ரஜினிக்கு பால்கே விருது: 80களில் மையம் கொண்ட ஸ்டைல் புயல்!

ஜனங்க என்கிட்ட என்ன எதிர்பார்க்கறாங்கன்னு நல்லா தெரியுது. அதை மட்டும் செஞ்சுட்டுப் போறேன்...
ரஜினிக்கு பால்கே விருது: 80களில் மையம் கொண்ட ஸ்டைல் புயல்!

தமிழ் சினிமாவில் 80களின் காலம் பொற்காலம் எனக் கூறப்படுகிறது. 80களில் ரசிகர்களால் அதிகமாகக் கொண்டாட்டப்பட்டவர் ரஜினி. தனக்கான ரசிகர்களை ரஜினி தேர்ந்தெடுத்துக்கொண்டதும் இந்தக் காலக்கட்டத்தில் தான். 80களில் ரஜினி நடித்த படங்களும் அதனால் ரஜினியின் திரை வாழ்க்கை ஜெட் வேகத்தில் முன்னேற்றம் அடைந்ததும் யாராலும் எண்ணிப் பார்த்திருக்க முடியாது. 80களில் மையம் கொண்ட ஸ்டைல் புயல் எப்படி ஒரு பெரிய மாற்றத்தைத் தமிழ் சினிமாவில் எப்படி உருவாக்கியது? 

*

‘மூன்று முடிச்சு’ படப்பிடிப்புச் சமயத்தில் ‘நடிப்பே உனக்கு வராது’ என்று பாலசந்தரை வெறுப்பின் உச்சிக்குக் கொண்டுபோன ரஜினியால், படம் முடிந்ததும் அதே வாயால் பாராட்டையும் வாங்க முடிந்தது. 

ரஜினிக்கு என்னதான் ஆக்ஷன் வேகமாக வந்தாலும், ஆரம்பத்தில் வசனம் பேசுவதென்றாலே கொஞ்சம் சிரமமான விஷயம்தான். ‘அவர்கள்’ படத்தின் முக்கியமான காட்சிக்கான படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்தது. தன் மீது சிறுநீர் கழித்துவிட்ட குழந்தையைத் தூக்கி சுஜாதாவிடம் கொடுத்துவிட்டு, சரளமான தமிழில் படபடவென பொரிந்து தள்ளவேண்டும். ஏகப்பட்ட ரிகர்சல் பார்த்துவிட்டுப் போயிருந்தும், ரஜினியோ டேக் மேல் டேக் வாங்கிக் கொண்டிருந்தார். தமிழ் சரியாகப் பேசத் தெரியாத நேரத்தில் சரளமாகத் தமிழில் வேகமாகத் திட்டவேண்டும் என்றால் எப்படி? 
அன்றைக்குதான் நடிப்பது கஷ்டமான விஷயம் என்பதையும், பாலசந்தருக்குக் கோபம் எந்த அளவுக்கு வரும் என்பதையும் தெரிந்து கொண்டார். நாலு வார்த்தை தமிழில் பேசுவதற்கே தடுமாறிக்கொண்டிருந்த ரஜினி, இரண்டே வருஷத்தில் ‘பதினாறு வயதினிலே’ படத்துக்காக நான்கு பக்க டயலாக்கை நாலே நிமிஷத்தில் பேசி நடிக்கும் அளவுக்குத் தேறிவிட்டார். 

அபிமான நட்சத்திரங்களின் ஆடை அலங்காரத்தையும் முடி அலங்காரத்தையும் மட்டுமே பின்பற்றி வந்த சினிமா ரசிகர்கள் கூட்டம், முதல்முறையாக ரஜினியின் மேனரிசத்தை கவனிக்க ஆரம்பித்தது. வில்லனாக நடித்த காலத்திலேயே ரஜினி பெரிய டிரெண்ட்செட்டர் ஆகிப்போனார். பரபரப்பான தமிழ் சினிமாவின் அங்கமாக மாறிப்போனாலும், ரஜினியின் நடிப்புத் திறமையை பாலசந்தரால் அப்போது நெகடிவ் கேரக்டரில் மட்டுமே காட்ட முடிந்தது. பின்னாளில் ஆக்ஷன் நடிகராக பிஸியாக இருந்த ரஜினியிடம் ஒளிந்திருந்த நகைச்சுவைத் திறமையைத் தனது ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘தில்லுமுல்லு’ ஆகிய படங்களின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததும் அதே பாலசந்தர்தான்.

டெலிபோனில் பேசிவிட்டு ரிசீவரை வைக்கும் ஒரு சாதாரண காட்சியில்கூட ஒரு சின்ன தீப்பொறியுடன், கொஞ்சம் வித்தியாசத்துடனும் உயிரோட்டத்துடனும் ரஜினியால் செய்ய முடியும் என்பதை பாலசந்தர் தெரிந்து வைத்திருந்தார். ‘மூன்று முடிச்சு’ படத்தில் சிகரெட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பதை வில்லத்தனத்துக்காகப் பயன்படுத்திக் கொண்டவர், அதையே ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் சென்ட்டிமெண்ட் காட்சியாக வைத்துக் கொண்டார். பாலசந்தரின் திரைக்கதை அமைப்பில் உருவான ‘சிலகம்மா செப்பிந்தி’, தெலுங்கு சினிமாவில் ஒரு மைல்கல். எதையாவது ஆக்ஷனில் காட்டிக் கொண்டே டயலாக் பேசும் வித்தியாசத்தை ரஜினி செய்திருந்தது பெரும் வரவேற்பைப் பெற்ற விஷயம் என்பது தமிழ்நாட்டில் பலருக்குத் தெரியாது. அதே சமயத்தில் கன்னட சினிமாவிலும் ரஜினிக்குப் பேர் சொல்லும்படியான வில்லன் வேடங்கள் கிடைத்தன. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் தொடர்ந்து அங்கு வாய்ப்புகளைப் பெற முடியவில்லை. 

