'வரன ஆவிஷ்யமுண்டு' சர்ச்சை - புரிந்ததும் புரியாததும்

துல்கர் சல்மான் தயாரித்து நடித்து வெளியிட்டிருக்கும் 'வரன ஆவிஷ்யமுண்டு' தமிழகத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஆரம்பித்து வைத்தது, இப்போது இலங்கை யாழ்ப்பாணத்திலும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது.
'வரன ஆவிஷ்யமுண்டு' சர்ச்சை - புரிந்ததும் புரியாததும்


மலையாள - தமிழ் நடிகர் துல்கர்  சல்மான் தயாரித்து நடித்து வெளியிட்டிருக்கும் படமான 'வரன ஆவிஷ்யமுண்டு' (வரன் தேவை) தமிழகத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஆரம்பித்து வைத்தது, அது இலங்கை யாழ்ப்பாணத்திலும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. ஈழத்து தமிழர்களும் தங்களது எதிர்ப்பைப் பதிந்து வருகிறார்கள். கேரளத்தில் கரோனா தீவிரம் தொடங்கிய காலத்தில் 'வரன ஆவிஷ்யமுண்டு' படம் பிப்ரவரி 7-ல் வெளிவந்ததால் படம் தரமாக அமைந்திருந்தாலும் சரிவர வசூல் செய்யவில்லை. அடுத்த இரண்டு வாரங்களில் ஊரடங்கு வந்துவிட்டதால், "பி', "சி" பகுதிகளில் படம் வெளியாகும் முன்பே படம்  தனது பயணத்தை முடித்துக் கொண்டது. ஒருவாரத்திற்கு முன் 'வரன ஆவிஷ்யமுண்டு' படம் டிஜிட்டலில் தமிழ்நாட்டில் வெளியாக பிரச்சினை பற்றிக் கொண்டது.
 
'வரன ஆவிஷ்யமுண்டு' படம் பாதி தமிழ், பாதி மலையாளம் என்று சொல்லலாம். சென்னையில் வாழும் மலையாளக் குடும்பங்களைப் பற்றியது. சிங்கிள் அம்மாவாக வரும் ஷோபனா. அவர் மகள் கல்யாணி பிரியதர்ஷனின் காதலைச் சொல்லும் படம். படத்தில் நவராத்திரி கொலு காட்சியில் "நீ  வா என் ஆறுமுகா... பூ  அழகான மால் மருகா.." என்ற தமிழ்ப் பாடலும் உண்டு. ஷோபனா  பாடும் மலையாளப் பாடலின் ஒரு வரியில் "மல்லிகை மலர் சூடி வள்ளுவன் குரல் பாடி,,.." என்றும் வருகிறது. இங்கே  திருவள்ளுவரும் குறளும்    தான்  குறிப்பிடப்படுகிறது . கேரள  சரித்திரம்  குறித்த  படங்களில் பலவற்றிலும்  ‘வள்ளுவன் ’ சொல்  இடம்  பெறும்.

சட்டென்று  உணர்ச்சிவசப்பட்டு வெடித்து கிளம்பிய  பிரச்சினையிலிருந்து கொஞ்சம் விலகித் தமிழ்நாட்டிற்கும்  கேரளத்திற்கும் உள்ள 'விருப்பு வெறுப்புகளை'ச் சமநிலையிலிருந்து அலசினால்தான் பிரச்சினையின் ஆழ அகலத்தைப்  புரிந்துகொள்ள முடியும்.

