
வில்லனாக இல்லாமல் பிரகாஷ் செய்த முக்கியப் படங்கள் என கன்னத்தில் முத்தமிட்டால், இருவர், மொழி, அபியும் நானும், தோனி, ஓகே கண்மணி, அந்தப்புரம் என சில படங்களை மட்டுமே கூறமுடியும். அந்தப் பட்டியலில் இணைந்துள்ள மற்றொரு படம் - காஞ்சிவரம். 2009, மார்ச் 13 அன்று வெளியானது. இன்றுடன் வெளியாகி 11 வருடங்கள் ஆகியுள்ளது.
தேசிய விருதுகளைப் பெற்ற தமிழ்ப் படங்களில் காஞ்சிவரத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு.
சிறந்த படம், சிறந்த நடிகர் (பிரகாஷ் ராஜ்) என இரு தேசிய விருதுகளைப் பெற்று தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பிடித்தது காஞ்சிவரம். இதன்மூலம் சிறந்த படம் என்கிற தேசிய விருதைப் பெற்ற 2-வது தமிழ்ப் படம் என்கிற பெருமையையும் அடைந்தது. 17 வருடங்களுக்கு முன்பு மற்றொரு மலையாள இயக்குநர் சேதுமாதவன் இயக்கிய மறுபக்கம் சிறந்த படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. காஞ்சிவரம், பிரகாஷ் ராஜுக்கு 3-வது தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. ஆமிர் கான், ஷாருக் கான் ஆகியோர் அளித்த கடும் போட்டியில் முன்னேறி விருதை அவர் வென்றார். 25 வருடங்களாகத் திரைத்துறையில் இருக்கும் பிரியதர்ஷன் பெற்ற முதல் தேசிய விருது இது.
சுதந்திரப் போராட்டத்துக்கு முன்பு, காஞ்சிபுரப் பட்டு நெசவாளர்கள் சந்தித்த பிரச்னை தான் படம். உழுபவனுக்கு நிலம் இல்லை, நெய்பவனுக்கு ஆடை இல்லை என்பதுதான் இப்படத்தின் ஒருவரிக்கதை. பட்டை நெய்பவன், அந்தப் பட்டுக்குச் சொந்தம் கொண்டாடும் நிலைமையை அழகாகச் சொல்லியிருக்கிறார் பிரியதர்ஷன்.
நெசவாளியான பிரகாஷ் ராஜ், தனது கல்யாணத்தின்போது தன் மனைவியை பட்டுபுடவையில் அமரவைத்து அழகு பார்பேன் எனத் தனக்குள் சபதம் இடுகிறார். ஆனால் வறுமை காரணமாக அதைச் செய்யமுடியாமல் போகிறது. இதனால் அடுத்ததாக, தனது மகளைப் பட்டுப்புடவையில் தான் மணவறையில் அமரவைப்பேன் என்கிறார். பெரிய ஜமீன்தாரர்கள் மட்டுமே பட்டைப் பயன்படுத்த முடியும். நீ ஏன் பேராசைப்படுகிறாய் என்கிற பிரகாஷ் ராஜைப் பலரும் கண்டிக்கிறார்கள். இந்தப் படத்தில் கம்யூனிசப் போராளியாக நடித்துள்ளார் பிரகாஷ் ராஜ். கூலி உயர்வுக்காக முதலாளிக்கு எதிராகக் கோஷம் போடவேண்டிய நிலைமை. அவர் எண்ணியபடி மகளுக்குப் பட்டுப் புடவையைச் சொந்தமாக நெய்ய முடிந்ததா என்பதை உணர்வுபூர்வமான காட்சிகளுடன் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.
இந்தக் கதையின் மூலம் நெசவாளர்களின் பிரச்னை, கம்யூனிசம் தமிழ்நாட்டில் புகுந்த கதை போன்ற அரசியல் விஷயங்களையும் அழகாகத் தொட்டிருப்பார் பிரியதர்ஷன்.
