின்னணிக் குரல் கொடுத்துள்ள நிலையில் அமிர்தவர்ஷினி வயலின், புல்லாங்குழல் வாசித்துள்ளார். ‘பாரத பூமி’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் பாடலை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளாா் இளையராஜா.

மேலும், ஹிந்திப் பாடலைப் பாடியுள்ளாா் சாந்தனு முகா்ஜி. இந்தப் பாடலை குடியரசு துணைத் தலைவா் உள்ளிட்ட பலா் தங்களுடைய ட்விட்டர் தளத்தில் பகிா்ந்துள்ளனா்.

ஜூன் 2: புதிய தளத்தில் இசை அனுபவங்களைப் பகிரவுள்ள இளையராஜா
 

இசை ஓடிடி என்கிற புதிய தளத்தில் தன்னுடைய இசை அனுபவங்களைக் கூறவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

தன்னுடைய பிறந்த நாளுக்காக தனது யூடியூப் தளத்தில் அவர் விடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: 

எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லத் துடிதுடித்துக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களே, உங்களையும் என்னையும் சந்திக்க விடாமல் இந்த கரோனா காலக்கட்டம் தடுக்கிறது. உங்கள் அன்பு உள்ளங்களை நான் நன்றாகவே அறிவேன். உங்களுடன் இசை வடிவில் தினமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

வெறும் இசை வந்தால் மட்டும் போதுமா, நான் வரவேண்டாமா உங்கள் இல்லத்துக்கு? உங்கள் இல்லம் தேடி நானே நேரடியாக வருகிறேன், இசை ஓடிடி மூலமாக. ஓவ்வொரு பாடலும் எப்படி உருவானது, அதைப் பதிவு செய்ய எவ்வளவு சிரமப்பட்டோம் என்பதைப் பற்றி சொல்லவிருக்கிறேன். வேறு எந்த சேனலிலும் கேட்கமுடியாத தகவல்கள் இதில் வெளியாகும். உலகின் மாபெரும் இசைக்கலைஞர்கள் என்னைப் பற்றிய அபிப்ராயங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். புகழ்பெற்ற இசைக்கலைஞர்களும் இதில் பங்கு பெற்று சுவாரசியமான தகவல்களை அளிக்கக் காத்திருக்கிறார்கள். இதெல்லாம் உங்கள் வீடு தேடி இசை ஓடிடி மூலமாக வருகிறது. அந்த நாளுக்காகக் காத்திருங்கள். என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உங்கள் வீடு தேடி வந்துகொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

ஜூலை 16: இளையராஜாவின் அண்ணன் மகன் காலமானார்

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் இளைய மகன் ஹோமோ ஜோ உடல்நலக்குறைவால் காலமானார். 

ஹோமோ ஜோ, இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். கிழக்கு வாசல், சிங்கார வேலன், சின்ன கவுண்டர் போன்ற படங்களில் இணை இயக்குநராகவும் கற்க கசடற படத்துக்கு வசனகர்த்தாகவும் பணியாற்றியுள்ளார். தற்போது, நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்கிற படத்தை இயக்கி வந்தார்.

ஹோமோ ஜோ-வின் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்தார்கள்.

ஆகஸ்ட் 15: பாலு சீக்கிரம் வா என இளையராஜா உருக்கம்

பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாகப் பேசிய விடியோ வெளியானது.

ஆகஸ்ட் மாதம், பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, அவா் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 

எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து மிகவும் வேதனையடைந்ததால் தன்னுடைய எண்ணங்களை விடியோவாக வெளியிட்டார் இளையராஜா. அதில் அவர் கூறியதாவது:

பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை. சினிமாவோடு தொடங்கியதுமில்லை. எங்கேயோ ஒரு மேடை கச்சேரிகளில் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி. அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது.

அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்தது நமது நட்பும் இசையும். இசை எப்படி சுவரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அதுபோல உன்னுடைய நட்பும் என்னுடைய நட்பும். நமது நட்பு எந்தக் காலத்திலும் பிரிந்தது இல்லை. நாம் சண்டை போட்டாலும் சரி. நமது இருவருக்குள்ளும் சண்டை இருந்தாலும் அது நட்பே, சண்டை இல்லாமல் போன போதும் அது நட்பே என்பதை நீயும் நன்றாக அறிவாய், நானும் நன்றாக அறிவேன்.

அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா என்று பேசினார்.

