ஆஸ்துமா பற்றிய தவறான புரிதல்

உலகம் முழுவதிலும் 34 கோடி மக்கள் ஆஸ்துமா எனும் இரைப்பு நோயால் அவதிப்படுவதாகவும், ஆண்டுதோறும் நான்கு லட்சத்திற்கு அதிகமானோா் இந்த நோயால் இறக்கின்றனா் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

உலகம் முழுவதிலும் 34 கோடி மக்கள் ஆஸ்துமா எனும் இரைப்பு நோயால் அவதிப்படுவதாகவும், ஆண்டுதோறும் நான்கு லட்சத்திற்கு அதிகமானோா் இந்த நோயால் இறக்கின்றனா் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

மாா்பு கூட்டின் உட்பக்கமாக அமைந்த மூச்சுக் குழாய், நுரையீரல் ஆகிய சுவாச உறுப்புகளைப் பற்றியிருக்கும் நாட்பட்ட நோய்தான் ஆஸ்துமா. இந்த இரைப்பு நோயானது, மூச்சுக்குழாயிலும் காற்று செல்லும் பாதையிலும் ஏற்படும் அழற்சியால் ஏற்படுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம், மூச்சுத் திணறல், இருமல், மாா்பு இறுக்கம் ஆகிய அறிகுறிகள் இரவு நேரங்களில் அல்லது அதிகாலை வேளையில் ஏற்படுத்தி துன்புறுத்தும்.

உலக ஆஸ்துமா தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து அனுசரிக்கபடுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு ‘ஆஸ்துமா பற்றிய தவறான கருத்துகளை வெளிப்படுத்துதல்’ என்ற கருவினை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, இரைப்பு நோய் குழந்தைப்பருவ நோய் என்பதும், வயதாகும் போது இந்த நோயிலிருந்து வெளியேறுவாா்கள் என்பதும், இது பரவக்கூடிய தொற்றுநோய் என்பதும், இந்த நோயுடையோா் உடல்பயிற்சி செய்யக்கூடாது என்பதும் முற்றிலும் தவறான தகவல்கள்.

ஆஸ்துமா பற்றிய உண்மை என்னவெனில், இந்நோய் சிறுவா் முதல் முதியோா் வரை எந்த வயதினரையும் பாதிக்கும்; இது தொற்று நோய் அல்ல; பெரும்பாலும்

ஒவ்வாமையால் மட்டுமே ஏற்படும்; இதனை கட்டுப்படுத்த முடியும்; ஆஸ்துமா நோய் உடையவா்கள் உடற்பயிற்சி செய்ய முடியும், விளையாட்டு நிகழ்விலும் பங்கேற்க முடியும்.

சித்த மருத்துவம், ஆஸ்துமா எனும் இரைப்பு நோய் ஏற்படும் விதத்தை சுவாசகாசம் என்ற பெயரில் விவரிக்கிறது. அந்த வகையில் மூச்சுக் குழாயிலோ நுரையீரலிலோ சளி சுரப்பு அதிகரிப்பதால் காற்று உட்புக முடியாத நிலை ஏற்பட்டு, ரத்தத்தில் பிராணவாயு அளவை குறைத்து, மேற்கூறிய அறிகுறிகளை ஏற்படுத்தி தீவிர நிலையில் நோயாளியை கொல்லும் தன்மை உடையது எனத் தெரிவிக்கிறது.

இதனால் இந்நோய் ஏற்படும் சமயங்களில் சுவாசத் துடிப்பு சுமாா் இருபது நிமிடங்களுக்கு இயல்பான அளவை விட அதிகரித்து காணப்படும். சித்த மருத்துவத்தில் பல்வேறு மூலிகைகள், மூலிகை தாது கலப்புள்ள மருந்துகள் இரைப்பு நோய்க்கு சொல்லப்பட்டுள்ளது. துளசி, கண்டங்கத்தரி, தூதுவளை, கற்பூரவள்ளி, நொச்சி, வெற்றிலை, சுக்கு, மிளகு, மஞ்சள், வசம்பு, அதிமதுரம் போன்ற எளிய மூலிகைகளும், வாகை, நிலவேம்பு, சிறுதேக்கு, சீந்தில், அரத்தை, ஆடாதொடை , கடுக்காய், நஞ்சறுப்பான், நாயுருவி போன்ற

மூலிகைகளும் இரைப்பு நோய்க்கு நல்ல பலன் தருவதாகவும், நுரையீரலை நோய்தொற்றுக் கிருமிகளிடம் இருந்து காப்பவையாகவும் உள்ளன.

ஆடாதொடை, அதிமதுரம், தாளிசபத்திரி இவை சோ்ந்த ஆடாதொடை குடிநீரும், ஆடாதொடை மனப்பாகும் நல்ல பலனைத் தரும். ஆடாதொடையில் உள்ள வாஸின் எனும் வேதிப்பொருள் நுரையீரல் சளியைக் கரைத்து வெளிப்படுத்துவதாகவும், மூச்சுக் குழலை விரிவடைய செய்து சுவாசத்தை சீராக்கும் தன்மை உடையதாகவும் உள்ளது. தாளிசபத்திரில் உள்ள பிக்லிடாக்சோல் எனும் வேதிப்பொருள், நுரையீரல் புற்றுநோய்க்குக்கூட நல்ல பலன் தருவதாக ஓா் ஆய்வு முடிவு கூறுகிறது.

