கமல் ஹாசன் பிறந்த நாள்: விருதுகள் துரத்தும் கலைஞன்!

கமல் கதாநாயகனாக நடித்த ஏழு படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன...
கமல் ஹாசன் பிறந்த நாள்: விருதுகள் துரத்தும் கலைஞன்!

கமல் ஹாசன் என்றாலே அவருடைய நடிப்புத் திறமை தான் ரசிகர்களுக்குச் சட்டென்று நினைவுக்கு வரும். 

நடிப்புக்குச் சவால் அளிக்கும் கதைகளைத்தான் கமல் எப்போதும் தேர்வு செய்வார். இளைஞனாக, காதல் இளவரசனாக இருந்த 80களிலேயே அவரால் நடிக்குச் சவால் அளிக்கும் படங்களில் நடிக்க முடிந்தது. இதனால் அவருடைய திரை வாழ்க்கை முழுக்க விருதுகள் அவரைத் தேடி வந்தன. கமல் விருது வாங்காத வருடம் என்று ஏதாவது இருக்குமா என்பது சந்தேகமே. 

1980களில் மூன்றாம் பிறை, நாயகன் படங்களுக்காகத் தேசிய விருதுகளை வென்ற கமல், அடுத்ததாக 90களில் இந்தியன் படத்துக்காக மேலும் ஒரு தேசிய விருதை வென்றார். அதற்கு முன்பு 1960-ல் களத்தூர் கண்ணம்மா படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான குடியரசுத் தலைவர் விருதையும் வென்றார். 

அதேபோல 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிவப்பு, மூன்றாம் பிறை, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், இந்தியன், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம் ஆகிய படங்களுக்காக மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதுகளையும் வென்றுள்ளார். கவனித்துப் பார்த்தால் 1970களில் ஆரம்பித்து தொடர்ந்து மாநில அரசு விருதுகளை அவர் பெற்றிருக்கிறார். 

தெலுங்கிலும் மூன்று மாநில அரசுகளை வென்றுள்ளார், சாகர சங்கமம், ஸ்வாதி முத்யம், இந்துருடு சந்துருடு ஆகிய படங்களுக்காக.

மூன்றாம் பிறை, நாயகன், மைக்கேல் மதன காமராஜன் படங்களுக்காக சினிமா எக்ஸ்பிரஸின் சிறந்த நடிகருக்கான விருதைகளை வென்றுள்ளார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிக முறை வென்ற நடிகர் என்கிற பெருமையும் கமலுக்கு உண்டு. ஏக் துஜே கே லியே படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற கமல், சாகர் படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வென்றார். 

ஃபிலிம்ஃபேர் செளத் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை 17 முறை வென்றுள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்குப் படங்களுக்காகவும் விருதுகளை வென்றுள்ளார். 

மஹாராஷ்டிர அரசின் சாந்தாராம் விருதை நான்கு முறை வென்றுள்ளார். பம்மல் கே. சம்பந்தம், அன்பே சிவம் படங்களுக்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். அன்பே சிவம் படத்துக்காக சிறந்த கதை & திரைக்கதைக்கான விருதும் சிறந்த பாடகருக்கான விருதும் வென்றார். 

1985 முதல் 2000 வரை கமல் கதாநாயகனாக நடித்த ஏழு படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் பெருமை வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லை. (அமீர் கான் படங்கள் - 4) கமலின் ஆஸ்கர் கனவு தீவிரமாக இருந்த சமயம் அது. இருந்தாலும் குணா, மகாநதி, அன்பே சிவம் போன்ற கமலின் முக்கியமான படங்களுக்கு இந்தப் பாக்கியம் கிட்டவில்லை.

1990-ல் பத்மஸ்ரீ, 2014-ல் பத்ம பூஷன் விருதுகளை கமலுக்கு வழங்கியது மத்திய அரசு. பிரான்சு நாட்டின் செவாலியர் விருதை 2016-ல் வென்றார். 