ஆகஸ்ட் 20: எஸ்.பி.பி.க்காகக் கூட்டுப் பிரார்த்தனை: இளையராஜா வேண்டுகோள்

பாடகர் எஸ்.பி.பி. உடல்நலம் பெற அனைவரும் ஆகஸ்ட் 20, மாலை 6 மணிக்குக் கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இளையராஜா வேண்டுகோள் விடுத்தார். 

இதுகுறித்து வெளியிட்டுள்ள விடியோவில் அவர் கூறியதாவது: 

மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி.க்காக நடைபெறுகிற கூட்டுப் பிரார்த்தனையில் நீங்கள் அனைவரும் கலந்துகொண்டு பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

செப்டம்பர் 9: இளையராஜா இசையமைக்கும் படத்தில் ஷ்ரேயா சரண், நித்யா மேனன்

இளையராஜா இசையமைப்பில் கமனம் என்கிற படம் உருவாகியுள்ளது.

ஷ்ரேயா சரண், நித்யா மேனன் நடிப்பில் கமனம் என்கிற படத்தை சுஜானா ராவ் இயக்கியுள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவரவுள்ளது. கமனம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதனால் விரைவில் இப்படம் வெளிவரவுள்ளது. ஒளிப்பதிவு - ஞானசேகர். சமீபத்தில் ஷ்ரேயா சரண் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானது. தற்போது, நித்யா மேனன் நடிக்கும் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தும் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கர்நாடக இசைக் கலைஞர்கள் பற்றிய படம் என்பதால் இளையராஜாவின் பாடல்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 25: எஸ்.பி.பி. மறைவுக்கு உருகிய இளையராஜா

எஸ்.பி.பி. மறைவுக்குப் பிறகு உருக்கமான விடியோ ஒன்றை இளையராஜா வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

பாலு, சீக்கிரம் எழுந்து வா.. உன்னைப் பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். நீ கேட்கலை. போயிட்ட. எங்க போன? கந்தர்வர்களுக்காகப் பாட போய்ட்டியா? இங்க உலகம் ஒரே சூன்யமாகப் போச்சு. உலகத்துல ஒன்றுமே எனக்குத் தெரியல. பேசுறதற்குப் பேச்சு வரல. சொல்றதுக்கு வார்த்தை இல்ல. என்ன சொல்றதுன்னே தெரியல. எல்லாத் துக்கத்துக்கும் ஒரு அளவு இருக்கு. இதுக்கு அளவு இல்லை என்றார்.

அக்டோபர் 12: திரைப்படமாகும் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை: இளையராஜா இசையமைக்கிறார்
 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை, தேசிய தலைவர் என்கிற பெயரில் படமாக உருவாகவுள்ளது. இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு 'தேசிய தலைவர்' என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ட்ரென்ட்ஸ் சினிமாஸ் மற்றும் எம்டி சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில், இந்தப்படத்தை ஜெ.எம்.பஷீர் மற்றும் ஏ.எம்.சௌத்ரி இணைந்து தயாரிக்கின்றனர்.

தேவர் கதாபாத்திரத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார்.. இஸ்லாமியரான இவர் இந்தப்படத்திற்காக 48 நாட்கள் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை, ஊமை விழிகள், உழவன் மகன், கருப்பு நிலா என விஜயகாந்த் நடித்த வெற்றிப் படங்களை தந்த அரவிந்தராஜ் இயக்குகிறார். மறைந்த பிரபல நடிகரும் பசும்பொன் தேவருடன் இணைந்து பயணித்தவருமான லட்சிய நடிகர் எஸ்எஸ்.ராஜேந்திரனின் மகன் எஸ்.எஸ்.ஆர். கண்ணன் இந்தப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் உறுதுணை வகித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

இப்படம் பற்றி இயக்குனர் அரவிந்தராஜ் கூறியதாவது: 

இந்தப் படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாகவே இருந்தேன். காரணம் ஏற்கனவே புகழ்பெற்ற, போற்றிப் பாடடி பெண்ணே பாடலை மிஞ்சும் விதமான ஒரு பாடலை தர அவரால் மட்டும்தான் முடியும்.. இத்தனை வருடங்களில் அவருடன் நான் இணைந்து பணியாற்றும் முதல் படம் இதுதான். இந்தப் படத்தில் நீங்கள் இசையமைக்க ஒப்புக்கொண்டால் அதுவே எனக்கு 60 சதவீத வெற்றி என அவரிடம் கூறினேன். அவரும் புன்னகைத்தபடியே, “இனி வரும் நாட்களில் எங்கெங்கும் தேவர் பற்றிய புகழ் பாடப்பட வேண்டும் என்றால் அது இந்த படத்தின் பாடல்களாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அளவுக்கு சிறப்பாக பாடல்களை உருவாக்கி தருகிறேன் என உறுதியளித்தார் என்றார்.