கேரளத்தின் அண்டை நாடு தமிழ்நாடு. சைவ அசைவ  உணவுப் பொருள்கள்   மட்டுமில்லாமல், கைத்தறி துணிகள், .. ஏன்  மாணவர்கள் பயன்படுத்தும் சிலேட் முதல்  விளக்குமாறு வரை தமிழகத்திலிருந்துதான் வர வேண்டும். நுகரும் மாநிலமாக இருக்கும் கேரளத்தில் வருமானம் அதிகமாக ஈட்டும் வணிகப் பொருள்களான  தேயிலை, ரப்பர், மிளகு, ஏலக்காய்  தோட்டங்கள் அதிகம். இந்த வருமானத்தைவிட  வெளிநாடுகளில் பணிபுரியும் கேரளத்தினர் மாதா மாதம் அனுப்பும் பணம் அதிகம்.

பொருளாதாரத்தில்  சிறந்து இருப்பதனால், கேரளத்தில் தினக் கூலி  அதிகம். கட்டட வேலைகளில்   சிற்றாளுகளுக்கே தினக் கூலி ஆயிரம் வரை கேரளத்தில் தர வேண்டும். அதனால்  தமிழ்நாட்டிலிருந்து  ஆயிரக்கணக்கில்  கேரளம் வந்து கிடைத்த வேலைகளைச்  செய்து தமிழர்கள் சம்பாதிக்க  ஆரம்பித்தனர்.

தமிழர்களைப் பொருத்தவரையில்  வளைகுடா  நாடுகளாக கேரளம் தோன்றியதில் வியப்பில்லை. வட மாநிலத்திலிருந்து தொழிலாளிகள் குறைந்த கூலிக்கு  வேலை செய்ய  வர ஆரம்பித்ததும், அடிமட்ட  வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கு  குறைந்து போயின. ஆனாலும், தேயிலை, ஏலக்காய், ரப்பர், மிளகு தோட்டங்களில் இன்றைக்கும் தமிழக மக்கள்  பணிபுரிகிறார்கள். மூணாறு, வண்டிப்பெரியாறு, தேவிகுளம், பீர்மேடு, திருவனந்தபுரம், பாலக்காடு பகுதிகளில் பல  தலைமுறைகளாகத்  தமிழர்கள்  தங்கி வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கென்று  தமிழ் பள்ளிக்கூடங்களும் செயல்படுகின்றன.

பொதுவாக  கேரளத்தவர்கள் அவர்களுக்குள் உரையாடிக் கொள்ளும்போது தமிழர்களைப் 'பாண்டி' என்று அழைப்பார்கள். பாண்டிய நாட்டுக்காரர்கள் என்ற பொருளில்  தொடக்க காலத்தில் அழைக்கப்பட்டாலும் பிறகு 'பாண்டி' என்பது அவமரியாதையாக  அழைக்கப்படும்  சொல்லாக  உணரப்பட்டது, பிரயோகப்படுத்தப்பட்டது. தொண்ணூறுகளில் 'பாண்டி' என்று அவமரியாதையாக  அழைக்கப்படும் சொல் மலையாளப் படங்களில் பரவலாக இடம் பெற்றது. அப்போது  திருவனந்தபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘அகில கேரளத் தமிழ்ப் பேரவை’  கேரள அரசிடம் 'பாண்டி'  சொல் பயன்பாட்டைக் குறித்து   புகார் செய்தது. அதைத் தொடர்ந்து அதுமாதிரியான பிரயோகம் குறைந்தது.  இப்போதைய தென்னகப் படங்களில் அனைத்து மொழி நடிகர்களும்  சேர்ந்து நடிப்பதால் கேலியாக ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களைப் படங்களில்  சொல்வது  இல்லாமல் போய்விட்டது.

