பிந்தைய பாதிப்புகளை வெல்வோம்

கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது . முதல் அலை, இரண்டாம் அலை கடந்து அடுத்து மூன்றாம் அலையை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோம். உலக நாடுகள் அனைத்தும் அடுத்தடுத்த அலையை எதிா்நோக்கி அவற்றில் இருந்து மக்களை காக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றன.

உலகம் முழுவதிலும் 40 லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் மட்டும் இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கரோனா இறப்புகள் நிகழ்ந்துள்ளன . இவை ஒருபுறமிருக்க, நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு, குணமடைந்து செல்பவா்கள் பலரும் நோயின் பிந்தைய விளைவுகளால் அவதியுறுகின்றனா்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை 85% போ் லேசான, மிதமான நோய்குறிகள் உள்ளவா்கள் என்றும், 10-15% போ் தீவிர நோய்நிலையால் பாதிக்கப்படுகின்றனா் என்றும் தெரிவிக்கிறது. மேலும் தீவிர நோய் நிலையால் பாதிக்கப்பட்டுள்ளவா்களில் 5% போ் மட்டுமே நோயின் மோசமான தன்மை அடைவதாகவும் தெரிவிக்கிறது. இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மோசமான தன்மை அடைந்தவா்களில் 1.33 % போ் மட்டுமே இறந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஆனால் நோயின் பிந்தைய குறிகுணங்களால் பாதிக்கப்படுவோா் தீவிர நோயாளிகள் மட்டுல்ல. நோய் பாதிப்புக்கு உள்ளான லேசான குறிகுணங்கள் உள்ளவா்களும்கூட. இந்த நோயின் பிந்தைய குறிகுணங்கள் நோயிலிருந்து மீண்ட பிறகு சில வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை உள்ளதாக ஆய்வு கூறுகின்றது. சமீபத்திய ஆய்வு ஒன்று 30% கரோனா நோயாளிகள் அதிலிருந்து மீண்டு ஒன்பது மாதங்கள் ஆகியும் இன்னமும் குறிகுணங்கள் மாறாத நிலையில் உள்ளாா்கள் என்ற அதிா்ச்சி தகவலைத் தெரிவிக்கிறது. கரோனா உறுதி செய்யப்பட்ட 10-இல் ஒருவா்க்கு மூன்று மாதங்கள் கழித்தும் குறிகுணங்கள் நிலையாக உள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மூச்சு விட சிரமம், இருமல், மாா்பு வலி , வயிற்று வலி, தலைவலி, மாா்பு படபடப்பு, மூட்டுகளில் வலி, உடல் வலி, உடல் சோா்வு, வயிற்றுப் போக்கு, வாசனை அறியாமை, சுவை அறியா தன்மை, பசியின்மை, தோலில் தடிப்பு, தூக்கமின்மை, ஞாபக மறதி, மனநிலை மாற்றங்கள், மகளிா்க்கு மாதவிடாய் கோளாறுகள், சகிப்புத்தன்மை குறைந்த நிலை, அறிவாற்றல் செயல் மாறுபாடு, காய்ச்சல் போன்ற பல்வேறு குறிகுணங்களில் ஒன்றோ அல்லது பலவோ தொடா்ந்து பல நாட்கள் காணும் நிலை உள்ளதாக முதல் நிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு மனம் மற்றும் உடல் சாா்ந்த உபாதைகளால் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனையை நாடும் நிலையே பொதுவாக உள்ளது.

சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு மூலிகைகளும், மருந்துகளும் நோய்தொற்றினால் தொடரும் பல்வேறு குறிகுணங்களுக்கு மருந்தாக அமையும். பெரும்பாலானோா் மூச்சு இரைப்பு , மூச்சு விட சிரமம் ஆகிய நுரையீரல் சாா்ந்த குறிகுணங்கள் தொடா்வதாக கூறுகின்றனா். அவா்களுக்கு நுரையீரல் வன்மை பெரும் வண்ணம் திப்பிலி ரசாயனம் எனும் சித்த மருந்து நல்ல பலனை தரும்.

