மணி ரத்னத்தின் பம்பாயை மறக்க முடியுமா?

இந்தக் கதையை எப்படி எடுத்தார் என இன்றும் ஆச்சர்யப்படும் விதத்தில்...
மணி ரத்னத்தின் பம்பாயை மறக்க முடியுமா?
Published on
Updated on
6 min read

பிரபல இயக்குநர் மணி ரத்னம் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சமூகவலைத்தளங்களில் திரையுலகினர் பலரும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். படம் வெளிவந்தபோது ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மணி ரத்னத்தின் படங்கள் மீண்டும் இன்று விவாதிக்கப்பட்டு வருகின்றன. மணி ரத்னம் படத்தை விவாதிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம்.

நாயகன், தளபதி, ரோஜா, அலைபாயுதே எனப் பல மறக்க முடியாத படங்களை மணி ரத்னம் இயக்கியுள்ளார். ஆனால் தளபதி, ரோஜா என இரு பெரிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு திருடா திருடா எடுத்த மணி ரத்னம் அதில் ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறினார். அடுத்ததாக அவர் எடுத்த பம்பாய் படம் இந்திய அரசியல் களத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. ஓர் இயக்குநருக்குத் துணிச்சல் இருந்தால் எந்த அளவுக்குத் தன் சுதந்திரத்தைப் பயன்படுத்துவார் என்பதற்கு 90களில் பெரிய உதாரணமாகத் திகழ்ந்தது பம்பாய் படம்,

*

1993 மார்ச் 12. மும்பையின் 13 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. மும்பையின் பங்குச் சந்தை, ஏர் இந்தியா அலுவலகம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் குண்டு வெடித்து, 257 பேர் கொல்லப்பட்டார்கள். 713 பேர் காயமடைந்தனர். ரூ. 27 கோடி மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்தன. அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற கலவரத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவதற்காக மும்பையின் பல பகுதிகள் குண்டு வைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்தியாவில் ஒரு மாநகரம் முதல்முறையாகப் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளானது இதுவே முதல்முறை. அதன்பிறகு இதுபோன்ற பல தாக்குதல்களை மும்பை மாநகரம் சந்தித்துள்ளது. 

இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு 1995-ல் மணி ரத்னம் இயக்கிய படம் - பம்பாய். 

காதலை எதிர்க்கும் பெற்றோர்களை உதறித் தள்ளிவிட்டு, மும்பையில் எதிர்காலத்தைக் கழிக்கும் கனவுகளுடன் வந்திறங்கிய காதல் ஜோடி (அரவிந்த் சாமி - மனிஷா கொய்ராலா), இந்து - முஸ்லிம் கலவரத்தில் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உக்கிரமான காட்சிகளுடன் சொன்ன படம் இது.  

திருடா திருடா படமாக்கத்தின்போது மும்பை குண்டு வெடிப்பு நடக்கிறது. மும்பையிலேயே இப்படி நடக்கிறதா என ஆச்சர்யப்பட்ட மணி ரத்னம், இதுகுறித்து நாம் ஏதாவது செய்யவேண்டும் என ஏ.ஆர். ரஹ்மானிடம் பேசியுள்ளார். வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தார். உருவானது பம்பாய் படம். 

இதை மலையாளப் படமாக எடுக்கலாம் என முதலில் முடிவு செய்தார் (இதற்கு முன்பு உணரு என்கிற மலையாளப் படத்தை எடுத்துள்ளார் மணி ரத்னம்). எம்.டி. வாசுதேவன் நாயரிடம் சென்று கதை குறித்து விவாதித்துள்ளார். மும்பைக் கலவரத்தில் தொலைந்து போகும் ஒரு சிறுவனைப் பற்றிய கதையை எழுதித் தரச் சொல்லியிருக்கிறார். இந்தக் கதைதான் பம்பாய் படத்தின் இரண்டாம் பகுதியில் இடம்பெற்றது. 

