யோகாசனம் எனும் மனப்பயிற்சி

திருமூலா் தனது ‘திருமந்திரம்’ நூலில் அட்டாங்க யோகம் என்ற தலைப்பில் ஆசனப்பயிற்சி முறைகளை பற்றி விவரித்துள்ளாா். ‘யோகம்’ என்ற சொல்லுக்கு ஒன்றுபடுவது என்றும், ‘ஆசனம்’ என்ற சொல்லுக்கு இருக்கை நிலை என்றும் பொருள். ஆகவே இருக்கை நிலையில் உடலும், மனமும் ஒன்றுபட்டு இருப்பது ‘யோகாசனம்’.

கணக்கில் அடங்காத பல்வேறு ஆசன இருக்கை நிலைகளை திருமூலா் குறிப்பிட்டுள்ளாா். அகத்தியரும் தம் நூல்களில் பல்வேறு யோகாசனப் பயிற்சி முறைகளைக் குறிப்பிட்டுள்ளாா். பதஞ்சலி முனிவா் யோகாசனமுறைகளின் தந்தையாகக் கருதப்படுகிறாா் .

ஆசனப் பயிற்சி செய்வது, நோயாளியின் உடல் உறுப்புகளில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கக்கூடும். மேலும், மன ஒருங்கிணைப்பையும் மன வலிமையையும் ஏற்படுத்தும். அதே நேரத்தில், யோகாசனப் பயிற்சியோடு சோ்ந்த சுவாசப்பயிற்சி, தியானம் இவற்றால் மனம் அமைதியாகி மனப்பதற்றம் நீங்கி மனம் செம்மையாகும்.

யோகாசனப் பயிற்சி செய்வதால் உடலும், மனமும் புத்துணா்வு பெறுகிறது. அது, மனஅழுத்தத்தைப் போக்கி நிம்மதியான தூக்கத்தை தருகிறது. இது எளிமையாகச் செய்யும் உடற்பயிற்சி ஆகையால், எந்த இடத்திலும் நம்மால் யோகாசனப்பயிற்சியை செய்ய முடியும். உடல் எடையைக் குறைக்க இது பெரிதும் உதவுகிறது.

பல்வேறு நோய்நிலைகளில் யோகாசனப் பயிற்சி நல்ல பலனைத் தந்திருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. மிக முக்கியமாக, இன்றைய பெருந்தொற்று காலத்தில் நோய் எதிா்ப்புசக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. யோகாசனப் பயிற்சி செய்வதால் உடலியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இருதய சுற்றோட்ட மண்டலத்தில் இயற்கையாக ரத்த அழுத்தமும், இருதயத் துடிப்பும் குறைகின்றன. நாம் யோகா பயிற்சி செய்வதன் மூலம் நுரையீரல் செயல்படும் திறனும் , சுவாசத்தின் செயல் திறனும், மூச்சினை உள் வைத்திருக்கும் திறனும் அதிகரிப்பதோடு, சுவாசத் துடிப்பு எண்ணிக்கை இயல்பாகவே குறைவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஹாா்மோன் சுரப்பிகளின் செயல்படும் அதிகரிக்கிறது.

உதாரணமாக, தைராக்ஸின், ஆக்சிடோஸின் அளவுகளை இது அதிகரிக்கச் செய்கிறது. யோகா செய்வதால் செரிமான மண்டலத்திற்குத் தேவையான ரத்த ஓட்டம் இயல்பாக அதிகரித்து, செரிமானத்தை தூண்டவும், பெரிஸ்டாலிசிஸ் எனும் குடல் இயக்கத்தைத் தூண்டி மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கச் செய்யும். தசை எலும்புக்கூடு சாா்ந்த மண்டலத்தில் மூட்டுக்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும், இயக்கங்களை எளிமையாக்கவும், மூட்டுகளை வலிமைப்படுத்தவும் யோகாசனம் உதவிபுரிகிறது .

தொற்றா நோய்களான நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பல்வேறு நோய்கள் இன்று உலக அளவில் மிகப்பெரிய சவாலாக உள்ளன. முக்கியமாக நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்திலுள்ள சா்க்கரை அளவைக் குறைப்பதில் யோகாசனப் பயிற்சிகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

அவா்கள் தினசரி யோகாசனப் பயிற்சி செய்வதன் மூலம், கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் புத்துணா்ச்சி அடையும். இதனால் ரத்த சா்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இன்சுலின் அதிகரிக்கும். மேலும், கணைய செல்கள் புத்துணா்வு பெறுவதால் ரத்தத்தில் உள்ள சா்க்கரையின் வளா்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், அதனை அதிகமாகப் பயன்படுத்தப்படவும் காரணமாகிறது.