கை கொடுத்த எஸ்.பி. முத்துராமன்

அடுத்த வாரிசு படத்தில் ரஜினி - ஸ்ரீதேவி
அடுத்த வாரிசு படத்தில் ரஜினி - ஸ்ரீதேவி


ரஜினிகாந்த், பாலசந்தர் கம்பெனியின் ஆர்ட்டிஸ்ட் என்கிற பெயரை மாற்றி நல்ல கேரக்டர்களை வாங்கிக் கொடுத்து நடிக்க வைத்தது எஸ்.பி. முத்துராமனும் பஞ்சு அருணாசலமும்தான். வில்லனாக நடித்தவரைக் குணச்சித்திர நடிகராக்கி, ஆக்ஷன் ஹீரோவாக்கி, சூப்பர் ஸ்டார் ஆகும்வரை உடன் இருந்தவர்கள் இவர்கள் இருவரும்தான். ரஜினியின் முழுத் திறமையை வெளிப்படுத்திக்காட்டிய எஸ்.பி.எம்.மின் இயக்கத்தில்தான் ரஜினி அதிகப் படங்களில் நடித்திருக்கிறார். ரஜினியை வைத்து முதன்முதலில் பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கியவரும் எஸ்.பி.எம்.தான்.  

நெகடிவ் ரோல்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினியை ‘புவனா ஒரு கேள்விக்குறி’யின் மூலம் குணச்சித்திர நடிகராக உயர்த்தியவர் எஸ்.பி.எம். நட்புக்கு முதலிடம் கொடுத்து உயர்ந்து நின்று, பொம்மைக் கணவனாக, ஆதரவு கிடைக்காமல் அல்லாடும் சாமானியனாக, ரஜினியின் பாத்திரப் படைப்பு படத்துக்குப் பெரிய பலம். பின்னாளில் ஏவிஎம்முடன் கூட்டணி போட்டுக் கொடுத்த வெற்றிகள் எல்லாம் தமிழ் சினிமாவை வாழ வைத்த விஷயங்கள். ஒரு பக்கம் ‘முரட்டுக்காளை’, ‘போக்கிரி ராஜா’, ‘மனிதன்’ என்று அடித்தட்டு மக்களைக் கவரும் ஆக்ஷன் படங்களாகக் கொடுத்து வசூலை வாரிக் கொண்ட அதே நேரத்தில் ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ என்று அவார்டுகளையும் அள்ளிக் கொண்ட கூட்டணி இது. வெறும் பதினெட்டு நாள்களில் ‘குரு சிஷ்யன்’ என்ற படத்தை எடுத்து, அதை வெள்ளி விழாக் கொண்டாடவும் வைத்திருக்கிறது இந்தக் கூட்டணி. 

‘பதினாறு வயதினிலே’ படத்தில் நடிக்க, வெறும் 2,500 ரூபாயை கறாராகப் பேசி வாங்கவேண்டிய நிலையில் இருந்த ரஜினியின் சம்பளம், ஆயிரங்களில் முன்னேறி ‘முள்ளும் மலரும்’ படத்தில் 35,000 ரூபாயைத் தொட்டது. பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே போனதால் அதைத் தவிர்க்க ரஜினி தனது சம்பளத்தை உயர்த்தினார். ஆயிரங்களில் இருந்த நடிகர்களின் சம்பளத்தை லட்சங்களுக்குக் கொண்டு சென்ற ரஜினி, எண்பதுகளின் இறுதியிலேயே கோடியைத் தொட்டு, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்தார். புதுயுக இயக்குநர்கள் மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் என திரை உலக பிரம்மாக்களை வைத்து இயக்கிய பழம்பெரும் இயக்குநர்களின் படைப்புகளிலும் ரஜினிக்கு இடம் கிடைத்தது. வில்லனாக நடித்துக் கொண்டிருந்த காலத்திலேயே, அவரின் மீது நம்பிக்கை வைத்து குணச்சித்திர வேடங்களிலும் நடிக்க அழைத்தார்கள். அதற்கு பின்னர் தேவர் பிலிம்ஸின் படங்களில் தொடர்ந்து பணியாற்றியது, ரஜினியைப் படிப்படியாக ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியது. 

திடீரெனக் கிடைத்த புகழும், எதிர்பாராமல் குவியும் பணமும், ரஜினியை முடக்கிப் போட்டன. பல்வேறு கெட்ட பழக்க வழக்கங்கள் என்று கொண்டாட்டங்களுக்குக் குறைவில்லாத வாழ்க்கையாகப் போய்க்கொண்டிருந்த காலக்கட்டத்தில்தான், நிம்மதி இழந்து நடிப்பதையே நிறுத்தி விடலாம் என்று 1979-ம் வருடத் தொடக்கத்தில் நினைத்தார் ரஜினி. இரண்டே வருடங்களில் யாரும் எட்டமுடியாத உயரங்களை அடைந்த ரஜினியால், இரண்டு மாதம்கூட அவற்றைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

“பஸ் கண்டக்டராக இருந்தபோது மாசம் 320 ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு படத்துக்கு அஞ்சு லட்சம் வாங்கும்போது பணம், புகழ், கடுமையான வேலை ஆகியவை என்னைப் படுக்கையில் தள்ளிவிட்டன.” (ஃபிலிம்ஃபேர், ஆகஸ்ட் 1993.)

ஒரே நாளில் மூன்று படங்களின் ஷூட்டிங், டென்ஷன், மது மற்றும் இன்ன பிற போதை வஸ்துகள் தவிர, ரஜினியை நெர்வஸ் பிரேக்டவுனில் கொண்டுபோய் விட்டதற்கு இன்னொரு காரணம், பரபரப்பாக எதையாவது எழுதவேண்டும் என்ற பத்திரிகைகளின் கண்களில் ரஜினியின் வெளிப்படையான வாழ்க்கை பட்டுத் தொலைத்ததுதான். 