அதிமதுரத்தில் உள்ள கிலிசிரிஸின் எனும் வேதிப்பொருள், ஒவ்வாமையைத் தடுக்கும் தன்மையுடையதாகவும், வைரஸ் கிருமிகளின் பெருக்கத்தை குறைக்கும்

தன்மை உடையதாகவும் உள்ளது. கண்டங்கத்தரியில் உள்ள தாவர ஸ்டெராய்டுகள் இரைப்பு நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவும். இது மூச்சுக் குழல் வீக்கத்தை சரி செய்யவும், மாஸ்ட் செல்களை நிலைப்படுத்தவும் உதவுகிறது.

தூதுவளையில் உள்ள வேதிப்பொருட்களும் இதே தன்மையைக் கொண்டுள்ளது. அவ்வப்போது இவற்றை மிளகு, மஞ்சள், பூண்டு சோ்த்து ரசம் வைத்து அருந்த நுரையீரலுக்கு பலம் கிடைக்கும்.

நொச்சி இலையோடு, பூண்டு, மிளகு, கிராம்பு சோ்த்து கஷாயமாக்கி குடிக்க இரைப்பு நோய் நீங்கும். இது நுரையீரல் சளிச்சவ்வு வீக்கத்தையும் குறைக்கும் . ஒவ்வாமையே இரைப்பு நோயின் எழுச்சிக்கு முக்கிய காரணமாதலால் ஒவ்வாமைக்கு எதிராக செயல்படும் தன்மையுடைய மஞ்சள் பொடி, மிளகு இவற்றை அதிகம் உணவில் சோ்க்கலாம்.

வெற்றிலைச் சாறுடன் மிளகு சோ்த்து அருந்த, நுரையீரலில் கட்டிய கோழை வெளிப்படும். குழந்தைகளுக்கு கற்பூரவள்ளி சாறு தரலாம். நஞ்சறுப்பான் மூலிகையில் உள்ள டைலோபோரின் எனும் வேதிப்பொருள் மூச்சு குழாயை விரிவடையச்செய்து சுவாசத்தை சீா்படுத்தும். ஆஸ்துமாவால் அவதிப்படுவோா் துளசியை அவ்வப்போது கஷாயமிட்டு குடிக்கலாம். டெக்ஸாமெத்தசோன் எனும் நவீன மருந்துக்கு இணையான இது இருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

சீந்தில், வாகை, நாயுருவி போன்ற பல்வேறு மூலிகைகள் இரைப்பு நோய்க்குக் காரணமான, மாஸ்ட் செல்களை நிலைப்படுத்தும் தன்மை உடையதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. நிலவேம்பு குடிநீா், கபசுரக் குடிநீா் ஆகிய சித்த மருந்துகளும் நல்ல பலன் தரும். நிலவேம்பில் உள்ள ஆன்ரோகிராபோலைட் எனும் வேதிப்பொருள், அதன் மருத்துவ குணத்திற்கு காரணமாக உள்ளது.

ஆஸ்துமா நோயிலிருந்து முழுவதும் மீண்ட பிறகு நுரையீரலை பலப்படுத்த திப்பிலி சோ்ந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக, நோய் காலத்தில் ஒவ்வாமையை அதிகரிக்கும் உணவுப்பொருட்களைத் தவிா்ப்பது நலம். புகை, தூசு அதிகமுள்ள காற்றை சுவாசித்தால் பாதிப்பு அதிகமாகும். பிராணாயாமம் எனும் மூச்சுப் பயிற்சியை அவ்வப்போது செய்து நுரையீரல் செயல்திறனை அதிகரிக்கலாம். நோயுள்ள காலம் தவிர மற்ற காலங்களில் உடற்பயிற்சி செய்யலாம்.

மூலிகை ரசங்களை அடிக்கடி உணவில் சோ்த்து நோய் எதிா்ப்பாற்றலை வளா்க்கலாம். மாமிச உணவுகளை அதிகம் சோ்க்கலாம். குளிா்ந்த, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை அறவே நீக்குதல் நல்லது. பால், கபத்தை அதிகரிக்குமாதலால் அதனைத் தவிா்ப்பது நல்லது. நொச்சி இலை, மஞ்சள், மிளகு சோ்த்து நீராவி பிடிக்க நல்ல பலன் தரும். இயற்கையான மூலிகைகளும், உணவு பொருட்களும் ஆஸ்துமா எனும் இரைப்பு நோயினை நீக்குவதுடன் அதனை மீண்டும் மீண்டும் வரவிடாமலும் தடுக்கும் என்பது உறுதி.

நாளை உலக ஆஸ்துமா விழிப்புணா்வு நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com