டிசம்பர் 28: மன உளைச்சலில் இளையராஜா: பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து

பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் தொடர்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், பிரசாத் ஸ்டுடியோவில், திரைப்படங்களுக்காக நான் கைப்பட எழுதிய இசைக் கோப்புகள், இசைக் கருவிகள், எனக்கு கிடைத்த விருதுகள் உள்ளன. அவற்றை எடுத்துக் கொள்ளவும், தியானம் செய்யவும் அனுமதி வழங்க ஸ்டுடியோ உரிமையாளா்களுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின் போது, இளையராஜா தன்னுடைய பொருள்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறி அதற்காக ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்கக் கோரி உரிமையியல் வழக்குத் தொடா்ந்துள்ளாா். மேலும் பிரசாத் ஸ்டுடியோவுக்கு இளையராஜா வருகிறாா் என்ற தகவல் வெளியானால், அங்கு ரசிகா்கள் குவிந்து விடுவாா்கள். எனவே, இதன் காரணமாக இளையராஜாவை ஸ்டுடியோவுக்குள் அனுமதிக்க முடியாது என பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இருதரப்பும் சமரசமாக போகும் பட்சத்தில், இளையராஜாவுடன், நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் வழக்குரைஞா் ஆணையா், இருதரப்பு வழக்குரைஞா்கள் ஆகியோரை பொருள்களை எடுக்க ஒருநாள் ஸ்டுடியோ வளாகத்துக்குள் அனுமதித்தால் என்ன என கேள்வி எழுப்பி, இதுதொடா்பாக இருதரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்து. அதனைத் தொடா்ந்து இருதரப்பிலும் சம்மதம் தெரிவித்து மனுதாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், பிரசாத் ஸ்டுடியோ தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.எச்.அரவிந்த்பாண்டியன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டுடியோ அரங்கத்தில் இளையராஜாவை ஒருநாள் அனுமதிக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இளையராஜா அங்கு இருக்கலாம். அதே நேரம் அங்குள்ள பொருள்களை எடுத்துக் கொள்வதோடு, தியானமும் செய்யலாம். மாலை 4 மணிக்கு மேல் அங்கு இருக்கக்கூடாது. இளையராஜா அங்கு இருக்கும் போது வேறு யாரும் செல்லக்கூடாது. இருதரப்பினரும் ஒருவரோடு ஒருவா் பேசிக் கொள்ளக்கூடாது. இவற்றைக் கண்காணிக்க வழக்குரைஞா் வி.லட்சுமிநாராயணன், வழக்குரைஞா் ஆணையராக நியமிக்கப்படுகிறாா் என உத்தரவிட்டாா்.

இரண்டு தரப்பினரும் இவரிடம் தான் பேசிக் கொள்ள வேண்டும். இளையராஜா எந்த நாளில் அங்கு செல்கிறாா் என்பது குறித்து இருதரப்பு வழக்குரைஞா்களும் பேசி முடிவு செய்ய வேண்டும். இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லும் நாளில் உரிய போலீஸ் பாதுகாப்பை சென்னை மாநகர ஆணையா் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

டிசம்பர் 28, காலை 9 மணியளவில் இளையராஜா பிரசாத் ஸ்டியோவுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தனது பொருள்களையெல்லாம் எடுத்துக்கொண்டு, தியானம் செய்துவிட்டு பிரசாத் ஸ்டுடியோவை இளையராஜா காலி செய்வாா் என எதிா்பாா்க்கப்பட்டது. இதனால் காவல் துறையினா், பத்திரிகையாளா்கள் ஸ்டுடியோவில் குவிந்தனா். ஆனால், திட்டமிட்டபடி இளையராஜா வரவில்லை.

இளையராஜா தரப்பிலும், பிரசாத் ஸ்டுடியோ தரப்பிலும் வழக்கறிஞா்கள் வந்தனா். இளையராஜா மன உளைச்சலில் இருப்பதால், இன்று அவா் வரவில்லை என்று அவருடைய செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா். முதலில், இளையராஜா அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த தகவல், அவருக்குச் சொல்லப்பட்டது. இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்ததால் அவா் வரவில்லை எனத் தெரிகிறது. பிறகு, இளையராஜா தனது ஸ்டுடியோவைக் காலி செய்தார். இரு லாரிகளில் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com