ஆனால், ரஜினி ஒரு முடிந்து போன கதை என்று நினைத்தவர்களையெல்லாம் புரட்டிப் போட்டது ‘தர்மயுத்தம்’ படத்தின் வெற்றி. ரஜினியின் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்து வைத்ததும் அதுதான். சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும்போது திமிறுகிற திமிறல்கள், முகத்தில் கொண்டுவரும் பயங்கர வக்கிரங்கள் என, பகலில் அமைதியாகவும் பவுர்ணமி நேரத்து இரவுகளில் சைக்கோவாகவும் வித்தியாசம் காட்டியிருந்த ரஜினியின் நடிப்பை குமுதம் தனது விமரிசனத்தில் புகழ்ந்திருந்தது. ‘நான் வாழ வைப்பேன்’ படத்தில் சிவாஜி என்கிற பெரிய நடிகர் இருந்தும் இடைவேளைக்குப் பின்னர் சொற்ப நேரமே வரும் ரஜினியைப் பார்க்கத்தான் கூட்டமே வந்தது. தாதா, கொலைகாரன் என நெகடிவ் கேரக்டர்களையே பாஸிடிவாகச் சொன்ன ‘பில்லா’, ‘பொல்லாதவன்’, எம்.ஜி.ஆர் ஃபார்முலாவிலிருந்து விலகாத ‘முரட்டுக்காளை’, ‘அன்புக்கு நான் அடிமை’, கெட்ட அப்பாவுக்கும் நல்ல மகனுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தை மையப்படுத்திய ‘நெற்றிக் கண்’ எனத் தொடர்ந்த மசாலாப் படங்களின் வெற்றிக்குப் பின்னர், ரஜினிக்கு நிற்கக்கூட நேரமில்லை.

பல வகை வேடங்கள்
 

காயத்ரி படத்தில் ரஜினி
காயத்ரி படத்தில் ரஜினி

யானைக்குட்டியைத் தாயுடன் சேர்த்து வைக்கப் போராடும் ‘அன்னை ஓர் ஆலயம்’ படத்தின் வெற்றி, ரஜினிக்குக் குழந்தைகள் என்னும் புது ஆடியன்ஸை உருவாக்கிக் கொடுத்தது. காலப்போக்கில் குழந்தைகளைக் கவரும் வகையில் காட்சிகளை அமைப்பது ரஜினிக்குக் கட்டாயமாகிப் போனது. 1980--களில் குழந்தைகள் மத்தியில் ரஜினிக்குத் தனி ரசிகர் வட்டமே உருவானது. சினிமா நடிகர் ரஜினிகாந்துக்கும் இதய நோயுடன் போராடும் ஊனமுற்ற சிறுமிக்கும் இடையேயான அன்பைச் சொன்ன ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ரஜினிக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான நெருக்கத்தை இன்னொரு பரிமாணத்துக்குக் கொண்டு சென்றது. குழந்தைகளுடனும் கார்ட்டூன்களுடனும் ஆடிப்பாடி நடித்து எண்பதுகளின் இறுதியில் வந்த ஏவிஎம்மின் ‘ராஜா சின்ன ரோஜா’, குழந்தைகள் மத்தியில் ரஜினியின் இமேஜைத் தக்க வைத்துக் கொண்டது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை படம் வெளிவந்தாலும் ரஜினியின் முகம் இன்று எல்லாக் குழந்தைகளுக்கும் பரிச்சயம். வாரத்துக்கு ஒருமுறையாவது ரஜினியின் படத்தை டிவியில் போடும் தனியார் தொலைக்காட்சிகளுக்கும் அதில் பங்குண்டு.

தமிழில் முக்கியமான கலைப்படமாகக் கருதப்படும் ‘முள்ளும் மலரும்’ படத்தில் வரும் காளி பாத்திரப்படைப்பு, கிராமத்து முரட்டு அண்ணனைக் கண்முன் நிறுத்தியது. படத்தில் வரும் சம்பவங்கள், அடுத்த வீட்டில் நடப்பவற்றை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வைத் தந்ததாகச் சொன்ன ஆனந்த விகடனின் விமரிசனம், ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்துக்காக, ரஜினியின் நடிப்பை டாப் கிளாஸ் என்று விமரிசித்தது. பேராசை பிடித்த பெண்ணுக்குக் கணவனாக வந்து ரஜினி படும் பாட்டைக் குடும்பப்பாங்காகச் சொல்லியிருந்தது ‘சதுரங்கம்’. ‘முள்ளும் மலரும்’, ‘சதுரங்கம்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற படங்களின் வெற்றி, ரஜினிக்குக் கணிசமான பெண்கள் ஆடியன்ஸையும் உருவாக்கித் தந்தது. 

‘தர்மயுத்தம்’, ‘பில்லா’, ‘நெற்றிக் கண்’ என்று ஒரு பக்கம் தொடர்ந்த ஆக்ஷன் படங்கள், இளைஞர்களைக் கவர்ந்து இழுத்தன. ஒரே மாதிரியான ஆக்ஷன் படங்களாக இருந்தாலும் திரைக்கதை அமைப்பிலும் காட்சியமைப்பிலும் மாறுதலைச் செய்து வித்தியாசம் காட்ட முடிந்ததற்குக் காரணம் பஞ்சு அருணாசலம், விசு போன்ற வசனகர்த்தாக்கள்தான். ‘என் மனைவியை விட என்னை நன்றாகப் புரிந்து வைத்திருப்பவர்’ என்று ரஜினியால் குறிப்பிடப்படும் எஸ்.பி. முத்துராமன் போன்ற இயக்குநர்களும், ரஜினி படத்துக்கு வரும் ஆடியன்ஸின் பல்ஸை நன்றாகவே புரிந்து வைத்திருந்தார்கள். 
வெறும் ஆக்ஷன் படங்களாகவே தொடர்ந்து தராமல் ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘புதுக்கவிதை’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘ஸ்ரீராகவேந்திரர்’ போன்றவற்றையும் இடையிடையே கொடுத்து, தான் ஒரு குணச்சித்திர நடிகர் என்கிற பெயரையும் தக்க வைத்துக்கொண்டார் ரஜினி. 

