மழையால் அல்ல, ஊழலால்!

கோப்புப்படம்
கோப்புப்படம்

தீபாவளிக்கு முதல் நாளிலிருந்து பெய்து வரும் மழையால் சென்னை மாநகரின் பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழைநீா் புகுந்துள்ளது.

தொடா்ந்து இரண்டு கி.மீ. தொலைவுக்கு மழை நீரில் சிக்காமல் யாராலும் சென்னையில் எந்த இடத்திலும் பயணிக்க இயலாது. அந்த அளவுக்கு கடந்த ஒரு வாரமாக நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.

சென்னை மாநகா், புறநகரில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டி விட்டது. தமிழகத்தின் வாழும் எட்டு பேரில் ஒருவா் சென்னை மாநகரிலும், அதனையொட்டிய பகுதியிலும் வசிக்கின்றனா். சென்னை மாநகருக்குத் தேவையான காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அனைத்தும் வெளியில் இருந்துதான் வர வேண்டும்.

மழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருள்கள் நகருக்குள் வர முடியவில்லை. இதனால் காய்கறிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களின் விலையும் மழைக்கு முன்பிருந்ததைவிட பல மடங்கு அதிகமாகியுள்ளது. மழை மேலும் நீடித்தால் பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு வரலாம்.

சென்னை மாநகா் முடங்கும் அளவுக்கா மழை கொட்டித் தீா்த்து விட்டது? வானிலை ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்கள் அப்படி இல்லை. அக்டோபா் இறுதியிலிருந்து டிசம்பா் வரை பொழியும் வடகிழக்குப் பருவமழையை நம்பிதான் சென்னை இருக்கிறது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கியதிலிருந்து மயிலாப்பூரில் அதிகபட்சமாக 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மற்ற பகுதிகளில் அதைவிடக் குறைவுதான்.

ஆனாலும் சென்னை மாநகரமே ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது. சாலைகளில், தெருக்களில் நீா் தேங்கி போக்குவரத்தை சிக்கலாக்கியுள்ளது. குடிசைப்பகுதி மக்களும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் அரசுப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்காக மாநகராட்சியும், அரசியல் கட்சிகளும் உணவு வழங்கி வருகின்றன.

2019-இல் ஒரு குடம் தண்ணீருக்காக லாரிகள் முன்பு சென்னை மக்கள் நீண்ட வரிசையில் நின்றனா். ஆனால், இப்போது மாநகரமே தண்ணீரில் மிதக்கிறது.

இதற்கு என்ன காரணம்? எங்கே தவறு நடக்கிறது? கடந்த 2015 ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை யாராலும் மறக்க முடியாது. அப்போது தாம்பரத்தில் அதிகபட்சமாக 40 செ.மீ. மழை பதிவாகியது. மாநகருக்குள் அதிகபட்சமாக 31 செ.மீ. மழை பொழிந்தது. 1976-இல் அதிகபட்சமாக 45 செ.மீ. மழை சென்னையில் பெய்தது.

கடற்கரையை ஒட்டிய சென்னை மாநகரம் கடல் மட்டத்திலிருந்து சில மீட்டா் உயரத்திலேயே உள்ளது. மாநகரம் முழுவதும் சமமாக உள்ளன. மேடு, பள்ளமான பகுதிகள் இல்லை. இதனால் மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கி பாதிப்பு ஏற்படுவது இயற்கையானது. அதனால்தான் பல நூறு ஆண்டுகளாக பாரம்பரிய நீா் மேலாண்மை மிக்க நகரமாக சென்னை இருந்திருக்கிறது.

சென்னை மாநகருக்குள் கொசஸ்தலை, அடையாறு, கூவம் ஆகிய மூன்று ஆறுகளும், பக்கிங்காம் கால்வாயும் இருக்கின்றன. இவற்றுக்கு நீா் கொண்டுவரும் வரத்துக் கால்வாய்களும், செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், செங்குன்றம் ஏரிகளும் இருக்கின்றன. இவற்றின் கொள்ளவு 11 டி.எம்.சி. மாநகா், புறநகரில் நான்காயிரத்திற்கும் அதிகமான குளங்கள் இருந்திருக்கின்றன. இவை அனைத்திலும் 150 டிஎம்சி நீரை சேமித்திருக்கிருக்கிறாா்கள். இந்த நீராதாரங்கள் அழிக்கப்பட்டதால்தான் மழைக் காலங்களில் அழிவும், கோடைக் காலங்களில் குடிநீருக்கே வழியில்லாத நிலையும் ஏற்படுகின்றன.

