காங்கிரஸின் மாயை

ஹரியாணா, அருணாசலப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்ப்பு அலையைச் சமாளித்துவிட்டதாக காங்கிரஸ் திருப்திபட்டுக் கொள்ளலாம். ஆனால், அதற்காக நாட்டில்

ஹரியாணா, அருணாசலப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்ப்பு அலையைச் சமாளித்துவிட்டதாக காங்கிரஸ் திருப்திபட்டுக் கொள்ளலாம். ஆனால், அதற்காக நாட்டில் காங்கிரஸ் கட்சியைத் தான் மக்கள் ஆதரிக்கிறார்கள், காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியிருக்கிறது என்று அக்கட்சித் தலைவர்கள் சிலர் பேசிவருவது தேவையில்லாதது மட்டுமல்ல; மூர்க்கத்தனமாது.

  காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி, வழக்கமாக நிதானமாகப் பேசக்கூடியவர். ஆனால், அவரே இந்த முறை அளவுக்கு மீறிப் பேசிவிட்டதாகவே தெரிகிறது. "மக்கள் காங்கிரûஸத் தவிர வேறு அரசியல் கட்சிகளை ஆதரிக்க விரும்பவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.

  இனி வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சி மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாக இருக்கும்' என்று மணீஷ் திவாரி பேசியிருக்கிறார்.

  2009 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அவ்வளவு எளிதாக இருக்காது என்பதுதான் பொதுவான கருத்தாகும். ஆனால், அதையும் மீறி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

  ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளபோதிலும் பாதிக்கும் குறைவான இடங்களையே கைப்பற்றியுள்ளது. அதாவது காங்கிரஸ், சுயேச்சைகள் தயவுடன்தான் அங்கு ஆட்சியமைத்துள்ளது.

  மகாராஷ்டிரத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ் 82 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் 62 இடங்களைப் பிடித்துள்ளது.

 அருணாசலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 இடங்களில் காங்கிரஸ் 42 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. அதாவது 18 இடங்களை அது இழந்துவிட்டது. அதாவது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை மாநிலத்தில் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி கண்டுள்ளது.

  மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவரான திக்விஜய் சிங், தேசியவாத காங்கிரஸ் கட்சி 2014-க்குள் காங்கிரஸýடன் இணைந்துவிடும் என்று பேசியிருந்தார். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் தற்போதைய முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

  மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிட்டவில்லை என்பது உண்மைதான். இந்தத் தேர்தலிலும் அது தொடர்ந்திருந்தால் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியில் இணைவது சாத்தியமாகலாம். ஆனால், தேசியவாத காங்கிரஸ் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு 62 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 2004 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைத்ததைவிட 9 இடங்கள்தான் குறைவு. மேலும் இந்தத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டி வேட்பாளர்கள் 10 பேரும் வெற்றிவாகை சூடியுள்ளனர்.

  மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. ஆட்சியமைக்க காங்கிரஸ் முற்பட்டால் அதனுடன் பேரம் பேசலாம் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை. தேர்தலில் காங்கிரஸ் கட்சி 82 இடங்களில் வென்றது. எப்படியோ காங்கிரஸ் கூட்டணி பாதிக்கும் மேலான இடங்களைப் பெற்றுவிட்டது. இதனால் பவார், தனது கட்சியை காங்கிரஸýடன் இணைக்க முற்படுவார் என்று எண்ணிவிட முடியாது.

  மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு மீண்டும் அமைந்தாலும், நிதி, உள்துறை உள்ளிட்ட முக்கியமான துறைகளை காங்கிரஸýக்கு விட்டுத்தரும் பேச்சுக்கே இடமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கூறிவருகிறது.

 1999-ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஆட்சிப் பகிர்வு உடன்பாட்டையே இப்போதும் பின்பற்ற வேண்டும் என்பது தேசியவாத காங்கிரஸின் நிலை. இந்த தேர்தலில் நாங்கள் அதிக இடங்களில் வென்றுள்ளோம். பழைய உடன்பாடு செல்லாது; நாங்கள் தரும் துறைகளைத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

  காங்கிரஸýடன் மோதல் முற்றினால் தேசியவாத காங்கிரஸ் தனது பலத்தைக் காட்டவும் தயங்காது. ஓரு பேச்சுக்காக சொன்னால் 62 இடங்களை வென்ற தேசியவாத காங்கிரஸ், 44 இடங்களை வென்ற சிவசேனை மற்றும் 46 இடங்களை வென்ற பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு மாற்று அரசை ஏற்படுத்த முடியும். ஆனால், தேசியவாத காங்கிரஸ் அப்படி நினைக்கவில்லை. அப்படிச் செய்தால் அக்கட்சியில் பிளவு ஏற்படக்கூடும்.