ரஜினியிடம் இருந்த நகைச்சுவை உணர்வை பாலசந்தர் வெளிக்கொண்டு வந்திருந்தாலும், அதையே தொடர்ந்து ரஜினி ரசிகர்களுக்குத் தரும் ஃபுல் மீல்ஸில் முக்கியமான ஐட்டமாக காமெடியைக் கொண்டு வந்தது மறைந்த இயக்குநர் ராஜசேகர். குடும்பப்பாங்கான படங்களில் காமெடியைக் கலந்து கொடுத்த ராஜசேகரின் ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘படிக்காதவன்’, ‘மாப்பிள்ளை’, ‘தர்மதுரை’ போன்ற படங்கள், ரசிகர்களை முழுமையாகத் திருப்திப்படுத்தின. ஆக்ஷன் நடிகரால் நல்ல காமெடி நடிகராகவும் இருக்க முடியும் என்பதை வடக்கில் அமிதாப் பச்சன்தான் ஆரம்பித்து வைத்தார். அதே ஸ்டைலை சரியாகப் பிடித்துக் கொண்டு தென்னிந்தியாவில் பெரிய ரவுண்டு வந்தது ரஜினிதான். அதற்கு வசதியாக ஹிந்தியில் அமிதாப் நடித்த படங்கள் இங்கே ரஜினிக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டு பெரிய வெற்றிகளையும் பெற்றன. 

எண்பதுகளின் இறுதியில் ஒரே விதமான மசாலா ஃபார்முலாக்களைக் கொடுத்துத் தனது ஸ்தானத்தைத் தக்க வைத்துக்கொண்டார் ரஜினி.

‘எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும், நடிப்பைப் பொறுத்தவரையில் எனக்கு ரஜினிதான் குரு’ என்கிறார் நடிகர் கோவிந்தா. ரஜினியின் மேஜிக்குக்கு மொழியெல்லாம் ஒரு தடையில்லை என்பது உண்மைதான். ஆறு வயது முதல் அறுபது வயது வரையிலான எல்லோருக்கும் ரஜினி ஸ்டைலின் மீது தனி கிரேஸ் உண்டு. “ரஜினியால் ஒரு மோசமான தெருப்பொறுக்கி கேரக்டரில்கூட மக்களைக் கவர முடிந்ததென்றால் அவரிடம் ஓர் அபாரமான காந்த சக்தி இருக்கிறது” என்றுதான் கூறவேண்டும் என்கிறார் மூத்த நடிகரான சிவகுமார். (இந்தியா டுடே, ஆகஸ்ட் 1993.) 

ரஜினியின் சினிமா வாழ்க்கை, ஏகப்பட்ட சிகரங்களைத் தொட்டிருக்கிறது. அடிக்கடி படங்களில் நடிக்காவிட்டாலும் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. ரசிகர்களின் வட்டாரம் தமிழ்நாடு என்கிற எல்லையைத்தாண்டி ஜப்பான் வரை விரிந்திருக்கிறது. எதிர்பார்ப்புகளும் அதிகமாகி இருக்கின்றன. தனது படங்களின் வெற்றி, தோல்வி நிறையப் பேரைப் பாதிக்கிறது என்பதை ரஜினியும் அறிந்து வைத்திருக்கிறார். அதுவே அவரை நிறைய விஷயங்களில் நிதானம் காட்ட வைத்திருக்கிறது.

ரஜினியின் சொந்த வாழ்க்கை
 

ரஜினி - லதா
ரஜினி - லதா

ரஜினியைப் போல வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவித்துவிட்டதாகத் திருப்தியடையும் நபர்களைக் காண்பது கஷ்டம். எல்லோரையும் போலவே தனது வாழ்க்கையின் கடைசிக்காலமும் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ரஜினி. ஆனால் அந்த நினைப்பு ரஜினியின் முப்பதாவது வயதிலிலேயே வந்ததுதான் ஆச்சரியமான விஷயம்.

“சினிமாவில் பணம், புகழ், கார், ஆடம்பர பங்களா இப்படிக் கண்டபடி ஆசைப்பட்டேன். எல்லாமும் கிடைத்துவிட்டது. வாழ்க்கையின் எல்லா சுகங்களையும் ஆண்டவன் எனக்கு கொடுத்துட்டான். 74, 75 வயசு வரைக்கும் எது வேணும்னு நினைச்சேனோ அதெல்லாம் இப்போதே கிடைச்சுடுச்சு. இனிமேல் இந்த ரஜினிகாந்தை யார் என்றே தெரியக்கூடாது. யாரும் அடையாளம் கண்டுக்கக் கூடாது. அப்படிக் கண்டுபிடிக்க முடியாத இமயமலைப் பக்கம் போயிடணும். நாடோடி போல் மனம் போன போக்கில் நடந்து, கிடைச்சதைச் சாப்பிட்டு நினைத்த இடத்தில் படுத்துத் தூங்கணும்.” (கல்கி பேட்டி, 1989.)

சிவாஜியைப் போன்ற தோற்றமும் நிறமும் அசைவுகளும் சிவாஜிராவை இன்னொரு சிவாஜியாகச் சொல்ல வைத்தாலும், நடிப்பு என்கிற விஷயத்தில் சிவாஜிக்கும் ரஜினிக்கும் ரொம்ப தூரம். ரஜினியின் ஆரம்பகால வில்லன் வேடங்கள் ‘உத்தமபுத்திரன்’ சிவாஜியை ஞாபகப்படுத்துவதாக வந்த விமரிசனங்களைப் படித்து ரஜினிக்கு கே. பாலசந்தர் சொன்ன அறிவுரை...  “சிவாஜிராவ் என்கிற பெயரைத்தான் ரஜினிகாந்த் என்று மாற்றி வைத்தேன். அதற்காக சிவாஜியின் நடிப்பைக் காப்பியடித்து விடாதே! அதை உன்னால் முழுமையாகச் செய்யவும் முடியாது. உனக்கென்று தனி பாணியை உருவாக்கி வைத்துக் கொள்வதுதான் உன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு நல்லது.”

