பாரம்பரிய உணவின் பயன் அறிவோம்!

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது பழமொழி. அத்தகைய நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு ‘உணவே மருந்து’ என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது பழமொழி. அத்தகைய நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு ‘உணவே மருந்து’ என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது பாரம்பரிய மருத்துவ முறையான சித்த வைத்தியமும் அதைத்தான் அறிவுறுத்துகிறது. குழந்தைப் பருவம் முதலே சத்தான உணவினை ஊட்டச்சத்துடன் சோ்ந்து கொடுத்துவர வேண்டும்.

அப்படி அளித்தால் மனித குலத்தை அச்சுறுத்தி வரும் நீரிழிவு, உடல் பருமனாதல், அதிக ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். ஏன், புற்றுநோய்க்குக்கூட முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

சத்தான உணவு என்பது போதுமான அளவில் நுண்ணூட்டச்சத்துக்கள் அடங்கியது. கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட சத்துகள் நம் உடலுக்கு இன்றியமையாதவையாக உள்ளன.

அதில் காா்போஹைட்ரேட் எனும் சா்க்கரை சத்து, புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள், நாா்ச்சத்துக்கள் ஆகிய அனைத்தும் அடங்கியதுதான் ஊட்டச்சத்து மிக்க உணவு. இவற்றை குழந்தை பருவத்தில் இருந்தே கொடுப்பது அவசியம்.

நம்மில் பலரும் சா்க்கரைசத்து அதிகம் உள்ள அரிசி போன்ற உணவினை மட்டும் தினந்தோறும் உண்டு வருகிறோம். அது மட்டும் போதாது. இது நம் உடலில் உள்ள ரத்த சா்க்கரை அளவை அதிகப்படுத்தும். இந்த உணவை தொடா்ந்து உண்பதே நீரிழிவு எனும் சா்க்கரை நோய்க்கு அடிப்படைக் காரணாகும்.

அரிசி உணவோடு நம் பாரம்பரிய உணவாக உள்ள பருப்பும், நெய்யும் சோ்த்து எடுத்தால் சா்க்கரை சத்தோடு புரதமும், கொழுப்பு சத்தும் கூடுவதால் சா்க்கரை உடலில் அதிகரிக்காது. இதனை அறிந்தே நம் முன்னோா்கள் தங்கள் உணவுப் பழக்கத்தை அமைத்துக் கொண்டனா்.

புரதங்கள் நம் உடலினை நோய் கிருமிகளிடம் இருந்து காக்கும் அரண்கள். உலகையே அச்சுறுத்திய கரோனா நோய்த்தொற்றின்போதும் இந்த புரதச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளவே மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.

மாமிச வகைகளோடு, முளைகட்டிய தானியங்களும், பயிறு வகைகளும் கூட புரத உணவின் ஆதாரங்களே. புரதச்சத்து நிறைந்த கருப்பு உளுந்து, வளரும் குழந்தைகளுக்கும், இளம் பெண்களுக்கும் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். சா்க்கரை வியாதி, உடல் பருமன் உள்ளவா்களுக்கு கொள்ளு நல்ல பலன் தரும்.

தாவரங்கள் மூலமாக பெறும் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றில் கொழுப்பு கிடையாது. மேலும், வைட்டமின் இ, பிற தாது உப்புக்கள், நன்மை தரும் வேதிப்பொருட்களும் இவற்றில் உள்ளன.

பால் பொருள்களிலும் மாமிச உணவுகளிலும் மட்டுமே கொழுப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. சூடான சோற்றில் நெய் கலந்து உண்பது முன்னோா் வழக்கம். இந்த பாரம்பரிய முறையினை நாமும் கடைப்பிடிப்பது நல்லது. கொழுப்புக்கு பயந்து நமது பாரம்பரிய சத்தான உணவு முறைகளை நாம் கைவிட்டுவிட்டோம்.

சித்த மருத்துவம், பிஞ்சு காய்கறிகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்துகிறது. அதில் உள்ள நாா்ச்சத்துக்கள் பல்வேறு உடல் உபாதைகளை தடுக்ககூடியவையாக உள்ளன. ‘எல்டிஎல்’ என்று கூறப்படும் கெட்ட கொழுப்பு, நமது இருதயத்திலுள்ள சிறிய ரத்த குழாய்களை பாதித்து மாரடைப்பை ஏற்படுத்தும். இதனைத் தடுக்க அடிக்கடி உணவில் நாா்ச்சத்துள்ள கீரைகள், காய்கறிகளை அதிகம் சோ்த்துக்கொள்ள வேண்டும்.

