Enable Javscript for better performance
Sivakumar 80th birthday- Dinamani

சுடச்சுட

  நடிகர் சிவகுமாரின் 80-வது பிறந்த நாள்: உதாரணக் கலைஞன்

  By எழில்  |   Published on : 27th October 2021 12:09 PM  |   அ+அ அ-   |    |  

  Sivakumar_LIB_Thirupp1_27-01-2009_17_49_32_10532885_(16)xx

   

  கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர் சிவகுமார். 40 ஆண்டுகளாகத் திரைப்படங்களிலும் நாடக மற்றும் சொற்பொழிவு மேடைகளிலும் சின்னத்திரைத் தொடர்களிலும் பங்கேற்று உதாரணக் கலைஞராகத் திகழ்கிறார். இன்று அவருடைய 80-வது பிறந்த நாள். 

  * பிறந்த பத்தாவது மாதத்தில் தன்னுடைய தந்தையை இழந்தார் சிவகுமார். வறுமையான குடும்பத்தில் பிறந்து, பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தவர், பிறகு சென்னையில் 7 ஆண்டுகள் தங்கி ஓவியம் பயின்றார். 1965-ல் காக்கும் கரங்கள் படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். 1967-ல் வெளியான கந்தன் கருணை படம் அவருக்குப் பேரும் புகழையும் அளித்தது.

  * தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்று அனைவரும் குறிப்பிடும் விதத்தில் தனது உடலை யோகா மற்றும் பல்வேறு உடற்பயிற்சிகள் மூலம் திடமாகக் காத்து வருகிறார்.

  * 1970-ம் ஆண்டு, சென்னையில் சொந்த வீடு வாங்கினார். 1958-ல் சென்னைக்கு வந்தார். ரூ. 40,00 சேமிப்பில் மூன்றாயிரம் சதுர அடியில் சென்னை தியாகராய நகரில் கிருஷ்ணா தெருவில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கினார். 

  * 1974 ஜூலை 1 அன்று லட்சுமியைத் திருமணம் செய்தார் சிவகுமார். சென்னையிலிருந்து நாடக்குழுவினரைத் தனது திருமணத்துக்காக அழைத்துச் சென்றார். 5,000 பேருக்கு மேல் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார்கள். சூர்யா, கார்த்தி என இரு மகன்கள். மகள் - பிருந்தா. மூவருமே திரையுலகில் உள்ளார்கள். 

  * 1965-ம் ஆண்டு முதல் டைரி எழுதும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்.  

  * ஒழுங்காக ஓவியம் படித்து உருப்படுகிற வழியைப் பார், கூத்தாடி வேலைக்கு வராதே என்று சிவகுமாருக்கு அறிவுரை செய்துள்ளார் எம்.ஆர். ராதா.

  * 1987-ல் இது ராஜபாட்டை அல்ல என்கிற சுயசரிதையை வெளியிட்டார்.

  * 2001-ல் பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்ததுடன் இனிமேல் பெரிய திரையில் நடித்தது போதும் என முடிவெடுத்தார் சிவகுமார். 

  * 1999 முதல் 2005 வரை சித்தி, அண்ணாமலை என தொலைகாட்சித் தொடர்களில் நடித்தார். ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்: சினிமாவில் கூட பெரிய சம்பளம் கிடையாது. தொலைக்காட்சித் தொடர்களில் 10 நாளுக்கு நடித்தால் ரூ. 10 லட்சம் அளித்தார்கள். அதற்குப் பிறகுதான் புதிய காரை வாங்கினேன் என்றார். 2005-ம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரில் நடித்தபோது ஏற்பட்ட ஒரு அனுபவத்தால் இனிமேல் நடித்தது போதும் என்கிற முடிவுக்கு வந்தார். படப்பிடிப்பில் ஏற்பட்ட ஒரு தவறின்போது டப்பிங்கில் பார்த்துக்கொள்ளலாம் என இளம் நடிகை ஒருவர் கூற, நடிப்புக்கான மரியாதை இப்போது இல்லை என அந்த முடிவை எடுத்துள்ளார்.

  * நடிப்பு வேண்டாம் என முடிவெடுத்த பிறகு கம்பராமாயணம் குறித்த ஆய்வில் இறங்கினார். பிறகுதான் கம்பராமாயணம் குறித்த சொற்பொழிவுகளில் அதிகமாகப் பங்கெடுக்க ஆரம்பித்தார். 

  * ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் 8,000 மாணவியர் முன்பு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக கம்பராமாயணம் பற்றி பேசினார் சிவகுமார். அதற்குக் கிடைத்த பாராட்டுகளை மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார். 

  * 2015 ஜூன் மாதம் நடைபெற்ற சம்பவம் இது. நடிகர் சிவகுமார், தீரன் சின்னமலை பற்றிய சில தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். இதற்கு நிறைய பேர் கருத்துகளை வெளியிட்டிருந்தார்கள். குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி சிவகுமார் உயர்வாகக் குறிப்பிடுகிறார் என்றும் சிலர் கருத்து வெளியிட்டிருந்தார்கள். சூர்யா, கார்த்திக்கையும் விமரிசித்திருந்தார்கள். இதனால் மிகவும் வருத்தம் கொண்ட சிவகுமார் ஃபேஸ்புக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

  * 2018-ல், ஜோதிகா நடிப்பில் பாலா இயக்கிய நாச்சியார் படத்தை பாராட்டினார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் ஜோதிகா சூப்பர் போலீஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். (பெண்புலியை வீட்டிலேயே கட்டி வைக்காதீங்க சூர்யா...) என்றார். 