அந்தப் பையன் சம்பவ இடத்துக்கு எப்படி வந்தான் எனக் கதையைப் பின்னோக்கி நகர்த்தினார் மணி ரத்னம். வி.டி. ஸ்டேஷனில் இருந்து இறங்கும் பெண்ணின் மகன் தான் அந்தச் சிறுவன். அந்தப் பெண் எப்படி அங்கு வந்தார் எனக் கதை மேலும் பின்னே சென்றது.

போதும். பட்ஜெட் பெரிதாகும் போலுள்ளது எனத் தயங்கியுள்ளார் படத் தயாரிப்பாளர் முத்ரா சசி. சரி, பெரிய பட்ஜெட்டில் தமிழிலேயே இந்தக் கதையைப் பண்ணலாம் என முடிவு செய்தார் மணி ரத்னம்.

மலையாளத்தில் பாடல்கள் இல்லாத படமாக எடுக்க விரும்பினார் மணி ரத்னம். தமிழில் எடுப்பது என்று முடிவு செய்தபிறகே கதை முற்றிலும் மாறிப்போனது. 

கலவரத்தில் சிக்கிக்கொள்ளும் இரு சிறுவர்கள். அவர்கள் அந்த இடத்துக்கு எப்படி வந்தார்கள், அவர்கள் பெற்றோர்கள் யார் என்கிற கேள்விகளாகக் கதை மாறியதால், காதல், பாடல்கள் என கதை வேறு வடிவம் பெற்றது. 

அதற்கு முன்பு வரை மணி ரத்னம் படங்களில் மும்பை நடிகளுக்கு அவ்வளவாக வேலை இல்லை. பல்லவி அனு பல்லவி படத்தில் கிரண் வைரால், திருடா திருடாவில் சிறிய கதாபாத்திரத்தில் அனு அகர்வால் ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் மட்டும் ஏன் ஹிந்தி நடிகை மனிஷா கொய்ராலா?

தமிழில் அப்போது பிரபலமாக இருந்த நடிகையை மனிஷா நடித்த வேடத்துக்குத் தேர்வு செய்திருந்தால் மக்கள் அவரை நட்சத்திரமாகத்தான் பார்த்திருப்பார்கள். இஸ்லாமியப் பெண்ணாகக் கருதியிருக்க மாட்டார்கள். எனவே, தமிழ் சினிமாவில் அதுவரை நடிக்காத, இஸ்லாமியப் பெண் போலத் தோற்றமளிக்கக் கூடிய மனிஷாவைத் தேர்வு செய்தார் மணி ரத்னம். 

ஆனால் படத்தில் நடிக்க மணி ரத்னம் அழைத்தபோது தயங்கியுள்ளார் மனிஷா கொய்ராலா. ரோஜா படம் தவிர மணி ரத்னத்தின் இதர படங்களை அவர் அறிந்திருக்கவில்லை. தவிரவும் படத்தில் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக வேறு நடிக்கவேண்டும். தமிழ்ப் படம் வேறு. இதனால் இந்தப் படத்தை மறுத்துவிடு எனச் சிலர் மனிஷாவிடம் அறிவுறுத்தியுள்ளார்கள்.  இதுகுறித்து ஒளிப்பதிவாளர் அசோக் மேத்தாவிடம் கூறியுள்ளார். மணி ரத்னம் படத்தில் நடிக்க யோசிக்கிறாயா? அவர் எப்படிப்பட்ட படங்களை இயக்குகிறார் என்று உனக்குத் தெரியுமா? உடனே சம்மதம் சொல் என்று கோபத்துடன் மணி ரத்னத்தின் பெருமைகளை விளக்க, உடனே சம்மதம் சொல்லிவிட்டார். 