முல்லைப் பெரியாறு  விவகாரத்தில்  தமிழர்களுக்கும் கேரளத்தவர்களுக்கும் எப்போதுமே பனிப்போர் உண்டு. ஆனாலும் அந்தப்  பனிப் போர்   தமிழ்த் திரைப்படங்களுக்குக் கேரளத்தில் உள்ள மவுஸை  சற்றும்  குறைக்கவில்லை . சிவாஜி, எம்ஜிஆர், கமல், ரஜினி, அந்தக் காலத்தில்  கேரளத்தில் பிரபலமாக இருக்க, இப்போது பிரபலமாக இருப்பவர்கள் விஜய், அஜித், சூர்யா. கேரளத்தவர்களுக்கு யதார்த்தம் பிடிக்கும் என்பதால் சிவாஜியின் 'வசந்தமாளிகை' படத்தின்  கிளைமாக்சில் சிவாஜி இருமி இருமி ரத்தம் கக்கி இறந்துவிடுவதாக முடிவை அமைத்திருந்தனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போதெல்லாம்  டிக்கெட்  ரிசர்வேஷன்  வசதி இல்லாததால், கமல் படங்களுக்கு  இளம் கேரளத்துப் பெண்கள் கியூவில் நின்று டிக்கெட் வாங்குவார்கள்.  கேரளத்தில் தமிழ்ப் பாடல்களுக்கு படு வரவேற்பு. அது இன்றைக்கும் தொடர்கிறது. தமிழ்ப் பாடல்களுக்கு கேரளம் மிகப்  பெரிய சந்தை.

நடிகர் ஜெயராம் 2010-ல்   தனது  வீட்டில் வேலைகளைச்  செய்யும் தமிழ்ப் பெண் பற்றி  பேட்டி ஒன்றில்  மிகவும் மோசமாகச் சொல்ல, ஜெயராமுக்கு  எதிராக சென்னையில் போராட்டம் தொடங்கியது. சென்னையில் அவர் வீட்டில் தாக்குதலும் கல்லெறிதலும் நடந்தது. அதைத் தொடர்ந்து  ஜெயராம் மன்னிப்பு கேட்டார். ஜெயராம் நேரடியாக எந்த ஒளிவும்மறைவும் இல்லாமல்  விமர்சித்ததால் அவர் மன்னிப்பு கேட்க நேரிட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த மம்மூட்டி, மோகன்லால் ஆகியோர் எர்ணாகுளம்  நகருக்கு மீண்டும் குடிபுகுந்தனர்.

‘பட்டணப் பிரவேசம்’  மலையாளப் படம்  1988-ல்  கேரளத்தில்  வெளியாகி 'ஹிட்'டான  ஹாஸ்யப்  படம். அதில் நடிகர் திலகன்  கடத்தல்காரராக வருவார். அவர் தனது நண்பர் ஒருவர் வீட்டில் ஒளிந்திருப்பார். போலீஸ் திலகனைத் தேடுவதால் வீட்டை விட்டு போகுமாறு அந்த நண்பர் திலகனைக் கட்டாயப்படுத்த … 'பிரபாகரா.." என்று பயம், திகில், ஏமாற்றம்   கலந்து அலறுவார். இந்தக்   காட்சி  அன்றும்  இன்றும் நாளையும் பேசப்படும் காட்சியாகக் கேரளத்தில் மாறிவிட்டது.

தமிழில்  சரோஜா தேவி சொல்லும் "கோபால்..",  ‘இது எப்புடி இருக்கு...’  'அந்தப் பழம்தான் இந்தப் பழம்..." நீ ஒன்னும் ஆணியைப் புடுங்க வேண்டாம்..' 'இப்ப என்னவாம்..' ‘என்ன கொடுமை சரவணா’ போன்ற வசனங்கள்   எப்படித் தமிழில் ரசிக்கப்படுகிறதோ, அப்படி இந்த 'பிரபாகரா' வசனமும் கேரளத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

'பட்டணப் பிரவேசம்' மலையாள படத்தின் இயக்குனர்  சத்தியன் அந்திக்காடு, மலையாளப் படவுலகில்  பிரபலமான  இயக்குநர். அவர் மகன்  அனுப் சத்தியன் முதல்முதலாக இயக்கியிருப்பதுதான்  'வரன   ஆவிஷ்யமுண்டு'. அப்பாவின் முத்திரையான 'பிரபாகரா'வை மகன் பயன்படுத்திக் கொண்டது போல, நடிகர் சுரேஷ் கோபியின் பன்ச் டயலாக் ஆன "ஈ முகம் ஓர்மையுண்டோ.." (இந்த முகத்தை நினைவிருக்கிறதா" என்பதையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