  * 2018 நவம்பர் மாதம், தனியார் மருத்துவமனை தொடர்பான விழா ஒன்றில் சிவகுமார் கலந்துகொண்டார். அப்போது அவருடன் இணைந்து செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டார். இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியான நிமிடம் முதல் சிவகுமாரின் நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்தார்கள். பிறகு, அந்த இளைஞருக்கு ரூ. 21,000 மதிப்புள்ள செல்போனை வழங்கினார் சிவக்குமார்.

  * தன் கடவுள் நம்பிக்கை மற்றும் தன்னுடைய குடும்பம் பற்றி சமீபத்தில் உண்டான சர்ச்சைகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக விடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். என்னுடைய அப்பா முருக பக்தர். ஒவ்வொரு கிருத்திகைக்கும், உபவாசம் இருந்து, பழனி மலைக்குச் சென்று, திருப்புகழின் மொத்தப் பாடல்களையும் மனப்பாடமாகச் சொல்வார். பிறகுதான் சாமி கும்பிட்டுத் திரும்பி வருவார். நானும் முருக பக்தன். ஐந்து வயதிலிருந்தே முருகன் படத்தை வைத்து சாமி கும்பிட்டு வருகிறேன். இப்பொழுதும் எங்கள் வீட்டுப் பூஜை அறையில் எல்லாச் சாமி படங்களும் இருக்கின்றன. இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்ப்பது ராமாயணம், மகாபாரதம். அந்த மாபெரும் காவியங்களின் முழுக்கதையையும் பாடல்களுடன், இரண்டு மணி நேரம் 5000 பேருக்கு முன்னிலையில் உரையாக நிகழ்த்தியிருக்கிறேன். யூடியூபில் இப்பொழுதும்கூட அதை நீங்கள் பார்க்கலாம் என்றார்.

  * சிவகுமார் டீ, காபி குடிப்பதில்லை. கிட்டத்தட்ட 58 வருடங்களாக இதைக் கடைப்பிடிக்கிறார். இளம் வயதில், டீ குடிப்பதற்குப் பதிலாக ஒரு மசால் தோசை சாப்பிட்டால் நீண்ட தூரம் சைக்கிள் மிதிக்க முடியும் என எண்ணியதால் அந்தப் பழக்கத்தை கைவிட்டார். அது இன்று வரைக்கும் தொடர்கிறது.

  .* 42 வருடங்களாக மாணவர்களுக்குக் கல்வியுதவி அளித்து வருகிறார் சிவகுமாரும் அவருடைய குடும்பத்தினரும். சிவகுமார் கல்வி அறக்கட்டளை மூலம் +2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ- மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு அளித்து வருகிறார் சிவகுமார். 1979-ல் தனது 100-வது படம் வெளியானபோது இந்த அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளார். 

  * 1965-ல் நடிக்க ஆரம்பித்து அடுத்த 14 ஆண்டுகளில் 100-வது படத்தில் நடித்தார் சிவகுமார். இதற்கான விழாவில் 100 தயாரிப்பாளர்களுக்கும் கேடயம் வழங்கினார் எம்.ஜி.ஆர். பிறகு, சிவகுமார் கல்வி அறக்கட்டளையை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். 

  * சிவக்குமார் அறக்கட்டளையைத் தொடங்கியபோது எனக்கு ஒரு படத்துக்கு ரூ. 25,000 சம்பளம். அந்த வருடம் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ரூ. 1000, 2-வது மதிப்பெண் எடுப்பவர்களுக்கு ரூ. 750, 3-வது பரிசுக்கு ரூ. 500 எனத் துவங்கினேன். பின்பு 25-ம் ஆண்டில் முதல் பரிசாக ரூ. 50,000 வரை கொடுத்தேன் என்று கடந்த வருட நிகழ்ச்சியொன்றில் பேசினார் சிவகுமார்.

  * சிவக்குமார் அறக்கட்டளை தான் அகரம். சூர்யா 100 படங்கள் நடிக்கலாம், பல கோடிகள் சம்பாதிக்கலாம். ஆனால் நிலையான பெயர் என்பது சூர்யாவுக்கு அகரத்தின் மூலமாகத்தான் கிடைக்கும். அகரம் ஒன்று தான் சூர்யாவின் அடையாளம். அதே போல் உழவன் ஃபவுண்டேஷன் தான் கார்த்தியின் அடையாளம் - சிவகுமார்.

  * கடந்த 2017-ம் ஆண்டு, அகரம் ஃபவுண்டேஷனின் அலுவலகப் பணிகளுக்காக தான் வாழ்ந்து வந்த சென்னை தியாகராய நகர் வீட்டை தானமாக வழங்கினார் சிவகுமார். அலுவலக வாடகையாக ரூ. 50,000 தருவதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் மேலும் சில பிள்ளைகளைப் படிக்கவைக்கலாம் என்று இதற்கு விளக்கம் அளித்தார் சிவகுமார்.  

  * வார இதழில் வெளியான யோகக் கலை பற்றிய தொடரின் மூலம் அதன் அருமையை உணர்ந்துள்ளார் சிவகுமார். புத்தகத்தைக் கொண்டு ஒவ்வொரு ஆசனமாகப் பழகியவர், பிறகு குருவின் வழிகாட்டுதலுடன் முழுமையாகக் கற்றுக்கொண்டுள்ளார். தனது 16-வது வயதில் தினமும் 38 ஆசனங்களைச் செய்ததாகக் கூறுகிறார். 70 வயதைக் கடந்தும் சர்க்கரை, ரத்த அழுத்தம் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் யோகா தான் என்கிறார். 


  TAGS
  Sivakumar

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp