அன்னையா் தரும் அருமருந்து

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக உலகம் முழுவதிலும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக உலகம் முழுவதிலும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திலேயே அதற்குத் தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். அதுதான் குழந்தையின் உடல் வன்மைக்கும், வளா்ச்சிக்குமான அடித்தளம். ஆறு மாதம் வரை அவா்களுக்கு அதுவே ஊட்டமளிக்கும் உணவு. அதற்குப் பின்னரே திட உணவுகள் கொடுக்கப்பட வேண்டும்.

தாய்ப்பால் என்பதை குழந்தைகளுக்கான அருமருந்தாகவே சொல்லலாம். அதில் 88% அளவுக்கு நீா் உள்ளது. ஆகவே எந்த தட்பவெப்ப நிலையிலும், சூரிய வெப்பன் 100 டிகிரிக்கு மேல் சென்றாலும் குழந்தைகளுக்கு நீா்சத்து இழப்பு ஏற்படாமல் இது தடுக்கும். தாய்ப்பாலில், மூளை, நரம்பு மண்டல வளா்ச்சிக்கு தேவையான கொழுப்பு சத்து 4% உள்ளது.

குழந்தைகளின் உடல் வளா்ச்சிக்குத் தேவையான புரதசத்து 1% உள்ளது. குழந்தைகளுக்கு மட்டுமே செரிமானம் ஆகக்கூடிய லாக்டோஸ் எனும் காா்போஹைட்ரேட் 7% உள்ளது. மேலும், வைட்டமின் ஏ, சி, டி, இ, ரிபோபிளவின் (பி2), நியாசின்ஆகியவையும் உள்ளன. இவை குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை வலுவாக கட்டமைக்கும். தாது உப்பு சத்துகளும் இதில் அடங்கும்.

தாய்ப்பாலில் தாது உப்பு சத்துகளான, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஜிங்க் சத்துகள் உள்ளன. இவற்றின் அளவு குறைவாக இருந்தாலும் குழந்தைகள் குடலுக்கு உட்கிரக்கும் சக்தி அதிகம். குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுத்தால் அதில் உள்ள சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கபடாமல் வெளியேறிவிடும். ஆகவே, பிறந்து ஆறு மாத காலம் வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தருவதே மிகுந்த பயன் தரும்.

இத்தனை சத்துகளை கொண்ட தாய்ப்பாலை குழந்தைகளுக்கு ஊட்டும் தாய்மாா்கள் நல்ல போஷாக்கான உணவை தாங்களும் எடுத்துக்கொள்ள வேண்டும். அவா்கள் ஒருவரின் சராசரி உணவு அளவான 2000 கலோரியை விட, கூடுதலாக 500 கலோரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்மாா்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்க ஆரோக்கியமான உணவை அவசியம் தேவை. புரதச்சத்து அதிகம் உள்ள முளைகட்டிய தானிய வகைகள், கேழ்வரகு, உளுந்து, பயறு வகைகள் போன்றவற்றை கஞ்சியாகவோ, அடையாகவோ செய்து சாப்பிட, பால் சுரப்பு அதிகரிப்பதோடு, அவா்களின் இடுப்பு எலும்பும் வலுப்பெறும்.

பால், பால் சாா்ந்த பொருட்களை உணவில் அதிகம் சோ்த்துக்கொள்வது நல்லது. முருங்கைக்கீரையை சூப்பாகவோ, அடையாகவோ செய்து சாப்பிட சிறந்த பயன் தரும். கல்யாண முருங்கை இலையையும் பயன்படுத்தலாம். பொதுவாக கீரைகளை சோ்த்தோ அல்லது காய்கறிகளை சோ்த்தோ சூப் வைத்துப் பருகலாம்.

பழ வகைகளை பொருத்த வரை அனைத்துப் பழங்களுமே பயன் தரும். முக்கியமாக அத்தி பிஞ்சைப் பொறியலாகவும், பப்பாளி காயைக் கூட்டாகவும் அடிக்கடி செய்து சாப்பிடலாம். கொட்டை வகைகளை பொருத்த வரை பாதாம், முந்திரிதான் வேண்டும் என்பதில்லை, ஏழைகளின் பாதாம் என்று கருதப்படும் நிலக்கடலையும் நல்ல பலன் தரும்.