'வரன   ஆவிஷ்யமுண்டு' படத்தில்  முன்கோபம் உள்ள ஓய்வுபெற்ற ராணுவ மேஜராக வரும் சுரேஷ் கோபியிடம்  கோபத்தைக் குறைக்க ஒரு பயிற்சியாக கண்ணாடித் தொட்டியில் மீன் வளர்க்கச் சொல்வார் மனோதத்துவ டாக்டர். சுரேஷ் கோபியோ நாயை விலைக்கு வாங்கி அதற்கு ஜிம்மி என்று பெயரிட்டு வளர்க்க ஆரம்பிப்பார்.

'ஜிம்மியை அடுத்த ஃபிளாட்  பையனுடன்  சுரேஷ் கோபி கடற்கரைக்கு கொண்டு போவார். அப்போது "வளர்க்கும் நாய் வளர்ப்பவரிடம் பிரியமாக இருந்தால்  'எந்தப்  பெயர் சொல்லி அழைத்தாலும் நாய் திரும்பிப் பார்க்கும்" என்பான். பையன் சொல்வது உண்மைதானா என்று கண்டறிய சுரேஷ், "பிரபாகரா.."  என்று பட்டணப் பிரவேசம் படத்தில் திலகன் சொன்னது போலவே சொல்ல ஜிம்மியும் சுரேஷ் கோபியைத் திரும்பிப் பார்க்கும். அந்த ஸீன் அத்துடன் முடிகிறது.   இந்த காட்சிதான்  சர்ச்சைக்குரிய காட்சியாக மாறிவிட்டது.

மலையாள 'பட்டணப் பிரவேசம்' தமிழர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அப்போதெல்லாம்  தமிழ்நாட்டில் மலையாளப்படங்கள் என்றாலே வேறு அர்த்தத்தில் பார்ப்பார்கள்.  பலான காட்சிகள் உள்ள படங்களை டைட்டிலை கவர்ச்சிகரமாக  எழுதி  ‘பிட்’களைச் சேர்த்து  தமிழ்நாட்டில் காட்டுவார்கள்.  
தரமான படங்களைக் குறுகிய காலத்தில் தயாரித்து  மலையாள படங்கள் என்றால் ஆபாசப் படம் என்ற கண்ணோட்டத்தை மாற்றினார்கள் இயக்குனர்கள் பரதன், சத்தியன் அந்திக்காடு, சிபி மலயில்,  ஜோஷி, கமல், தேவராஜன்,  லோகிததாஸ். இன்றைய  புதிய தலைமுறை இயக்குநர்கள் மலையாள படவுலகிற்குப் புதிய பாதையை அமைத்திருப்பதுடன் புதிய பரிணாமத்தையே கொடுத்துவிட்டார்கள். 

'வரன ஆவிஷ்யமுண்டு' படத்தின் 'பிரபாகரா' காட்சியின் பின்னணியைப் புரிந்துகொள்ளாமல்  'சட்'டென்று  தோன்றிய  கோபம், அக்னி  பொறியாக மாறி காட்டுத்தீயாக மாறிவிட்டது.  "நீங்கள் கேட்டிருப்பதில்   நாயின் வேடிக்கையான பெயர் எது? ... நிச்சயமாக  'பிரபாகரன் ' என்பதுதான்..' என்று மார்ச் 5  இரவு 9  மணிக்கு துல்கர் விளம்பரத்திற்காகப்  போட்ட டிவீட்டும் பிரச்சினையில் பெட்ரோலை ஊற்றிவிட்டிருக்கிறது. எதிர்பாராத பல கோணங்களிலிருந்து  வந்த தாக்குதல்களைச் சமாளிப்பதற்காக துல்கர் மன்னிப்புக் கேட்டார்.  தமிழகத்திலிருந்து   சின்னத்திரை பிரபலம் ரம்யா, நடிகர் பிரசன்னா  துல்கருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியுள்ளனர். பிரசன்னா பலர் அவதூறாகத்   துல்கரை  திட்டியுள்ளதற்கு  மன்னிப்பும் கேட்டுள்ளார்.