நான் வாழ்நாள் முழுக்க சேர்த்து வைத்த பணம் இது. எதுக்குத் தெரியுமா? பட்டுச் சேலையோட ஒரு பெண்ணைக் கட்டிக்கப்போகிற முதல் நெசவாளி நானா தான் இருப்பேன்னு நினைச்சேன். ஆனா இது பத்தலை. என்னால பாதிதான் சேர்க்க முடிஞ்சுது. இதைப் பாரு... இன்னைலேர்ந்து நாம பணத்தைச் சேர்த்தா நம்ம பொண்ணுக்குக் கல்யாணம் வயசு வரும்போது அதையும் இதையும் (2-வது சேமிப்பு) சேர்த்து தாமரைக்கு ஒரு பட்டுச் சேலை வாங்கமுடியாது... என்று ஷ்ரேயாவிடம் பிரகாஷ் ராஜ் வேதனையுடன் கேட்கும்போது அக்கால நெசவாளர்களின் வாழ்க்கை நிலை ஒரு காட்சியில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.
இக்கதையை மலையாளத்தில் எடுக்க முதலில் முடிவு செய்து, கதாநாயகன் வேடத்துக்கு முதலில் மோகன் லாலை அணுகியுள்ளார் பிரியதர்ஷன். ஆனால் தேதிகள் காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போனது. மேலும் படத்தில் வழுக்கைத் தலையுடனும் நடிக்கவேண்டிய காட்சிகளும் உண்டு. மற்ற பட வேலைகளால் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் மோகன் லால்.
12 வருடங்களாக இந்தக் கதையை சுமந்து வந்தேன். வணிக நோக்கம் எதுவுமின்றி, விருதுக்குக் குறி வைத்து எடுக்கப்பட்ட படம் இது. யார் இதைப் பார்ப்பார்கள் என எண்ணி எடுக்கவில்லை. இந்தச் சுதந்திரம் படத்தின் தரத்தில் எதிரொலித்தது. மக்களுக்காகப் படம் பண்ண எண்ணும்போது நகைச்சுவைப் படங்களை எடுப்பேன். உடனே என்னை பஃபூனாக எண்ணிக்கொள்வார்கள். ஓர் இயக்குநராக எனக்கு இது 25-வது வருடம். எனக்காக எடுத்த படம், காஞ்சிவரம் என்று படம் வெளிவந்தபோது பேட்டியளித்தார் பிரியதர்ஷன்.
படத்தின் கதையைச் சொல்லிவிட்டு, வழக்கமான சம்பளத்திலிருந்து பாதியைக் குறைத்துக்கொள்ள முடியுமா என பிரியதர்ஷன் பிரகாஷ் ராஜிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உடனே அறையை விட்டு வெளியேறிவிட்டார் பிரகாஷ் ராஜ். பிறகு போன் செய்து, உங்கள் முன்னால் அழ முடியவில்லை என்று பதில் அளித்துள்ளார். பிரியதர்ஷன் சொன்ன கதை மிகவும் பாதித்ததால் தயாரிக்கவும் அவர் முன்வந்துள்ளார். காஞ்சிவரத்தை பெர்செப்ட் பிக்சர் கம்பெனி, ஃபோர் ஃபிரேம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்துத் தயாரித்தன.
பிரகாஷ் ராஜ் ஒரு பைசாவும் வாங்காமல் நடித்துக் கொடுத்த படம் இது. விருது தான் என்னுடைய சம்பளம் என்கிறார் பிரகாஷ் ராஜ். படம், 1.01 கோடியில் தயாரிக்கப்பட்டது. 30 நாள்களில் கதை வரிசைப்படி படமாக்கப்பட்டுள்ளது.

பிரியதர்ஷன் பல படங்களை ரீமேக் செய்துள்ளார். ஆனாலும் காஞ்சிவரத்தை ரீமேக் செய்ய அவருக்கு விருப்பம் இல்லை. அதை மீண்டும் தொடக்கூடாது என்கிறார்.
என்னுடைய எந்தப் படத்தைப் பார்த்தாலும் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாமோ என்றுதான் தோன்றும். காஞ்சிவரத்தைத் தவிர என்கிறார் பிரியதர்ஷன்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...