அரவிந்த் சாமி உள்ளே வந்தது தனிக்கதை. படங்களில் நடித்திருந்தாலும் மேல்படிப்புக்காக வெளிநாட்டில் படிக்கச் சென்றுவிட்டார் அரவிந்த் சாமி. பிறகு அவர் தாய்க்குப் புற்றுநோய் என்பதால் ஊருக்குத் திரும்பினார். 1993-ல் சில மாத இடைவெளியில் தாய், தந்தை என இருவரையும் இழந்தார். இதனால் தனிமைப்படுத்தப்பட்ட சமயத்தில்தான் பம்பாய் பட வாய்ப்பு அரவிந்த் சாமிக்குக் கிடைத்தது. எல்லாவற்றையும் மறந்து படப்பிடிப்புத் தளத்தில் மும்முரமானார். நடிக்கத் தேவையில்லாத சமயங்களில் ஓர் உதவி இயக்குநர் செய்யவேண்டிய வேலைகளையும் மணி ரத்னத்துக்காகச் செய்தார். இதன்மூலம் அரவிந்த் சாமியின் சோகங்களைப் போக்க முயற்சி செய்துள்ளார் மணி ரத்னம். ஓர் இயக்குநராக மட்டும் இல்லாமல் அரவிந்த் சாமிக்கு நல்ல நண்பராகவும் அவர் செயல்பட்ட தருணங்கள் அவை.

*

முதல் பாதியில் வருகிற கிராமத்துக் காட்சிகளைக் கேரளாவில் படமாக்கினார் மணி ரத்னம். பம்பாயின் உட்புறக் காட்சிகளையும் கலவரக் காட்சிகளையும் சென்னையில் செட் அமைத்துப் படமாக்கினார். என்னுடைய படங்களிலேயே சிறந்த விஷுவல் காட்சிகளைக் கொண்ட படங்களில் பம்பாயும் ஒன்று எனக் குறிப்பிடுகிறார் மணி ரத்னம். இந்தப் படம் பற்றி, மணி ரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல் (பரத்வாஜ் ரங்கன்) என்கிற நூலில் பல விஷயங்களைப் பரிமாறிக்கொண்டுள்ளார். 

தணிக்கையில் நீக்கப்பட்டவை (படம் - மணி ரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல் (பரத்வாஜ் ரங்கன்)
தணிக்கையில் நீக்கப்பட்டவை (படம் - மணி ரத்னம் படைப்புகள்: ஓர் உரையாடல் (பரத்வாஜ் ரங்கன்)

படம் எப்போது வெளிவரும் என்று காத்திருந்தார் ரசிகர்கள். ஆனால் மஹாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் வரை (பிப்ரவரி 12, மார்ச் 9 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றன.) பட வெளியீட்டுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பம்பாய் படம், தேர்தல் முடிந்த அடுத்த நாள், மார்ச் 10 அன்று தான் வெளியானது. 

படத்தை எடுத்து முடித்துவிட்டு, அதன்பிறகு அதை வெளியிடத்தான் தவித்துப்போனார் மணி ரத்னம். தணிக்கையில் பல்வேறு கமிட்டிகள் பார்த்தபிறகுதான் அனுமதி கிடைத்தது. தேர்தல் சமயம் என்பதால் அரசியல்வாதிகளும் இப்படத்தைப் பார்க்க விரும்பினார்கள். இதனால் ஒவ்வொரு வாரமும் பிரிண்டை எடுத்து மும்பைக்குப் பறந்தார் மணி ரத்னம். 

மஹாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை கட்சியை நிறுவியவர், பால் தாக்கரே. பம்பாய் படத்தை தாக்கரே பார்க்க விரும்பியதாகவும் அவர் பார்த்தபிறகு தாக்கரே தொடர்பான சில காட்சிகள், வசனங்கள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இங்கே உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். பம்பாய் தமிழ்ப்படம் தானே. இதற்கு ஏன் மும்பையில் அனுமதி தரவேண்டும்? சென்னையில் அனுமதி வாங்கினால் போதாதா? 