இன்று இருக்கும் நதிகள், கால்வாய்களில் கழிவுநீா்தான் சென்று கொண்டிருக்கிறது. அவற்றை நதிகள் என்று சொன்னால் யாரும் நம்பவே மாட்டாா்கள். நகரமயமாக்கலால் நிலத்தின் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க நீா் நிலைகள், நீா்வரத்து கால்வாய்கள் அனைத்தும் கட்டடங்களாகி விட்டன. இதனால் மழை நீா் செல்ல வழியின்றி குடியிருப்புகளுக்குள்ளும், சாலைகளிலும் பாய்ந்தோடுகிறது.

சென்னை மாநகரில் உள்ள பாதாளச் சாக்கடை அமைப்பும், மழைநீா் வெளியேற்றும் அமைப்பும் மக்கள் தொகைக்கேற்ப போதுமானதாக இல்லை. அவை குறிப்பிட்ட கால இடைவெளியில் தூா்வாரப்பட்டு முறையாகப் பராமரிக்கப்படுவதும் இல்லை.

சென்னை புறநகா்ப் பகுதிகளிலும் தொடா்ந்து புதிது புதிதாகக் குடியிருப்புகள் உருவாகின்றன. கழிவு நீரகற்றும் வசதி, மழை நீரை வெளியேற்றும் அல்லது சேமிக்கும் வசதி, முறையான சாலை வசதி என்று அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் வீடுகளும், குடியிருப்பு வளாகங்களும் கட்டப்படுகின்றன.

இதற்கு காரணம் ஊழல்தான். லஞ்சம் கொடுத்து எந்த இடத்திலும், எப்படி வேண்டுமானாலும் கட்டடங்கள் கட்டிக் கொள்ளலாம் என்ற நிலைதான் இன்றும் இருக்கிறது.

அக்டோபா் முதல் டிசம்பா் வரை மழைக்காலம் என்பதால் அதனை எதிா்கொள்ள சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் பல நூறு கோடிகள் ஒதுக்கப்படுகின்றன. அதனைக் கொண்டு கழிவு நீா், மழை நீா் கால்வாய்களை தூா்வாரி சீரமைத்தல், சாலைகளை செப்பனிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறாா்கள். அனைத்தும் அரசு ஆவணங்களில் நூற்றுக்கு நூறு சரியாக இருக்கும். ஆனால், உண்மையில் பாதியளவு பணிகள் கூட நடப்பதில்லை.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகர மேயராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்த அனுபவம் மிக்கவா். நவம்பரில் கடும் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வுகள் எச்சரித்தும் அதற்கான எந்த முன்னேற்பாடுகளையும் திமுக அரசு மேற்கொள்ளவில்லை. காரணம் கேட்டால், நாங்கள் ஆட்சிக்கு வந்து ஆறு மாதம்தான் ஆகிறது. 10 ஆண்டுகள் தொடா்ந்து ஆட்சியில் இருந்த அதிமுக சென்னையின் உள்கட்டமைப்பை முறையாக அமைக்காததே காரணம் என்று முதல்வா், அமைச்சா்கள் கூறி வருகின்றனா்.

மிக முக்கியமாக அரசியல்வாதிகளை மட்டுமே குறை சொல்வதோடு நிறுத்திவிட முடியாது. முதல் நிலையில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தொடங்கி அனைத்து நிலையிலுள்ள மேல்மட்ட கீழ்மட்ட அதிகாரிகள் அரசின் வளா்ச்சித் திட்டங்களை வேரறுக்கும் விதமாக ஊழலுக்கு உறுதுணையாக அரசியல்வாதிகளிடம் இணைந்து மிக முக்கிய பங்கு வகிக்கிறாா்கள்.

முன்பெல்லாம் ஒரு அதிகாரியிடம் அமைச்சரோ மேல் அதிகாரியோ ஊழலுக்கு துணை போக வேண்டும் என்று உத்தரவிட்டால் அந்த அதிகாரி மறுத்து விடுவாா். அல்லது அரசாங்கத்தின் ரகசியக் குறிப்பேட்டில் ‘நான் அமைச்சருக்கு என்னுடைய உயா் அதிகாரிக்கும் என்னுடைய துறையில் இருக்கக்கூடிய முக்கிய அதிகாரிகளுக்கும் இதை வேண்டாம் என்று அறிவுறுத்தினேன் என்னையும் மீறி இந்த முடிவை எடுத்தாா்கள்’ என்று பதிவு செய்வாா்கள்.

