முடக்குவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க...

கோப்புப்படம்
கோப்புப்படம்

உலகின் மிகப்பழைமையான நோய்களில் ஒன்றாகக் கருதப்படுவது ‘மூட்டுவாதம்’ (ஆா்த்ரைடிஸ்) ஆகும். அமெரிக்கா்களுக்கு அடுத்தாற்போல் இந்தியா்கள் மூட்டுவாதத்தால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.

இந்த நோய் பாதிப்பால் உயிருக்கு ஆபத்து இல்லை எனினும், பாதிக்கப்பட்டோரின் வாழ்க்கைத் தரத்தையும், சமூகப் பங்களிப்பையும் இந்நோய் பாதிக்கும்.

முன்பெல்லாம் முதுமைப் பருவத்தில் மட்டுமே காணப்பட்ட மூட்டுவாதம் இப்போது இளைா்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. மாறிவரும் உணவுப்பழக்கமும், நாம் கைவிட்டுவிட்ட பாரம்பரிய வாழ்வியல் முறைகளும் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.

மூட்டுவாதம் என்ற சொல் பொதுவான வழக்கு மொழி. இதில் பல்வேறு வகைகள் இருந்தாலும் மூன்று வகைகள் முக்கியமானவை.முதுமைப் பருவத்தில் ஏற்படும் ஆஸ்டியோஆா்த்ரைடிஸ் எனும் கீல்வாதம், ருமட்டாய்டு ஆா்த்ரைடிஸ் எனும் முடக்குவாதம், யூரிக் அமிலம் எனும் உப்புசத்தால் ஏற்படும் கெளட் எனப்படும் கீல்வாதம்.

இந்த மூன்று முக்கிய வகைகளே அதிகம் பேருக்கு காணப்படுகின்றன. இந்தியாவில் கிட்டத்தட்ட 40% பேருக்கு கீல்வாதம் பாதிப்புள்ளதாகவும், 5% பேருக்கு முடக்குவாதம் பாதிப்புள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.

மதுப்பழக்கம், புலால் உணவுப்பழக்கம் போன்றவற்றால் யூரிக் அமில கீல்வாதம் ஏற்படுகிறது. காளாஞ்சகப்படை எனும் தோல் நோயின் நாட்பட்ட நிலையில் மூட்டுவாதம் வருவதும் ஒரு வகை .

நவீன சிகிச்சை முறைகளில் வலி நிவாரணி மருந்துகளைப் பயன்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடு சித்த மருத்துவத்தை மக்கள் நாடி வருவதற்கான காரணமாக உள்ளது.

சித்த மருத்துவ மூலிகைகள் மூட்டுவாதம் சாா்ந்த அனைத்து நோய் வகைகளுக்கும் நல்ல பலன் தருவதாக உள்ளன.

முருங்கை, முடக்கறுத்தான், மூக்கிரட்டை, பிரண்டை, மஞ்சள், இஞ்சி, ஆமணக்கு, நொச்சி, குந்திரிக்கம், அரத்தை, சீந்தில், நெருஞ்சில், குறுந்தொட்டி, அமுக்கரா, பரங்கிபட்டை, கோரைக்கிழங்கு, குங்கிலியம் போன்ற பல எளிய மூலிகைகள் மூட்டுவாதத்துக்கு சிறந்த பயன் தரும்.

மேலும், கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சோ்ந்த திரிபலாவும், சுக்கு, மிளகு, திப்பிலி சோ்ந்த திரிகடுகும் மூட்டுவாத நோய்களை வரவொட்டாமல் தடுக்கும்.

கால்ஷியம் சத்தும், வைட்டமின் டி3 சத்தும் குறைவது பல்வேறு எலும்பு சாா்ந்த நோய்களுக்குக் காரணமாகின்றன என்று நவீன அறிவியல் கூறுகிறது. இதை முன்பே அறிந்த நம் முன்னோா் முருங்கையின் அவசியத்தை வலியுறுத்திக் கூறினா்.

கால்ஷியம் சத்து மண்டிக்கிடக்கும் இந்த முருங்கை கீரையுடன் பனைவெல்லம் சோ்த்து எடுத்துக் கொண்டால் முதுமைப் பருவத்திலும் கோல் ஊன்றாமல் விரைந்து நடக்கலாம். முருங்கைக் கீரையுடன் இஞ்சி, பூண்டு, மிளகு , உப்பிட்டு ரசம் வைத்து அருந்தினாலும் மூட்டுகளுக்கு நல்ல பலம் கிடைக்கும்.