சென்னையில் உள்ள தணிக்கை அதிகாரி, பொறுப்பேற்க விரும்பவில்லை. பம்பாயில் உள்ள தலைமை அலுவலகத்துக்குப் படத்தை அனுப்பினார். அங்கு, மஹாராஷ்டிர அரசிடம் அனுமதி வாங்கச் சொன்னார்கள் என்கிறார் மணி ரத்னம்.

பல தணிக்கைகள், அரசியல்வாதிகளின் நெருக்கடி போன்றவற்றால் படத்தின் நீளத்துக்கு எதுவும் பாதிப்பா?

ஒன்றரை நிமிடக் காட்சிகளை மட்டும் நீக்கவேண்டியிருந்தது என்கிறார் மணி ரத்னம்.

படத்தில் பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தை முதலில் காட்சியாகத்தான் படமாக்கியிருந்தார் மணி ரத்னம். இதற்கு மசூதி கோபுரத்தின் மினியேச்சர் வடிவத்தை உருவாக்கி, அதில் போராட்டக்காரர்கள் ஏறுவதைப் போல படமாக்கியிருந்தார். மசூதி கோபுரத்தின் வெளிப்பகுதி உடைக்கப்படுவதை அவர் காண்பிக்கவில்லை. ஆனால் மசூதியை உடைப்பதை அதன் உள்பக்கமிருந்து காட்டியிருந்தார். நேரடியாக இச்சம்பவத்தைக் காண்பிக்காமல், கலை நயத்துடன் குறிப்பால் உணர்த்துவதுபோல படமாக்கியிருந்தார். ஆனால் இதைத் தணிக்கை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தைச் செய்தித்தாள்களின் வழியாகப் படத்தில் காண்பிக்கும் நிலைக்கு மணி ரத்னம் தள்ளப்பட்டார். 

படம் வெளிவந்த பிறகு ஒரு தணிக்கை அதிகாரி மணி ரத்னத்திடம் கேட்டுள்ளார், ஒரு இந்துவும் இஸ்லாமியப் பெண்ணும் காதலில் விழுந்து திருமணம் செய்கிறார்கள் என எந்தத் தைரியத்தில் இப்படிக் காட்டினீர்கள். இதற்கு முன்பு இப்படிக் காட்டப்பட்டதில்லை என்றார். நிஜ வாழ்க்கையில் இதுபோல நிறைய நடக்கிறது. இதை சினிமாக்களில் எத்தனை நாள் தான் மறைக்க முடியும் என்று பதில் அளித்துள்ளார் மணி ரத்னம்.


மத நல்லிணக்கத்தைப் படம் வலியுறுத்துவதால் இஸ்லாமியராக உள்ள நாசர் படத்தில் இந்துக் கதாபாத்திரத்திலும் இந்துவாக உள்ள கிட்டி, படத்தில் இஸ்லாமியராகவும் நடித்திருந்தார்கள். 

ஹம்மா ஹம்மா பாடல் படவெளியீட்டுக்கு முன்பு சூப்பர் ஹிட் ஆனது. இதனால் இந்தப் படத்தைக் காணும் ஆவலுடன் இருந்தார்கள் ரசிகர்கள். அனுமதி கடைசி நேரத்தில் கிடைத்ததால் திடீரென வெளியான பம்பாய் படம், தமிழக ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றது. தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், தெலுங்கில் டப் செய்யப்பட்டது. இதுதவிர பல படவிழாக்களிலும் பங்கேற்றது. 

படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் அனைவரையும் உருகவைத்தது. உயிரே உயிரே. இப்பாடல், கேரளாவில் உள்ள பெக்கால் கோட்டையில் படமாக்கப்பட்டது. உயிரே பாடல் படமாக்கப்பட்டபிறகு இது புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியாகிவிட்டது. கண்ணாளனே பாடல், திருமலை நாயக்கர் மஹாலில் படமாக்கப்பட்டது. 

படம் சூப்பர் ஹிட் ஆனதோடு விருதுகளையும் அள்ளிக் குவித்தது. தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படம் என்பதால் நர்கீஸ் தத் தேசிய விருதைப் பெற்றது. சுரேஷ் அர்ஸுக்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது. 

