மாதர்குல மாமணி லட்சுமி அம்மாள்!

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்பது ஒüவை வாக்கு. மனிதப் பிறவி தேடி ஏற்றுக் கொள்கிற ஒன்று அல்ல, எதிர்பாராமல் ஏற்படுவது. ஆனால் பிறந்துவிட்ட ஒவ்வொரு மனிதனும் எதிர்பார்க்க வேண்டியது, பிறந்தவன்
மாதர்குல மாமணி லட்சுமி அம்மாள்!

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்பது ஒüவை வாக்கு. மனிதப் பிறவி தேடி ஏற்றுக் கொள்கிற ஒன்று அல்ல, எதிர்பாராமல் ஏற்படுவது. ஆனால் பிறந்துவிட்ட ஒவ்வொரு மனிதனும் எதிர்பார்க்க வேண்டியது, பிறந்தவன் இறந்துவிடுவது என்பது. காலத்தின் கடைசிக் கட்டளை எப்பொழுது எவ்விதத்தில் வரும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஒருவர் உலகை விட்டு, வாழ்வைவிட்டு திரும்பி வராத கடைசிப் பயணத்தில் சென்றுவிட்டாலும் அவர் சார்ந்த சமுதாய வரலாற்றில், அவர் வாழ்ந்த நாட்டின் நல்லோர் உள்ளங்களில், ஒரு நிலையான இடத்தைப் பெற்று வாழ்பவராக இருக்கக்கூடும். அவ்வாறு மறைந்தும் மறையாத மாதர்குல மாமணியாக லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நம்மில் பலரின் நினைவில், நாட்டின் வாழ்வில் நிலை பெற்றுவிட்டார்.

  சுதந்திர இந்தியாவின் எழுச்சிமிக்க வரலாற்றில் எதிர்பாராத வீழ்ச்சியாக 1975 ஜூன் மாதத்தில் ஒரு இருண்ட கால நெருக்கடி நிலைமை சூழ்ந்தபோது வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடிய ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆசார்ய கிருபளானி, அசோக் மேத்தா, மொரார்ஜி தேசாய் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பலர் இந்தியாவில் இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தினார்கள்.

  நெருக்கடி காலம் வருவதற்கு முன்னோடியாக பல உற்பாதங்கள் 1969-74 காலகட்டத்தில் இந்திய அரசியலில் தலையெடுத்த பொழுது காங்கிரஸ் கட்சி உடைந்து இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என இரு கட்சிகளாகப் பிரிந்துவிட்டது. நிலைகுலைந்த ஜனநாயக அடிப்படையை மீட்கப் பெரும் தலைவர்கள் முன் வந்தபோது மக்கள் சக்தி அதிகார சக்தியைவிட பெரிது என்ற அடிப்படையில் பாமர மக்களைத் திரட்டிட ஜெயப்பிரகாஷ் நாராயணின் ஜனதா மோர்ச்சா என்ற மக்கள் இயக்கத்தில் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி பங்கு பெற்றவர்களில் நானும் ஒருவன்.

  1975 ஜூன் 25 இரவு போடப்பட்ட நெருக்கடி கால பிரகடனத்தின் கீழ் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டபொழுது என்னையும் கைது செய்வதற்காக காவல் துறையின் உத்தரவு என் இல்லம் நோக்கி வருவதற்கு முன்னர், போலீஸôர் பிடியில் சிக்காமல், நான் தப்பி வெளியேறி, மறுநாள் சென்னைக்கு வந்துவிட்டேன். அதன்பிறகு காங்கிரஸ் தலைவர் காமராஜை திருமலைப்பிள்ளைத் தெருவில் அவர் இல்லத்தில் சந்தித்து, தில்லியில் உருவாகியுள்ள நிலைமைகளை விளக்கினேன். நாடு சுடுகாடாக ஆகிவிட்டது என்று மிகவும் கடுமையான சீற்றத்துடன் அவர் இருந்தார்.

  அதற்கு அடுத்தபடியாக, காங்கிரஸ் தலைவர்கள் சிலரை தியாகராய நகர் தணிகாசலம் தெருவில் லட்சுமி கிருஷ்ணமூர்த்தியின் இல்லத்தில் நான் சந்தித்தேன். 1962-இல் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனதிலிருந்து தேசிய அளவில் தில்லியில் இருந்த காங்கிரஸ் முக்கியத் தலைவர்களுடன் எனக்கு ஓரளவு அறிமுகம் இருந்தது. நெருக்கடி காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த அல்லது சென்னைக்கு வந்த முக்கிய காங்கிரஸ் பிரமுகர்களை லட்சுமி அம்மாள் இல்லத்தில் வழக்கமாகச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

  நாடைவில் லட்சுமி அம்மாளின் இல்லம் நெருக்கடி காலத்தில் ஜனதா அமைப்பின் சென்னை தலைமை இடமாக ஆகிவிட்டது. லட்சுமி அம்மாள் மட்டுமல்ல; அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி, அவர்களின் மகன் சீனிவாசமூர்த்தி ஆகிய மூவரும் ஒரு மனதான முறையில் செயல்பட்டார்கள். வருபவர்களை விருந்தோம்புதல், ஆலோசனை நடத்துதல், மற்ற தலைவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் தங்களுக்கிருந்த நேரத்தையும் வசதிகளையும் அவர்கள் முழுமையாக ஒப்படைத்திருந்தார்கள் என்றே கூறவேண்டும். அப்பொழுது மற்ற மாநிலங்களில் போலீஸ் காவலுக்குத் தப்பி மறைந்தோடி வருபவர்கள் திடீரென்று அங்கு வந்துவிடுவார்கள். காவல்துறையின் கண்காணிப்பு லட்சுமி அம்மாள் வீட்டின்மீது கடுமையாக இருப்பது எங்களுக்குத் தெரியும், அதைப்பற்றி அவர்கள் சிறிது கூட கவலைப்படவில்லை. சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளையர் அதிகாரத்தை எதிர்த்து தந்தை சத்தியமூர்த்தியும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் எவ்வாறு தீவிரமாகப் போராடினார்களோ, அப்படியே நெருக்கடி காலத்திய அடக்குமுறை ஆட்சியை எதிர்ப்பதில் சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமியும் அவர் குடும்பத்தினரும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்.

  காமராஜின் மறைவிற்குப் பிறகு, தமிழ்நாடு ஸ்தாபன காங்கிரஸ் அமைப்பிலிருந்த பலர் மீண்டும் இந்திரா காங்கிரஸில் இணைந்துவிட்டாலும், லட்சுமி அம்மாள் தமது நிலைமையை மாற்றிக் கொள்ளவில்லை. தொடர்ந்து நெருக்கடி கால ஆட்சியை எதிர்த்துப் போராடும் அணியில் பணியாற்றினார். 1977-இல் ஜனதா கட்சி அமைக்கப்பட்டபொழுது தமிழ்நாட்டில் அதனை வளர்ப்பதில் முழுமையாக லட்சுமி அம்மாள் ஈடுபட்டார். மொரார்ஜி தேசாய் ஆட்சி கவிழ்ந்த பிறகு ஜனதா கட்சி பலவகைகளில் உடைந்தது. 1980 தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு ஜனதா கட்சித் தலைவர் பி.ராமச்சந்திரன், இந்திரா காங்கிரஸýடன் இணைந்துவிட்டார். அப்பொழுதும் லட்சுமி அம்மாள் ஜனதா கட்சியிலிருந்து வெளியேற மறுத்துவிட்டார்.

  ஜனதா கட்சியின் செல்வாக்கு குறைந்த காலத்திலும், அரசியல் அடிப்படைக் கோட்பாடுகளை வலியுறுத்துவதற்காக, சத்தியமூர்த்தி ஜனநாயக உரிமைகள் மையம் என்பதை நிறுவி, அதன் மூலம் அரசியல் பிரச்னைகளை ஆராயும் கருத்தரங்குகளை லட்சுமி அம்மாள் நடத்தினார். 1988-இல் சத்தியமூர்த்தி நூற்றாண்டு பிறந்த நாள் விழாவைச் சிறப்புறக் கொண்டாடியதுடன், ஆங்கிலத்தில் சத்தியமூர்த்தி வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். மத்திய சட்டப் பேரவையில் 1920-ல் சத்தியமூர்த்தி ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி தந்த குறிப்புகளுடன் பின்பு வெளிவந்தது. முன்னாள் இந்திய ஆட்சிப் பணியாளர் கே.வி.ராமநாதன் திறம்படத் தொகுத்த, சத்தியமூர்த்தியின் கடிதங்கள் இரண்டு பகுதிகளாக 2008 மே 20 சென்னையில் மேற்கு வங்க ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி முன்னிலையில் வெளியிடப்பட்டது. 1927 முதல் 1942 வரை அண்ணல் மகாத்மா அறிவுரைகள்-அதிகார ஆணைகள் பற்றி நேரடியாக, சத்தியமூர்த்தி எழுதிய கடிதப் போக்குவரத்துகள் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்குச் சிறந்த ஆதாரங்களைத் தரும் கருவூலங்களாகும்.