  மாநிலத்தில் சிவசேனைக் கட்சி மெல்ல மெல்ல பலமிழந்து வருகிறது. உத்தவ் தாக்கரேயும் தனது செல்வாக்கை இழந்து வருகிறார்.

  இந்நிலையில் சிவசேனைத் தொண்டர்கள் பார்வை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையின் பக்கம் திரும்பியிருக்கிறது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைக்க முற்பட்டால் அதில் அங்கம் வகிக்க மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையும் முன்வரலாம்.

  மகாராஷ்டிர மாநிலத்தில் சுதந்திரமாகச் செயல்படும் நிலையில் காங்கிரஸ் இப்போது இல்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியை அவ்வளவு எளிதாக ஒதுக்கித் தள்ளிவிடவும் காங்கிரஸôல் முடியாது. மேலும் மும்பையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிக்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையினர் மறைமுகமாக உதவியதையும் காங்கிரஸ் மறந்துவிட முடியாது.

  ஹரியாணாவில் சுயேச்சைகள் உதவியுடன் பூபிந்தர் சிங் ஹூடா மீண்டும் முதல்வராகியுள்ளார். மாநிலத்தில் அதிக இடங்களை வென்ற தனிப்பெருங்கட்சி என்ற அடிப்பையில் அவரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இந்நிலையில் புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் 7 சுயேச்சைகள் மற்றும் பகுஜன் சமாஜ கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் உதவியுடன் அவர் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டார்.

  ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அங்கு காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள போதிலும் மதில்மேல் பூனைபோல்தான் அதன் நிலை உள்ளது.

  இந்த வெற்றி கட்சிக்கு புத்துயிர்ஊட்ட உதவும் என்றபோதிலும் அதன் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. எதிரிகளை ஓரங்கட்டிவிட்டு தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று முதல்வர் ஹூடா போட்ட கணக்கு தப்பாகிவிட்டது. எதிர்பார்த்தபடி அவருக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. சுயேச்சைகள் தயவால்தான் அவர் ஆட்சி நடத்த வேண்டியுள்ளது.

  ஓம்பிரகாஷ் சௌடாலா எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார். அவரது கட்சி தேர்தலில் 32 இடங்களை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்ற முறை அக்கட்சி 9 இடங்களையே வென்றது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் சௌடாலாவுக்கு அதிக செல்வாக்கு இல்லாத நிலை.

  ரோடக், சோன்பட் மாவட்டங்களில் ஜாட் வகுப்பினர் அதிகம் உள்ளனர். அப்பகுதியில் காங்கிரஸ் 29 இடங்களில் 13 இடங்களையே வெல்ல முடிந்துள்ளது. பஜன்லாலின் ஹரியாணா ஜனஹிட் காங்கிரஸ் 7.5 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்திய தேசிய லோகதளம் கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் கதை வேறுமாதிரியாக இருந்திருக்கும்.

  பாஜகவின் செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து வருவதை வைத்து காங்கிரஸ்தான் மிகப்பெரிய அரசியல் கட்சி என்பது போல் மணீஷ் திவாரி பேசியுள்ளார். பாஜகவில் தலைவர்களுக்கு இடையே கோஷ்டிப்பூசல் நீடித்து வருவதைப் பார்த்த மக்கள் நிலையான ஆட்சியை காங்கிரஸ் கட்சியால் தரமுடியும் என்ற நோக்கில்தான் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர். ஆனால், இதைவைத்து எதிர்க்கட்சிகள் பலவீனமாகிவிட்டதாகக் காங்கிரஸ் கருதிவிடக்கூடாது. ஹரியாணா தேர்தல் முடிவுகள் இதைத்தான் தெளிவுபடுத்துகின்றன.

  இத்தகைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் சூன்யமாகிவிட்டன. காங்கிரஸ் கட்சி ஒன்றையே மக்கள் விரும்புகிறார்கள் என்ற முடிவுக்கு அக்கட்சி வந்துவிடக்கூடாது. அப்படி நினைத்தால் காங்கிரஸ் கட்சி தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் நினைக்க முடியும்.

  மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்துள்ள போதிலும் அதனால் தேர்தலில் பாதி கிணற்றைத்தான் தாண்ட முடிந்துள்ளது. ஹரியாணாவில் 70 தொகுதிகளில் வெற்றி நமக்குத்தான் எண்ணியிருந்த காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

  ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மையான இடங்களில் 6 இடங்கள் குறைவாகவே அக்கட்சி பெற்றுள்ளது. சுயேச்சைகள் தயவில் ஹூடா ஆட்சியமைத்துள்ள போதிலும் கழுத்துக்கு மேல் கத்தி தொங்குவது போல்தான் அவரது நிலை உள்ளது.

  மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள போதிலும் 3 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளதாகக் கூறிக்கொள்வது மாயைத் தோற்றம்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com