பின்விளைவுகள்

இப்படி பம்பாய் படம் மணி ரத்னத்துக்கு எல்லாவகையில் மகிழ்ச்சியும் பரபரப்புகளும் அளித்ததாக இருந்தாலும் படம் வெளியான பிறகு ஓர் அதிர்ச்சிச் சம்பவமும் நடைபெற்றது. 

1995 ஜூலை 10-ம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள மணி ரத்னம் வீட்டில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. மாடியின் வராண்டாவில் செய்தித்தாள் படித்தபடி காபி குடித்துக்கொண்டிருந்தார் மணி ரத்னம். அப்போது அவர் வீட்டின் அருகே இருந்து இருவர் மணி ரத்னம் மீது வெடிகுண்டுகளை வீசினார்கள். அந்த வெடிகுண்டுகள், குறி தவறி ஆஸ்பஸ்டாஸ் கூரை மீது விழுந்து வெடித்தன. இதனால் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. மணி ரத்னத்தின் வலது கால் தொடையில் காயம் ஏற்பட்டது. வேலைக்காரப் பெண்ணின் கையிலும் காயம் ஏற்பட்டது. குண்டு வீசியவர்களைப் பிடிக்க மணி ரத்னம் உள்ளிட்ட பலரும் முயன்றார்கள். ஆனால் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியபடி ஆட்டோவில் அவர்கள் தப்பிச் சென்றுவிட்டார்கள். வெடிக்காத குண்டு ஒன்றும் மணி ரத்னத்தின் வீட்டின் அருகே கண்டெடுக்கப்பட்டது. இதனால் திரையுலகமும் மட்டுமல்லாமல் அரசியல் களமும் பரபரப்பு அடைந்தது. 

இந்தச் சம்பவம் பல்வேறு விளைவுகளைத் தொடர்ச்சியாக உருவாக்கியது. சம்பவம் நடந்த நான்கு நாள்களுக்குப் பிறகு ஜூலை 14 அன்று, சென்னையில் நடைபெற்ற பாட்ஷா படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் வெடிகுண்டுக் கலாசாரம் பரவியுள்ளது என்று மணி ரத்னம் வீட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை முன்வைத்துப் பேசினார் ரஜினி. அவர் பேசியதாவது: இந்த விழாவில் முக்கியமான ஒரு பிரச்னை குறித்து பேச விரும்புகிறேன். சமீபத்தில் இயக்குநர் மணி ரத்னம் வீட்டின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு என் மனத்தை மிகவும் சங்கடப்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து பல இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டு, அப்பாவிப் பொதுமக்கள் பலியாகி உள்ளார்கள். சமீபகாலமாக, தமிழ்நாட்டில் வெடிகுண்டுக் கலாசாரம் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றார்.

ரஜினி பேசியபோது மேடையில் இருந்தும் பதில் கொடுக்காத காரணத்தால், மூத்த அரசியல்வாதி ஆர். எம். வீரப்பனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. சில நாள்களில் அதிமுகவிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். அதன்பிறகு ரஜினி vs ஜெயலலிதா என அரசியல் களம் மாறிப் போனது.

இப்படி அரசியல் நிகழ்வுகளைக் கொண்டு படமாக எடுக்கப்பட்ட பம்பாய் படம், அதன் வெளியீட்டுக்குப் பிறகும் பல்வேறு விளைவுகளை உருவாக்கிய விதத்தில் தமிழ் சினிமாவிலும் மட்டுமல்ல, தமிழக அரசியல் களத்திலும் இது ஒரு முக்கியமான படமாகிவிட்டது.

மணி ரத்னம் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தாலும் இந்தக் கதையை எப்படி எடுத்தார் என இன்றும் ஆச்சர்யப்படும் விதத்தில் அவருக்கு ஒரு மகத்தான, மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது பம்பாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com