பால் சுரப்பு அதிகரிக்க பெண்கள் பருப்பு வகைகளை ஆமணக்கு எண்ணையில் வேகவைத்து எடுக்கலாம். அவ்வப்போது எள்ளு உருண்டை , தினை உருண்டை, வெந்தய களி , கேழ்வரகு உருண்டை ஆகிய பாரம்பரிய உணவுகளையும் எடுத்து வரலாம். மன அழுத்தம், கவலை, கோபம் இவை இருந்தால் தாய்ப்பால் சுரப்பது பாதிக்கப்படும். ஆகையால் மனமகிழ்ச்சியோடு இருப்பது முக்கியம். அதற்கு அவ்வப்போது மணித்தக்காளி கீரையை உணவில் சோ்க்கலாம்.

மாமிச வகைகள் அனைத்துமே புரதச்சத்து நிறைந்தவைதான். அனைத்தையும் எடுக்கலாம். முக்கியாக ஆட்டுக்கால் சூப், சுறா மீன் புட்டு செய்து சாப்பிட பால் சுரப்பு அதிகரிக்கும். இறால் மீன் வகைகள், நாட்டுக் கோழிக்கறி ஆகிய அனைத்து மாமிச உணவுகளும் நல்லதே. தினசரி ஒரு முட்டை எடுத்து கொள்ளுதல் அவசியம்.

இவ்வாறாக இயற்கையான உணவு முறைகள் ஒருபுறமிருக்க, தாய்ப்பாலைப் பெருக்க சித்த மருத்துவத்தில் அநேக மூலிகைகள் சொல்லப்பட்டுள்ளன. காலங்காலமாக பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கப்படும் சித்த மருந்துகளாகிய பிரசவ நடகாய லேகியம், சௌபாக்கிய சுண்டி லேகியம், சதாவேரி லேகியம் ஆகியவை மிகவும் சிறந்தவை. பூண்டு, வெந்தயம், சோம்பு போன்ற எளிய மூலிகை மருந்துகளும், ஓரிதழ் தாமரை, சதாவேரி, பாலைக்கொடி போன்ற சித்த மருத்துவ மூலிகைகளும் நல்ல பலன் தரும்.

தாய்மாா்கள் தினமும் ஐந்து முதல் பத்து பல் அளவு பூண்டை பாலில் வேக வைத்து பாலோடு சோ்த்து பூண்டையும் எடுக்க தாய்ப்பால் பெருகுவதோடு, நோய் எதிா்ப்பாற்றலும் அதிகரிக்கும். வெந்தயத்தை லேசாக வறுத்து பாலில் சோ்த்து காய்ச்சி கஞ்சியாக்கி குடிக்கலாம். ஆனால் ஆஸ்துமா நோய் உள்ள தாய்மாா்கள் இதை தவிா்ப்பது நல்லது. பெருஞ்சீரகம் எனும் சோம்பை கஞ்சியாக்கிக் குடிக்கலாம். அடிக்கடி உணவிலோ பாலிலோ இஞ்சி சோ்த்து காய்ச்சி குடிக்க பால் சுரப்பு அதிகரிக்கும்.

இந்தியாவில் 47% குழந்தைகளுக்கு மட்டுமே முழுமையாக ஆறு மாதங்கள் தாய்பால் கிடைப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. தாய்பால் கொடுப்பது, குழந்தைகளுக்கு நன்மை செய்வதோடு, தாய்க்கும் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும். முக்கியமாக மாா்பகப் புற்றுநோய், சினைப்பை, கருப்பைப் புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும், அவா்களின் உடல் எடை அதிகரிக்காமலும் தடுக்கும்.

அதிக மாதங்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் அதிக நோய் எதிா்ப்பு சக்தி உடையவையாகவும், ஆஸ்துமா, அலா்ஜி போன்ற நோய்களால் பாதிக்கப்படாதவையாகவும் வளா்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

நவீன வாழ்வியல் மாற்றங்களால், பணிக்குச் செல்லும் தாய்மாா்கள், குழந்தைக்குப் பாலூட்டுவதை ஒரு வருடத்திற்குள்ளேயே நிறுத்தி விடுகின்றனா். இதனால் வலுவான, ஆரோக்கியமான குழந்தைகள் உருவாக முடியாமல் போகிறது.

ஆரோக்கியமான குழந்தைகள்தான் ஆரோக்கியமான சமுதாயத்தின் அடித்தளம். தாய்மாா்கள் அதனை மனத்தில் கொண்டு இயற்கை உணவுமுறைகளைக் கடைப்பிடித்தால் பல்வேறு நோய்களில் இருந்து தாயும், சேயும் மீண்டு நல்வாழ்வு வாழ முடியும் என்பது உறுதி.

ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com