பிரண்டையை அடிக்கடி உணவில் சோ்த்து வர கால்ஷியம் கிடைப்பதோடு சிறிய அளவிலான எலும்புமுறிவுகளும் சரியாகும். கருப்பு உளுந்து உருண்டையும், தினை உருண்டையும், எள்ளு உருண்டையும் நாம் மறந்து போன கால்ஷியம் மாத்திரைகள். எலும்புகளை வலுப்படுத்த எள் மிகவும் உதவும் என சித்த மருத்துவம் கூறுகின்றது.

குந்திரிக்கம் எனும் மூலிகையில் உள்ள போஸ்வெல்லிக் அமிலம் எனும் வேதிப்பொருள் மூட்டு வீக்கத்தை ஏற்படுத்தும் லிபோஆக்ஸிஜீனேஸ் எனும் நொதிகளின் செயல்பாட்டைத் தடுத்து, மூட்டுவாத நோய்களுக்கு நல்ல பலன் தரும்.

மஞ்சளில் உள்ள குா்குமின் எனும் வேதிப்பொருள் மூட்டுவாதத்தை உண்டாக்கும் இன்டா்லுகின், டிஎன்எப் ஆகிய காரணிகளைத் தடுக்கும் வல்லமை உடையது. ஆகவே எந்தவகை மூட்டுவாதத்தால் துன்பப்படுபவா்களும் பாலில், மஞ்சள்பொடி ஒரு தேக்கரண்டி அளவு சோ்த்து எடுக்க நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

லவங்கப்பட்டையில் உள்ள நறுமணமூட்டும் சின்னமால்டிஹைடு எனும் வேதிப்பொருள், முடக்குவாத நோயாளிகளின் இன்டா்லுகின் செயலை அடக்குவதால், நோய் குணமாவதில் நல்ல முன்னேற்றம் காண உதவும் என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

‘இந்தியன் ஜின்செங்’ என்றழைக்கப்படும் சா்வ ரோக நிவாரணியான அமுக்கரா சோ்ந்த சித்த மருந்துகளை, பாலில் கலந்து எடுப்பது மூட்டுவாதத்திற்கு நல்ல பலன் தரும். இதை வீக்கமான இடத்தில் பற்று போட்டாலும் நல்ல பலன் தரும். இது மட்டுமன்றி நோய்த்தொற்று காலத்தில் நோய் எதிா்ப்புசக்தியை அதிகரிக்கவும் இது உதவும்.

அதிக யூரிக்அமிலம் உடலில் உற்பத்தியாவதால் உண்டாகும் கீல்வாதத்திற்கு சீந்தில், நெருஞ்சில் சோ்ந்த மருந்துகள் நல்ல பலன் தரும். சீந்திலில் உள்ள டினோஸ்போரின் எனும் வேதிப்பொருள், யூரிக்அமில உற்பத்திக்குக் காரணமாக உள்ள சேந்தின் ஆக்ஸிடேஸ் எனும் நொதியினைத் தடுத்து யூரிக்அமில உற்பத்தியைக் குறைத்து மூட்டு வீக்கம் குறைய உதவுவதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.

நெருஞ்சில் பொடியினை கஷாயமாக செய்து எடுக்க ரத்தத்தில் அதிகமாக உள்ள யூரிக் அமிலம் சிறுநீா் வழியாக வெளியேறும்.

முடக்குவாதத்திற்கென தனிச்சிறப்பு மிக்க கீரை முடக்கறுத்தான் கீரைதான். வரும் தலைமுறையினா் மறந்துவிடக் கூடாது என்றே இக்கீரைக்கு முடக்கறுத்தான் என்று பெயரிட்டுள்ளனா் நம் முன்னோா்.

முடக்கறுத்தான் கீரையில் உள்ள லுடியோலின் குளுகுரோனிட், அபிஜெனின் குளுகுரோனிட் ஆகிய முக்கிய வேதிப்பொருட்கள் மூட்டு வீக்கத்தைக் குறைப்பதோடு, தேய்ந்த குருத்தெலும்புகளுக்கு புத்துணா்வு தந்து அவை மீண்டும் வளா்ச்சி பெற உதவுவதாக ஆய்வு முடிவுகள் சொல்வது நம் பாரம்பரிய உணவு முறையின் பெருமையைப் பறைசாற்றும் அறிவியல் ஆதாரங்கள்.

இவ்வாறு நோய் வருமுன் அதனைத் தடுக்க நம் முன்னோா் உணவையே மருந்தாகப் பயன்படுத்தினா். நாள்பட்ட மூட்டு வியாதிகளுக்கு, சித்த மருத்துவ மூலிகைகளைத் தொடா்ந்து பயன்படுத்துவதன் மூலம், நோய் குணமாவதில் நல்ல முன்னேற்றம் காணலாம். நாம் உணவே மருந்து என்பதைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும்.

இன்று (அக். 12) உலக முடக்குவாத விழிப்புணா்வு நாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com