  "வெள்ளையனே வெளியேறு' என்று மும்பையில் 7 ஆகஸ்டு 1942-ல் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுக்குழு தீர்மானித்ததும், அன்றிரவும் மறுநாளும் காந்தியாரும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கைது செய்யப்படுகின்றனர். சத்தியமூர்த்தி எவ்வாறோ தப்பித்து சென்னைக்கு வரும் ரயிலில் வந்துவிடுகிறார். ஆனால் ஆகஸ்டு 11 காலை அரக்கோணம் ரயில் நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அரக்கோணத்திலிருந்து மகள் லட்சுமிக்கு தந்தி மூலம் நிகழ்ந்தவைகளைக் குறிப்பிட்டுவிட்டு, ""தாயை நீ நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும். நீ தைரியமுள்ள பெண் என்பது என் முழுநம்பிக்கை!'' என்று செய்தி அனுப்பியதாக அப்பொழுது கூறப்பட்டது. அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிய பி.ஜி.சுந்தரராஜன் அதைக் குறிப்பிட்டிருக்கிறார். அதற்குப் பிறகு அவர் மகளுக்குப் பல கடிதங்கள் எழுதினாலும் சிறையில் இருக்கும் தந்தையைப் பார்க்க மகள் லட்சுமி அனுமதிக்கப் படவில்லை.

  வேலூர் சிறையிலிருந்து 1942 செப்டம்பர் முதல் வாரத்தில் சத்தியமூர்த்தி மத்தியப் பிரதேசத்திலிருக்கும் அமரோட்டி சிறைக்கு மாற்றப்படுகிறார். பிறகு உடல் நலம் குன்றியதால் 1942 டிசம்பர் மாதத்தில் சிறையிலிருந்து காவலுக்கு உள்பட்டு, சென்னை அரசாங்கப் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறார். உடல் நிலை தேர்ச்சி அடையாத நிலையில் பிப்ரவரி 2-ம் தேதி அவர் சிறைக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் அவர் தொடர்ந்து மருத்துவமனையில் நீடித்துக் கவனிக்கப்படுகிறார். தமது உடல் நிலையைப் பற்றிய கவலையில், லட்சுமி-கிருஷ்ணமூர்த்தியின் திருமணத்தை நடத்துவதற்கான நாள் 23.4.1943 என சத்தியமூர்த்தி நிச்சயித்துவிடுவதுடன் எக்காரணம் கொண்டும் அந்தத் திருமண நாளை மாற்ற வேண்டாம் என்றும் அவர் கூறிவிடுகிறார். ஆயினும் குறிப்பிட்ட நாளைக்கு முன்னதாகவே 1943 மார்ச் 28 அவரின் உயிர் பிரிந்துவிடுகிறது. என்றாலும் தந்தை குறிப்பிட்டிருந்த சொற்படி, குறிப்பிட்ட தேதியில் அவர்களது திருமணம் நடைபெற்றது.

  தமது ஒரே மகள் லட்சுமியை அருமையுடன் சத்தியமூர்த்தி வளர்த்தார், பெருமையுடன் பாராட்டினார், பல பொறுப்புகளை நம்பிக்கையுடன் ஒப்படைத்தார். மகளும் தந்தையின் பெருமையை நிலைநிறுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டார். தந்தையின் மகள் என்பதுடன், தமக்கெனத் தனிப்பட்ட பெருமையுடன், அரசியல் நேர்மையுடன், மாற்றாரும் பாராட்டும் அளவுக்கு ஈடுபட்ட ஒவ்வொரு செயல்பாட்டிலும் அவர் மேம்பட்டு விளங்கினார். தமது வாழ்வை நிறைவாழ்வாக ஆக்கினார். அவர் தொடங்கிய அமைப்புகளையும் வகுத்த திட்டங்களையும் செயல்படுத்த முன்வந்த நண்பர்களும் அவருடன் இணைந்து பணியாற்றுவதை தத்தம் வாழ்வில் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பாகக் கருதினார்கள்.

  லட்சுமி அம்மாள் பெயருக்குக்கேற்றபடி வாழ்வின் பல்வகைச் செல்வங்களின் உறைவிடம்! சிறந்த மகள், பண்பட்ட குடும்பத் தலைவி, நலம் தரும் நல்ல நண்பர், நேர்மை நிறைந்த அரசியல்வாதி, இருண்ட காலங்கள் சூழ்ந்த நேரத்திலும் ஒளிவிட்ட விளக்கு, தமது வாழ்க்கையை மட்டுமல்லாமல் மற்றவர்கள் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாகச் செய்த நல்ல ஆசிரியர்! அவர் என்றும் நமது நினைவில் நிலைபெற்று இருப்பவர்! வாழ்க லட்சியப் பெண்மணி லட்சுமி அம்மாள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com