ரசிகர்களுக்கு அளித்த விருந்து

முரட்டுக்காளை படத்தில் ரஜினி
முரட்டுக்காளை படத்தில் ரஜினி



பேண்ட் பாக்கெட்டில் இருந்து பெரிய கத்தியை எடுக்கிறார். வில்லன் கோஷ்டி வியர்த்துப் போய்ப் பார்க்கிறது. கையில் எடுத்த கத்தியை அப்படியே அந்தரத்தில் சுழல விடுகிறார். முன் பெஞ்சில் இருப்பவர்கள் முதல் பால்கனியில் இருப்பவர்கள் வரை வித்தியாசம் காட்டாமல் கைதட்டுகிறார்கள். இது சாத்தியமா என்பதைப் பற்றியெல்லாம் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ரஜினி படங்களில் எப்போதுமே நோ லாஜிக்... ஒன்லி மேஜிக்!

ரஜினியின் பெரும்பாலான படங்கள் மசாலாக் களஞ்சியங்களாக இருந்தாலும், கமர்ஷியல் காரணங்களால் ரஜினி என்கிற தனி நபரை முன்னிலைப்படுத்துவதாகவே இருக்கும். பொதுவாக ரஜினி பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கி, படத்தின் தரம் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. சமீப காலமாகத்தான் படங்களைப் பற்றி வரும் விமரிசனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தான் நடித்த படங்களைப் பற்றிச் சிலாகித்து ரஜினி எதையும் பேசுவதில்லை. படம் வெளிவந்து இரண்டொரு நாள்களில் ரிசல்டையும் தெரிந்து கொண்ட பிறகு அதைப் பற்றியெல்லாம் அதிகமாக ஏதும் நினைப்பதில்லை. 

“என்னுடைய படத்துல தொண்ணூறு சதவீதம் பொழுதுபோக்கு அம்சம்தான். பத்து பர்ஸெண்ட் வேணா மெஸேஜ்னு ஏதாவது சொல்லலாம். எப்பவுமே ‘நான் மெஸேஜ் சொல்றேன்... வித்தியாசமா ஏதாவது செய்யறேன்’னு என்னை வெச்சு எக்ஸ்பெரிமெண்ட் எல்லாம் பண்றதில்லே... ஜனங்க என்கிட்ட என்ன எதிர்பார்க்கறாங்கன்னு நல்லா தெரியுது. அதை மட்டும் செஞ்சுட்டுப் போறேன். ஏன்னா, இது எக்கச்சக்கமான பணம் போட்டு நடக்கிற பிஸினஸ்... அதனால்தான் இதை ‘இன்டஸ்ட்ரீ’ன்னு சொல்றோம்... எகனாமிக்ஸ், டிமாண்ட் அண்ட் சப்ளை தியரிதான் இங்கே! ஜனங்களுக்கு எது தேவையோ, அதைக் கரெக்டா கொடுக்கணும். உங்களையே நான் ஒரு விருந்துக்குக் கூப்பிடறேன்னு வெச்சுக்கங்க... என்னவெல்லாம் உங்களுக்குப் பிடிக்கும்னு முன்கூட்டியே தெரிஞ்சுகிட்டு, அதையெல்லாம் ‘சர்வ்’ பண்ணி சந்தோஷப்படுத்தினாத்தான் அதுக்குப் பேரு விருந்து.”  (1993, ஆனந்த விகடனில் மதன் உடனான சந்திப்பு.)

ஆமாம்.  ரஜினி தன் ரசிகர்களுக்கு எப்போதும் விருந்துதான் வைக்கிறார். ரசிகர்களுக்காகச் சிரித்து, சண்டை போட்டு, மரத்தைச் சுற்றி வந்து, ஹீரோயினைக் கட்டிப் பிடித்து, உணர்ச்சிகரமாக வசனம் பேசி, ஆடிப்பாடி... எல்லாத்தையும் ஒரே படத்தில் செய்தாக வேண்டும். கூட்டு, பொரியல், ஸ்வீட், வடை, அப்பளத்தோடு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியைத் தந்தாக வேண்டும். சில சமயங்களில் மீல்ஸில் கூட்டு, பொரியல் எல்லாம் உயர்தரமாகவும் சுவையாகவும் இருக்க வேண்டிய தேவையெல்லாம் இல்லை. எல்லாம் தவறாமல் இருந்தாலே போதும். 

எழுபதுகளின் இறுதியில் தமிழ்த் திரையுலகில் பெரும் புரட்சியே நடந்தது. அதை வழிநடத்திச் சென்றவர்கள் இயக்குநர்களாக முத்திரை பதித்த கே. பாலசந்தர், ஸ்ரீதர், மகேந்திரன், பாரதிராஜா போன்றவர்கள்தான். கதாநாயகர்களின் செல்வாக்கைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இயக்குநர்களின் தனி சாம்ராஜ்ஜியம் நிறுவப்பட்டது அப்போதுதான். அத்தகைய புரட்சியை வழிநடத்திச் சென்றவர்களுக்குத் தோள் கொடுத்து நின்றவர்களுள் ரஜினிக்கும் கமலுக்கும் முக்கியமான இடம் உண்டு. 