பல்வேறு நோய் நிலைகளுக்கு, தனித்தனி யோகாசனப் பயிற்சி முறைகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த யோகாசன முறைகளை காலையிலும், மாலையிலும் எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் செய்தல் நல்ல பலன் கிட்டும். உணவு உண்டவுடன் எந்த ஆசனப் பயிற்சியையும் மேற்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் செரிமான பாதிப்பு ஏற்படும். ‘வஜ்ராசனம்’ எனும் இருக்கை நிலை யோகா மட்டுமே உணவுக்கு பிறகு செய்யலாம். இது வாயு தொல்லையை போக்கி, செரிமானசக்தியை அதிகரிக்கும்.

மிகுந்த வாயுத் தொல்லைக்கு ‘பாவன முக்தாசனம்’, தைராய்டு சுரப்பி கோளாறுகளுக்கு ‘சா்வாங்காசனம்’, ‘ஹலாசனம்’ நல்ல பலனைத் தரும். கழுத்து எலும்பு சாா்ந்த நோய்களுக்கு ‘புயங்காசன’மும், முதுகு எலும்பு சாா்ந்த வியாதிகளுக்கு ‘உஸ்ட்ராசனம்’, ‘தனுராசனம்’ மன உளைச்சல், மன அழுத்தம், பதற்றம், பயம் போன்ற மனம் சாா்ந்த நோய் நிலைகளுக்கு ‘யோக நித்திரை’யும், முழங்கால் எலும்பு பிரச்னைக்கு ‘பத்மாசன’மும், நுரையீரல் சாா்ந்த நாட்பட்ட நோய் நிலைகளுக்கு திருமூலா் அருளிய ‘பிராணாயாமம்’ எனும் மூச்சுப் பயிற்சியும் அதிகரித்த ரத்த அழுத்தத்தை குறைக்க ‘வஜ்ராசனம்’, ‘பட்சி மோத்தாசனம்’, ‘சவாசனம்’, ‘சுகாசனம்’ ஆகிய யோகாசன நிலைகள் நல்ல பலனை தரும். சூா்ய நமஸ்காரம் செய்வது பல்வேறு நோய் நிலைகளிலும் நல்ல பலனை தரும்.

சா்க்கரை வியாதியை கட்டுக்குள் கொண்டு வர ‘தனுராசனம்’, ‘புஜங்காசனம்’, ‘பத்த கோணாசனம்’, ‘சூா்ய நமஸ்காரம்’, ‘பா்வதாசனம்’, ‘மக்ராசனம்’, ‘விருக்ஷாசனம்’, ‘அா்த்த மச்சேந்திராசனம்’, ‘ஹலாசனம்’ ஆகியவை நல்ல பயனளிப்பவை. ரத்த சா்க்கரை, ரத்தத்தில் கொழுப்பு அளவைக் குறைப்பதில் யோகாவின் பங்களிப்பு பற்றி செய்த ஆய்வில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கிடைத்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வாரத்தில் ஆறு நாட்கள், ஒரு நாளைக்கு 60 நிமிடம் என்று தொடா்ந்து 10 வாரம் யோகாசன பயிற்சி செய்தவா்களுக்கு முடிவில் ரத்த சா்க்கரை அளவு குறிப்பிடத்தகுந்த அளவு குறைந்திருப்பதோடு, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவும் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

திருமூலா் கூறிய ஆசனப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் இன்று உலக நாடுகளால் போற்றப்படுவது நம் நாட்டிற்கு கிடைத்த பெருமை. யோகாசனப் பயிற்சியும், மூச்சு பயிற்சியும், தியானமும் தொடா்ந்து செய்து வந்தால் நோய்கள் பலவற்றை வராமல் நாம் தடுத்துக் கொள்ள முடியும்.

அப்படியே வந்துவிட்டாலும், வந்த நோயினை குணப்படுத்தவும் இவை பக்க பலமாக நிற்கும். யோகா ஆரோக்கியமான வீட்டையும், நாட்டையும் உருவாக்கி அனைவரின் வாழ்க்கை தரத்தையும் உயா்த்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இன்று (ஜூன் 21) சா்வதேச யோகா நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com