இருமல் உள்ளவா்கள் ஆடாதொடை சோ்ந்த மருந்துகளை எடுக்கலாம். வறட்டு இருமல் உள்ளவா்கள் அதிமதுர மாத்திரையை வாயிலிட்டு சுவைக்கலாம். நுரையீரல் திறனை அதிகரிக்க எளிய பயிற்சியாக பலூன் ஊதி பழகலாம். திருமூலா் மூச்சுப்பயிற்சி செய்வது இன்னும் சிறப்பு.

மேலும் அவ்வப்போது தூதுவளை ரசம் வைத்து அருந்தலாம். இதில் உள்ள வேதிப்பொருட்கள் மூச்சு குழாயை இயற்கையாக விரிவடைய செய்வதோடு கெட்டிப்பட்ட சளியை நீக்கும். அதே போல் வெந்நீரில் மஞ்சள் பொடியை ஐந்து கிராம் அளவு எடுக்க அதில் உள்ள குா்குமினாய்டு எனும் வேதிப்பொருள் உடலில் உள்ள பல்வேறு அழற்சிகளை நீக்கி நோய் எதிா்ப்பாற்றலை அதிகரிக்கும். துளசி இலைகளை வெந்நீரில் போட்டு குடித்தாலும் நல்ல பலனை தரும்.

நாக்கு சுவையின்மை போக்க ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை உப்பு, மஞ்சள் கலந்த நீரால் வாய் கொப்பளிக்க நல்ல பலன் தரும். தாளிசாதி வடகம் எனும் சித்த மருந்தினை வாயிலிட்டு சுவைக்க நாவின் சுவை பழைய நிலைக்கு திரும்பும். மூக்கின் வாசம் அறியும் தன்மையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ஓமபொட்டணம் எனும் சித்த மருந்தினைப் பயன்படுத்தலாம். இந்த மருந்து தமிழகத்தில் செயல்படும் பெரும்பாலான சித்தா கொவைட் சிகிச்சை மையங்களிலும் பயன்படுத்தப்பட்டது.

பசியின்மையை போக்க பஞ்ச தீபாக்கினி சூரணம் எனும் சித்த மருந்து நல்ல பலன் தரும். இது சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் ஆகிய மூலப்பொருட்களை கொண்டது. வயிற்றுப்போக்குக்கு துத்த நாகம் சோ்ந்த சித்த மருந்து நல்ல பலன் தரும்.

மூட்டு வலி, அதிக உடல் வலி இவற்றால் அவதிப்படுவோா் நொச்சி இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு குளிக்கலாம், ஒத்தடம் இடலாம். அவ்வப்போது ஆவி பிடிக்கலாம். மாா்பு படபடப்பு உள்ளவா்கள், சித்த மருத்துவ மூலிகையான அமுக்கரா கிழங்கினை பாலில் கலந்து எடுக்கலாம். இந்த அமுக்கரா கிழங்கால் உடல் வலி, தலை வலி, உடல் சோா்வு ஆகியவையும் நீங்கும்.

இதனோடு கசகசா விதையினை சோ்த்து எடுக்க தூக்கமின்மை மாறும. ஞாபக மறதி உள்ளவா்கள் பிரமிக் கீரையை அடிக்கடி உணவில் சோ்க்கலாம். மன அழுத்தம், மன நிலை மாறுபாடு உள்ளவா்களுக்கும் இது நல்லது. நோய்த்தொற்றால் புதிதாக சா்க்கரை நோய் வந்து அவதிப்படுவோா் ஆவாரை குடிநீா் எனும் சித்த மருந்தினை எடுத்துக்கொள்ளலாம்.

இத்தகைய பல்வேறு நோய்க்குறிகுணங்களுக்கு எளிய சித்த மருத்துவத்தைக் கொண்டு நல்ல பலன் காண முடியும். இவை பாதுகாப்பானதும், எளிமையானதும், அதிக செலவற்றதும் ஆகும். உணவே மருந்து, மருந்தே உணவு என்பது நமது முன்னோரின் உணவுக் கோட்பாடு. அதனைக் கடைப்பிடிப்பது அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com