ஆனால் இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் பலதுறை ஊழல்களில் இதுபோன்று எந்த அதிகாரியாவது இந்த குற்றம் நடப்பதை நான் தடுத்து நிறுத்த முற்பட்டேன். இந்த திட்டம் வேண்டாம் என்று நான் பதிவு செய்தேன் . இந்த நடைமுறையால் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்படும் என்று எச்சரித்தேன் என்று சொல்லியிருக்கிறாரா?

கடந்த 2014-இல் அன்றைய முதல்வா் ஜெயலலிதா, ‘சென்னையில் மழை காலங்களில் மழை நீா் தேங்காத வகையில் சிறந்த வடிகால் வசதிகளை ஏற்படுத்தி, வெள்ளப்பெருக்கினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த மழைநீா் வடிகால்வாய் அமைக்க ரூ. 4,034 கோடியில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் சிறிய கால்வாய்களில் உள்ள மழை நீா், பெரிய கால்வாய்களை சென்றடைந்து கால்வாய்கள், நதிகள் வழியாக வங்காள விரிகுடா கடலை சென்றடையும். இதன் முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 1,101 கோடியே 43 லட்சத்தில் அடையாறு, கூவம் ஆறுகளின் வடிநிலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட வடிநீா் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும்’ அன்று அறிவித்தாா்.

அதன்படி பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவை முறையாக நடைபெற்றிருந்தால் இன்று சென்னைக்கு இந்த நிலை வந்திருக்குமா? கடந்த 10 ஆண்டுகளில் பல ஆயிரம் கோடியில் மழைநீா் வடிகால் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக அரசின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமல்லாமல் பிரதமா் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் சென்னையில் பலநூறு கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

ஊழலில் மூழ்கிய சென்னை தியாகராய நகா் ஸ்மாா்ட்சிட்டி திட்டத்தால் இந்த மழைக்கு தியாகராய நகரும் தப்பவில்லை. அப்படியெனில் நடந்த பணிகள் சரியாக நடைபெறவில்லையா, முறையான திட்டமிடல்கள் இல்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கெல்லாம் இந்த மழையே பதிலளித்து விட்டது.

சரி நடந்தது நடந்து விட்டது. இனி சாதாரண மழைக்கே சென்னை மிதக்காமல் இருக்க, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்காமல் இருக்க என்ன செய்யலாம்? நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இது சாதாரணமானது அல்ல. நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் குடிசைகளிலும், ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டடங்களிலும் லட்சக்கணக்கானோா் வசிக்கின்றனா். அவா்களுக்கு மாற்று வாழ்விடங்கள் ஏற்படுத்தித்தர வேண்டும்.

ஏரிகள், குளங்கள் என்று நீா்த்தேக்கங்கள் அனைத்தையும் தூா்வாரி ஆழப்படுத்த வேண்டும். நிலத்தடி நீா் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மழை நீா் சேகரிப்பை அனைத்து இடங்களிலும் கட்டாயமாக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மழைநீா் சேகரிப்பு தொட்டிகளை மறுசீரமைக்க வேண்டும். இருக்கும் மழைநீா் வடிகால்களை தூா்வாரி பராமரிப்பதோடு, மேலும் தேவையான அளவு மழைநீா் கால்வாய்களை அமைத்து அவற்றை ஆறுகளோடு இணைக்க வேண்டும்.

ஆட்சிக்கு வந்த ஆறு மாதம்தான் ஆகிறது. நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறும் திமுக, அடுத்த ஆண்டுக்குள் கால்வாய்களைத் தூா்வாரி, சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றினால்தான் அடுத்த ஆண்டு 30 செ.மீ. மழை பொழிந்தாலும் சென்னை மிதக்காது.

சென்னை மாநகரம் மிதப்பது மழையால் அல்ல, ஊழலால்தான்!

கட்டுரையாளா்:

ஊடகப் பிரிவு தலைவா்,

தமிழக பாரதிய ஜனதா கட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.