ரஜினி படக் கதையாக மாறும் செம்பருத்தி: ரசிகர்களைத் தக்கவைக்கும் முயற்சியா?

செம்பருத்தி தொடரின் தற்போதைய காட்சிகள் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 'முத்து' திரைப்படத்தின் கதையைத் தழுவியுள்ளது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேலி செய்யத் தொடங்கியுள்ளனர். 
ரஜினி படக் கதையாக மாறும் செம்பருத்தி
ரஜினி படக் கதையாக மாறும் செம்பருத்தி


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக மீண்டும் பார்வதியை மையப்படுத்தி கதையை நகர்த்தத் தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாக அகிலாண்டேஸ்வரி சிறைக்குச் செல்வது, அகிலாண்டேஸ்வரி இடத்தை ஐஸ்வர்யா கைப்பற்றுவது என்று ஆமை வேகத்தில் எபிஸோடுகளுக்காக மட்டுமே கதை நகர்ந்து வந்தது. அப்போதெல்லாம் வெறும் காட்சிக்காக மட்டுமே பார்வதி கையாளப்பட்டிருப்பார். 

முன்பு ஆதி - பார்வதி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைப்போன்று இழந்த ரசிகர்கள் பட்டாளத்தை மீண்டும் பெறும் நோக்கில், தற்போது பார்வதியை மையப்படுத்தி கதையை நகர்த்த தயாரிப்புக் குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி இல்லத்தில் வேலைக்காரியாக வந்த கதையின் நாயகி பார்வதி, அகிலாண்டேஸ்வரியின் அண்ணன் மகள் என்ற புதிர் அவிழத் தொடங்கியுள்ளது.

இந்தக் கதை ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த 'முத்து' திரைப்படத்தின் கதையைத் தழுவியுள்ளது என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேலி செய்யத் தொடங்கியுள்ளனர். 

அகிலாண்டேஸ்வரி இல்லத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் சுந்தரத்தின் மகளாக கிராமத்தில் வளர்ந்த பார்வதி, தந்தையுடன் இருக்க சென்னை வந்து அதே இல்லத்தில் வேலைக்காரியாக பணிபுரிகிறார். 

காலப்போக்கில் அகிலாண்டேஸ்வரியின் மூத்த மகனும் தொழிலதிபருமான ஆதியுடன் காதல் திருமணம் செய்துகொள்கிறார். தற்போது அந்த வீட்டின் மூத்த மருமகள் என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அகிலாண்டேஸ்வரியுடன் போராடி வருகிறார். 

இவ்வாறு இந்த கதை நகர்ந்துகொண்டிருக்க... தற்போது பார்வதி அகிலாண்டேஸ்வரியின் அண்ணன் மகள் என்ற புதிர் அவிழத் தொடங்கியுள்ளது.

அகிலாண்டேஸ்வரியின் அண்ணன் பரமேஸ்வரன் மாற்று சாதி பெண்ணை காதல் திருமணம் புரிந்ததால், பணக்கார வாழ்வை விட்டு காதலியுடன் திருமண வாழ்க்கையைத் தொடங்குகிறார். அவர்களுக்கு பிறக்கும் பெண் குழந்தை தான் பார்வதி. பார்வதியின் தாயார் இறந்துபோக, பரமேஸ்வரன் தனது குழந்தையை சுந்தரத்திடம் கொடுத்து வளர்க்கச் சொல்கிறார். 

சுந்தரம் அகிலாண்டேஸ்வரி வீட்டில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர். தற்போது சுந்தரத்தின் மூலமே அந்த புதிரை இயக்குநர் அவிழ்க்க உள்ளார். 

இதற்காக பரமேஸ்வரனை சந்திக்கும் சுந்தரம், அகிலாண்டேஸ்வரியிடம் உண்மையைக் கூற வற்புறுத்தி அழைத்து வருவதைப்போன்ற காட்சிகள் கடந்த வாரம் இடம்பெற்றன.

இந்த வாரத்தில் அந்த முடிச்சுகள் அவிழ்கின்ற சுவாரஸ்ய காட்சிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வாரம் செம்பருத்தி தொடருக்கு டி.ஆர்.பி. ரேட்டிங்கிற்கு (TRP Rating) பஞ்சம் இருக்காது.

பார்வதி என்றுமே என் வீட்டு வேலைக்காரிதான் என்று சூளுரைக்கும் அகிலாண்டேஸ்வரி, அவரது அண்ணன் கூறும் உண்மைக்கு பிறகேனும் பார்வதியை மூத்த மருமகளாக ஏற்றுக்கொள்வாரா? அண்ணனை பார்க்கும் அகிலாண்டேஸ்வரியின் நிலை என்ன? 

இந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இயக்குநர் தூண்டியுள்ளதால் இழந்த இடத்தை செம்பருத்தி தொடர் மீண்டும் பெறுமா? என்ற கேள்வி எழுகிறது.


செம்பருத்தி பின்னடைவுக்கு காரணம் என்ன?

செம்பருத்தி தொடரில் கடந்த நான்கு வாரங்களாக வந்த கதாபாத்திரங்களும், திரைக்கதையும் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களையே ஏற்படுத்தியது. 

கதையில் முக்கிய கதாபாத்திரங்களை மாற்றுவது மட்டுமல்லாமல், முடியப்போகும் கிளைமேக்ஸ் காட்சிகளைக் கொண்டுவந்து தொடர் முடியப்போகிறது என்ற மனநிலையை ரசிகர்களுக்கு ஏற்படுத்திவிட்டு மீண்டும் விறுவிறுப்பே இல்லாமல் கதையை நகர்த்துவது, ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியையே ஏற்படுத்தியது.  இது செம்பருத்தி தொடரின் மிகப்பெரிய பின்னடைவு.

வாராவாரம் விறுவிறுப்பைக் கூட்ட தொலைக்காட்சித் தொடர்கள் போட்டிபோட்டுக்கொண்டு ரசிகர்கள் ரசனைக்கேற்ப திரைக்கதை அமைத்து வருகின்றன. 

கதை என்ற ஒன்றை ஆரம்பகட்ட எபிஸோடுகளில் மையமாக வைத்துவிட்டு, காலத்திற்கேற்பவும், ரசிகர் பட்டாளத்தின் விருப்பத்திற்கேற்பவும் திரைக்கதையின் பாத்திரங்கள் கையாளப்பட்டு வருவது தற்போதைய டிரெண்டிங்காக உள்ளது. இதில் பயணிக்காத தொடர்கள் மக்கள் வரவேற்பைப்  பெறத் தவறிவிடுகிறது.

ஆனால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற செம்பருத்தி தொடர், ஆயிரம் எபிஸோடுகளைக் கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருந்தது. 

ஆனால், தொடரில் நாள்தோறும் வரும் கதாபாத்திரங்கள் மாற்றப்படுவது, ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதது போன்றவை செம்பருத்தி தொடரின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கதையின் நாயகனான ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்த கார்த்திக் ராஜ் மாற்றப்பட்டது முதலே ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர் எனலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com