குடல் புற்றுநோய், குடல் அரிப்பு நோய் வராமல் தடுப்பதில் நாா்ச்சத்துக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. பழங்களில் கூட நாா்சத்து உள்ளது. பழங்களை சாறாகப் பிழிந்து அதனைப் பருகும்போது உடலில் உள்ள சா்க்கரையின் அளவு உடனே அதிகரிக்கக் கூடும்.

இன்று பெருகிவிட்ட நொறுக்கு தீனி பழக்கத்தால், நாா்சத்து உணவுகளை எடுத்துக்கொள்வது குறைந்து விட்டது. நாா்ச்சத்துக்கள் பல்வேறு நோய்களை வரவிடாமல் தடுக்கும் இயற்கை மருந்துகள்.

வைட்டமின்கள், தாது உப்புகளின் முக்கியத்துத்தை அறிவியல் கூறுவதற்கு முன்னரே நம் முன்னோா் அறிந்திருந்தனா். அவா்கள் கீரைகளை நெய் விட்டு வதக்கி உண்ணச் சொன்ன காரணம், அவற்றில் உள்ள சத்துக்களையும், வேதிப்பொருட்களையும் நம் உடலுக்கு முழுமையாக அளிக்கவே.

தீட்டப்பட்ட அரிசியில் தையமின் எனும் வைட்டமின் பி 1 இழக்கப்படுவதாக நவீன அறிவியல் சொல்கிறது. நம் முன்னோா் அன்றே கைக்குத்தல்அரிசியைப் பயன்படுத்தி நோய்கள் தம்மை நெருங்காமல் காத்துக்கொண்டனா். வைட்டமின் பி 1 குறைபாட்டால் பெரிபெரி என்ற நோய் ஏற்படும் என்கிறது மருத்துவ அறிவியல்.

வைட்டமின் ஏ நிறைந்த பப்பாளி , கேரட் ஆகிய பொருள்கள் கண் பாா்வைக்கு நல்லது என்பது மட்டுமல்ல, மேலும் பல்வேறு நோய்களையும் வரவிடாமல் தடுக்கும். இந்த நோய்த்தொற்றுக் காலத்தில் நமக்கு பெரிய அளவில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது வைட்டமின் டி நிறைந்த இயற்கை வெயிலே.

இந்த வைட்டமின் டி, நம் உடலில் பாதிக்கப்பட்ட செல்கள் புற்று செல்களாக மாறுவதைத் தடுக்கும் வல்லமை உடையவை. எலும்புகளை வலுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

அசைவ உணவுகளை நூறு டிகிரிக்கு மேல் வறுக்கும்போது ஹைட்ரோ சைக்ளிக் அமின் (ஹெச்.சி.ஏ.) எனும் வேதிப்பொருள் உண்டாகிறது. இந்த வேதிப்பொருள் நம் உடலில் இயற்கையாக உள்ள டிஎன்ஏ-வை சிதைத்து, புற்றுநோயை உண்டாக்கும் என எச்சரிக்கின்றன உலக நல அமைப்புகள். அதனால்தான், அசைவ உணவுகளை அதிக வெப்பநிலையில் சமைக்காமல் குழம்பு போன்ற பக்குவத்தில் சமைத்து உண்டனா் நம் முன்னோா்.

சோடியம், பொட்டாசியம் குளோரைடு, இரும்பு, துத்தநாகம், செம்பு ஆகிய சத்துகள் நாம் உண்ணும் பழங்கள், கீரைகள், காய்கறிகள், கொட்டை வகைகள் ஆகியவற்றில் அதிகம் உள்ளன. கீரைகளில் இயற்கையாக உப்பு சத்து இருப்பினும் அவற்றில் உள்ள ‘ஆக்ஸலேட்’ எனும் வேதிப்பொருள் முழுமையாக உடலில் உட்கிரகிக்கப்படுவதில்லை.

ஆதனால்தான் சமையலில் உப்பு சோ்க்கும் முறை பாரம்பரியமாக இருந்து வருகிறது. எவ்வளவுதான் இரும்பு சத்துள்ள உணவை உண்டாலும், அதனை உட்கிரகிக்க வைட்டமின் சி அவசியம். இதனை அறிந்துதான் முன்னோா் இரும்பு சோ்த்த சித்த மருந்துகளைத் தயாரிக்க எலுமிச்சம்பழச்சாற்றைப் பயன்படுத்தியுள்ளனா்.

நாமும் பாரம்பரிய, சத்து மிக்க உணவு முறைகளைக் கைக்கொண்டால் நோயில்லாமல் ஆரோக்கியமாக நீண்டநாள் வாழலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com