சராசரி மனிதருக்கு உண்டான தோற்றம், நடை உடை பாவனைகள், யதார்த்த சினிமாவுக்குத் துணை நின்றது. நாடக மேடையில் இருந்து வந்த நடிகர்களின் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு, சினிமா ரசிகர்களை அலுக்க வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் கமல், ரஜினி போன்றவர்களின் யதார்த்த நடிப்பு, பாராட்டுகளை அள்ள ஆரம்பித்தது. அண்ணன் தங்கைப் பாசத்தை இயல்பாக வெளிப்படுத்தியிருந்த ‘முள்ளும் மலரும்’, பருவ வயதிலிருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றங்களைச் சொன்ன ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, விபசாரியும் ரவுடியும் கைகோத்து சம்சார வாழ்க்கைக்குத் திரும்புவதால் வரும் இடர்ப்பாடுகளைச் சொன்ன ‘தப்புத்தாளங்கள்’, பேராசை அதிகமுள்ள பெண்ணால் ஆண் படும் அவஸ்தையைச் சொன்ன ‘சதுரங்கம்’, பெண் விஷயத்தில் ஆண்கள் காட்டும் தவறான அணுகுமுறையை யதார்த்தமாக சொன்ன தமிழ் சினிமாவின் முக்கியமான படமான ‘அவள் அப்படித்தான்’ என விதவிதமான சப்ஜெக்டுகளில் ரஜினி முத்திரை பதித்தார்.

ரஜினி நடித்த தரமான படங்களின் சகாப்தம் ‘முரட்டுக்காளை’க்கு முன்னதாகவே முடிவுக்கு வந்துவிட்டது. ‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’ ஆகியவற்றின் அபார வெற்றி, இயக்குநர்களின் யுகத்துக்கு முடிவுகட்டி, சினிமா உலகில் ஹீரோ -- தயாரிப்பாளர் என்கிற புதுக் கூட்டணிக்குப் பெரும்பான்மையை அள்ளிக் கொடுத்துவிட்டது. 

ரஜினிக்கு எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்துவது ஒருகட்டத்தில் கட்டாயமாகிப்போனது. விளைவு, சில காட்சிகளில் லாஜிக்கை மீற நேரிட்டது. டைரக்டரின் விருப்பத்துக்கு மாறாக, ‘ஊர்க்காவலன்’ படத்தில் தனது காலுடன் கயிற்றால் காரைக் கட்டிக் கொண்டு நிற்கிற மாதிரியான லாஜிக் இல்லாத காட்சிகளுக்குப் பாமர ரசிகர்களிடமிருந்து பெரிய வரவேற்பு இருந்தது. மீடியா இவற்றைப் பெரிதுபடுத்தி விமரிசித்தாலும் ரசிகர்களிடையே வரவேற்பு குறையவில்லை.

நல்ல சினிமா?

தில்லுமுல்லு படத்தில் ரஜினி - மாதவி
தில்லுமுல்லு படத்தில் ரஜினி - மாதவி

ரஜினிக்கு நல்ல சினிமா மீது ஆர்வமும், தரமான சினிமாவின் உருவாக்கத்தில் தன் பங்கு இல்லையே என்கிற ஆதங்கமும் இருப்பதாகத் தெரிவிக்கிறார் டைரக்டர் மகேந்திரன். ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலம் ரஜினி என்கிற திறமையான குணச்சித்திர நடிகரைத் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவரின் இயக்கத்தில், ரஜினி நடித்த படங்கள் தரத்தில் சோடை போனதில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். ‘அவள் அப்படித்தான்’ படத்துக்குப் பிறகு ரஜினி நடித்தவையெல்லாம் சினிமாவே இல்லை என்கிற காட்டமான விமரிசனம் இன்றும் இலக்கிய உலகில் உண்டு. தனது முதல் ஐம்பது படங்களில் ரஜினி ஏற்றுக் கொண்ட பாத்திரங்கள்தான் அவரது திரையுலக வாழ்க்கைக்கு அஸ்திவாரம். குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் பெரிய வெற்றிகளைச் சந்தித்தவரும் அவர் ஒருவர்தான்.

எண்பதுகளில் ரஜினியிடமிருந்து வந்த படங்கள், கமர்ஷியல் ரீதியாகப் பெருவெற்றி பெற்று ஏவிஎம், சத்யா மூவிஸ், கவிதாலயா, தேவர் பிலிம்ஸ், சுஜாதா பிலிம்ஸ், பி.ஏ. ஆர்ட்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்களைத் தூக்கி நிறுத்தியதோடு, ரஜினியின் பேங்க் பேலன்ஸையும் கணிசமாக உயர்த்திவிட்டன. தொடர்ச்சியான பட வெற்றிகள், ரஜினியை மேக்ஸிமம் கியாரண்டி ஹீரோ என்கிற அந்தஸ்துக்கு உயர்த்தி அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கின. அன்றிலிருந்து இன்று வரை ரஜினியை வைத்துப் படமெடுத்து ஒரு ரூபாய் யாரும் நஷ்டப்பட்டது கிடையாது என்கிறார் பி.ஏ. ஆர்ட்ஸின் பஞ்சு அருணாசலம். ஆனால், தயாரிப்பாளர் ரஜினிக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை என்பதை ‘மாவீரன்’, ‘வள்ளி’, ‘பாபா’ போன்ற படங்கள் சொல்லிவிட்டன. 

“சினிமா எனது தொழில். வாழ்க்கையின் ஒரு பகுதி. எனவே என்னுடைய உணர்ச்சிகளையும் கொள்கைகளையும் சொல்ல, அடுத்தவர்களின் சினிமாவை நான் பயன்படுத்துவது நியாயமில்லையே! நான் நினைப்பதைச் செயல்படுத்தணும்னா துறவியாகி, இமாலயத்துக்குத்தான் போயாகணும்” என்று சொல்லும் ரஜினி, தன்னுடைய படங்களில் வன்முறை இருப்பது உண்மைதான் என்பதை ஒப்புக் கொள்கிறார். ஆனால், “அநியாயத்துக்காக வன்முறையில் ஈடுபடுவது மாதிரியான காட்சிகள் இருக்காது. வன்முறையின் முடிவில் நடப்பது நல்லது என்கிற மாதிரிதான் காட்சிகள் இருக்கும். இருந்தாலும் எனது ரசிகர்களில் குழந்தைகளும் அதிகமாக இருப்பதால், சமீப காலங்களில் வன்முறைக் காட்சிகளைத் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறேன்” என்கிறார். (15.1.89, கல்கியில் வெளிவந்த ரஜினியின் பேட்டியிலிருந்து.)