கமலுக்குத் தேசிய விருதுகளை அளித்த படங்கள்

மூன்றாம் பிறை (1982)

1977-ல் 16 வயதினிலே படத்துக்காக கமலுக்குக் கிடைத்த பாராட்டும் அப்படத்தின் வெற்றியும் கமலுக்கு அதிக நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். இதன் அடுத்தக் கட்டமாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படம் தான் மூன்றாம் பிறை. நடிப்புத் திறமைக்காக ஒரு படத்தைப் பார்த்து ரசிக்க முடியுமா என்றால் அது இந்தப் படம் தான். படம் முழுக்க சீனுவாக கமலும் விஜியாக ஸ்ரீதேவியும் போட்டிப் போட்டு நடித்த படம். 

தமிழ்த் திரையுலகில் சர்வதேசத் தரத்துடன் படங்கள் வெளிவர வேண்டும் என்கிற பாலுமகேந்திராவின் கனவின் வெளிப்பாடு தான் மூன்றாம் பிறை. ஸ்ரீதேவியின் நடிப்பும் இளையராஜாவின் இசைக்கும் தேசிய விருதுகள் கிடைக்காமல் போனாலும் கமலின் நடிப்புக்கும் பாலு மகேந்திராவின் ஒளிப்பதிவுக்கும் அங்கீகாரம் அளித்தது தேசிய விருதுக்கான தேர்வுக்குழு. தமிழக அரசு இருவருக்கும் விருதுகள் அளித்ததுடன் ஸ்ரீதேவி, கே.ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி ஆகியோரின் திறமைக்கும் மதிப்பளித்து விருதளித்தது.

முதல் தேசிய விருது அளித்த குஷியில் இனி நடிப்புத் திறமையுள்ள கதையில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்கிற கமலின் முடிவுக்கு அடுத்த 14 வருடங்களில் மேலும் இரு தேசிய விருதுகள் கிடைத்தன. 

நாயகன் (1987)

தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படம். கமல், மணி ரத்னம், பி.சி. ஸ்ரீராம், இளையராஜா எனப் பல திறமைகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பங்களித்த படம். 

சிறந்த நடிப்பு (கமல்), சிறந்த ஒளிப்பதிவு (பி.சி. ஸ்ரீராம்), சிறந்த கலை இயக்கம் (தோட்டா தரணி) என மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன.

கமலின் நடிப்பை என்னவென்று சொல்வது? கோபக்கார இளைஞனாகவும் வேலு நாயக்கராக மும்பை தமிழ் மக்களின் பாதுகாவலராகவும் வெவ்வேறு விதமான நடிப்பை வழங்கி அசத்தினார் கமல். இன்றைக்குப் பார்த்தாலும் கமலின் நடிப்பை வியக்காமல் இருக்க முடியாது. மிகச்சிறந்த தமிழ்ப் படங்களில் ஒன்றாக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த இந்தியப் படமாகவும் மதிப்பிடப்படும் நாயகன், கமலின் அசுரப் பாய்ச்சலுக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. 

இந்தியன் (1996)

நாயகனுக்குப் பிறகு பல படங்களில் நடிப்பில் பல்வேறு பரிமாணங்களை கமல் வெளிப்படுத்தினாலும் தேசிய விருதின் அருகில் செல்ல முடியாமல் போனது. ஆனால் 1996-ல் வெளிவந்த ஷங்கர் இயக்கிய இந்தியன் படம், கமலுக்குத் தேசிய விருதை வழங்கியது.

இரு வேடங்கள் செய்திருந்தாலும் தேசிய விருது என்னவோ இந்தியன் தாத்தாவுக்குத்தான். நாட்டைச் சீரழிக்கும் லஞ்சத்தை அடியோடு வேரறுக்கும் இந்தியன் தாத்தா வேடத்தை அற்புதமாகச் செய்திருந்தார் கமல். தன் மகள் கஸ்தூரி சாகும்போதும் தனது மகனைக் கொல்லும்போது நடிப்பால் ரசிகர்களைக் கலங்க வைத்தார். இதை விடவும் இன்னொருவரால் சிறப்பாக நடித்துவிட முடியாது என்கிற அளவுக்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதால் மூன்றாவது தேசிய விருது கமலுக்குக் கிடைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com