துல்கர்  சென்னையில் வளர்ந்தவர். தமிழ் நன்றாகத் தெரியும். மலையாளப் படங்களில்  தமிழ்நாட்டை  சரியான கோணத்தில் காட்டியிருப்பவர். ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தில் வாழ்க்கை என்பதை மதுரையில் துல்கர் கற்பதாகவும், ‘ஜோமோண்டே சுவிஷேஷங்கள்’ படத்தில் திருப்பூர் நெசவாளர்களின்   உதவியால் வாழ்க்கையில் முன்னேறுவதாகவும்  காட்சிகள் அமைந்துள்ளன. ‘பட்டம் போல’ படத்தில் கேரளத் தமிழ் பையனாக நடித்திருக்கிறார். ‘உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று வசனம்கூட பேசுகிறார்.  ‘நீலாகாசம் பச்சைக்கடல் சுவன்ன பூமி’ படத்தில்  விடுதலைப்புலிகள் ஆதரவாளராவும் வருகிறார். படத்தில் கேப்டன் பிரபாகரன் படமும் காட்டப்படுகிறது. ‘சிஐஏ’ படத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனை மதிப்பவராகவே துல்கர் காட்டப்பட்டிருப்பார். அப்படிப்பட்டவர் நாய்க்கு வேண்டுமென்றே  ‘பிரபாகரன்’ என்று  பெயர் வைத்திருக்க மாட்டார். பட இயக்குநரும்  வசனகர்த்தாவும்   சிருஷ்டித்த காட்சி அது. அந்தக் காட்சியில் நடிக்காத துல்கருக்கு தயாரிப்பாளர் என்ற பேரில் மன்னிப்புக் கேட்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது, விதி  செய்த  சதி  என்றுதான்  சொல்ல  வேண்டும் .

‘பிரபாகரன்’ என்ற பெயர்  கேரளத்தில்  இன்று நேற்றல்ல, வெகு  காலமாகப் பிரபலமாகவுள்ளது. இந்தப் பெயரை வைத்து அவர் 'கேரளத்தவர்' என்று கண்டுபிடித்துவிடலாம்  என்ற அளவிற்குப் பிரபலம்.  விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்  சென்னையில்  தங்கியிருந்த போதுதான் தமிழ்நாட்டில்   அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள முடிந்தது.  பிறகு ஈழப் பிரச்சினை பெரிதான பிறகு பிரபாகரன் மாவீரனாக,  அவர் பெயரைக் குழந்தைகளுக்குத் தமிழர்கள் சூட்டத் தொடங்கினார்கள்.

ஜிம்மி,  சீஸர்... போன்ற பெயர்கள்  நாய்களுக்குப் பொதுவாக வைக்கப்பட்டாலும் அவை மனிதனின் பெயர்களே. திரைப்படத்தின் காட்சி ஒன்றின் பின்னணியைச் சரிவரப்  புரிந்துகொள்ளாததால் துரதிர்ஷ்ட திருப்பங்கள் நிகழ்ந்துவிட்டன.. உள்ளபடியே இந்த சர்ச்சையால் படத்திற்கு நல்ல  விளம்பரம்  கிடைத்துள்ளது … கரோனா அபாயத்தால், கிடைத்த விளம்பரத்தை வசூலாக மாற்ற இயலாமல் போய்விட்டது என்பதுதான் உண்மை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com