கடவுளின் அருள்!

மூன்று முகம் படத்தில் ரஜினி - ராதிகா
மூன்று முகம் படத்தில் ரஜினி - ராதிகா

கேள்வி : உங்கள் வெற்றிக்கு யார் காரணம்?
ரஜினி    : கடவுள்!
கேள்வி : அப்படியானால் உழைப்பு, திறமையெல்லாம் காரணம் இல்லையா?
ரஜினி : இருந்தாலும் கடைசியில் கிடைக்கும் ரிசல்ட்டுக்குக் கடவுளே காரணம்.

- பத்து வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனுக்கு ரஜினி கொடுத்த பேட்டி இது.

சினிமாவில் நடிக்க வந்த பின்பு தான் மிகவும் கஷ்டப்பட்டு நடிப்பதாகவோ, தனக்குத் திறமை அதிகமாக இருப்பதாகவோ ரஜினி சொன்னதில்லை. குறுகிய காலத்திலேயே நடிப்பில் அவருக்குப் ‘போதும்’ என்கிற திருப்தி வந்துவிட்டது. சினிமா-உலகில் தனது வெற்றிக்குக் காரணமாக ஆண்டவனைத்தான் சொல்கிறார். 

“தெய்வச் செயல்தாங்க... அதோட என் முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தன. கடவுளே எல்லாம் பார்த்துப்பாருன்னு விட்டிருந்தால் நான் இன்னும் கண்டக்டராகவே இருந்திருப்பேன். அந்தச் சூழ்நிலையில் அந்தப் பத்திரமான உத்தியோகத்தை விட்டுவிட்டுத் தைரியமா சென்னைக்கு வந்து ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சிதான்...”  (சுஜாதாவுடனான உரையாடல், குமுதம் 29.9.94.)

ஆனால் ரஜினியின் வெற்றிக்கு அதிர்ஷ்டமும் ஒரு காரணம். ஊர் விட்டு ஊர் வந்து மொழி தெரியாத ஊரில் அடிமட்டத்திலிருந்து உழைத்து சினிமாவில் பெரிய சக்தியாகி இருக்கும் சிவாஜிராவுக்கு இப்படியொரு வீழ்த்த முடியாத சாம்ராஜ்ஜியம் உருவாகியிருப்பது பற்றிய ஆச்சரியம் இன்னும் மிச்சமிருக்கிறது. ஆண்டவன் சில பேரைக் கடுமையாக உழைக்க வைக்கிறான். சிலபேருக்காக ஆண்டவனே கடுமையாக உழைக்கிறான். இதை ரஜினியும் ஒப்புக் கொள்கிறார்.

“எல்லோரும் உழைக்கிறாங்க. நானும்தான் உழைக்கிறேன். மத்தபடி நான் ஒருத்தன் மட்டும் ஸ்பெஷலா உழைக்கலையே? ஒருவேளை மத்தவங்களைவிட எனக்கு ஆண்டவனோட ஆசீர்வாதம் கூடுதலாக இருக்கலாம். அவ்வளவுதான்.” (பாக்யா, 1991 தீபாவளிச் சிறப்பிதழ்.)

ரஜினிக்கு ஆண்டவனின் அருள் அதிகமாகவே இருக்கிறது என்பதுதான் அவரது துணைவியாரின் கருத்தாகவும் இருக்கிறது.

“ரஜினி இன்று தமிழ்நாட்டில் முக்கியமான நபராக வளர்ந்திருப்பதற்குக் காரணமே அவரது ஆன்மிக உணர்வுதான். ஒவ்வொரு முறையும் கஷ்டம் வரும்போதெல்லாம் தன்னுடைய மனத்தின் ரணங்களுக்குத் தானே மருந்து போட்டு ஆற்றிக்கொண்டு வந்தாரே தவிர மற்றவர்களைச் சார்ந்து இருந்ததில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர் மீது கடவுளுக்கும் ஏதோ ஒரு தனிக் கருணையும் அன்பும் இருப்பதாகத்தான் தெரிகிறது” என்கிறார் லதா ரஜினிகாந்த், அவர் கணவரைப் போலவே! (ஆனந்த விகடன், 24.11.1996.)

ரஜினியின் வசீகரத்துக்குக் காரணம் இதுதான் என்று முடிவாகச் சொல்லிவிட முடியாது. அவர் பிறவி நடிகரெல்லாம் இல்லை. சாதாரண மனிதன். அவர் சினிமாவில் நடிக்கும் உருவங்களில் ஒரு சாமானியன் தன்னைப் பார்க்க முடியாது. ரஜினி ஏற்று நடித்த பாத்திரங்கள் பெரும்பாலும் குடிப் பழக்கம், சிகரெட் பழக்கம் உள்ளவைதான். குற்றம் குறைகள் அல்லாத ஹீரோவாகத் தன்னைக் காட்டிக் கொள்ளாமல், குணக்கேடுகள் இருந்தாலும் நல்ல இதயம் கொண்டவராக அவர் ஏற்றுக்கொண்டு நடித்த கேரக்டர்கள்தான் அவர் சாய்ஸ். திரையில் சாதாரணத் தொழிலாளியாகக் காட்டப்பட்டாலும் உயர் ரக ஷூக்களையும் கண்ணாடிகளையும் அணிந்திருப்பார். சமஸ்கிருத ஸ்லோகங்கள் சொல்வது, எந்தப் பிரச்னைக்கும் முதல் தீர்வு அமைதியாகப் பொறுத்துப் போவதே என்பதை முன்னிறுத்துவது போன்ற காட்சிகளில் வரும் ரஜினியின் உருவத்தில், ஒரு சாமானியன் தன்னைப் பார்க்க முடியாது.  லஞ்சம், ஜாதி, மதம் போன்ற பொதுப் பிரச்னைகள் பற்றியெல்லாம் சினிமாவில் பெரும்பாலும் ரஜினி பேசி நடித்ததில்லை.

