ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது சத்யா -2 தொடர். இதற்கு முன்பு இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா தொடர் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து ஜீ தமிழ் நிறுவனம் சத்யா-2 தொடரைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
ஆண் குணம் கொண்ட பெண்ணை மையப்படுத்தி அனைத்துத் தரப்பு மக்களைக் கவரும் வகையில், காதல், குடும்பம், நகைச்சுவை என்று பலதரப்பட்ட திருப்பங்களுடன் சத்யா தொடரின் திரைக்கதை அமைக்கப்பட்டது.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து ஆண் குணாதிசயங்களுடன் வளரும் சத்யா என்ற பெண், பிரபு என்ற பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர் மீது காதல் கொண்டு பிறகு பல எதிர்ப்புகளையும் மீறி இருவரும் திருமணம் புரிகின்றனர்.
அதற்காக இரு குடும்பத்தினரும் சந்திக்கும் சவால்கள் உணர்வுப்பூர்வமாகவும், நகைச்சுவையாகவும் சொல்லப்பட்டிருக்கும். பிறகு திருமணமான பிறகு குடும்ப பொறுப்புகளுக்குள் ஆண் குணாதிசயங்களுடன் சத்யா சந்திக்கும் சவால்கள், அதனை சரி செய்ய கணவன் பிரபு எடுக்கும் முயற்சிகள் என்று சத்யா தொடரின் பிற்பாதி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த தொடர் குடும்பப் பார்வையாளர்கள் மட்டுமின்றி, கல்லூரிப் பருவத்தினர், குழந்தைகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது. சென்னையின் வட்டார வழக்குகளில் சத்யா பேசுவது, அதட்டலாகவே கணவரைக் கொஞ்சுவது, குடும்ப உறுப்பினர்கள் மீது வெளிப்படையான அன்பைக் காட்டுவது என்று அனைத்தும் பலதரப்பு மக்கள் ரசிக்கும்படியாகவே அமைந்தது இந்த தொடரின் மிகப்பெரிய வெற்றி.
அதகளம் செய்யும் சத்யாவை ரெளடி பேபி என்றும், அவருக்கு பயந்து நடக்கும் கணவர் பிரபுவை அமுல் பேபி என்றும் பலர் அழைத்தனர். திரைக்கதையிலும் இது பிரதிபலித்தது. பலரது வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸ்களாகவும், இவர்களுக்கு இடையிலான காதல் காட்சிகள் மாறிய காலங்களும் உண்டு.
நிஜ வாழ்விலும் இருவரும் காதல் ஜோடிகள் என்பதால், திரையில் இவர்களது காதல் காட்சிகள் வெகுவாக ரசிக்கப்பட்டன. செம்பருத்தி தொடரில் கார்த்திக் - ஷபானா இடையிலான காதல் காட்சிகளுக்கு இருந்ததைப்போன்று, ரெளடி பேபி - அமுல் பேபி காதல் காட்சிகளுக்கு ரசிகர்கள் இருந்தனர்.
ரெளடி பேபி சத்யா கதாபாத்திரத்தில் ஆயிஷாவும், அமுல் பேபி பிரபு பாத்திரத்தில் விஷ்ணுவும் நடித்தனர். விஷ்ணு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் தொடரில் நடித்து புகழ் பெற்றவர்.
செம்பருத்தி தொடருக்காக இடையில் சத்யா, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி தொடர்கள் நிறுத்தப்பட்டன. புதிய அம்சங்களுடன் சத்யா -2 தொடர் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி முதல் சத்யா -2 தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சிறு திருப்பமாக ஆயிஷாவிற்கு இரட்டை வேடம் வழங்கப்பட்டுள்ளது. பிரபு, சத்யா கதாபாத்திரங்களோடு நித்யா என்ற பாத்திரமும் முதன்மையாக சேர்க்கப்பட்டுள்ளது.
அதாவது எதற்கும் அஞ்சாதவளாய் ரெளடி பேபி சத்யா - பாவாடை தாவணியில் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்ட பெண்ணாக நித்யா - என இரு பாத்திரங்களில் ஆயிஷா நடிக்கிறார். இதில் திருப்பமாக நித்யாவுடன் பிரபுவை சேர்த்துவைக்கும் முயற்சிகளில் சத்யா களமிறங்குவதுதான்.
ரளடி பேபி - அமுல் பேபி காதல் காட்சிகளை ரசித்தவர்களால், இதனை ஏற்றுக்கொள்வது சற்று சிரமம் தான். எனினும் இரண்டாம் சீசனில் வேறுபாடு காட்டுவதற்காக நாடகக்குழு இதனை செய்துள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக ஒளிபரப்பாகி வரும் காட்சிகளில் நித்யாவும் - சத்யாவும் வேறு வேறு என்பதை நம்பாமல், இருவரும் ஒன்றுதான் என்று எண்ணிக்கொண்டு எல்லாவற்றையும் சந்தேகத்தோடு அணுகி தன்னுடைய சந்தேகத்தை நிரூபிக்கும் பணிகளில் பிரபு களமிறங்குகிறார்.
நித்யாவை விட, சத்யாவுக்கே அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதை வெளியாகும் ஒவ்வொரு முன்னோட்டங்களின் கமெண்டுகள் தெரியப்படுத்துகின்றன. மேலும் சத்யாவே பிரபுவை நித்யாவுடன் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சிகளும் சத்யாவின் ரசிகர்களுக்கு சங்கடத்தையே ஏற்படுத்துகின்றன.
இந்த தொடருக்கு சற்குணம், எஸ்.கே.ராஜா திரைக்கதையில், பழனிசாமி வசனங்கள் எழுத, கார்த்திக் இயக்குகிறார். சேகர் சாய் பரத் பின்னணி இசையில் சத்யாவின் ஆக்ஷன் காட்சிகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. சத்யா முதல் பாகத்தின் வெற்றியைப் போலவே சத்யா -2 அமைகிறதா என்பதற்கு அடுத்தடுத்து பின்வரும் காட்சிகளே சாட்சி.