ஆனால் ரஜினியின் திறமை இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்கிறார்கள் அவரை அருகிலிருந்து பார்த்த அனுபவமுள்ள கே. பாலசந்தர், மகேந்திரன், எஸ்.பி. முத்துராமன், கமல்ஹாசன், மணிரத்னம் போன்றவர்கள். ‘புவனா ஒரு கேள்விக்குறி’, ‘மூன்று முடிச்சு’, ‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ போன்ற படங்களில் ரஜினியின் நடிப்பு பேசப்பட்டாலும்கூட, தான் ஒன்றும் பிரமாதமான நடிகனில்லை என்றுதான் ரஜினி சொல்கிறார். “நான் வெறும் ஆக்ஷன் ஹீரோதான். நல்ல நடிகன் கிடையாது” என்கிறார் ஒளிவு மறைவின்றி, அடக்கமாக. (இந்தியா டுடே, செப்டம்பர் 6, 1993.)

ரஜினி, தான் நடிக்கும் கேரக்டர்களை காலத்துக்கு ஏற்ப, தன்னுடைய வயதுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டே வந்திருக்கிறார். நாற்பது வயதைத் தாண்டிய நடிகர்கள் கூடத் தமிழ் சினிமாவில் இன்னும் காலேஜுக்குப் போய்க்கொண்டிருக்கும்போது, தனது சினிமா உலக வாழ்க்கையில் காலேஜுக்குப் போகாத முன்னணி நட்சத்திரம் இவர்தான். ‘நெற்றிக் கண்’ படத்தில் வரும் சில கல்லூரிக் காட்சிகளைத் தவிர, தான் முப்பதுகளில் இருந்தபோதுகூட கல்லூரி மாணவனாக நடிக்க மறுத்து முதிர்ச்சியான கேரக்டர்களில் நடிக்கவே ரஜினி விரும்பினார். ரஜினி படங்களில் எது மாறினாலும், கே. பாலசந்தர் ஆரம்பித்து வைத்த ரஜினியின் ஸ்டைல் பல பரிமாணங்கள் பெற்று இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

1980 - 90 வரை ரஜினி நடித்த படங்கள்

மாப்பிள்ளை படத்தில் ரஜினி - அமலா
மாப்பிள்ளை படத்தில் ரஜினி - அமலா

1980

பில்லா
ராம் ராபர்ட் ரஹீம் (தெலுங்கு)
அன்புக்கு நான் அடிமை
காளி
மாயதாரி கிருஷ்ணுடு (தெலுங்கு)
நான் போட்ட சவால்
ஜானி
காளி (தெலுங்கு)
எல்லாம் உன் கைராசி
பொல்லாதவன்
முரட்டுக்காளை

1981

தீ
கழுகு
தில்லுமுல்லு
கர்ஜனை
கர்ஜனம் (மலையாளம்)
நெற்றிக்கண்
கர்ஜனெ (கன்னடம்)
ராணுவ வீரன்

1982

போக்கிரி ராஜா
தனிக்காட்டு ராஜா
ரங்கா
புதுக்கவிதை
எங்கேயோ கேட்ட குரல்
மூன்று முகம்

1983

பாயும் புலி
துடிக்கும் கரங்கள்
அந்தா கானூன் (ஹிந்தி)
தாய் வீடு
சிவப்பு சூரியன்
ஜீத் ஹமாரி (ஹிந்தி)
அடுத்த வாரிசு
தங்க மகன்

1984
    
மேரி அதாலத் (ஹிந்தி)
நான் மகான் அல்ல
தம்பிக்கு எந்த ஊரு
கை கொடுக்கும் கை
இதே நா சவால் (தெலுங்கு)
அன்புள்ள ரஜினிகாந்த்
கங்குவா (ஹிந்தி)
நல்லவனுக்கு நல்லவன்
ஜான் ஜானி ஜனார்த்தன் (ஹிந்தி)

1985

நான் சிகப்பு மனிதன்
மகா குரு (ஹிந்தி)
உன் கண்ணில் நீர் வழிந்தால்
வாஃப்தார் (ஹிந்தி)
ஸ்ரீராகவேந்திரர்
பேவ்பாய் (ஹிந்தி)
படிக்காதவன்

1986

மிஸ்டர் பாரத்
நான் அடிமை இல்லை
ஜீவன போராட்டம் (தெலுங்கு)
விடுதலை
பகவான் தாதா (ஹிந்தி)
அஸ்லி நகலி (ஹிந்தி)
தோஸ்தி துஷ்மன் (ஹிந்தி)
மாவீரன்

1987
    
வேலைக்காரன்
இன்சாஃப் கோன் கரேங்கா (ஹிந்தி)
ஊர்க்காவலன்
மனிதன் 
உத்தர் தக்ஷின் (ஹிந்தி)

1988

தமாச்சா (ஹிந்தி)
குரு சிஷ்யன்
தர்மத்தின் தலைவன்
பிளட் ஸ்டோன் (ஆங்கிலம்)
கொடி பறக்குது

1989

ராஜாதி ராஜா
சிவா
பிரஷ்டாச்சார் (ஹிந்தி)
ராஜா சின்ன ரோஜா
மாப்பிள்ளை
சால்பாஸ் (ஹிந்தி)

1990

பணக்காரன்
அதிசய பிறவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com